Thursday, February 11, 2016

அமெரிக்காவில் அடையாறு ஆனந்தபவன் - பகுதி-2

இதன் முதல் பகுதியைப்படிக்க இங்கே சுட்டவும் 
 http://paradesiatnewyork.blogspot.com/2016/02/1.html

Adyar Ananda Bhavan - New York, NY, United States


"என்னது எனக்குத் தெரியாமல் நியூயார்க்கில் அடையாறு ஆனந்த பவனா? புதுசா வந்திருக்கோ
“இல்லையே அது வந்து மூணு மாசமாச்சு.
"அடையாறு ஆனந்த பவனா?"
“ஆமா சார்”.
“இல்லை இதே போலா?”
“இல்லீங்க அடையாறு ஆனந்த பவனேதான்”.
“எங்க இருக்கு?”
“நியூயார்க் டவுன் டவுனில இருக்குன்னு சொன்னாங்க”
“சரி சரி கூகிள்ள பிடிக்கலாம்
          பக்கத்தில்,கிட்டத்தட்ட 11/2 மீல்சை சாப்பிட்டுவிட்டும் இன்னும் வேணும் போல் கண்ணில் கெஞ்சர்லா காட்டி உட்கார்ந்திருந்த எஞ்சர்லாவை "வா வா நேரமாச்சு"ன்னு சொல்லி, கூப்பிட்டுக்கொண்டு வெளியே  வந்தேன். அவனை நியூ ஜெர்சி கெஸ்ட் ஹவுசில்  தள்ளிவிட்டு நியூயார்க் சாலையில் நுழைந்தேன்.
கன்ஸ்ட்ரக்சன் நடந்த சாலை தடதடக்க, என் வயிறும், _______ ம் கடகடக்க, "ஐயையோ ஆந்திரா, வருது வருது வாந்திரான்னு" நினைத்துக் கொண்டே டிராஃபிக்கில் மாட்டி வீட்டுக்குள் வந்து சேர்வதற்கு 2 மணி நேரம் ஆனது. அந்த 2 மணிநேரம் நான் பட்ட அவஸ்தை எனக்குத்தான் தெரியும். மூச்சைப் பிடித்துக் கொண்டு இருந்ததில் படபடப்பாய் இருந்தது. நல்லவேளை கார் நாஸ்தியாகலை, கூடவும் யாருமில்லை.
காரை வீட்டின் முன்னால் ஏடா கூடாமாய் நிறுத்திவிட்டு, கதவைத் திறந்து உள்ளே பாய்ந்தேன். 2 மணி நேரம் பொறுத்துக் கொண்ட எனக்கு அந்த ரெண்டு நிமிடம் ம்ஹீம் பொறுக்கவே முடியவில்லை. பேக்கை எறிந்துவிட்டு, ஷூவைக் கழட்டாமலே பாத்ரூமூக்குள் நுழைந்தால், மீண்டும் இடி மின்னலுடன்!!!!!!!!! அதையேன் கேட்கிறீங்க போங்க. 
அப்படியே சோஃபாவில் ஒருக்களித்து உட்கார்ந்தேன். ரணமாய்க் காந்தியது.
இரவில் வயிற்றைக் காயப்போட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றேன். சுவையான கனவு வந்தது.
அடையாறு ஆனந்த பவனில் அன்லிமிட்டட் மீல்சை ஆர்டர் பண்ணிவிட்டு சாப்பிடமுடியாமல் அவஸ்தைப்பட்டது போல கனவு.  
அடுத்த நாள், காலையில் இருந்து, “இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே", என்ற பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தேன். சே ஒரு சாப்பாட்டுக் கடைக்கு போவதற்கா இவ்வளவு ஆனந்தம் என்று கேட்ட மனதை பின்தள்ளி, வெறும் சாப்பாட்டுக்கடை இல்லை, இது அடையாறு ஆனந்தபவன் என்று நானே என் மனசுக்கு சொல்லிக் கொண்டேன். ஏற்கனவே ஏமாந்த ஆத்திரம்   வேறு.
கிளம்பி ரெடியாகி, ஆபீசுக்குப் போனதும் கூகிள் பண்ணினேன். அட ஆமா, அடையாறு ஆனந்த பவனேதான். நியூயார்க் மேன்ஹாட்டனில், டவுன் டவுனில் (Down town) ஒன்னாவது மற்றும் 2-ஆவது அவென்யூ பக்கத்தில் இருந்தது.
மிட்டவுனில் இருந்த 'லிட்டில் இந்தியா' என்று அழைக்கப்படும் லெக்சிங்டன் அவென்யூவில், சரவணபவன், அஞ்சப்பர், சென்னை கார்டன், பொங்கல், மெட்ராஸ் மஹால், தோசை என்று பல தமிழ் ரெஸ்டாரண்ட்டுகளுக்குப் போயிருக்கிறேன். அடையாறு ஆனந்த பவன் இந்தப் பகுதியில் இல்லாததால் மிஸ் ஆகியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  
முந்தைய தினம்  ஆஃபிஸ் வராததால், கொட்டிக்கிடந்த  5000 ஈமெயில்களை சார்ட் அவுட் செய்து முடித்து நிமிர்ந்தால் மணி 1 ஆகியது.
“சாப்பிட வரலியா”, என்று கேட்ட  உடன் ஊழியர்களிடம் ,
"இல்லை வெளியே செல்கிறேன்", என்று சொல்லிவிட்டு டிரைன் ரூட்டை பார்த்துவிட்டுக் கிளம்பினேன்.
போய்ச் சேருவதற்கு 40 நிமிடங்கள் பிடித்தது.
கிரீக், இத்தாலி, மொராக்கோ போன்ற சின்னஞ்சிறிய ரெஸ்டாரண்ட்டுகளின்  வரிசையில், அட ஆமா "அடையாறு ஆனந்தபவன்" இருந்தது.  
கதவைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன். கூட்டம் அலைமோதும் என்று நினைத்து நுழைந்த எனக்கு ஏமாற்றமாய் இருந்தது. சிறிய ரெஸ்டாரண்ட் என்றாலும் வரிசை வரிசையாக போடப்பட்டிருந்த மேஜை நாற்காலிகள், தமிழக படங்கள், உள்ளே நுழைந்தால் கல்லாவின் பின்னால் ஒரு மாபெரும் கோவிலின் கோபுரத்தின் படம் என அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Anandabhavan, NYC
ஆனால் உள்ளே மேஜைகளில் மட்டுமல்ல, கல்லாவிலும் ஆள் ஒருவர் கூட இல்லை. மணியைப் பார்த்தேன் மதியம் 1.30. இது நல்ல லஞ்ச் டைம் ஆச்சே, என்ன ஒருவரையும் காணவில்லை என்று நினைத்தேன். ருசிக்கு அலையும் எனக்கே தெரியவில்லை, யாருக்கும் தெரியவில்லை போலிருக்குது. அட்வர்டைஸ்மென்ட் தேவை, அதிலும் இந்த இடம் எங்கோ ஒரு முடுக்கில் இருக்கிறது என்று நானே காரணங்களைக் கற்பித்துக் கொண்டு இருந்தபோது, உள்ள சமையலறையில் தமிழ்ப் பேச்சுக் கேட்டது. ஆஹா அற்புதம் என்று எண்ணிக் கொண்டே, “யாருங்க உள்ளே ?, வணக்கம்”, என்றேன். உள்ளே தமிழில் பேசிக் கொண்டிருந்த தமிழச்சி ஒருவள் வந்து 'ஹாய் ஹலோ வெல்கம்' என்று TV -யில் சொல்வதுபோல் சொன்னாள். நான் 'வணக்கம்' என்று மறுபடியும் சொன்னேன். அதனை நிராகரித்துவிட்டு, "யூ கேன் சிட் வேரெவர் யு வான்ட்"என்று கதைத்தாள்.
Adyar Ananda Bhavan - New York, NY, United States. Decor

