Monday, February 15, 2016

யாரு அது சகாயம் ?


      ஜனவரி 9ஆம் தேதி, 2016  காலை சென்னை விமான நிலையம். என்னுடைய அலைபேசி ஒலித்தது. என் மனைவிதான் நியூயார்க்கிலிருந்து கூப்பிட்டாள்.
"சொல்லு ரூத்",
"என்னாச்சு காலையிலிருந்து போனைக்காணோம்?"
"காலையில் எழுந்து சீக்கிரமா  கிளம்பி ரெடியாகி நேராக ஏர்போர்ட்டிற்கு வந்துட்டேன்".
"ஏர்போர்ட்டிற்கு எப்ப வந்தீங்க”?
 “வந்து ஒரு மணி நேரம் ஆச்சு. செக்யூரிட்டி செக் எல்லாம் முடிச்சிட்டு,  மதுரை விமானத்திற்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன்".
"ஒரு 10 நிமிஷத்துக்கு முன்னால போன் பண்ணேனே ஏன் எடுக்கல ?".
“அதுவா நம்ம சகாயத்திட்டே பேசிட்டு இருந்தேன்”.
“யார் அது சகாயம்? உங்க சொந்தக்காரரா”?
“இல்லை சகாயம் IAS. (நான் ஐந்து நிமிடம் விளக்கினதும்)
“ஓ அவரா?”
“வாட்ஸ் அப்பில் படம் அனுப்பியிருக்கிறேன் பார்”
“ அதெல்லாம் எதுக்கு, வேணாம்”.
“வேறு யாரும் பாத்தீங்களா”?
“நட்ராஜ் IPS, பொன்.ராதாகிருஷ்ணன், பாடகர் ஹரிகரன்.
“யாருமே தெரியலயே”.
“அப்புறம் திருமுருகன்”
“ எந்தத் திருமுருகன்?”.
“அதான் சீரியல் டைரக்டர் திருமுருகன், நாதஸ்வரம் கோபி”.

Thirumurugan
“என்னது திருமுருகனா, என்ன அதைக் கடைசியில்  சொல்றீங்க, எங்க இருக்காரு”?
“இந்தா பக்கத்திலதான் இருக்காரு, போன்ல இருக்காரு”.
 “ஏங்க பிளீஸ் அவர்ட்ட நான் பேசனும் ப்ளீஸ்ங்க”. 
நியூயார்க்கில் Tamil Package ல் , சன்டிவி, விஜய்டிவி, கலைஞர் டிவி, ஜெயாடிவி(இது மட்டும் நான்கு சேனல்கள்), சிரிப்பு டிவி ஆகிய பல வருகின்றன.
அதில் நான் பார்ப்பது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர்ஸ் மற்றும் ஒரு வார்த்தை ஒரு லட்சம் ஆகியவை மட்டும். சன்டிவியில் செய்திகள் மற்றும் மகாபாரதம் அவ்வளவுதான்.
என் மனைவி பார்ப்பது விஜய் டிவியில் 'அதுஇதுஎது', நீயா நானா, சிரிப்பு டிவி.
வீட்டில் DVR  இருப்பதால் நமக்குப்பிடித்த புரோகிராம்களை ரெக்கார்டு செய்துவிட்டு நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம். இதில் ஒரு வசதி என்னவென்றால், தேவையில்லாத விளம்பரங்களைத் தள்ளிவிடலாம். எனவே அரை மணி நேர ரெக்கார்டிங்கை 15 நிமிடத்தில் பார்த்துவிடலாம்.
திருமுருகன் தயாரித்து நடித்த 'மெட்டி ஒலி ' என்ற சீரியலில் என் மனைவியுடன் தற்செயலாக மாட்டிக் கொண்டு பல வருடங்கள் கஷ்டப்பட்டதால், சீரியலுக்கு தடைபோட்டேன். ஆனால் திரும்பவும் சில நாட்கள் கழித்து 'நாதஸ்வரம்' வந்த போது என் மனைவியைத் தடுக்கமுடியவில்லை. ஆனால் ஒரே ஒரு சிரியல் மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று எங்களுக்குள் ஒப்பந்தம்.
ஒருமுறை அவளுடன் நாதஸ்வரத்தை பார்க்க நேர்ந்த போது, எரிச்சலும் கோபமும் வந்தது.
·         அது மாறிப்போன தமிழ்ச் சமூகத்தை பிரதிபலிக்கவில்லை.
·         மிகவும் பிற்போக்கான கருத்துகளை விதைத்தது.
·         பெண்களை மிகவும் உயர்த்தி தாழ்த்தியது.
·         குடும்பத் தகராறுகளுக்கு பெரும்பாலும் பெண்களே என்று நிறைய வில்லிகளை  உருவாக்கியிருந்தது.
·         அதோடு ஒரு குடும்பம் தொடர்ந்து இப்படியா கஷ்டப்படும் என்பதில் ஒரு குரூரத்தனம் தெரிந்தது.
- இதைப்பார்த்தால் உன் மனமும் சலனப்பட்டு, வில்லிபோல் ஆகிவிடுவாய் என்றேன். அதற்கு அவள் சொன்ன இரண்டு காரணங்கள்.
சீரியல் மூலம் எனக்கு நம்மூரில் இருப்பது போன்ற ஒரு சூழல் ஏற்படுகிறது.
இவ்வளவு பெரிய கஷ்டத்தைப் பார்க்கும் போது, நம் கஷ்டம் சிறிதாகி விடுகிறது.
சீரியல் பார்ப்பதற்கு அவள் சொல்லும் லாஜிக் இது.
With Thirumurugan

ஆனால் திருமுருகன்  இயக்கிய "எம்டன் மகன்", எனக்கு   மிகவும்  பிடித்திருந்தது .கிராமத்து தந்தை மகன் மற்றும் தாய் மகன் ஆகிய உறவுகளை மிகவும் அருமையாக சித்தரித்திருப்பார்.
அவள் மிகவும் கெஞ்சியதால், திருமுருகனிடம் அனுமதி பெற்று போனைக் கொடுத்தேன். என் மனைவி பேசியது என்னவென்று ஊகிக்க முடிந்தாலும், நான் கேட்ட திருமுருகனின் உரையாடலை மட்டும் கீழே  தருகிறேன்.
“வணக்கம் மேடம்”,
“நான் நல்லாருக்கேன் மேடம், நீங்க எப்படி இருக்கீங்க”?
“அப்படியா மேடம் ரொம்ப நன்றி மேடம்”.
“ஓ கோலங்கள் பாத்தீங்களா? நன்றி.
“ஓ படமா பேர் மறந்தீட்டீங்களா,
 “எம்ப்டன் மகன்' மேடம்”.
“ரொம்ப நன்றி மேடம்”.
“என்ன என் நம்பரா சார்ட்ட கொடுக்கிறேன். மேடம்”.
“ மறுபடியும் படமா?”
டிஸ்கஷனில் இருக்கு மேடம் சீக்கிரம் வரும் மேடம்”.
“ரொம்ப நன்றி மேடம்”,
 “உங்க ஆதரவுக்கு நன்றி மேடம்”.  
“தேங்க் யூ சார்”,. என்று சொல்லி போனை என்னிடம் கொடுத்தார்
“என்ன ரூத்/ சந்தோஷமா?”
 “ரொம்ப தேங்ஸ்ங்க”.
“ஏங்க அவரோடு ஒரு போட்டா எடுத்து அனுப்பமுடியுமா?”
 “சகாயத்தோடு எடுத்த போட்டோ பாத்தியா? எவ்வளவு பெரிய ஆள். எவ்வளவு எளிமையா இருக்காரு தெரியுமா? அவரு உயிருக்கு பெரிய ஆபத்து இருக்கு. ஆனாலும் எவ்வளவு நேர்மையா”?
“சரி அதவிடுங்க, திருமுருகன் எப்படி இருக்காரு. டிவியில் பாத்த மாதி இருக்காரா இல்ல வேற மாதிரியா”?
அவளைச்சமாளிக்க   வகை தெரியாமல் , அவரோடு போட்டோ எடுத்து அனுப்பினேன்
அதான் படம் அனுப்பிச்சிட்டேனே?”
 “ஓ இருங்க இப்பதான் வருது. அட அதே மாதிரிதான் இருக்காரு. உங்கள்ட்ட என்ன பேசினாரு? என்ட பேசினதப்பத்தி ஏதும் சொன்னாரா? அவரோடு அடுத்த படத்தைப்பத்தி ஏதும் சொன்னாரா? இப்பவர்ற சீரியல் அவ்வளவு நல்லாயில்லையே (அட எனக்குத் தெரியாமல் பார்க்கிறாள் போல)
"குட்டையா நெட்டையா? அவர் முடி நிஜமுடியா?"
நான் வேகமாக என் ஃ போனை கட் பண்ணினேன்.

