நண்பர்களே உள்ளே போவதற்குள் ஒரு
முன்னறிவிப்பு. இது நமது முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களைப்பற்றிய
பதிவு அல்ல.
ஆம், அவள் பெயரும்
இந்திராகாந்திதான். நான் ஏழாவது படிக்கும் போது எட்டாம் வகுப்பில் என்னுடைய
அப்பாவிடம் படித்த பெண்.
இந்திராகாந்தியிடம் ஒரு தனித்தன்மை இருந்ததை என்னால் கொஞ்சம் லேட்டாகத்தான்
உணர முடிந்தது. நல்ல சிவப்பாக உயரமாக இருப்பாள். அவளுடைய நடை உடை பாவனைகளில் சற்றே
வித்தியாசம் இருந்தது. நன்கு எண்ணெய் தேய்த்து வாரியிருந்தாலும் அடங்காத செம்பட்டை
முடி. கைகளிலும் கால்களிலும் அதே தங்க முடிகள். உதட்டின் மேலே அரும்பும் பூனை
முடிகள்.அவளுடைய தலைமைக்குணத்தைக் கவனித்த என் அப்பா அவளை "இந்திராகாந்தி அணிக்கு"
தலைவியாக்கியதோடு, வகுப்பு
முழுவதற்கும் தலைவியாக்கினார். அது நடுநிலைப்பள்ளி என்பதால் எட்டாம்
வகுப்புத்தலைவி என்றால் பள்ளி முழுவதற்கும் தலைவிதான்.
வகுப்புப் பெண்கள் மட்டுமல்லாமல்,
பள்ளியில் படிக்கும் எல்லாப் பெண்களும் அவர்களுக்கு ஏதாவது
பிரச்சனை, பையன்களால் தொல்லை என்றால் இந்திராகாந்தியிடம்தான் சொல்வார்கள். இந்திராகாந்தி வந்து சிவந்த முகத்துடன் கையை
முறுக்கினால், பணியாத பையன்களே இல்லை. அவளுக்கு அதீத
பலம். பல சமயங்களில் பையன்களுக்கும் உதவுவாள்.
எல்லா ஆண்களிடம் சிறிதளவு
பெண்மையும், எல்லாப் பெண்களிடமும்
சிறிதளவு ஆண்மைத்தனமும் இருக்கும் என்பதை படித்திருக்கிறேன். ஆனால்
இந்திராகாந்தியிடம் சற்றே இல்லை, ரொம்பவே ஆண்மைத்தனம் இருந்ததை நான் உணர்ந்து
கொண்டேன். ஆனால் யாரிடமும் சொல்லவில்லை.
ஆனால் பள்ளி முழுதும் ஒரு புரளி
உண்டு,
அவள் இன்னும் வயசுக்கு வரவில்லை என்று. அதைப்பற்றி அப்போது
எனக்கு ஒன்றும் தெரியாதலால் அது எனக்குப்
பெரிதாகத் தெரியவில்லை.
என் வகுப்புக்கு அடிக்கடி வந்து
என்னிடம் பேசிக் கொண்டிருப்பாள். அவள் ஒவ்வொரு தடவையும் சொல்வது "சேகர்
எவனாவது உனக்கு பிரச்சனை பண்ணா சொல்லு, மென்னியைத் திருகிர்றேன்", என்று. "சரிக்கா",
என்பேன். என் நண்பர்கள் எல்லாம் சொன்னார்கள், “டேய்
இந்திராகாந்தி ஏன்டா ஒன்ட்ட வந்து பேசுது, வேண்டாம்டா அது
ரொம்ப மோசம்டா", என்றார்கள். என்னடா மோசம்னு கேட்டா ஒன்னும் சொல்லமாட்டாய்ங்க,
சொல்லவும் தெரியாது. எனக்கே சில நேரங்களில் அவளைப் பார்க்க பயமாயிருக்கும்.
