Thursday, January 30, 2014

டங்டங் டிகடிக டங்டங்

டங்டங் டிகடிக டங்டங்


                திடுக்கிட்டு எழுந்தேன். டக் டக், டக் டக் என்று ஒரே சீரான ஒலி வீட்டின் மேற்புறத்தில் கேட்க, எனது எல்லாப் புலன்களும் விழித்துக் கொண்டன. டிங் டங் டிங் டங் என்ற சத்தம் கேட்க, அதிர்ந்து திரும்பிப்பார்த்தேன். எங்கள் வீட்டுப் பழைய பெண்டுலம் கடிகாரம் 2 தடவை அடித்து ஓய்ந்தது. ஓ இரவு 2 மணி ஆகி விட்டது.
          டக்டக் டக்டக் என்று மறுபடியும் அதே ஒலி. நான் முன்ஹாலில் மரக்கட்டிலில் படுத்திருக்க, என் தம்பிகள் மனோவும், பாசுவும் கீழே படுத்திருக்க, என் அம்மா மறுபுறம் படுத்திருந்தார். உள்ளிருந்த ரேடியோ ரூமில் இருந்த இரும்புக் கட்டிலில், என் அப்பா படுத்திருந்தார். அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
          உன்னிப்பாக கவனித்த போது, வீட்டின் மேல்புறத்தில் மொட்டை மாடியையும், எங்கள் வீட்டையும் இணைக்கும் கதவில்தான் சத்தம் கேட்டது. ஒரு வேளை பேயாக இருக்குமோ? என்ற பயம் வர, இருக்காது இது திருடன்தான் என்று பட்சி சொன்னது.. அப்பொழுது நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். வீட்டிற்கு நான்தான் பெரியவன். சாகசங்கள் செய்யத்தூண்டும் டீனேஜ் பருவம். என்ன செய்தாலும் அதுவரை அப்பாவின் கோபத்துக்கும் எரிச்சலுக்கும் தான் ஆளாகினேன் தவிர பாராட்டு, ம்ஹீம் மருந்துக்கூட கிடைக்கவில்லை.
          முந்தின நாள் படித்த முத்து காமிக்சின் "மஞ்சள் பூ மர்மத்தில்" சாகசங்கள் செய்யும் லாரன்ஸ் & ஜூடோ டேவிட் கண்முன் தோன்றி உற்சாகப்படுத்தினர்.
          ஒரு முறை என்னைக் கிள்ளிப் பார்த்து, அது கனவல்ல என்று உறுதி செய்து கொண்டேன்.
          மறுபடியும் சத்தம் கேட்டது. நிச்சயமாய் யாரோ திருடன் மொட்டைமாடியின் கதவைத் திறக்க முயற்சி செய்கிறான். நிசப்தமான இரவில் அந்தச் சத்தம் பெரிதாகவே கேட்டு என்னுடைய இதயத்துடிப்பை அதிகரித்தது.
          அப்பாவை எழுப்பலாமா? என்று ஒரு நினைவு தோன்ற, என்னுள் இருந்த சாகச வீரன், வேண்டாம் என்று தடுத்து சொந்தமாய் ஏதாவது முயற்சி செய்யத்தூண்டினான்.
          நான் மெதுவாகக் கட்டிலிலிருந்து இறங்கி துப்பறியும் சங்கர்லால் எப்படி தன் "ரப்பர் நடையணிகள்" மூலம் சத்தம் செய்யாமல் நடப்பாரோ, அப்படியே முன்னங்கால்களால் நடந்தேன். படுத்திருந்த அம்மாவின் பக்கத்திலிருந்த சாய்வு நாற்காலியிலிருந்த (Easy chair) கம்பை உருவினேன். எவ்வளவு முயன்றும் சத்தம் கேட்காமல் எடுக்கமுடியவில்லை.
