Monday, January 26, 2015

நல்லது செய்திட பொய் சொல்லலாம் - சரியே - தவறே. பகுதி 2 முடிவுரை !!!!!!!!!







எல்லாரும் பேசி முடிச்சுட்டாங்க. நல்லாத்தான் பேசினாங்க. ஆனா இதுல யார் பொய் பேசினா யார் உண்மை பேசினான்னு தெரியல. தலை கிறுகிறுத்துப்போச்சு. எனக்கு இருக்கிற சின்ன மூளைக்கு எவ்வளவுதான் தாங்குறது.

காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடான்னு சொன்னது சரியாத்தான் இருக்கு. காயம் என்றால் உடல். இந்த உடம்பை மெய்னுகூட சொல்வாங்க. ஆனா உடம்பு என்ன நிரந்தரமா? இதுவும் மெய்யில்ல பொய்தான்.

கவிஞர் வாலி ஒரு பாடலில் சொல்லியிருப்பார்.

“திருவோடு வந்தது தெருவோடு போனது, மெய்யென்று மேனியை யார் சொன்னது”- வாழ்வே மாயம்.

“கவிதைக்குப் பொய் அழகு”, என்று சொல்வாங்க ஆனாலும் நம்ம கவிதைகளும் பாடல்களும் ரொம்ப ஓவர். ஒரு பாடல் ஞாபகம் வருது. வைரமுத்து எழுதினது.

“அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது”

ஒவ்வொரு துளியிலும் முகமா. ஐயையோ ஆயிரக்கணக்கான முகமா. ஒரு முகத்தையே இங்க தாங்ங்ங்ங்க முடியல.

“இந்திரன் தோட்டத்து முந்திரியே, மன்மத நாட்டுக்கு மந்திரியே” 

இந்திரன் தோட்டத்துக்கு யார்போனது? ரம்பை, ஊர்வசி, மேனகை ஒருத்தரையும் யாரும் பார்த்தது கிடையாது.என்ன செய்றது இத மாதிரி எதைச் சொன்னாலும் பொம்பளைங்க நம்பிராங்க.

அரசியலை எடுங்க கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து பதவியைப் பிடிப்பாங்க எதுக்குன்னு கேட்டா மக்களுக்குச் சேவை செய்யனுமாம். என்ன கதை விடுறீங்க. எத்தனை பொய்.

“உங்கள் பொன்னான ஓட்டுகளைப் போடும்படி உங்கள் பொற்பாதங்களை தொட்டுக் கேட்கிறோம்”னு, அநியாயத்துக்குப்  பொய் சொல்வாங்க. அதையும் நம்பி மக்கள் ஓட்டு போட்டுறாங்க. எலக்சனுக்கு செலவழிக்கிற பணத்தை உங்கள் ருக்கு செலவு செய்யுங்கள். உங்களுக்கு கோயில் கட்டி கும்பிடுவார்கள். ஒரு விசயத்தில மட்டும் எல்லாக்கட்சிகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. இந்தக் கட்சி அந்தக் கட்சின்னு இல்ல, எல்லாக்கட்சிகளிலும் தலைவர் முதல் MLA MP வரை -50 சதவீதத்திற்கு மேல் குற்றப் பின்னணி உள்ளவர்கள்தான். நாடு எப்படி முன்னேறும்?

ஆனால் வாய்மையே வெல்லும். எப்பொழுதும் பொய்சொல்லக் கூடாதுன்னு வரதராஜனும் வான்மதியும் சொல்லியிருக்கிறார்கள்.

“வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்

தீமை இலாத சொலல்”, என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்

இந்திய அரசின் சின்னம் / முத்திரையில் “சத்தியமேவ ஜயதே”, என்ற உபநிஷத் வாசகம் இருக்கிறது. அதன் மொழிபெயர்ப்புதான், தமிழ்நாடு அரசு சின்னத்தில் இருக்கும் "வாய்மையே வெல்லும்" என்பது.

அந்தக் காலத்தில் குருகுலத்துக்குப் படிக்கப்போகும் மாணவனுக்கு குரு சொல்லித்தரும் முதல் பாடம் "சத்யம் வத". அதன் அர்த்தம் உண்மையே பேசு.

என்ன நடந்தாலும் உண்மையே பேசும்போது முதலில் சில தீமைகள் நடந்தாலும், இறுதியில் நன்மையே நடக்கும் என்பதை அரிச்சந்திர மகாராஜாவின் கதையில் படித்திருக்கிறோம். அந்த நாடகத்தைப் பார்த்த மகாத்மா காந்தியடிகளும் இறுதிவரை பொய் சொல்லாமல் வாழ்ந்தார்.

ஆனால் “பொய்மையும் வாய்மை உடைத்து”,ன்னு வள்ளுவர் சொன்னதைக் குறிப்பிட்டு விசுவும் சுபாவும் பல கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல ஆதிசங்கரர் தான் எழுதிய “பிரஸ்னோத்ரரத்ன மாலிகா”வில் "தர்மத்தைக் காக்க பொய் சொல்லலாம்”, என்று சொல்லியிருக்கிறார்.  பிரஸ்ன என்றால் கேள்வி, உத்தர என்றால் பதில். இந்த துதியில் ஏறத்தாழ 200 கேள்வி பதில்கள் உள்ளன. அதில் பாடல் 46-47ல் இது வருகிறது.