முற்றும்


10 comments:

  1. அது என்ன கண்ணாலம் முடிஞ்சு இம்புட்டு நாள் கழித்தும்..
    உங்க சொந்தகாரங்களா ? என்ற கேள்வி.
    நம்ம சொந்தகாரங்களா? அப்படி தானே கேக்கணும். அண்ணே .. அன்னிக்கு ரொம்ப "ப்ரீடம்" கொடுத்து இருக்கீங்க.

    நீங்க சொன்ன இதனை பெயரில் சகாயம் ஒருவர் மட்டும் தான் எஅன்க்கு தெரிஞ்சவர். அதுசரி, கூட இருக்க அந்த நண்பருக்கு கொஞ்சம் நாகரீகம் வேண்டும் அண்ணே. என்னதான் பிசியா இருந்தாலும், யாரிடம் பேசி கொண்டு இருந்தாலும், போட்டோ கிளிக் பண்ணும் போது " ஒரு நிமிடம்"ன்னு சொல்லிட்டு போஸ் கொடுத்து இருக்கலாம்.

    அதிபர் ஒபாமாவே அந்த மாதிரி தான் செய்வார். ஆனால் இந்த ஆசாமி..
    ஒருவேளை .. அவர் சம்சாரத்திடம் பெசின்னு இருந்து இருப்பாரோ? அப்படினா அவரை மன்னித்து விடலாம்.

    பரதேசியிடம் பேசி கொண்டு இருந்ததால் உன் போன் காலை எடுக்க முடியவில்லை என்று சொன்னால், அவரும் பரதேசியாகி இருப்பார் அல்லவா. ?
    நல்ல பதிவு. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தம்பி விசு, அவருக்கு தொடர்ந்து அலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன .கொஞ்சம் இருங்கள் என்றார்.நான்தான் பொறுக்கமுடியாமல் எடுக்கச் சொல்லிவிட்டேன். சகாயத்தை விட இவர்தான் பிஸியாக இருந்தார் .

      Delete
  2. ஓகோ..மனைவியின் தொலைபேசியைக் கட் செய்யும் அளவுக்கு தைரியசாலியா? அதை வலைப்பக்கத்தில் போடும் அளவுக்குத் துணிவா..? நம்பவே முடியல..! (பாத்தா அப்படி ஒன்னும் தெரியலயே! நா சரியாப் பாக்கலயோ?)
    சகாயத்தில் ஆரம்பித்து திருமுருகனில் முடித்தது சுவாரசியம் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. அகத்தின் அழகு எப்போதும் முகத்தில் தெரிவதில்லை ஐயா .

      Delete
    2. தூரம் போனதால்
      வீரம் கொண்ட சிங்கம் ,
      அருகில் வந்தபோது
      அமைதியாகி
      ஓரம் சென்று
      ஒதுங்கிப்படுத்தது !!!

      Delete
  3. Replies
    1. ஒரு வேளை உங்களுக்கு நாதஸ்வரம் கோபின்னு சொன்னாத்தான் தெரியுமோ ?

      Delete
  4. Kolangal serial was directed by Thiru Selvam. Before Nadhaswaram the serial directed by Thiru Murugan was Metti Oli. In that serial Kolangal director Thiru Selvam also played a roll

    ReplyDelete
    Replies
    1. You are right, changed it accordingly.Thanks for pointing out.

      Delete
  5. நடிகை பணம் வாங்கிக்கொண்டு அழுகிறார்.... நாம் பணம் கொடுத்து அழுகிறோம் என்பார் அப்பா.....இன்னும் மாறவே இல்லை அய்யா....

    ReplyDelete