Thursday, June 12, 2014

கார்த்திக்குடன் “ஒரு மாலை இளவெயில் நேரம்” !!!

அன்னையர் தினத்தை முன்னிட்டு நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் பிரபல பாடகர் கார்த்திக் அவர்களின் மெல்லிசை நிகழ்ச்சியை மே 11, 2014, ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரோடு இணைந்து பாட வளர்ந்து வரும் பாடகி "ஷக்தி ஸ்ரீ” வந்திருந்தார். 

இசைக்குழுவும் சென்னையிலிருந்து வந்திருந்தனர். எனக்கும் என் மனைவிக்கும் இரண்டு டிக்கட்டுகளை ஆன்லைனில் வாங்கியிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தை முடித்துவிட்டு கிளம்பும்போது, என் மகள்கள் தாங்களும் வருவதாகச் சொல்லவே, சரி போய் டிக்கட் வாங்கிக் கொள்ளலாம் என்று கிளம்பி விட்டோம். அங்கே போனால் கூட்டம் அலைமோதியது. என்ன இது தமிழ்நாட்டில் பாதி அமெரிக்காவுக்கு வந்துவிட்டதா என்று நினைக்கும் அளவுக்கு ஏகப்பட்ட கூட்டம்.
டிக்கட்டுகள் சோல்டு அவுட் என்றார்கள். என் பிள்ளைகளை என்ன செய்வது என்று யோசிக்கும் பொழுது ஒருவர் வந்து என்னிடம் ரெண்டு டிக்கட்டுகள் இருக்கின்றன என்றார்.
அடப்பாவிகளா இங்கயுமா பிளாக்கில் டிக்கட் விற்கிறார்கள் ? என்று கலவரப்பட்டபோது, என் முகத்தைப் பார்த்துவிட்டு அவர் சொன்னார்  "என்னுடைய நண்பர்கள் இருவர் வரவேண்டியது, அவர்கள் வரமுடியவில்லை அதனால் தான்", என்று. அந்த டிக்கட்டு உரிய காசுகளைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம்.

4 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி 4.40க்கு தான் வழக்கம்போல் ஆரம்பிக்கப்பட்டது. நியூஜெர்சியின் தமிழ்ப் பிள்ளைகள் இன்வொக்கேஷன் பாடலாக பாரதியின் "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே" என்று பாடினர். இந்நாடே என்றால் இந்தியாவா? அமெரிக்காவா என்று கேட்கத்தோணியது.
அதன்பின் வந்த இன்னொரு குழு அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு மெட்லியாக சில பாடல்கள் பாடினார்கள்.
தமிழ்ச்சங்கத்தலைவர் கவிதா ராமசாமி கவிதையில் வரவேற்புரை ஆற்றியபின், பிரபல கர்நாடக பாடகி சுதா ரகுநாதன் அவர்களை மேடைக்கு அழைத்து விருதுகொடுத்து கெளரவப்படுத்தினார்கள். 

பாடச்சொல்லி ஆடியன்ஸ் வற்புறுத்த "குறையொன்றுமில்லை" என்ற MS.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய பாடலை, இசைக்கருவிகள் உதவியின்றி பாடினார், அருமையாக இருந்தது.
அதற்கப்புறம் ஒரு பரதநாட்டியம், இன்னொரு சோலோ என்று போய்க் கொண்டிருக்க பொறுமையிழந்த ஆடியன்ஸ் “கார்த்திக் கார்த்திக்” என்று கத்த ஆரம்பித்தனர்.
புரிந்துகொண்ட துணைத்தலைவி உஷா மற்றவற்றை நிறுத்திவிட்டு கார்த்திக்கை வரவழைத்தார். அதற்கு முன் அவருடைய இசைக்குழு வந்தது. பெரும்பாலும் தெரிந்த முகங்களாகவே இருந்தது.
Karthik  Music Experience
சுந்தர் கீபோர்டு, விஜய்- லீட் கிடார், கீத் பீட்டர் - பேஸ் கிட்டார், தயா - டிரம்ஸ் மற்றும் விக்ரம் - பெர்கஷன். இவர்களோடு அவர்களுடைய செளண்ட் இன்ஜினியர் வினயும் வந்திருந்தார்.