கிரேக்க நாட்டு அறிஞர் பிளாட்டோவும் இதையே சொல்லுகிறார். நன்மைக்காக பொய் சொல்வதை அவர் Noble lie  என்று சொல்லுகிறார். கிரேக்க அறிஞர் சாக்ரட்டீசின் சீடர் பிளாட்டோ,பிளாட்டோவின் சீடர் அரிஸ்டாட்டில், அரிஸ்டாட்டிலின் சீடர் அலெக்சாண்டர். அலெக்சாண்டர் இந்தியாவுக்குப் படை எடுத்து வந்ததன் முதல் காரணம், இந்தியாவிலுள்ள ரிஷிகளை எப்படியாவது தன் நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான். நான் சொல்லல, சுவாமி விவேகானந்தர் அவருடைய புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

 இன்னொரு உதாரணம் சொல்லி முடிக்கிறேன். மகாபாரதத்தில் குருஷேத்திர யுத்தம் நடக்கிறது. கெளரவர்கள் பாண்டவர்களை விட ஏழு மடங்கு அதிக படைகளை வைத்துள்ளனர். அதோடு பல காரணங்களுக்காக மாபெரும் வீரர்களான, பிதாமகர் பீஷ்மர், கர்ணன், துரோனாச்சாரியர் இப்படி பலரும் அவர்கள் பக்கம். கிருஷ்ணன் இந்த முழு யுத்தத்தையும் சூழ்ச்சியால் தான் வெல்கிறார்.

தர்மயுத்தம் வெல்ல வேண்டும். தர்மனோ பொய் சொல்ல மாட்டான். அதனால் கிருஷ்ணன், துரோனாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமா என்ற அதே பெயரில் ஒரு யானையை உருவாக்கிக் கொல்லச் சொல்கிறார். பீமன் அதைக் கொன்றவுடன் "அஸ்வத்தாமாவுக்கு சாவு" என்று கூச்சல் இடுகிறான். அதனைக்கேட்ட துரோணர் அது உண்மையா என்று தெரிந்துகொள்ள தர்மனிடம் வருகிறார். அவன் சொல்கிறான் "அஸ்வத்தாமா ஹத: நரோவா குஞ்சரோவா", என்று. "அஸ்வத்தாமா சாவு யானையோ மனிதனோ”,என்று அர்த்தம். யானையோ மனிதனோ என்று தர்மன் சொல்வது கேட்காத படி பாண்டவ சேனை பெரிய டமார துந்துபி ஒலிகளை ஒலிக்கச் செய்கிறது. எனவே துரோணர் காதில், “அஸ்வத்தாமா சாவு”, என்பது மட்டும் விழ, அவர் நொந்து போய் ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு தியானத்தில் அமர, திருஷ்டத்யும்னன் அவரைக் கொல்கிறான். இதன் மூலம் தர்மம் வெல்ல பொய் சொல்லலாம் என்று   சொல்லுகிறார்கள்.

நம்ம தலைப்பு, "நல்லது செய்திட பொய் சொல்லலாம்" என்பது. இதில் யாருக்கு நன்மை என்ற கேள்வி எழுகிறது ?. அது சுயநலமா இல்லை பொது நலமா?.

பொய்ல ரெண்டு கலர் இருக்கு. பச்சைபாய் / வெள்ளைப் பொய்.சுயநலத்திற்கு. பொய் சொன்னா அது பச்சைப்பொய். பொது நலத்திற்கு பொய் சொன்னா அது வெள்ளைப்பொய்.இதுல யாரு என்ன கலர் பொய் அதிகமா சொல்றீங்கன்னு அவங்கவுங்களுக்குத்தான்  தெரியும் .

- முடிவாக என்னுடைய தீர்ப்பு என்ன வென்றால், பொதுவாக, தன்னலம் கருதாது, சமூக நலன் ஒன்றையே மனதில் வைத்து, யாருக்கும் தீமையே விளையாது என்றால் "பொய் சொல்லலாம்". இது ஒரு நல்ல மனிதனுக்கு அடையாளம்.

ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் பொய்யே சொல்லாமல் உண்மையே எப்போதும் சொல்லி நன்மை விளைவிப்பவர், அரிச்சந்திரன் போல, காந்திஜி போல, மகாத்மா ஆகலாம் என்று சொல்லி வாய்ப்புக் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி முடிக்கிறேன்.எங்கள் வாழ்வு வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.

பின்குறிப்பு:

என்னுடன் இணைந்து பேசிய பேச்சாளர்கள் வரதராஜன் ,விசு,வான்மதி மற்றும் சுபா ஆகியோருக்கு என் நன்றிகள்.

எனக்கும் என் குழுவுக்கும் வாய்ப்பு கொடுத்த ஆனந்தம் நிர்வாகக் குழுவுக்கும் குறிப்பாக நண்பர் கவிஞர் சிவபாலன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

.

 

  

 

8 comments:

  1. யாருக்கும் தீமையே விளையாது என்றால் சரி தான்...

    ReplyDelete
    Replies
    1. சரி தான் திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. அருமையான தீர்ப்பு..

    ReplyDelete
  3. ஆம்! தீர்ப்பு மிகச் சரியே!....அதே அதே டிடி சொல்லுவதை வழிமொழிகின்றோம்....வள்ளுவரே சொல்லிருக்காரே!.

    ReplyDelete
  4. ஐயா,

    உங்கள் நெய் பொங்கல் தொகுப்பு சுவை அருமை!

    இப்பெல்லாம் சர்க்கரை பொங்கல் போய்!
    தொண்டையில சிக்குற பொங்கல் ஆகிடுச்சு!
    அப்பத்தா காலத்து பொங்கல் தான்,
    பொங்கலோ பொங்கல்!
    பொங்கலுக்கு டிவி ஸ்பெஷல் ப்ரோக்ராம்னு,
    சீனி போட்டு பொங்கல்!
    அது ப்ரோக்ராம் க்கு முடியும் முன்னாடி செங்கல்!!!

    - பொங்கும் தமிழன்! :)

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள் Gilbert.

      Delete