Monday, June 22, 2015

அல்மா மேட்டர் !!!!!!!!!!!!!

Columbia-University-engineering-programs
Columbia University
வாரம் மூன்று முறை அதிகாலை கிளம்பி ரெடியாகி, ஃபிசிக்கல் தெரப்பிக்காக செல்கிறேன். இந்த இடம் மேன்ஹாட்டனில் அப் டவுனில், ஆம்ஸ்டர்டாம் அவென்யூவில் இருக்கும் மெளன்ட் சினாய் ஆஸ்பத்திரியின் ஒரு பகுதி.

பிராட்வேயில் உள்ள சப்வேயில், கொலம்பியா பல்கலைக்கழக ஸ்டாப்பில் இறங்கி கீழே வந்தால் பல்கலைக்கழகம் கம்பீரமாய் நிற்கிறது. ஆம்ஸ்டர்டாம் அவென்யூ எங்கே என்று கேட்டால் கொலம்பியாவின் உள்ளே நுழைந்து குறுக்கே சென்றால் வரும் என்றார்கள்.
உள்ளே நுழைந்தேன், இடது புறம் பிரம்மாண்டமாக எழுந்த நூலகக்கட்டமும் அதன் முன்னால் காவல் தேவதை போல எழுந்தருளி, அருள் பாலிக்கும் "அல்மா மேட்டர்" அம்மனும் தெரிந்தார்கள். அது தவிர பல உப தேவதைகளும் அங்குமிங்கும் மிதந்து கொண்டிருந்தது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. அங்கு படிக்கும்போது  நடந்த  நிகழ்வுகள்  மனக்கண்  முன் வந்து போயின.


 பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நான் படித்திருந்தாலும் 'அல்மா மேட்டர்' என்றால் இரண்டு கல்லூரிகளை மட்டும்தான் சொல்லலாம். ஒன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி, இரண்டாவது கொலம்பியா பல்கலைக்கழகம்.இந்த இரண்டையும் இணைக்கும் ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. சொல்கிறேன் கேளுங்கள்.
Columbia Library
கடந்த மார்ச் மாதத்தில் ஒரு நாள் அமெரிக்கன் கல்லூரி முதல்வரிடமிருந்து ஒரு ஈமெயில் வந்தது. அமெரிக்கன் கல்லூரியின் பல முதல்வர்களான, P.T.செல்லப்பா, B.குணராஜ், பீட்டர் ஜெயபாண்டியன், சுதானந்தா, சின்னராஜ் ஜோசப் போன்ற பலரிடம் எனக்கு நேரடித் தொடர்பும் பழக்கமும் இருந்தது. ஆனால் தற்போதைய முதல்வரிடம் எனக்கு அறிமுகமோ பழக்கமோ இல்லை. எங்கிருந்து இவருக்கு என் ஈமெயில் கிடைத்திருக்குமென ஆச்சரியமாய் இருந்தது.
ஈமெயிலின் சாராம்சம் என்னவென்றால், அவரும் கல்லூரியின் பர்சார், ஹெலன் மோனிக்காவும் அமெரிக்க வருவதாகவும், நியூயார்க்கில் சில வேலைகளுக்கு இடையில் ஒரு அலம்னை மீட்டிங் வைக்க விரும்புவதாகவும் ஈமெயில் தெரிவித்தது.
மகிழ்ச்சியுடன் நான் வருவதாக ரிப்ளை அனுப்பினேன். இடம் எங்கே என்றால் கொலம்பியா பல்கலைக்கழகம் அருகில் உள்ள ரிவர்சைட் டிரைவில் உள்ள இன்டர்சர்ச்  கட்டிடம்.
அந்த நாளும் வந்தது. ஏப்ரல் மாதமாய் இருந்தாலும், குளிர் கடுமையாகவே இருந்தது. அங்கே முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், பர்சார் ஹெலன் மோனிக்கா மற்றும் நியூயார்க்கில் வாழும் அமெரிக்கன் கல்லூரியின் டிரஸ்டிகளில் ஒருவரான ஜான், பல கல்வி நிறுவனங்களுக்கு உதவி வரும் யுனைட்டட் போர்டின் நிர்வாகிகள் ஆகிய பலபேரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.

