Tuesday, July 21, 2015

பரதேசியின் செல்ஃபி புள்ள !!!!!!!!!!!!!!!!!

          என்னை அந்த கிளியோபாட்ரா குறுகுறுவென்று பார்த்தாள். ஒரு கறுப்பின மன்னிக்க ஆப்பிரிக்க அமெரிக்கப்பெண் எதற்கு என்னை இப்படிப்பார்க்கிறாள் என்று ஆச்சரியமாகவும் அதே சமயத்தில் கவலையாகவும் இருந்துச்சு.
       பிரிக்காத கைக்கட்டுடன் இருப்பதால் ஒருவேளை பரிதாபமாக பார்க்கிறாளோ, இல்லை சட்டை பட்டன், இல்லை பேண்ட் ஜிப், அட எல்லாம் சரியாத்தானே இருக்கு. ஒருவேளை என் தலை கலைஞ்சிருக்கோ? என்னன்னே தெரியலயே ?.
மதுரைப் பக்கம் கிராமங்களில், தலையில் தட்டக்கூடாது. "தாயில்லாப்பிள்ளையா தலையில் தட்ட", என்பார்கள். எனக்கும் தலையில் தொட்டா சுள்ளென கோபம் வரும். ஏன்னா என்னோட கோர முடியை ஈர சிக்கினால் வார முடியாமல் கஷ்டப்பட்டு வாரி வரும்போது, யாராவது தொட்டால் கலைஞ்சிடும். அப்புறம் அதை ஃபிக்ஸ் பண்ண கனநேரம் ஆகும்.அதனால தலையைத் தொட்டா எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது.
ஒரு கையால் தலையை சரி பண்ண முயற்சி பண்ணதில் மேலும் கலைந்து போனதோ என்றும் சந்தேகமா இருந்தது.
சப்வேயில் அன்னிக்கு சரியான கூட்டம். கையில் இடித்தால் என்னாகும் என்ற பயம் இருந்தாலும் ஆஃபிசில் ஒரு கான்ஃபிரஸ் கால் செய்யணும்கிற துடிப்போட உள்ளே ஏறிட்டேன்.
என்னுடைய கட்டுப்போட்ட கையைப் பார்த்தோஅப்பாவியான பரிதாப முகத்தைப் பார்த்தோ ஒரு பெண் எழுந்து இடம் கொடுத்தது. நன்றி சொல்லி ஒரு ஸ்மைலியை முகத்தில் போட்டுவிட்டு இடத்தில் அமர்ந்தேன்.

எதிர்வரிசையில் பல வயதுப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நடுவில் ஒரு கிளியோபாட்ரா இருந்துச்சு. அதுதான் என்னைப்பார்த்து சிரிச்சுச்சு.
என்னவா? இருக்கும்?(சே ஒரு கண்ணாடி இருந்தா முகத்தைப் பார்த்து என்னன்னு கண்டுபிடிச்சுரலாமேன்னு தோணிச்சு. உடனடியாக ஒரு யோசனை வந்துச்சு, "நம் மொபைல் போனில்தான் செல்ஃபி" இருக்குதே. அதில பாத்தா முகம் தெரியப் போறதுன்னு நெனைச்சு ஒத்தக்கையால கொஞ்சம் சிரமப்பட்டு போனை வெளியில் எடுத்தேன்.
கொஞ்ச நேரம் நோண்டிக் கண்டுபிடிச்சு கேமராவை ஆன் செஞ்சேன். எதிரில இருந்த எல்லாக்காலும் தெரிஞ்சுச்சு, கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தேன். எதிரில இருந்த கிளியோபாட்ரா என் செல்போனுக்குள் வந்துருச்சு. ஐயையோன்னு நெனைச்சு, அதனை செல்பி மோடுக்கு மாத்தினேன். அதுக்குள்ள பக்கத்துல உட்கார்ந்திருந்த இன்னொரு நடுத்தர வயதுப் பொண்ணு என்னைப் பார்த்து முறைச்சுது. என்னடாது ஆளாளுக்கு முறைக்கிறாங்கன்னு நினைக்கும்போது, ந.வ.பொ "இப்ப போட்டோ எடுத்தியான்னு" கேட்டுச்சு. எனக்கு தூக்கி வாரிப் போட்டுருச்சு.
இல்லையேன்னு சொன்னேன், உடனே நான் கொஞ்சமும் எதிர்பாக்காத நேரத்தில், எதித்த சீட்டில இருந்த கிளியோபாட்ராவைப் பார்த்து, "உன்னை இவன் போட்டோ எடுக்கிறான்”,னு சொல்லிவிட்டுரிச்சு.