அறிமுக இசையை அவர்கள் வாசித்தபின், கார்த்திக் துள்ளிக்குதித்து உள்ளே வந்தார். இப்போது இன்னும் டிரிம்மாக இளமையாக இருந்தார்.
வந்தவுடன் அறிமுகப்பேச்சு எதுவும் இல்லாமல், ஸ்வரங்களைப் பாட ஆரம்பித்து, சிறிது நேரத்தில் சுரங்களின் ஆரோகன அவரோகனங்களை பாடி பின்னிப்பெடலெடுக்க ஆரம்பித்தார். இசைக்குழுவினர் அருமையாக பேக்கப் செய்ய, அநாயசமான அசுர சாதகம் என்று சொல்லலாம். சுரம் முடித்து மகாகணபதி பாடும்போது, கர்நாடகமும் வெஸ்டர்னும் இணைந்து, முதல் பாட்டிலேயே ஹை ரேன்ஜ் பாடி, தான் ஒரு தேர்ந்த பாடகர் என்பதை நிரூபித்தார். அவர் கையசைவில் சுரங்கள் தடதடத்து துள்ளி விழுந்தன.

அது முடிந்தவுடன், ஆடியன்சின் அப்லாசை வாங்கி நன்றி சொல்லி, வணக்கம் சொல்லி ஆரம்பித்த அடுத்த பாடல்" ஒரு மாலை இளவெயில் நேரம்" ஒரு வித்தியாச அனுபவம். அடுத்த அவர் பாடிய பெஹல்கா என்ற இந்திப்பாடலை பாடி பின்னர், ஒரு ஊரில் என்ற பாடல் வந்தது. கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் இசைவெளி வர, வந்த அடுத்த பாடல் கார்த்திக்கு பிலிம்ஃபேர் அவார்ட் கிடைத்த, "விழி மூடி யோசித்தால் முன்னால் வருவேன்" என்ற பாடல், அடுத்து வந்த 'அசிலி பிசிலி' பாட்டுக்குப்பின் ஒரு மாறுதலுக்காக "ஆஹா மெல்ல நட மெல்ல நட", என்ற TMS -ன் குரல் கார்த்திக் குரலில் வந்து கைதட்டல்களை அள்ளியது. பாட்டின் இசையில் கிட்டத்தட்ட சரோஜாதேவி மாதிரியே உடையணிந்த ஒரு பெண்மணி எழுந்து அதே பழைய அசைவில் ஆட ஆரம்பித்தார். அதைப்பார்த்த கார்த்திக் அவர்களை மேடைக்கு வரச்சொல்லி சைகை செய்ய, ரசிகர்களின் ஆரவாரத்தோடு அவர் மேடையேறினார். பாட்டு மேலும் களைகட்டி 'ஆடலும் பாடலும்' ஆனது.
A.R.ரகுமானின் பல பாடல்களுக்கு வாசித்த கீத் பீட்டர் தன் பேஸ் கிடாரில் சில பிட்களை வாசித்தார். அவர் வாசிக்க வாசிக்க ஆடியன்சே என்ன பாடல்கள் என்று   கண்டுபிடித்தனர் . 
“என்றென்றும் புன்னகை” மற்றும் “தேரடி வீதியில் தேவதை வந்தால்” என்ற இரு பாடல்களுக்கும் மேலும் பலர் எழுந்து ,ஆட கார்த்திக் அனைவரையும் மேடைக்கு அழைக்க மேடை அல்லோல கல்லோலமானது.

