ஏப்ரல்
27 திங்கள்கிழமை
காலையில் எழுந்து
வழக்கம்போல் பிரேக் ஃபாஸ்ட் முடித்து வெளியே வந்து உட்கார்ந்தேன். எட்டு மணியளவில்
டூர்கம்பெனி டிரைவர் வந்து பிக்கப் செய்தார். வழியில் ஒரு ஜெர்மன் குழுவை ஏற்றிக் கொண்டு சென்றோம்.
ஆங்கிலம் தெரியவில்லை. ஏழுபேருடன் ஒரே ஒரு
நீலக்கண் தேவதை. நீ.தே வைப் பார்த்து 'ஹாய்' என்று சொல்லிவிட்டு
அவர்கள் எல்லோரையும் பார்த்து மையமாக 'ஹாய்' என்றேன். 'ஹாய்' என்று பதில் சொன்னது இருக்கிறதிலேயே
வயதான ஒரு பாட்டி.(பரதேசிக்கு இதெல்லாம் தேவையா ?) அதன்பின் அவர்களுக்குள் ஜெர்மன்
மொழியில் என்னைப் பார்த்து கதைத்தனர். எங்கிருந்து வருகிறாய்? என்று என்னை ஓட்டை இங்கிலிஸில்
கேட்டது அந்த வயதான பாட்டியின் கணவனாக இருக்க வாய்ப்பிருக்கும் தாத்தா. "நியூயார்க்
என்றதும், நீ.தே வுக்கு புருவங்கள் உயர்ந்தன. "சொந்த நாடு இந்தியா இப்போது வாழ்வது
நியூயார்க்கில்" என்றதும் புருவங்கள் தாழ்ந்தன.
அதன்பின் அவர்களிடமிருந்து
கேள்வியுமில்லை பதிலுமில்லை.சிட்டுவேஷன் பாட்டாக "ஜெர்மனியின் செந்தேன் மலரே"
பாடலை முணுமுணுத்தேன்.
"ஐயாம்
யுர் கைட்" என்று அறிமுகப்படுத்தினான் ஒரு குள்ளப் பையன். பெயர் ஓஸ் (OZ) என்றான்.
சனியன்று வந்தவன் உர்ஸ், இப்போது வந்திருப்பவன் ஓஸ். என்ன பெயர்களோ உஸ் தஸ் புஸ்ஸீன்னு.
உர்ஸ் போல உம்மென்று இல்லாமல் ஓஸ் கொஞ்சம்
சிரித்தமுகம். ஆனால் இந்தத் தடவை குடையைக் காணோம்.
முதல் ஸ்டாப்
கேம்லிகா ஹில் (Camlica Hill) வண்டி சுமார் ஒரு மணி நேரம் சென்றபிறகு பாண்டி பஜார்
வந்தது. ஆமாம் அச்சு அசலாய் பாண்டி பஜார் போலவே இருமருங்கிலும் கடைகள் இருந்தது. இது
இஸ்தான்புல்லில் ஐரோப்பியப் பகுதி என்றான் ஓஸ். கடந்து சென்று மலையேறினோம்.
பசுமையான சிகரத்தின்
மேல் வேன் ஏறியது. சுற்றிலும் பசுமைக் கம்பளம் மூடிய மலை முகடுகள் இருந்தன. இருண்ட
மேகங்கள் முகடுகளை தொட்டுக் கொண்டு இருந்தன. லேசாக சாரல் அடித்தது. அருகில் நீ.தே வேறு.
இலேசாக கவிதை பாட மனசு துடித்தது.
திரண்ட மேகங்கள்
இருண்ட முகடுகள்,
மிரண்ட நீல விழிகள் அதைப் பார்த்து
உருண்ட என் கண்கள்,
வரண்ட பூமியில் வளமான சாரல் ...
அந்த விபரீத ஆசையை அடக்கும் வகையில்
சாரல் தூரலாகி , தூரல் பெரிய மழையாக மாறி கொட்டோ கொட்டென்று பெய்ய ஆரம்பித்தது.
ஓரங்கட்டிய
வேனிலிருந்து இறங்கச் சொன்ன போது, ஜெர்மன் குழு ஆளாளுக்கு ஒரு குடையை விரித்து இறங்கினர்.
நீ.தே மட்டும் குடையைத் தவிர்த்து நனைந்து கொண்டே போனது. ஓஸிடம் உன் குடை எங்கே? என்றேன்.
