படித்ததில் பிடித்தது
சயந்தன் எழுதிய "ஆறா வடு" - தமிழினி வெளியீடு.
அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் நண்பர் பிரபாகர் அவருடைய
பிளாக்கில் ( www.prabahar1964.blogspot.com ) "ஆறாவடு" வைப்பற்றி எழுதியிருந்தார். அந்தப்பதிவைப்
படித்ததிலிருந்து அந்தப்புத்தகத்தை படிக்க ஆவலாகி, அவரை வாங்கி அனுப்பச் சொன்னேன். ஆனால் அவர் நியூயார்க்
வரும்போது கையோடு கொண்டு
வந்தார். யாழ்ப்பாணத்தமிழில் இந்தப்புத்தகத்தைப் படித்தது ஒரு மிகச்சிறந்த
அனுபவம்.
இதை எழுதிய
சயந்தன்( www.sayantha.com ) தற்சமயம் ஸ்விட்சர்லாந்தில்
வசிக்கிறார். இது இவரது முதல் நாவல் என்பது ஆச்சரியமளிக்கிறது. கதைக்
கருவாக இவர் எடுத்துக் கொண்டது, இந்திய ராணுவம் (IPKF)
இலங்கையில் இறங்கிய காலத்திலிருந்து (1987),
ரணில் அரசுடன் விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தையில்
இறங்கிய வரை (2003) ,போர் நிறுத்தம் இருந்த காலத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகள்.
கதையின் நாயகன்
அமுதன் (அவருடைய பெயர் பல அத்தியாயங்கள் தாண்டித்தான் தெரிகிறது) விரும்பியல்ல, ஒரு
எதிர்பாராத சூழ்நிலையில் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தாலும், இயக்கத்தில் மிகுந்த
ஈடுபாட்டுடனும், பற்றுடனும் நிறைய வருடங்கள் பணியாற்றுகிறார். பல வெற்றிப் போர்களில்
வீரத்துடன் போரிட்டு தன் காலை இழந்து செயற்கை கால் பொருத்தியிருக்கிறார்.
நடுவில் ஒரு
சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழக மாணவி அகிலா மேல் இயல்பாக காதல் பிறக்க, அதுவே இயக்கத்தில்
அவருக்கு எதிராகப்போகிறது. (தலைவனுக்கு ஒரு சட்டம் தொண்டருக்கு ஒரு சட்டம்?)
-பின்னர்
அகிலாவின் உதவியுடன் இருமுறை வெளி நாடு தப்ப முயன்று முடியாமல், கடைசி முயற்சியில்
பெரும் பணம் செலவு செய்து இத்தாலிக்குத் தப்பிச்செல்ல வள்ளத்தில் ஏறுகிறார். துயரமிகு
அந்தப் பயணத்தில் இத்தாலி சென்று சேர்ந்தாரா என்பதுதான் கதை, இதன் நடுவில் தன் ஃபிளாஷ்
பேக்கை சொல்கிறார்.
இலங்கைத்தமிழரின் துயரம் சூழ்ந்த வாழ்வும், நித்தியமல்லாத நாட்களும் தெளிவாக
வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. போகிற போக்கில் ஏராளமான விவரங்களை அள்ளித்
தெளித்துக் கொண்டே போகிறார். எந்த சார்பையும்
எடுக்காது, அதீதமாக எவரையும் எதிர்க்காது நடந்த நிகழ்வுகளை புட்டுப்புட்டு வைத்திருக்கிறார்.
முடிவினை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறார் சயந்தன். அதிலிருந்து புரிந்து கொண்ட
சிலவற்றை கீழே தருகிறேன்.
1.
இயக்கம் என்ற சொல் LTTE
விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் குறிக்கிறது. (வேறு
இயக்கங்கள் முழுவதும் தான் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டனவே.) ‘அண்ணை’ என்ற சொல் பிரபாகரைக் குறிக்கிறது.
2.
இந்திய ராணுவம் புலிகளை எதிர்த்த போது, தன் பிள்ளைகள் நல்லூர்க்கோவில் உள்ளே இருக்கின்ற அகதி
முகாமில் மாட்டிக் கொண்ட செய்தியினை அறிந்த பிரபாகரின் மனைவி துடித்து அவரிடம்
முறையிட்ட போது, "நம் பிள்ளைகள் ஒன்றும் விசேஷமில்லை, மற்றவர்களுக்கு நடப்பதே அவர்களுக்கும்
நடக்கட்டும்”, என்று பிரபாகர் சொன்னாராம்.
3.
புலிகள் ஒவ்வொரு போருக்கும் பெயர் சூட்டும் வழக்கத்திலிருந்து,
வெற்றிபெற்ற போர்களுக்கு மட்டும் பெயர் சூட்டும் வகையில்
மாற்றிக் கொண்டனர்.
4.
இயக்கத்தில் இருந்தாலும் உள்ளே நடப்பது எல்லாம் எல்லோருக்கும் தெரியாது. குறிப்பாக இயக்கத்தில் ஏவுகணைகள்
இருப்பது,
அவர்களுக்கு ஏவப்பட்டவுடன்தான்
தெரிய வந்தது. அதோடு வதந்திகளும் உள்ளே வலம் வந்தன. உதாரணம் : மாத்தையாதான் RAW வோடு தொடர்பு கொண்டு கிட்டுவைக் காட்டிக் கொடுத்தார்.