கிளியோபாட்ராவின் புன்னகை மாறாமல் இருந்தது. ஆனா அதன் பக்கத்துல இருந்த ரெண்டு சீனியர் சிட்டிசன்களும் என் கூட சண்டை போட ஆயத்தம் ஆயினர்.
"அடுத்தவர்களை அவர்கள் அனுமதியில்லாமல் ஃபோட்டோ எடுப்பது சட்டவிரோதம் தெரியுமா?"
"நான் ஃபோட்டோ எடுக்கவில்லை".
"எத்தனைபேர் இப்படி அலைகிறீர்கள்"
"நான் ஃபோட்டோ எடுக்கவில்லை"
“எதற்காக ஃபோட்டோ எடுத்தாய்?”
“நான் ஃபோட்டோ எடுக்கவில்லை”.
"போலிசைக் கூப்பிடு"
“நான் ஃபோட்டோ எடுக்கவில்லை”.
-இத்தனை கன நேரத்திலும் கிளியோபாட்ரா இலேசாக இதழ் பிரித்து, முல்லை விரித்து புன்சிரித்து மாறாமல் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நான் ஏசியிலும் வியர்த்து கைக்குட்டையை எடுத்து வியர்வையோடு வழிந்த பயத்தையும் துடைக்க முயன்று தோற்றேன். பேசாமல் அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிடலாமா என்று நினைத்தேன்.
“நீ எந்தத் தப்பும் செய்யவில்லை, நீ இறங்கத் தேவையில்லை பயந்து ஓடாதே, துணிந்து நில்”, என்று சொன்னது என் மனசாட்சி. அவள் கண்களும்தான்.
பாதிக்கப்பட்ட (?) பெண்ணே சும்மா இருந்தால் மற்றவர்கள் கொஞ்ச நேரத்தில்  அடங்கினார்கள் அல்லது அடுத்தடுத்த ஸ்டாப்புகளில் இறங்கி விட்டார்கள்.
கிளியோபாட்ரா மட்டும் என்னை தொடர்ந்து குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்க, நான் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தேன்.
ஒருவேளை எனக்கே தெரியாமல் செல்ஃபி எடுக்கும் முயற்சியில் அந்த குல்ஃபியை, சேசே அந்தப் பெண்ணை எடுத்துவிட்டேனோ என்று நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்தேன். மீண்டும் செல்போனை எடுத்துப் பார்க்க தயக்கமாயிருந்தது.
லெக்சிங்டன் அவென்யூவில் அந்த செக்சிங்டன் இறங்கும் போதும், என்னை பார்த்த மாதிரியே போகும் போது எனக்கு வேர்த்த மாதிரியே இருந்தது.
தகறாறு செய்த அனைவரும் ஒவ்வொருவராக இறங்கிச் சென்றுவிட மெதுவாக செல்போனை எடுத்து கேலரிக்கு சென்று போட்டோ இருக்கிறதா என்று பார்த்தேன்.
ஃபோட்டோ 
 இருந்தது.
 ஆனால்
 ஒரு
 ஐந்து
 ஜோடி
கால்கள்
மட்டும்
விதவிதமான 
சைஸில் !!!!!!!!!

முற்றும்.


ஒரு முக்கிய  அறிவிப்பு :

நண்பர்களே, 
பன்னாட்டுத் தமிழ் மன்றமும் , உலகத்தமிழ் அறக்கட்டளையும்( www.worldtamiltrust.org ) இணைந்து நடத்தும் " உலகத்தமிழர் ஒற்றுமை மாநாடு" வரும் ஜூலை மாதம் 25 . 26 தேதிகளில் , மேரிலாண்டில் இருக்கும் ஹோவர்ட்  கவுண்டியில்   உள்ள ஹாலிடே   இன் கொலம்பியாவில் நடக்க இருக்கிறது .பெருங்கவிக்கோ வாமு சேதுராமன், அவர்கள் தலைமையில் உலகமெங்கிலும்   இருந்து  தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள் .இவ்விழாவில் பட்டிமன்றம் மட்டும் கவியரங்கத்தில் அடியேன் கலந்து கொள்கிறேன்.அருகில் வசிக்கும் ஆர்வமுள்ள நண்பர்கள் கலந்து கொள்ள  அன்புடன் அழைக்கிறேன் .





6 comments:

  1. ஹா ஹா... காலை போட்டோ எடுத்ததுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றாங்க?

    ReplyDelete
    Replies
    1. என்ன கொடுமை இது சரவணா ?

      Delete
  2. ஹா... ஹா...

    பட்டிமன்றம் மற்றும் கவியரங்கத்தில் அசத்த வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  3. நான் வேண்டுமென்றே எடுத்த ஃபோட்டோ என்று சந்தேகிக்கிறேன். ஆல்ஃபி Sir :)

    ReplyDelete
    Replies
    1. வேண்டுமென்றே ஏன் காலை எடுக்கிறேன் தம்பி பாஸ்கர், ஆளை அல்லவே எடுத்திருப்பேன் ?

      Delete