"கொண்டு வரவில்லை", என்றான். சும்மாவே குடை எடுத்து வரும் இந்த கைடுகள் இன்னிக்கு
பார்த்து எடுத்துவரவில்லை, சொல்லிவிட்டு இறங்கி ஓடினான். வேறு வழியின்றி நானும் இறங்கி
ஓடி தொப்பலாக நனைந்து கோழி போல் சிலிர்த்துக் கொண்டு கட்டிடத்தின் உள்ளே நுழைந்தேன்.
அது ஒரு ரெஸ்டாரண்ட். ஏற்கனவே அடங்காத என் முடி இப்போது முள்ளம்பன்றி போல் குத்திட்டு
நின்றது. ஆனா எதிரில் நீ.தே. நீர்த்தாரைகள் வழிய தகத்தக என்று மின்னியது.
ஜெர்மன் குழு
தனியாக அமர்ந்து அரட்டையை ஆரம்பிக்க நான் "தனியே தன்னந்தனியே" உட்கார்ந்தேன்.
ஒரு சிறிய ஸ்டூலின் மேல் மாபெரிய தாம்பாளத்தட்டு இருந்தது. அதன் பின்னால் இருந்த கெளச்சில்
உட்கார்ந்தேன்.
My Guide OZ |
என்னைத் தனியாகப்
பார்த்த ஓஸ் என்னருகில் வந்து உட்கார்ந்தான். ஓஸும் ஒண்ணும் வேண்டாம் எனச் சொல்லிவிட,
இரண்டு ஆப்பிள் டீ ஆர்டர் செய்தேன். நனைந்த உடலுக்கு ஆப்பிள் டீ இதமாக இருந்தது.
"இந்தக்
குன்றைப்பற்றி கொஞ்சம் சொல்லு",என்றேன் ஓஸிடம்.
இஸ்தான்புல்லில்
இரண்டு கேம்லிக்கா குன்றுகள் இருப்பதாகவும், இதுதான் அவற்றுள் பெரியது எனவே இது
"பிக் கேம்லிக்கா ஹில்", என்று அழைக்கப்படுகிறது என்றான். இந்தப் பகுதியின்
பெயர் "உஸ்குடர்" (USKUDAR) என்றான். இது கடல் மட்டத்திலிருந்து சுமார்
270 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இதிலே 18 ரேடியோ மற்றும் தொலைக்காட்சி டவர்கள் உள்ளன.
சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த இந்தப்பகுதி இஸ்தான்புல்லின் முக்கிய பிக்னிக் ஸ்பாட் என்றும் சொன்னான். இதன் அழகைப்பார்க்க உலகம் முழுவதிலுமிருந்த
நிறைய டூரிஸ்ட் வருவதாகச் சொல்லி, "உங்களைப் போல" என்று புன்னகைத்தான். இந்த
மலையைப் பற்றி நிறைய கவிதைகளும் பாட்டுகளும் இருப்பதாகவும் சொன்னான். அந்த ரெஸ்டாரண்ட்
அரசாங்கமே நடத்துகிறது என்றான்.
ஆனால் அதன்
அழகை முற்றிலும் பார்க்க முடியாதபடி மழை சோவென்று கொட்டியது. ஆனால் அதுவும் ஒரு அழகுதான்.
மழை நிற்கிற
மாதிரி தெரியவில்லை. ஜெர்மன் குழு பிரேக்ஃபாஸ்ட்டை முடித்துவிட்டு ஏப்பம்விட்டு எழுந்தனர்.
சரி கிளம்பிவிடலாம் என்று ஓஸ் சொல்லி மறுபடியும் நனைந்து கொண்டே வேனுக்குத்திரும்பினோம்.
அடுத்து எங்கே?
என்று கேட்டேன். டிரைவரிடம் கேட்டுவிட்டு, மழை நிற்காமல் பெய்வதால் அரண்மனைக்கு போய்விடலாம்
என்றான் ஓஸ்.
என்னாது மறுபடியும்
முதல்லே இருந்தா? என்ற கேள்வியுடன் "டொப்கப்பியும் பாத்தாச்சு டால்மபாசேவும் பாத்தாச்சு"
என்றேன். இல்லை இல்லை. இது "பெய்லர்பேயி அரண்மனை" (Beylerbeyi Palace) என்றான்.
இது யாரோட அரண்மனை என்று கேட்டதற்கு, அவன் தொண்டையைச் செருமி சொன்ன தகவல்களை இங்கு
தருகிறேன்.