வேலை நாளாய் இருந்ததாலோ என்னவோ, பழைய மாணவர்கள் திரண்டுவரவில்லை. நியூயார்க், நியூஜெர்சி பகுதியில் வாழும் அ.க-யின் பழைய மாணவர்களை திரட்டி ஒருங்கிணைக்கும் பொறுப்பை முதல்வர் எனக்குக் கொடுத்தார். யுனைட்டட் போர்டு கொடுத்த மதிய உணவுடன் கலைந்தோம்.
களிமண்ணாய் நுழைந்த என்னை அமெரிக்கன் கல்லூரி எப்படி ஒரு உருவமாய் மாற்றியது என்ற என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அந்த 'ஹோலிஸ்டிக் அப்ரோச்' வேறெங்கிலும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போது அமெரிக்கா வருவேன் என்றும் கனவில் நினைத்ததில்லை. எல்லாம் யாரோ ஒருவர் திட்டமிட்டது போலவே தெரிகிறது.
ஒரு அல்மா மேட்டரின் அலம்னை என் இன்னொரு அல்மா மேட்டர் அருகில் நடந்ததும் ஒரு அதிசயம்தானே.
கொலம்பியாவில் ஒபாமா படித்தது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம், இங்குதான் சட்டம் படித்தார். இங்கு சட்டம் படித்த இன்னொரு இந்தியப்பிரபலம் தெரியுமா? இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கார்தான் அவர்.
Dr.B.R Ambedkar
இந்த என் இரு அல்மா மேட்டர் பற்றி சில முக்கிய மேட்டர்களை கீழே தருகிறேன் .
அமெரிக்கன் கல்லூரி:
American college, Main Hall 
1.    1881ல் அமெரிக்கன் மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
2.    1931ல் தனியுரிமை பெற்றது.
3.    முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழும் தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழும் இருக்கிறது.
4.    1977-78ல் UGC மூலம் இந்தியா முழுவதிலும் தன்னாட்சி பெற்ற ஏழு கல்லூரிகளில் இதுவும் ஒன்று.
5.    கல்லூரி ஆரம்பித்து 134 வருடங்கள் ஆகிறது.
கொலம்பியா பல்கலைக்கழகம்:
1.    இது 1754-ல் கிரேட் பிரிட்டனின் அரசரான இரண்டாம் ஜார்ஜ் மன்னரால் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அதன் பெயர் 'கிங்ஸ் காலேஜ்'.
2.    அமெரிக்க விடுதலைப்போருக்குப் பின்னர் 1784ல் கொலம்பியா கல்லூரி என்று முதலிலும் பின்னர் 1896 முதல் 'கொலம்பியா பல்கலைக்கழகம்' என்றும் அழைக்கப்படுகிறது.
3.    இது ஒரு ‘Privy league’  - ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் ஆகும். அமெரிக்காவின் நம்பர் 1 ஸ்டேட்டஸ் இதற்கு இருக்கிறது.
4.    இதனடியில் 20 கல்லூரிகளும் பல நிறுவனங்களும் இருக்கின்றன.
5.    இதில் 3800 ஆசிரியர்களும் 30000 மாணவர்களும் உள்ளனர்.
6.    நோபல் பரிசு பெற்ற நூற்றுக்கும் மேலானோர் இதில் ஆசிரியராகவோ, மாணவராகவோ இருக்கின்றனர்.
7.    அமெரிக்காவின் ஐந்து தேச நிறுவனத்தந்தைகள் (Founding Fathers), 9 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், 43 நோபல் பரிசு பெற்றவர்கள், 20 வாழும் பில்லியனர்கள், 29 ஆஸ்கார் பரிசு பெற்றவர்கள், 29 நாட்டின் தலைவர்கள், 3 மூன்று அதிபர்கள் இதுவரை இங்கிருந்து பயின்று வந்திருக்கிறார்கள்.
8.    இவர்களுள் அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட், அதிபர் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட், அதிபர் பராக் ஒபாமா, பில்லியனர் வாரன் பஃபட் மற்றும் சல்லியனர் பரதேசியும் (?) அடங்குவர்.
“அதெல்லாம் விடு சேகரு இந்த அல்மா யாரு, அந்த கில்மா மேட்டர் என்னான்னு கடைசி வரை சொல்லவே இல்லையே”
அடப்பாவி இந்த மகேந்திரன் கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா.

முற்றும்

10 comments:

  1. நீங்கள் தகவல் ஒரு களஞ்சியம். "கில்மா மேட்டர்" என்னான்னு கடைசி வரை சொல்லவே இல்லையே !! :)

    ReplyDelete
    Replies
    1. பாஸ்கர் , மகேந்திரன் தான் அல்மா மேட்டர் க்கு அர்த்தம் தெரியாமல் கேட்டா , நீங்களுமா ?

      Delete
  2. ஹா... ஹா... குசும்பு...?

    கல்லூரி, பல்கலைக்கழகம் - சிறப்பான தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  3. அய்யா கும்புடுதனுங்க
    காசு பணம் தேட லேசான வழி கெடைக்குமான்னு மாங்கு மாங்குன்னு நெட்லே தேடிகினே இருந்தனுங்க, எவன பாத்தாலும் அத படி இதபடி இன்கிறான். உங்க ஊர்லேயிருந்து இன்னம் மோசம்.
    அப்பிடியே தேடிகிட்டே இருந்தனா ? உங்க எடத்துக்கு வந்துட்டேன். நீங்களும் தமிழ்லயும், இங்லீஷ்ளையும் பொளந்து கட்றதை பாத்து ரெம்ப குஷி ஆயிருச்சு. அம்மன் செலயை பாத்ததும் ஆடிப்போயிட்டேன்.
    ஆமாண்ணே, அமெரிக்காகாரன் என்ன இப்பிடி வேவரன்கேட்டவனா இருக்கான் ?. இம்மாம் பெரிய செலைய வச்சுக்கிட்டு சும்மா தேமேன்னு இருக்கான்!!! , மாலைய போட்டு , சூலம் நட்டு உண்டியல வச்சா காச அள்ளிபுடலமே, அட வெவரங்கெட்டவனுகளா ?
    நல்லாத்தான் போங்க, நீங்களாவது சொல்லமாடியலா ?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா இது நல்ல ஐடியாவா தெரியுதே ?

      Delete

  4. நல்ல தகவல்கள் ..!

    ReplyDelete