Monday, July 27, 2015

பரதேசியின் படை !!!!!!

மாற்றாரை மாற்றும் படை !!!!!!!


கடந்த வாரம் ஜூலை 25&26 தேதிகளில் மேரிலாண்டில் நடைபெற்ற 7ஆம் உலகத்தமிழ் ஒற்றுமை மாநாட்டில்  நடந்த கவியரங்கில் அடியேன் கலந்து கொண்டு வாசித்த கவிதையை ( ?)  கீழே கொடுத்துள்ளேன்.
தலைமை : பெருங்கவிக்கோ வாமு சேதுராமன்
வரவேற்புக்கவிதை : முனைவர் பேராசிரியர் வாமு சே ஆண்டவர் ( பச்சையப்பன் கல்லூரி )
தொடங்கி வைத்தவர் :கவிச்சிங்கம் கண்மதியன் ( தமிழக   அரசு பாவேந்தர் பரிசு பெற்றவர் )
முன்னிலை : தவத்திரு சீரடிபாபா ரவிச்சந்திரன் ( தலைவர் உலக அன்னதான மையம் )
என்னுடன் கவிதை வழங்கியோர்
1) மலை அன்பன் கவிஞர் உதயம் உலோகேந்திரலிங்கம்-நிறுவனர் உதயம் இதழ் , கனடா
2)மாவிலி மைந்தன் சண்முகராசா ( தலைவர் கனடா தமிழ்க்கவிஞர் கழகம் )
3) கவிஞர் சுதந்திரன் தேவகி ( மலேசியா)
4)  கவிஞர் பன்னீர்செல்வம் ( பாரதிதாசன் பரம்பரையில் வந்தவர்)
5)கவிஞர் மகேந்திரன் ( வாஷிங்டன் தமிழ் சங்கம்
6) கவிஞர்.தமிழ் மணிகண்டன் , மேரிலாந்து 






மாற்றாரை மாற்றும் படை !!!!!!!

மூச்சுக்கொடுத்த இறைவனுக்கும் - தமிழ்ப்
பேச்சுக் கொடுத்த அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த அவைக்கும் சான்றோர்க்கும்
வணக்கங்கள் பல

வணக்கம் என்ற சொல்லே
வழக்கொழிந்து போனதோ என்கையில்
வணக்கம் வணக்கம் என்று இங்கு
வாயாரச் சொன்னதை
காதாரக் கேட்டு
களி உவகை கொண்டேன்
மாநாட்டுக்கு வணக்கம் .

இலக்கியத்தில் நான்
வெறும் சிசு
என்றெண்ணியிருந்தேன்
இங்கு வந்து பின் அறிந்தேன்
இலக்கியத்தில் நான்
சிறு கொசு !!!!

கவிக்கோ முன்னால்
நான் வெறும் பெயர்க்கோ !
(பெயர்க்கு மட்டும் அரசன்  
என் பெயர் ராஜசேகர் )

கவிச்செருக்கு
என்பார்கள்
இன்றுதான் கண்டேன்
அதனை இவரின் மீசை முருக்கில்

மீசைக்காரர் தான் இவர் - ஆனால்
பழகியவர்க்குத் தெரியும் இவர்
ரொம்ப பாசக்காரர்.
கோபம் வந்தால் சத்தமும் போடுவார்
கொஞ்சுதமிழ் பேசினால் முத்தமும் கொடுப்பார்

ஐயாவுக்கு வணக்கம் .

சுய அறிமுகம்
சங்கம் வளர்த்த
மதுரை மாநகரில்
அங்கம் வளர்த்தவன் நான்.

என்னை வளர்த்த
சென்னை மாநகரில்
அறிவு வளர்த்தவன் நான்!

பிழைப்புக்காக
பிறதேசம் வந்த ஒரு
பரதேசி நான்.

மாற்றாரை மாற்றும் படை,
எந்தப்படை இது?
யார் நடத்துவார்  இதை?

அகிலத்தை ஆளமுயன்ற
அலெக்சாண்டரின் படை
அழிந்து போனது.

நேரில் எதிரே மோதினால்
பாரில் யாரும் இணையில்லை
என்றிருந்த
நெப்போலியனும்
நீரின்போரில் (Waterloo யுத்தம்)
நிர்மூலமானான்.


மண் காக்க
மானம் காக்க
மொழி காக்க போரிட்ட
புலிகளும்
பலிகள் ஆனார்.

தமிழன் என்றொரு படை
தனித்துவம் தான் அதற்கு தடை
(தனித்துவம் என்று நான் சொன்னது
தமிழர் தனித்தனியாக ஒற்றுமை இல்லாமல் இருப்பது)

சோழனின் பெருமையை கொண்டாடும் போது
அவன் அழித்தது சேர பாண்டிய தமிழர்கள்தானே !
பாண்டியன் வெற்றியை பீற்றும் போது
தோற்றுப்போனவன் சேரசோழ தமிழன்தானே.

தமிழனை தமிழன் தோற்கடித்ததற்கு
தற்பெருமை எதற்கு?

மூவரும் ஒன்றாக இருந்திருந்தால்
மூவுலகை ஆண்டிருக்கலாமே?
அது அன்றுமில்லை
இன்றுமில்லை

ஜாதியால் பிரிந்தவர் பாதி
மதத்தால் முறிந்தவர் மீதி
ஊரினால் கூட பிரிந்திருக்கிறோம் என்று 
கூறினால் என் கூற்றை மறக்க இயலுமா? (வேலூர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி)

இதற்கெல்லாம்
காரணம் ஒன்றை
கூறணும் என்றால்
செருக்கு என்ற
கிறுக்குதானே.

தாடிக்காரரிடம்      
தஞ்சமடைந்தால்   
வினாக்களுக்கு
விடை கிடைக்கும் 

வள்ளுவரிடம் சென்றவர்
அள்ளுவர்
அறிவுதனை.

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை

புதுப்படை ஒன்று
புறப்பட்டு வரவேண்டும்

அது
துப்பாக்கி தூக்கும்
துன்பப் படை அல்ல
கத்தியைத் தூக்கும்
கயமைப்படை அல்ல
அரிவாளைத்தூக்கும்
அறிவிலிப் படை அல்ல

அது
பேனாவைத்தூக்கும்
பெரியவர் படை
ஆன்மாவை எழுப்பும்
ஆன்றோர் படை
பிரிவெனும்
சாக்காட்டை ஒழிக்கும்
சான்றோர் படை


துணிவென்னும்
ஆயுதத்தை
தூக்கிவரும் படை

பணிவெனும் பண்பை
பகிர்ந்தளிக்கும் படை
ஏனெனில்
பணிவுதானே இங்கு
துணிவு

பணிவினால் பகைவரை
நண்பராக்கி
மாற்றங்களை தடுக்கும்
மாற்றாரை
மாற்றும் படை

போர்ப்பரணி பாடி
புறப்படும்
அந்தப்படை - இங்கிருந்து

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்,
வாழிய பாரத மணித்திருநாடு
நன்றி வணக்கம்.


6 comments:

  1. அருமையான கவிதை ஐயா ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி தனிமரம்.

      Delete
  2. எல்லா கலைகளையும் அறிந்த நாயகனே உங்கள் கவித்திறமையயும் இங்கு கண்டு அதிசியத்தோம். பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. வஞ்சப்புகழ்ச்சியில் தூற்றுவது தூற்றாமை நன்று .

      Delete
  3. அருமை... பாராட்டுகள்...

    அகந்தையே அனைத்திற்கும் காரணம்...

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை ,நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete