Thursday, August 14, 2014

கத்திக்குத்து கார்லோஸ் !!!!!!!!!!!!!!!!


பிராங்க்ஸ் மனநல மருத்துவமனையில் நான் பகுதி நேர சேப்லின் (Chaplain). ஆக பணியாற்றுவது உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.
அங்கு உள்ள சேப்பலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் வழிபாடு நடத்துவேன். அங்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு சோகக்கதை இருக்கிறது. 15 முதல் 20 வருடங்களாக அங்கேயே இருப்பவர்களும் உண்டு. அவர்கள் குணமாகி வெளியே போனாலும் அவர்களால் சமூகத்தில் வாழ்வது கடினம். ஏனென்றால் சமூகமும் சூழ்நிலையும் மொத்தமாக மாறிவிட்டது. இங்கேயே மடிந்து போகிறவர்களும் உண்டு.
ஏதோ சில கோளாறுகளில் வயிறு புடைத்த பெண் தன வயிற்றில் குழ்ந்தை இருப்பதாக நம்புகிறாள். இல்லையென்று யார் சொன்னாலும் அவளுக்கு கோபம் வருகிறது.
கிறிஸ்தவராகப் பிறந்து, முஸ்லிம் பெண்ணை மணந்து முஸ்லீமாகி, அந்தப் பெண் கைவிட்டதால், மனநிலை பிறழ்ந்து, இப்போது கிறிஸ்துவத்திற்கும் முஸ்லீமுக்கும் நடுவில் குழம்பி மருகும் ஒரு சகோதரன்.
தந்தையால் சிறுவயதிலேயே  கைவிடப்பட்ட ஸ்டெப் மதரால் கொடுமைப்படுத்தப்பட்டு, அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டு பலவித பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டு மனநிலை பிறழ்ந்த ஒரு பெண்.

இப்படிப் பல கதைகளை சொல்லிக் கொண்டே போனால் ஒரு நாவல் எழுதும் அளவுக்கு விஷயங்கள் உண்டு.
இதில் எனக்குப் பிடித்த ஒருவன் உண்டு. கார்லோஸ் என்று பெயர் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது),வெள்ளைக்காரன் .
காலையில் நான் ஒரு ஐந்து நிமிடம் தாமதமானால் உடனே எனக்கு போன் செய்துவிடுவான். "எங்கே இருக்கிறீர்கள் சீக்கிரம் வாருங்கள்," என்று.சேப்பல் வந்து சேர்ந்தவுடன், அவனுடைய வார்டுக்குத்தான் முதலில் போன் செய்வேன்.
நோயாளிகள் தானாக இறங்கி வரமுடியாது. அவர்களுடைய வார்டின் நர்சோ அல்லது நர்சிங் அசிஸ்டெண்டோ கூட வரவேண்டும்.
கார்லோஸ் சீக்கிரமாக வந்து,ஆல்டரை ஒழுங்கு செய்வது, வழிபாட்டு புல்லட்டினை இருக்கைகளில் பரப்புவது, பிற வார்டுகளுக்கு திரும்பவும் போன் செய்து நோயாளிகளை வரச்சொல்வது போன்ற பல உதவிகளைச் செய்வதோடு, வழிபாட்டிலும், திருமறை வாசிப்பது, ஜெபம் செய்வது என்று மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வான். எனக்கு அவனை ரொம்பவும் பிடிக்கும்.
மனநிலை பிறழ்ந்த எந்த அறிகுறியும் இருக்காது. நூறு சதவீத நார்மல் என்பேன். பணிவு, அடக்கம், ஈடுபாடு, ஒழுக்கம், கடவுள் பக்தி என்று எல்லாவற்றிலும் ஒரு படி மேல்தான். சில சமயம் என்னையும் மிஞ்சிவிடுவான்.
அதோடு வழிபாட்டின் இடையில் உள்ள ஷேரிங் டைமில் வந்து ஒரு அருமையான கருத்தை பகிர்வான். பல சமயங்களில் எனக்கும் அது உதவியிருக்கிறது.
இவ்வளவு நார்மலான ஒருவனை இன்னும் என் இங்கு வைத்திருக்கிறார்கள்? என்று அடிக்கடி ஆச்சரியப்படுவேன்.
முதலிலேயே மேனேஜ்மெண்ட் கொடுத்த அறிவுரை நான் யாருடனும் நெருங்கிப் பழகுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் அனைவரும் இன்னும் நோயாளிகள் தான் .
ஆனால் இங்கு வேலை செய்யும் நர்சுகளை மிகவும் பாராட்ட வேண்டும் இதுவரை ஒரு சிடுமூஞ்சியைக் கூட பார்த்ததில்லை. பெண் நர்ஸ் மட்டுமல்லாது ஆண் நர்சுகளும் அதே மாதிரிதான். இதனை வெறும் வேலை என்று நினைத்தால் இந்தளவுக்கு அவர்களிடம் அன்புடனும், கருணையுடனும், பொறுமையுடனும் நடந்து கொள்வது கடினம்.
பலபேரின் கதைகளை, அவர்கள் ஷேரிங் டைமில் வந்து பகிர்வதிலிருந்து தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் கார்லோஸ் அந்த மாதிரி எந்தப் பின்னணியையும் என்னிடத்தில் சொல்லியதில்லை.
ஒரு நாள் வழிபாடு முடிந்து எல்லோரும் சென்றபின் சேப்பலை ஒழுங்கு செய்து கொண்டிருந்த கார்லோசிடம் கேட்டேன். எத்தனை வருடமாக இங்கே இருக்கிறாய்?
“30 வருடங்களாக இருக்கிறேன், பதினைந்து வயதில் இங்கு வந்தேன்".
" ஏன் 15 வயதில் என்னாச்சு"
“எனக்கு 13 வயதாகும் போது, எங்கப்பாவும், அம்மாவும் ஒரு கார்விபத்தில் இறந்துவிட்டார்கள். எனவே என் அம்மாவின் சகோதரி என்னை அவள் வீட்டில் கொண்டுபோய் வளர்த்தாள். அவள் மிகவும் அன்பானவள். ஆனால் ரொம்பவும்  கண்டிப்பு, ஒரு நாள் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஹோம் வொர்க் பண்ணச்சொல்லி கட்டாயப்படுத்தினாள். எனக்கு கோபம் வந்துவிட்டது.”
"கோபம் வந்து என்ன செய்தாய்"
"பக்கத்தில் இருந்த கத்தியால் குத்திவிட்டேன்"
“ஐயையோ அப்புறம் என்ன ஆச்சு”.
“பூவர் லேடி டைட்” (Poor Lady Died)
என்றானே பார்க்கலாம். சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான்.
இப்ப திரும்ப சேப்பலுக்கு போவதா வேணாமான்னு ஒரே குழப்பமா இருக்கு.


வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர  தின நல்வாழ்த்துக்கள்.

4 comments:

  1. ஹா ஹா அண்ணே தலைப்பே புன்னகைக்க வைத்தது... முடிவுல உங்க நிலைதான் ...

    உங்களுக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள் அண்ணே..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தம்பி ஆனந்த் .

      Delete
  2. உங்களை ஆச்சர்யபடுத்திய ஷேரிங் டைம் ஸ்டோரிகளை இங்கே பதிவிடுமாறு வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்கிறேன் தம்பி.

      Delete