தமிழ் உணவகத்தில், தமிழ்ப்பெண், தமிழ்ப் பையனுடன்(?) தமிழில் பேசினால் என்ன குற்றம் என நினைத்துக் கோபம் வந்தது. உட்கார்ந்து மெனுவை மேய்ந்தேன். பின்னர் உடனே தாலி மீல்ஸ் என்று சொன்னேன். விலை 14:99. சரவணபவனை விட அதிக விலை. பரவாயில்லை போனால் போகட்டும், அடையாறு ஆனந்த பவனில் சாப்பிட்டு எத்தனை வருடங்களாகிறது.
Adyar Ananda Bhavan - New York, NY, United States

சிறிது நேரத்தில் சாப்பாடு வந்தது. சரவணபவன் லஞ்ச் ஸ்பெஷல் தாலி மீல்சை விட குறைவான பதார்த்தங்களே  இருந்தன. பார்த்தால் சாம்பாரைக் காணவில்லை. பதிலாக இரண்டு ரசம் இருந்தன. திரும்பவும் உள்ளே போய்விட்டு அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு சாம்பாரைக் காணவில்லை என்றேன். இதுதான் சாம்பார் என்றூ ரசம் நம்பர் 2 -ஐக் காண்பித்தாள். ஸ்பூனை விட்டுத் தேடிப்பார்த்தால், அடியில் ஒரே ஒரு வெங்காயம் இருந்தது. நான் விடாப்படியாக தமிழில் பேச, அவள் விடாப்படியாக ஆங்கிலத்திலேயே பேசினாள்.
Thali Meals

அப்புறம் சாப்பிட்டேன். பரவாயில்லை, ஆனால் ஆனந்தபவன் மாதிரி இல்லை. அவளை மறுபடியும் கூப்பிட்டுக் கேட்டேன். இது சென்னை அடையாறு ஆனந்தபவனின் கிளைதானே என்றேன். "இல்லை இது நியூயார்க் அடையாறு ஆனந்தபவன், சென்னைக் கடைக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை", என்றாள்.
Menu card

“என்ன சொல்ல   ராசா , சாயங்காலம் ஆச்சே”, என்று நொந்துகொண்டே வந்தவுடன் , எட்றா ப்ளைட்டை விடுறா இந்தியாவுக்கு என்று நினைத்துக்கொண்டே  என் ட்ராவல் ஏஜண்டைக்    கூப்பிட்டு  , இந்தியாவுக்கு டிக்கெட் எவ்வளவு என்றேன் ?

- முற்றும்.
பின்குறிப்பு : நான் இந்தியா வந்ததுக்கு இதுவும் ஒரு காரணங்கோ


2 comments:

  1. அடைந்தால் அடைய்யறு ஆனந்த பவன்...என்ன ஒரு துள்ளல் நடை...தமிழ்கேட்க எத்தனை ஆனந்தம் அந்நிய மண்ணில்? அந்த தொடர்ச்சிதான் காரைக்குடி மெஸ் என நினைக்கிறேன்....

    ReplyDelete
  2. உண்மைதான், நன்றி செல்வா.

    ReplyDelete