5.
புலிகள் மத்தியில், சண்டையைவிட சமாதானம்
கஷ்டம் என்று திரும்ப திரும்ப நினைத்தது ஆச்சரியம் அளித்தது. சமாதான வாய்ப்புகளை எல்லாம்
சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது மற்ற ஜன நாயக அமைப்புகளை துச்சமாக நினைத்தது எல்லாம்
தவறுகள்தானே.
6.
"போராளிகள் பிழை செய்யலாம், ஆனால்
இயக்கம் பிழை செய்யாது”, “அண்ணைக்கு எல்லாம் தெரியும்" என்று தொடர்ந்து இயக்கத்தினர்
நம்பியிருந்தார்கள்.
7.
சிவராமன் என்ற நாடகக்கார பாத்திரம், சண்டையின் போது கால் விளங்காத தன் அம்மாவை விட்டுவிட்டு
ஓடவேண்டிய நெருக்கடி வர, ஆறுமாதம் கழித்து திரும்ப வந்து பார்த்ததில் தன் அம்மாவின்
எலும்புக்கூடு அதே இடத்தில் நிணம் வழியக்கிடக்கும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது.
8.
ஆர்மி ஊருக்குள் வருவதை நாய்கள்தான் குரைத்து காட்டிக்கொடுக்கிறது.
9.
நெருக்கடியான சண்டை காலத்திலும் எளிய ஜாதி, பறையர் என்ற ஜாதி வித்தியாசம் தமிழர்களுக்குள் இருந்தது,
எனக்குள் கோபத்தை வரவழைத்தது. இயக்கத்திற்குள் அப்படி இருந்ததா?
என்று தெரியவில்லை.
10. வெளிநாடுகளிலிருந்து அடிக்கடி பத்திரிகையாளர் வந்து
ஆவணப்படங்கள் எடுத்தது அறிய வந்தது. அது போல வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்
குறிப்பாக இளைஞர்கள் அவ்வப்போது வந்து உதவி செய்தனர். சிலர் அங்கேயே தங்கிவிட்டதைக் குறித்தும்
சொல்லப்பட்டிருக்கிறது. சகஜமாகப் பழகும் வெளி நாட்டில் வளர்ந்த தமிழ்ப் பெண்களை
தவறாக புரிந்து கொண்டு உள்ளூர் இளைஞர்கள் காதல் வயப்படுதலும் சிரிப்பை வரவழைத்தது.
11. இந்திய ராணுவம் திரும்பிப் போகக் கூடாது என்று ஊர்வலத்தை
ரெடி பண்ணிய வரதராஜன் கும்பல், ஊரில் பந்த் வைத்து, மக்களைத் துப்பாக்கி முனையில் ஊர்வலத்திற்கு கொண்டுவந்தது
எவ்வளவு மொள்ளமாரித்தனம்.
12. டக்ளஸ்
தேவானந்தா ஆரம்பித்த ஈழமக்கள் ஜன நாயகக் கட்சியினர் அவர் போலவே தாடி வளர்த்துத்திரிந்ததும்,
தாடிக்காரர்களைப் பார்த்தால் புலிகள் தாக்குவதும், அதில் மாட்டிக் கொண்ட ஒரு காதல்
தோல்வியால் தாடி வளர்த்த பையன் அழுவதும் சிரிப்பை வரவழைத்தன.
Douglas Devananda |
13. தம்முடைய
வாழ்க்கை முறையில் நொந்து போயிருந்த மக்கள், வெளி நாடுகளுக்குச் செல்ல குறுக்கு வழியில்
தொடர்ந்து முயன்று கொண்டிருந்தனர். இதில் ஏராளமான பணம் புழங்கியது. அனுப்புவதற்கென்று
ரகசிய ஏஜென்சிகள் இருந்தன. பாதுகாப்பற்ற இந்த வள்ளப்பயணத்தில் வழியில் இறந்து போனவர்
ஏராளம். பணம் கொடுத்து ஏமாந்து போனவரும் நிறையப்பேர்.
இறுதியில் ஒரு
கதைப்பாத்திரம் நேரு சொன்னவை என் மனதில்
ஆழமாகப் பதிந்துவிட்டது.
இனத்தின் சுதந்திரம் தனிமனித சுதந்திரத்தை இழப்பதில் அல்ல.
தனிமனிதனின் முடிவை ஜனத்தின் மேல் திணிக்க முடியாது.
ஆயுதப்
புரட்சியால் நிரந்தர விடுதலை பெறமுடியாது என்பதை லட்சக் கணக்கான தமிழ்
உயிர்களைப்பலி கொடுத்து அறிந்து கொண்டது மிகவும் வேதனையான விஷயம்.
புத்தகம் படிக்கும் ஆர்வத்தினை ஏற்படுத்தியது உங்கள் பதிவு. வாசிக்க முயல்கிறேன்.
ReplyDeleteநன்றி வெங்கட் .
Deleteபுத்தகம் அருமையா இருக்கும் போல இருக்கே....வாசிக்க வேண்டும் பார்ப்போம்....
ReplyDeleteநன்றி துளசிதரன் .
Deleteஆல்ஃபி Sir, //ஆயுதப் புரட்சியால் நிரந்தர விடுதலை பெறமுடியாது// I Will take this with a pinch of salt.
ReplyDeleteமுற்றிலும் உண்மை ஆரூர் பாஸ்கர்.
Delete