அப்புறம் எல்லோரையும் கீழிறங்கச் சொல்லிவிட்டு அன்னையருக்கு ஒரு சமர்ப்பணமாக "உயிரும் நீயே, உடலும் நீயே" என்ற பாடலைப் பாடி முடித்தபின் சக்தி ஸ்ரீ வர, கார்த்திக் உள்ளே சென்றுவிட்டார்.
'நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்', “எங்க போற ராசா”, “பல்லாங்குழி” ஆகிய பாடல்களை நன்றாகப் பாடினார். மற்றபடி அவர் பாடிய மற்ற பாடல்கள் சோபிக்கவில்லை. குறிப்பாக ஹைபிச்சில் ஹெட் வாய்ஸ் வரும்போது குரல் செழு மையிழந்தது. "ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி" பல இடங்களில் Flat ஆய் இருந்தது.
இடைவேளைக்குப்பின் கார்த்திக் வந்தபின்தான் மீண்டும் களைகட்டியது. வேறு உடையில் வந்து அவர் பாடிய "ஓம்கார நாதானு" என்ற சங்கராபரணப் பாடல் தேனாக இனித்தது.
“சித்திரம் பேசுதடி”, “மாடி மேல் மாடி வைத்து”, “நிலவே என்னிடம்”, போன்ற பழைய பாடல்களும் மிக நன்றாக வந்தன. முகமது ரஃபியின் குரலில் பாடிய பாடல்களும் கார்த்திக்குக்கு பொருந்தி வந்தன. 
மறுபடியும் வந்த சக்தி ஸ்ரீ – “லுங்கிடான்ஸ்”, “ரிங்க ரிங்கா” போன்ற குத்துப்பாடல்களை பாட முயற்சி செய்தார். இசை நன்றாக இருந்ததால் திரும்பவும் கும்பல் ஆட ஆரம்பித்தது. அஜீத்  ஆட்டம்  பார்த்திருக்கிறேன் ,  அமலா ஆட்டம்  பார்த்திருக்கிறேன். ஆனால் அன்றுதான் ஒரு அட்டார்னி  ஆட்டம் பார்த்தேன். தமிழ்ச்சங்க தலைவர் கவிதாவைத்தான் சொல்கிறேன். ஒரு கட்டத்தில் கவிதா ஆட ஆரம்பிக்க, கணவர் ஓடிவந்து இணைந்து கொண்டார்.  
குறையென்று சொன்னால், டூயட் பாடல் ஒன்றுகூட பாடவில்லை. பெண் குரலுக்கு கூட இன்னொருவர் இருந்திருக்கலாம்.
கார்த்திக்கின் குரல் இனிமையும் அருமையும், ஸ்டேஜ் பிரசென்சும், மேடைக்கச்சேரிக்கு அட்டகாசமாக அமைந்தன. ஒரு இனிய மாலை வேளையாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.  நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்திற்கு   வாழ்த்துக்கள் .

  

10 comments:

  1. கார்த்திக்கிற்கு இங்கும் ரசிகர் பட்டாளம் அதிகம். ராவணன் படத்தில் வரும் "உசுரே போகுதே" பாடலைப் பாடினாரா? அருமையான இசை வெள்ளத்தில் நனைந்திருக்கிறீர்கள்....

    ReplyDelete
    Replies
    1. அட ஆமா அதைச்சொல்ல மறந்திட்டேனே, அவர் பாடும் போது என்னோட பாதி உசுரும் போயிருச்சி , அவ்வளவு இனிமை .
      தங்கள் வருகைக்கு நன்றி ஸ்கூல் பையன்.

      Delete
  2. TMS -ன் குரல் போல...! கார்த்திக் அவர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் உண்டு...

    ReplyDelete
    Replies
    1. ஏன் அவருக்கு நிகழ் காலமே நல்லாத்தான் இருக்கு திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  3. உங்கள் வர்ணனை மிக அருமை. கார்த்திக் தன் குரலால் மொத்த அரங்கத்தையே கட்டிப் போட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது.

    ReplyDelete
    Replies
    1. ரங்கா , நீங்கள் காரைக்குடியில் வாங்கிக்கொடுத்த அருமையான இரவு உணவைப்பற்றி சொல்ல மறந்துவிட்டேன் , மன்னித்துக்கொள்ளுங்கள்.


      Delete
  4. திரு ஆல்பி அவர்களே, தங்களுக்கு என் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் என் தந்தையர் தின வாழ்த்துக்கள்.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி Rammohan.

      Delete
  5. அருமையான பாடகர். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ரொம்பவும் involve ஆகி பாடுவார்....

    ஒரு இனிமையான மாலைப் பொழுதாக உங்களுக்கு அமைந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete