Monday, August 11, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி -13 முஸ்தஃபா!! முஸ்தஃபா !!!!



Mustafa Kemal Atatürk
Mustafa Kemal 
32 நாடுகளையும் பிற டெரிடரிகளையும் தன்னகத்தே கொண்டு மாபெரும் தேசமாக பலகாலம் விளங்கிய ஆட்டமன் பேரரசு, 19- ம் நூற்றாண்டில் சற்றே ஆட்டம் கண்டது. பக்கத்தில் இருந்த ஐரோப்பா நவீன வசதிகளுடன் மிக வேகமாக முன்னேறி வருகையில், ஆட்டமன் அதற்கு ஈடு கொடுத்து வளரமுடியவில்லை. மிகப்பரந்த நாடு என்பதாலும் எல்லாப்பகுதிகளையும் அடக்கி ஆளுவது மிகவும் கடின காரியமாக இருந்தது.

எனவே நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்புகளும் புரட்சிகளும் வெடித்தன. அப்போது இருந்த சுல்தான் மகமது II இதனைப்புரிந்து கொண்டு பலவித முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டார். தங்கக் கொம்பு (Golden Horn -இதனைப்பற்றி பின்னர் சொல்கிறேன்.) துறைமுகத்திற்கு பாலங்கள் கட்டப்பட்டன. 1880-ல் இஸ்தான்புல் பிற ஐரோப்பிய நாடுகளோடு ரயில் பாதைகள் மூலம் இணைக்கப்பட்டது. நவீன வசதிகளான குடிநீர் விநியோகம், மின்சார வசதி, தொலைபேசி  இணைப்புகள்,டிராம் வண்டிகள் ஆகியவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனாலும் இவையெல்லாம் எந்த பெரிய விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக 1914 முதல் 1922க்குள் கிறிஸ்தவர்களின் ஜனத்தொகை 450000 லிருந்து 240000 ஆக கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்தது.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் துருக்கி இளைஞர்களின் புரட்சி, சுல்தான் அப்துல் ஹமிது II அவர்களை ஆட்சியில் இருந்து இறக்கியதோடு, பல்வேறு உள்நாட்டுப் போர்களுக்கும் வித்திட்டது. நாடு முழுவதும் பெரிய குழப்பச் சூழ்நிலை இருந்தது. அதோடு முதலாம் உலகப்போர் வந்து சேர்ந்தது.
Mustafa Kemal
சுல்தானின் தவறான முடிவால் சேரக்கூடாத அணியில் சேர்ந்து கடுமையான தோல்வியைச் சந்தித்தது ஆட்டமன் பேரரசு,. அப்போது ராணுவத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்தான் முஸ்தஃபா கமால். இவருடைய ஆலோசனைக்கு எதிராகப் போய் தோல்வியைத் தழுவியதால், இனிமேலும் சுல்தான் பக்கம் நின்றால் நாடு அவ்வளவுதான் என்று நினைத்து முஸ்தஃபா ஒரு புரட்சிப்படையை உருவாக்கினார். வெறுப்போடிருந்த  ராணுவத்தின் பலர் அவர்பின் அணி திரண்டனர்.    
இந்தச் சூழ்நிலையில் போரில் தோற்றதால் நேசப் படைகளான ஆங்கிலேய, ஃபிரெஞ்சு மற்றும் இத்தாலிய படைகள் இஸ்தான்புல்லை ஆக்ரமித்துக் கொண்டன. அது மட்டுமல்லாமல், பாக்தாத், டமஸ்கஸ், ஜெருசலேம், ஆகியவற்றையும் பிடித்துக் கொண்டன. ஏப்ரல் 1920ல் சான்ரெமோவில் நடந்த கூட்டத்தின்படி ஃபிரான்ஸ், சிரியாவையும், ஆங்கிலேயர், பாலஸ்தீனத்தையும் மெசபடேமியோவையும் எடுத்துக் கொண்டனர். பின்னர் சுல்தான் மெகமதுவும் இதனை அங்கீகரித்து ஆகஸ்ட் 1920ல் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு அனடோலியா மற்றும் இஜ்மீரையும் தாரை வார்த்தார். அதனால் ஆட்டமன் பேரரசு ஒரு சிறிய பகுதியாக சுருங்கியது.
           இதனையெல்லாம் பொறுத்துக் கொள்ளாத துருக்கி தேசியவாதிகள், ர்க்கிஷ்  கிராண்ட் நேஷனல் அசெம்பிளி (The Turkish Grand National Assembly) என்ற ஒரு அமைப்பை முஸ்தபா கமால் அவர்கள் தலைமையில் அங்காராவில் நிறுவினர். இதுவும் ஏப்ரல் 1920-ல் நடந்தது.  
Last Sultan Mehmed VI
இந்த புதிய அரசாங்கம் சுல்தான் மெகமது VI -ஐ பதவியைவிட்டு நீக்கியது. மேலும் நவம்பர் 1922ல் ஆட்டமன் அரசை முற்றிலுமாகக் கலைத்துவிட்டு அப்போதிருந்த சுல்தான் மெகமதுவுக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுத்தார்கள். ஒன்று நாட்டை விட்டு வெளியேறுதல் மற்றொன்று உயிரைவிடுதல். அதே மாதத்தில் 17-ஆம் தேதி சுல்தான் நாடுகடத்தப்பட்டார். இந்தக் கடைசி சுல்தானைப்பற்றி பின்னர் விரிவாகச் சொல்லுகிறேன்.
பின்னர் 19ஆம் தேதி சுல்தானின் அடுத்த வாரிசான அவருடைய முதல் கசின் அப்துல் மசீது எஃபண்டி காலிஃப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காலிஃப் பதவியும் 1924ல் நீக்கப்பட்டது.
லாசேன் ( Lausanne) என்ற இடத்தில் கையெழுத்தான உடன்படிக்கையின்படி அக்டோபர் 29, 1923ல் துருக்கி குடியரசு பிறந்தது . அது மற்ற நாடுகளால் அங்கீகரிக்கவும் பட்டது. அதன் முதல் அதிபராக, முஸ்தபா கமால் பொறுப்பேற்றுக் கொண்டார். தலைநகராக அன்காரா தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆட்டமன் வரலாற்றின் மையமான இஸ்தான்புல்லை விட்டு தள்ளியிருந்து, புதிய நாட்டை உருவாக்க முயன்றதால் அன்காரா தேர்ந்தெடுக்கப்பட்டது.

முஸ்தஃபா கமால் அவர்களின் திறமை மிகுந்த தலைமையில் நாடு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. முஸ்தஃபா பலவித சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அதில் சிலவற்றை கீழே தருகிறேன்.

1) முஸ்தஃபா முதலில் செய்த ஆச்சரியமான சீர்திருத்தம், அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம் சுல்தான்களால் ஆளப்பட்ட பெரும்பாலும் முஸ்லிம்கள் வசித்த நாட்டை மதசார்பற்ற குடியரசாக ஆக்கியது.
2) அதுவரை இருந்த மதசார்பான பதவிகளையும், சுல்தான் காலத்து பரம்பரை பட்டங்களையும் நீக்கினார்.
3) இஸ்லாமிய நீதிமன்றங்களையும், இஸ்லாமிய ஷரியத் சட்டங்களையும் நீக்கி, ஸ்விட்சர்லாந்தின் சிவில் கோடையும், இத்தாலிய பீனல் கோடையும் அடிப்படையாக வைத்து துருக்கி சட்டங்களை நிறைவேற்றினார்.
4) ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அரசியல் சமூக அந்தஸ்து கொடுத்தார்.
5) ஆட்டமன் பயன்படுத்திய துருக்கிய எழுத்துக்களை நீக்கிவிட்டு லத்தீன் எழுத்துக்களைப் பயன்படுத்தி எளிதான புதிய ஆல்ஃபபெட்களை உருவாக்கினார்.
6) தலைப்பாகை அணிதல், நீண்ட உடை அணிதல் ஆகிய பழக்கங்களை மாற்றினார்.
7) இஸ்லாமிய கான்வென்ட்களையும் குருகுலங்களையும் மூடினார். 
இவ்வளவு சீர்திருத்தங்களையும் முறையாக தைரியமாக செய்து நாட்டை நவீன பாதையில் நடத்தியதால் அவரை துருக்கி நாட்டின் தந்தை, அத்தாதுர்க் என்று அழைக்கிறார்கள்.
Attaturk Bedroom 
நம்மூரில் தமிழ் முஸ்லிம்கள் தங்கள் தந்தையை "அத்தா" என்று அழைப்பார்கள் அல்லவா. அதே வார்த்தைதான் அதே அர்த்தத்தில்தான் அத்தாதுர்க் என்று அழைக்கிறார்கள்.  

10 வருடங்கள் தொடர்ந்து ஆண்டு, பலவித சீர்திருத்தங்களைச் செய்து, பிறருக்கு வழிவிட்டு பதவி விலகி, தன் கடைசிக் காலத்தை இந்த அரண்மனையில் ஒரு ரூமில் செலவு செய்து, இங்கேயே நவம்பர்  10, 1938 அன்று  உயிரும் நீத்தார். அவருடைய ஆவி இங்கு உலவுவதாக ஒரு பேச்சு இருக்கிறது.

தொடரும் 

3 comments:

  1. ரியலி முஸ்தபா ஸ் கிரேட்ண்ணே... !

    ReplyDelete
  2. முற்றிலும் உண்மை தம்பி

    ReplyDelete