பெய்லர்பேயி
அரண்மனை:
பெய்லர்பேயி
என்றால் அரசருக்கு அரசன் என்று அர்த்தமாம். சுல்தான் அப்துல் அஜிஸ் (1830-1876) அவர்களால்
கட்ட உத்தரவிடப்பட்ட இந்த அரண்மனை 1861ல் ஆரம்பித்து
1865-ல் கட்டி முடிக்கப்பட்டது.
Sulthan Abdul Aziz |
சுல்தானின் அரச குடும்பத்திற்கு இது கோடை வாசஸ்தலமாக
விளங்கியதாம். 1869ல் சூயஸ் கால்வாயைத் திறக்க வந்த பிரெஞ்சுப் பேரரசி யூஜினி இந்த
அரண்மனைக்கு விஜயம் செய்தாராம். பேரரசியின் அழகில் மற்றவர் சொக்கி நிற்க, அவர் அரண்மனையின்
அழகில் சொக்கினாராம்.
குறிப்பாக தான் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வேலைப்பாட்டில் மயங்கி,
பாரிசில் இருக்கும் தன்னுடைய டியூலெரஸ்
(Tuileries Palace) அரண்மனையின் ஒரு ஜன்னலை அதே மாதிரி வடிவமைக்க உத்தரவிட்டாராம்.
இவர்தான் சுல்தானின் அம்மாவிடம் அறை வாங்கியவர் என ஏற்கனவே சொன்னது ஞாபகம் இருக்குமென
நினைக்கிறேன். வின்ட்சன் ட்யூக் மற்றும் டச்சஸ் அவர்களும் இங்கு வந்தனராம்.
பதவி நீக்கம்
செய்யப்பட்ட சுல்தான் அப்துல் ஹமீது II 1912லிருந்து அவர் இறந்து போன வருடமான 1918
வரை இங்குதான் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
அரண்மனைக்கு
முன்னர் இருபுறமும் குளிக்கும் பகுதிகள் இருந்தன. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாக.உள்ளே
நுழைந்தால் முன் ஹாலே நீருற்றுடனும், சிறிய நீச்சல் குளத்தோடும் இருந்து பிரமிப்பூட்டியது.
ஆட்டமன் பேரரசின்
எல்லா அரண்மனைகளிலும் உள்ளே ஆங்காங்கே சிறிய நீர்த்தடத்தில் தண்ணீர் ஓடுவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு
இரண்டு காரணம் ஒன்று தண்ணீர் ஓடுவதால் அந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும். இரண்டாவது
சலசலத்து ஓடும் சத்தம் காதுக்கு இனிமையாக இருக்கும்.
எகிப்து நாட்டின்
கோரைப்புற்களால் செய்யப்பட்ட பாய்கள் தரைமுழுதும் விரிக்கப்பட்டு அதற்கு மேல் கார்ப்பெட்டுகள்
போடப்பட்டனவாம்.
இங்கும் ஏராளமான
கிறிஸ்டல் சர விளக்குகள் தொங்கின.
மற்ற பகுதிகள்
நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி இருந்தாலும் பெருமூச்சு வருவதை தடுக்கமுடியவில்லை. சுல்தான்களைப்
பற்றி யோசித்துக் கொண்டே வந்து வேனில் ஏறி உட்கார்ந்தபோது நீ.தே அதாங்க பாஸ் ,நீலக்கண்
தேவதை மிதந்து வந்து என் அருகில் வந்து உட்கார்ந்தது.
தொடரும்
>>>>>>>>>>>>>
'பேயி' அரன்மனைன்னு சொன்னதும் பயந்துட்டேன் ..!
ReplyDeleteஎழுதும்போதுதான் பேயி என்று வந்து விட்டது . அவர்கள் உச்சரிப்பு வேறு மாதிரி ஒலிக்கிறது .
Deleteஅண்ணே , உங்க போட்டோ அட்டகாசம் ..... !
ReplyDeleteபோங்க தம்பி எனக்கு வெக்கமா இருக்கு .
Delete4 வருசத்துல கட்டிய அரன்மனையா ,,, ஆச்சர்யம் தான் ...
ReplyDelete.ஆள்பலமும் பண பலமும் இருந்தால் நாலு வருஷமென்ன நாலு நாளிலும்
Deleteகட்டிரலாம் .தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.தம்பி .
ஜெர்மனியில் செந்தேன் என்றதும் வேற என்னமோ சொல்ல போறீங்கன்னு வந்தேன்.. இன்னும் சுற்றுலாவிலே இருக்கீங்க போல...
ReplyDeleteஆரம்பித்ததை முடிக்க வேண்டாமா தம்பி விசு ?
Delete