அவளுக்கு கோபம் வரும்போது மூக்கு விடைத்து, முகம் சிவந்து
நாக்கைத் துருத்தினால் ஆம்பளை மாறியே தெரியும்.
அர்த்த நாரி |
என் வகுப்பில் காமுத்தாய் என்ற பெண்
உண்டு. மாநிறமாக, நல்ல
களையாய் அம்சமாய் இருப்பாள். என் தெருவில்தான் அவளும் குடியிருந்தாள்.
இந்திராகாந்தி காமுத்தாயைப் பற்றி அடிக்கடி என்னிடம் விசாரித்தது எனக்கு முதலில்
வித்தியாசமாய்த் தெரியவில்லை. சிலசமயம் நான் சொல்வேன், "என்ட்ட ஏன் கேக்கிற, நீயே கேட்டுக்க வேண்டியதுதானே?", என்று.
ஒரு, முறை முறைத்துவிட்டுப் போய்விடுவாள்.
அப்புறம் நான் எட்டாவது போக, அவள் 9ஆவதற்கு
தேவதானப்பட்டி அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு போனாள். சில சமயங்களில் எதற்காவது
எங்கள் பள்ளிக்கு வருவாள். ஒரு தடவை ஞாயிற்றுக்கிழமை மதியம் என் வீட்டுக்கு வந்தாள். கொஞ்ச நேரம்
பேசிட்டு, காமுத்தாயை பார்க்கணும்னு சொன்னா. நான்
எதுக்குன்னு கேட்டேன். அந்தக் கேள்வியை அவள் எதிர்பார்க்கல. கொஞ்சம் தடுமாறிட்டு,
இல்ல சும்மாத்தான் என்றாள்.
எனக்கு அந்த வயசில ஒண்ணும் புரியல.
வகுப்பில எத்தனையோ பேர் இருந்தாலும், இவள் காமுத்தாயை வந்து பார்ப்பதும், அவளைப்பற்றி
விசாரிப்பதும், வீடுவரை வருவதும் ஒரே புதிராக இருந்தது.
எங்க வீட்டுக்கு அப்படி பலமுறை வந்தாள். வந்த போதெல்லாம் அவளுடைய அண்ணன் இல்ல,
அவங்கப்பாவோட சட்டையைப் போட்டுக்கிட்டு வருவாள். ரொம்ப
வித்தியாசமா இருக்கும்.
அப்புறம் நான் 8-ஆவது பாஸ் பண்ணி நானும் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 9-ஆவது போய்ச் சேர்ந்தேன். அப்ப இந்திராகாந்திட்ட பழைய புத்தகம் வாங்க
அவள் வீட்டுக்குப் போனேன். இந்திராகாந்தி அப்ப வேஷ்டி கட்டி அவங்க அண்ணன்
சட்டையைப் போட்டிருந்தா. அவங்கம்மா என்ட்ட சொன்னங்க, "பாருப்பா இவ சொல்றதைக் கேட்க மாட்டேங்குரா, வீட்டில
எப்பவும் அவங்க அண்ணன் சட்டை, பேண்ட் இல்ல வேஷ்டி தான்
கட்டுறா. அவளுக்கும் வாங்கித்தர சொல்றா நீயாவது கொஞ்சம் சொல்லு", என்றார்கள்.
9-ஆவது வகுப்புல காமுத்தாயும்
என்கூட வந்து சேர்ந்தாள். அதனால இன்டர்வல்ல இந்திராகாந்தி என் வகுப்புக்கு
வந்திருவா. காமுத்தாய்ட்ட ரொம்ப நெருக்கமா உட்கார்ந்து, கையைப்பிடிச்சுக்கிட்டு
கதை பேசுவா. அவளுக்கு ஏதாவது திண்பண்டம் வாங்கிட்டு வருவா. ஒரு தடவை காமுத்தாயை,
முத்தலீப் ஏதோ கிண்டல் பண்ணிட்டான்னு தெரிஞ்சி, ஆம்பளை மாதிரி
அவனோட மல்லுக்கட்டினா. முத்தலீப் நெஞ்சுமேல ஏறி உட்கார்ந்து அவனை குத்து
குத்துன்னு குத்திட்டா. அப்புறம் அது HM வரைக்கு
போயிருச்சு.
ஒருநாள் காமுத்தாய்ட்ட கேட்டேன்,
"என்னா இந்திராகாந்தி உன்ட்ட மட்டும் இவ்வளவு பாசமா,
அதுக்கு மேல வெறியா இருக்காளே".
காமுத்தாய் சொன்னா,
"நானும் முதல்ல நட்புன்னு நெனைச்சேன். இவ வரவர ரொம்ப ஓவரா
பண்றா, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல”.
ஒரு தடவை இன்டர்வல்ல நான் வரும்போது,
இந்திராகாந்தி காமுத்தாய் கன்னத்துல முத்தம் கொடுக்கிறத
பாத்துட்டேன். அதுக்குள்ள விஷயம் அரசல் புரசலா வெளியே தெரிந்து எல்லோரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க.
ஒரு நாள் காலைல காமுத்தாய் வகுப்புல
அழுதுட்டு இருந்தா, என்னன்னு
கேட்டேன். அவ ஒண்ணுமே சொல்லல. முத்தலீப் தான், என்னைக்
கூப்பிட்டுப்போய் காமிச்சான். பள்ளிக்கூடத்தின் பின்புறச்
செவுத்துல, ரெண்டு பொண்ணு படம் போட்டு காமுத்தாய் இந்திராகாந்தி
காதல்னு போட்டிருந்துச்சு. எனக்கு இந்த முத்தலீப் பய மேலதான் சந்தேகம். சீச்சீ
அப்படியெல்லாம் இருக்காதுன்னு நெனைச்சேன். ஒரு பொண்ணும் பொண்ணும்... எப்படி
காதல் பண்ண முடியும் ?.
அப்புறம் காமுத்தாய் வகுப்புக்கு
வரல. அவளுக்கு கல்யாணம்னு சொன்னாங்க. அவ கல்யாணத்துக்கு நாங்க நிறையப்பேர்
போயிருந்தோம். இந்திராகாந்தி வரவேயில்லை. என்னடாது இவ்வளவு நெருங்கிய சிநேகிதி
வரலேன்னு நினைச்சேன்.
அடுத்த நாள் பள்ளிக்கு போனா பள்ளிக்
கூடம் லீவுன்னு சொன்னாங்க. முத்தலிப் தான் ஓடி வந்து சொன்னான், இந்திராகாந்தி
தற்கொலை பண்ணிக்கிச்சாம்.
முற்றும்
உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத காலகட்டம் போல.... மனசு கனக்கிறது சார்...
ReplyDeleteஇப்பொழுது மட்டும் மாறி விட்டதா என்ன ?தங்கள் வருகைக்கு நன்றி. ஸ்கூல் பையன்.
Deleteபடிக்க ரொம்ப விசனமா இருந்தது அண்ணே. 8வது படிக்கும் பெண் தற்கொலையா? என்ன ஒரு கொடுமை. இங்கே இன்னொரு விஷயத்தையும் குருப்பிடுகிறேன், தயவு பண்ணி கோவித்து கொள்ள வேண்டாம்.
ReplyDelete//மாநிறமாக இருந்தாலும், நல்ல களையாய் அம்சமாய் இருப்பாள்// இந்த இடத்தில நீங்கள் "இருந்தாலும்" என்று எழுதியது மனதை சற்று நோக அடிக்கிறது. எந்நிறமும் அழகு தானே அண்ணே... இதில் என்ன இருந்தாலும்?
"மாநிறமாக இருந்தாலும்" என்று எழுதியது தவறுதான். மன்னிக்கவும்.
Delete.அந்த வார்த்தையை நீக்கிவிட்டேன்.
. சுட்டிக்காட்டியதற்கு நன்றி தம்பி