Monday, August 18, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி: பகுதி 14 :கடைசி சுல்தான் !!!!!!!!!


ரொம்ப நேரம் உற்றுப்பார்த்தால் ஆவி ஏதாவது வந்து விடுமோ என்று பயந்து ஆட்ட துர்க் முஸ்தபா கமால் அவர்கள் தங்கியிருந்த ரூமை விட்டு நகர்ந்தேன். மேலும் பல அறைகள் இருந்தன. உப்பரிகை மேலே செல்லும் போது கைட் சொன்னான். இந்த இடைவெளிகள் மூலம்தான் கீழே நடக்கிற பொது நிகழ்ச்சிகளை அரண்மனைப் பெண்கள் கண்டு களிப்பார்கள் என்று. உயரத்தில் ஸ்டெயின் கிளாஸ்களில் உருவாக்கப்பட்ட ஜன்னல்கள் இருந்தன. மேலிருந்து அவர்கள் கீழே நிகழ்ச்சிகள் நடைபெறுவதைப் பார்க்கலாம். அதே சமயத்தில் கீழிருந்து அவர்கள் யாரையும் எவரும் பார்க்க முடியாது.  
அந்தப்புறத்தைப் பார்த்து முடித்து வெளியே வந்தேன். அரண்மனை வளாகத்தில் சுல்தான் காலத்தில் பல அலுவலகங்கள் இருந்தனவாம். வலதுபுற ஓரத்தில் ஒரு கட்டடத்தில் சுல்தான்கள் பயன்படுத்திய பலவிதமான பெரிய சிறிய கடிகாரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆதி காலத்திலிருந்து அவர்கள் பயன்படுத்திய சுவர்க்கடிகாரங்கள், தரைக்கடிகாரங்கள், மேஜை மீது வைத்துக்கொள்ளும் வகைகள் என நூற்றுக்கணக்கில் இருந்து ஆச்சரியமூட்டின. 
அந்தப்பகுதியைவிட்டு வெளியே வந்தால் இருபுறமும் நர்சரிப்பூங்காக்கள் இருந்தன. அதனைத்தாண்டி வந்தால் வலதுபுற மூலையில் ஒரு சிறிய மிருகக்காட்சி சாலை இருந்தது. அவற்றில் சில அரிய பறவைகள், பஞ்சவர்ணக்கிளி, மயில்கள் ஆகியவை இருந்தன. அதிலும் வெள்ளை மயில் ஒன்று மிக அழகாக தோகை விரித்து நின்று கொண்டிருந்தது .வெளியே கோழிகள் தம் குஞ்சுகளுடன் மேய்ந்து திரிந்தன. மறுபுறத்தில் ஆடுகள், மான்கள் போன்ற சில மிருகங்கள் இருந்தன.
அதன் அருகிலேயே பாஸ்பரஸ் இருந்தது. பெரும் படகுகள் போவதும் வருவதுமாக இருந்தன. டூரிஸ்ட் மக்கள் அதிகமாக காணப்பட்டனர். ஆண்டுதோறும் இங்கு வரும் டூரிஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.


இஸ்தான்புல் பெருநகர்
Istanbul City
 முதலில் பைஜாண்டின் மற்றும் கான்ஸ்டான்டிநோபில் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர்தான் இப்போது இஸ்தான்புல் என்று அழைக்கப்படுகிறது.ஐரோப்பாவின் கலாச்சாரத்தலைநகர் என்று அழைக்கப்படும் இஸ்தான்புல் உலகிலேயே புகழ் பெற்ற இடங்களில் ஐந்தாவது இடம் வகிக்கிறது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு பேரரசுகளுக்குத் தலைநகராய் விளங்கிய ஊர் இது.  
·         ரோமப்பேரரசு (330-395)
·         பைஜாண்டின் பேரரசு (395-1204: 1261-1453)
·         இலத்தீன் பேரரசு (1204-1261)
·         ஆட்டமன் பேரரசு (1453-1922)
துருக்கி நாட்டிலேயே மிகப்பெரிய நகரமாக விளங்கும், இம்மாநகரில் மொத்தம் 15 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அதற்கு இணையான அளவு டூரிட்ஸ்களும் ஒவ்வொரு வருடமும் வந்து செல்கின்றனர். 2012ல் மட்டும் 11.6 மில்லியன் மக்கள் இங்கு வந்து சென்றிருக்கின்றனர்.   
ஆட்டமன் பேரரசு பலநாடுகளை அடக்கியதாக இருந்ததால், பல நாட்டிலிருந்தும் மக்கள் வந்து இங்கு குடியேறினார்கள்.  ஒரேவிதமான மக்களைப் பார்க்கமுடியவில்லை. நியூயார்க் போல விதவிதமான மக்கள் இங்கு வாழ்கிறார்கள். இனத்தால் நிறத்தால் மதத்தால் இவர்கள் வேறுபட்டிருந்தாலும் மொழியால் ஒன்றுபட்டு இருக்கிறார்கள்.
முஸ்லீம்கள் அதிகபட்சமாக வாழ்ந்தாலும், கிறிஸ்தவர்களும், யூதர்களும் நிறைய இருக்கிறார்கள். எந்தவிதப்பாகுபாடும் வேறுபாடும் இல்லாமல் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.  
கடைசி சுல்தான்
Mehmed VI
லாஸ்ட் எம்பரர் மாதிரி மெஹ்மது VI என்பவர் லாஸ்ட் சுல்தான். இவரைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு இந்த நாளை முடித்துவிடலாம் என நினைக்கிறேன். மெஹ்மது வாஹித்தீன் VI  என்பவர் ஆட்டமன் பேரரசின் 36ஆவது மற்றும் கடைசி சுல்தான் ஆவார். டால்மபாசே அரண்மனையில் இவர் பிறந்தது 1861ல். இவர் மெஹ்மது V -ன் தம்பி, பட்டத்து இளவரசனான யூசுஃப் இஜட்டின் எஃபன்டி தற்கொலை செய்து  கொண்டபின், ஒஸ்மான் தலைமுறையின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் ஒஸ்மான் வாளைப் பெற்றுக் கொண்டு 36ஆவது பாதுஷாவாக 1918ல் முடிசூட்டப்பட்டார். சுல்தான் அப்துல் மசீது I அவர்களின் இளைய புத்திரர் இவர்.
பாவம் இவர் பதவிக்கு வந்ததில் இருந்து பெரும் குழப்பம். இதற்கிடையில் முதலாம் உலகப்போர் வேறு வந்தது.
முதலாவது உலகப்போர் ஆட்டமன் பேரரசுக்கு மரண அடியாக அமைந்தது. பிரிட்டன் தலைமையில் இருந்த நேசநாடுகள், பாக்தாத், டமஸ்கஸ், ஜெருசலேம் ஆகிய பகுதிகளை பிடித்துக் கொண்டு தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். ஏப்ரல் 1920ல் நடந்த சேன் ரெமோ ஒப்பந்தத்தின்படி ஃப்ரான்ஸ் சிரியாவை எடுத்துக் கொண்டது. பிரிட்டன் பாலஸ்தீனா மற்றும் மெசபடோமியாவை  எடுத்துக்கொண்டது.
மெஹ்மதுவுக்கு வேறு ஒன்றும் வழி இல்லாததால் தன்னுடைய பிரதிநிதிகளை அனுப்பி மேலும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் அனடோலியா மற்றும் இஜ்மிரையும் இழந்தார்கள்.
அப்போதுதான் கொதித்தெழுந்த முஸ்தபா கமால் ஏப்ரல் 1920ல் துருக்கியை குடியரசாக பிரகடனம் செய்து சுல்தான் மெஹ்மதுவை பதவியைவிட்டு நீக்கினார். அதோடு நவம்பர் 1922ல் ஆட்டமன் சுல்தான்களின் அரசவையை முற்றிலுமாக ஒழித்துக்கட்டினார். 
Departure of Mehmed VI, the last Ottoman sultan.
அதே மாதத்தில் சுல்தானும் அவரது குடும்பமும் நாடுகடத்தப்பட்டார்கள். மலாயா என்ற பிரிட்டிஷ் போர்க்கப்பல் நவம்பர் 17ஆம் தேதி அவரை ஏற்றிக்கொண்டு மால்டா சென்றது. அதன்பின்னர் இவர் இத்தாலிய ரிவிபேராவில் வாழ்ந்தார்.
British Ship Malaya 


நொந்த நிலையிலேயே வாழ்ந்த அவர் மே 1926ல் தன்னுடைய 65ஆவது வயதில் இத்தாலியில் உள்ள சென்ரெமா என்ற இடத்தில் இறந்தார். அவருடைய உடல் தமஸ்கஸில் உள்ள சுல்தான் சுலைமானின் தர்ஹாலில் அடக்கம் செய்யப்பட்டது. அதோடு அறநூறு வருடங்கள் பல நாடுகளை உள்ளடக்கி ஆண்ட ஆட்டமன் பேரரசு மறைந்தது. அதனை யோசித்துக்கொண்டே ரூமுக்கு சென்று படுத்தேன்.  

தொடரும் 

No comments:

Post a Comment