Monday, June 15, 2015

சாலமன் பாப்பையா கொடுத்த சால்வை!!!!!!!!!!!!

"ரூத் அந்த சால்வை எங்க?"
"எந்த சால்வை"
"அதாம்மா ஐயா கொடுத்தது"
"எந்த ஐயா?"
"ஐயோ, சாலமன் பாப்பையா ஐயா கொடுத்தது",
" எப்ப கொடுத்தார்?"
"சரியாப் போச்சு போ உன்ட்ட கேக்கறது வேஸ்ட்"
            எங்கே அந்த சால்வை? எப்படி மறந்தேன். அன்றைய நாளை எப்போது நினைத்தாலும் ஒரு சந்தோஷமும் பெருமையும் நிழலாடும். எப்பேர்ப்பட்ட வாய்ப்பு, நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய, கல்யாண மாலையின் சிறப்புப் பட்டிமன்றம். நடுவராக என்னுடைய அமெரிக்கன் கல்லூரியின் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் சாலமன் பாப்பையா. மேடையில் ஒரு புறம் ராஜா அணியில் நான், மறுபுறம் பாரதி பாஸ்கர் அணி. தமிழ்ச்சங்க தலைவிகள் கவிதா, உஷா, அமுதாவுடன், கல்யாண மாலை மோகன், மீரா நாகராஜன் ​​​​​புடைசூழ, சன் டிவி படப்பிடிப்பு நடக்க, சாலமன் பாப்பையா, "தம்பி இங்ஙன கிட்டக்க வாங்க"-ன்னு சொல்லி அந்த சால்வையைப் போர்த்திய போது அரங்கு நிறைந்த மக்களின் கரகோஷம் காதைப் பிளந்தது.

         எப்படி மறந்தேன், எங்கே போனது அந்தச் சால்வை என மண்டையை உடைத்து யோசித்துக் கொண்டிருக்கும் போது என் மனைவி சொன்னாள், "போனாப் போகுது விடுங்க" என்று. அப்படி விடமுடியுமா அந்த சால்வையை?
"ஹலோ கவிதா நான் ஆல்பி பேசறேன்"
"யாரு"
"அதாங்க பரதேசி ஆல்ஃபி பேசறேன்"
"ஓ ஆல்ஃபி, ஹவ் ஆர் யூ உங்க பட்டிமன்றப் பேச்சு மிகவும் சிறப்பா இருந்துச்சு, தேங்க்ஸ் ஃபார் கம்மிங்".
"நீங்கள் கொடுத்த அரிய வாய்ப்புக்கு நன்றி கவிதா. பாப்பையா ஐயா கொடுத்த சால்வையை அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன் போலருக்கு, உங்களுக்கு தெரியுமா?
"ஓ அப்படியா எனக்குத் தெரியலயே, நீங்க எதுக்கும் அமுதாட்ட கேட்டுப்பாருங்க. அதோட வரும் மாதத்தில பாடகர் கார்த்திக்கின் இசை நிகழ்ச்சி இருக்கு, கண்டிப்பா வாங்க".
"சரி கவிதா வர முயற்சி பண்றேன்".
       கார்த்திக்கின் இசை நிகழ்ச்சியை விட முக்கியமாக ஐயா போர்த்திய சால்வையை வாங்கிவிட வேண்டும் என்ற துடிப்பில் 4 டிக்கட் ஆன்லைனில் வாங்கினேன். 1 டிக்கட் விலை $30.00.நியூஜெர்சியில் ஒரு பள்ளியின் மிகப்பெரிய ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கூட்டம் அலை மோதியது. இது வேறு ஒரு பள்ளியின் பெரிய அரங்கம். பட்டி மன்றத்திற்கு வந்ததை விட அதிகக் கூட்டம் போல் தெரிந்தது. ஒரு சிறு பொறாமை வந்தது. இயலை விட இசைக்கு ரசிகர்கள் அதிகம்தானே. அற்புதமான அந்த இசை நிகழ்ச்சியை ரசிக்க முடிந்தாலும், அவ்வப்போது சால்வை ஞாபகத்துக்கு வந்தது. அமுதாவையும் ஆளைக் காணோம். அந்த இசை நிகழ்ச்சியைப்பற்றி அடியேன் எழுதிய பதிவைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2014/06/blog-post_12.html
        இசை நிகழ்ச்சியின் இடைவெளியில் அமுதாவைக் கண்டுபிடித்தேன். பரபரவென்று இருந்தார். மேடை நிர்வாகம் அவர் கையில். அந்தப் பிஸியிலும் என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்த அமுதா,"வாங்க வணக்கம், வந்ததற்கு நன்றி, கவிதா சொன்னார், உங்க சால்வையை எடுத்து வந்திருக்கிறேன். போவதற்குள் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்" என்று சொன்ன போது என் முகமும் அகமும் மலர்ந்தது. அப்போதே கொடுத்தால் நலமாய் இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவர்கள் இருந்த அவசரத்தில் தொந்தரவு பண்ணக் கூடாது என்று நினைத்து வந்துவிட்டேன்.
         இன்னிசை நிகழ்ச்சி இனிதே நிறைவேற, வெளிவந்த மக்கள் வெள்ளத்தில் எதிர் நீச்சல் அடித்து மேடைக்கருகில் சென்றேன். மேடையில் இருந்த என்னை எப்படியோ பார்த்துவிட்ட அமுதா கையாட்டி மேலே வரச் சொன்னார். 100 டாலர் டிக்கட் வாங்கியவர்கள் மட்டும் கார்த்திக்குடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்கள். அதற்காக மேடை வந்த சிலரும் அங்கு நின்றிருந்தார்கள். அதற்குள் அமுதா சால்வையுடன் வந்தார். கையில் கொடுத்தார். என்னவோ தெரியவில்லை பாப்பையா ஐயா போர்த்திய போதிருந்த மகிழ்ச்சியை விட அது மீண்டும் கிடைத்ததில் இருந்த மகிழ்ச்சி கொஞ்சம் மிகுதியாய்த் தெரிந்தது எனக்கே ஒரு ஆச்சரியம். “கார்த்திக்குடன் போட்டோ எடுக்க வேண்டுமா?”, என்று கேட்ட அமுதாவிடம், இல்லை நான் $30 டாலர் டிக்கட்தான் வாங்கியுள்ளேன்" என்றேன். “அது பரவாயில்லை”, என்று சொன்ன அமுதாவிடம் மறுத்து சால்வையுடன் வெளியே வந்தேன்.   
           வீட்டுக்கு வந்தவுடன் சால்வையைக் கையில் வாங்கிய என் மனைவி, "இந்த 5 டாலர் பெறுமான சால்வையை பெற மொத்த செலவு 250 டாலர். இதை வச்சு என்ன செய்யப் போறீங்க", என்றாள். அவளுக்கு இதனைப்பற்றி சொன்னாலும் புரியாதென்பதால் விட்டுவிட்டேன்.
        கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் பின்னால், இடது தோளில் சர்ஜரி செய்து இடது கை ஊஞ்சலில் தொங்கிக் கொண்டிருந்தது. என் மனைவி அதிகாலையில் எழுப்பிவிட்டாள். "இன்றைக்கு உங்கள் தெரப்பி ஆரம்பம்" என்றாள். எழுந்து ரெடியாகி, கைக்கட்டை மாட்டிக்கொண்டேன். மே மாதம் கத்தரி வெயிலில் இந்தியாவில் மக்கள் செத்துக் கொண்டிருக்க, நியூயார்க்கில் 'வசந்த காலம்' என்பதால் இன்னும் குளிர் போகவில்லை. குறிப்பாக காலையிலும் மாலையிலும் 50 களில் இருந்தது. மதியம் மட்டும் 65-70 டிகிரி போகிறது.
சர்ஜரி முடிந்து அவ்வளவு காலையில் குளிரும்போது எப்படி வெளியே போவது என்று திகைத்தேன். ஜாக்கெட்டையும் மாட்ட முடியாது. சட்டென ஞாபகம் வந்தது.
"ரூத் அந்த சால்வையை எடுத்துக் கொண்டு வா?"
"எந்த சால்வை?"
"அதாம்மா ஐயா கொடுத்தது?"
எந்த ஐயா?
"ஐயோ சாலமன் பாப்பையா ஐயா போத்தியது".
 சட்டென ஞாபகம் வந்து அவள் அதை எடுத்து வந்து போர்த்தி விட்டாள்
In front of my  house: Ready to go 

இப்பவும் அந்த சால்வையைப் போடும் போது அன்று  கேட்ட அதே கரகோஷம் மானசீகமாகக் காதில் கேட்டது.குளிருக்கும் இதமாய், கைக்கட்டையும் மறைக்கும் விதமாய் இருந்தது. கம்பீரமாய் வெளியே கிளம்பினேன். நன்றி ஐயா.  

-முற்றும்.

6 comments:

  1. அம்சமா இருக்கீங்க.!!! பணத்தால் சில உணர்வுகளை பெற இயலாது என்பதே உண்மை. வாழ்த்துக்கள்..

    திரு.ஆல்ஃபி, .நீங்கள் செல்பி எடுக்கிறதில்லயா?? :)

    ReplyDelete
    Replies
    1. இருக்கும் ஒரு கையில் செல்பி வேறயா ?

      Delete
  2. பொக்கிசமாய்...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. பொக்கிஷம்தான், நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  3. அண்ணே.. தோள்பட்டை சரியானவுடன் அந்த சால்வையை கொஞ்சம் கடனா அனுப்பி வையிங்க . உங்களுக்கு புண்ணியமா போகட்டும் ...

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ என்ன தம்பி உங்க தோள்பட்டைக்கு என்னாச்சு ?

      Delete