          கொஞ்சம் நேரமாக மேலிருந்து சத்தம் கேட்கவில்லை. நான் கம்பை எடுக்க எழுப்பிய சத்தத்தில் ஒருவேளை திருடன் உஷாராகி விட்டானோ? என்ற சந்தேகம் எழுந்தது.
          சிறிது நேரம் அப்படியே அசையாமல் நின்று கொண்டிருக்க, டொக் டொக் டொக் டொக் என்று சத்தம் மறுபடியும் தெளிவாகக் கேட்டது.கம்பை இறுக்கப்பிடித்துக் கொண்டு உஷாராக நின்றேன். இறங்கி வந்தால் ஒரே போடு. அதோடு மேலிருந்து வைக்கோல் கொத்து கொஞ்சம் கீழே விழுந்தது. "சுசி, நம்ம சேகர் ஜான் பிள்ளையானாலும் ஆண்பிள்ளைடி", என்று என் அப்பா பெருமையாக என் அம்மாவிடம் சொல்வது போல் வந்த கற்பனை மகிழ்ச்சியையும் புன்முறுவலையும் வரவழைத்தது.
          "சேகர் உனக்கு என்னடா பரிசு வேணும்னு”, எங்கப்பா கேட்டால், “இந்த கோகுலம் பத்திரிகைக்கு சந்தாதாரர் ஆக்கிவிடுங்கள்," என்று கேட்க முடிவு செய்தேன். ஆமாம் ஒவ்வொரு தடவையும் முத்துரெங்கனிடம் ஓசி வாங்க வெட்கமாக இருக்கிறது.
          அதோடு தேவதானப்பட்டி போலிஸ் சப் இன்ஸ்பெக்டர், என் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டுவது, ஊர் மக்கள் என் அப்பாவைப் புகழ்வது. என்று வித விதமான கற்பனைகள் வந்து போயின. அது என்ன ஒரு திருக்குறள் வருமே, அவசரத்துக்கு ஞாபகம் வரமாட்டேங்குது. இவன் தந்தை என்னோற்றான் என்று, சரி அத விடு.
          மீண்டும் டக் டக் என்று ஒலி கேட்க, நான் சற்றே மாடிப்படிகள் ஓரத்தில் நகர்ந்து வாகாக நிற்க முயன்றேன். கைகளில் வேர்த்து ஈரமாகி ஈஸிசேர் கம்பில் பிசுபிசுவென ஒட்டியது.
          அப்போது பட்டென ஏதோ உடைந்ததுபோல் ஒரு சத்தம். என் தம்பிகள் இருவரும் சிலிர்த்து அலறி எழுந்தனர், கையில் ஓங்கிய கம்புடன் என்னைப் பார்த்து அவர்கள் மேலும் அலற, எங்கம்மா எழுந்து ,"ஏசுவே ஏசுவே என்னாச்சு" என்று கத்த, "என்னடாது சத்தம்”, என்று உறுமிக் கொண்டு வந்தார் "எம்டன்" அப்பா. அவர்  வந்து லைட்டைப் போட்ட பின்தான் தெரிந்தது, படியருகில் குடிக்க வைத்திருந்த மண்பானைத்தண்ணீரை நான் தெரியாமல் தட்டி விட்டிருக்கிறேன் என்று. அந்த ஜில் தண்ணி உருண்டோடி என் தம்பிகளின் தலையணையையும் பாயையும் நனைத்ததால் அவர்கள் எழுந்துவிட்டிருந்தனர்.
          கம்பும் கையுமாக நின்ற என்னைப் பார்த்து என் அப்பா ஒன்றும் புரியாமல், "என்னாச்சுரா?”, என்று கேட்டார்".
          "உஷ் சத்தம் போடாதீங்க என்று லைட்டை ஆஃப் செய்தேன். என் தம்பிகள் அம்மாவிடம் ஒண்ட, என் அப்பாவிடம் குசுகுசுன்னு மேலே திருடன் இருப்பதைச் சொன்னேன். அவர் மெதுவாக உள்ளே சென்று பீரோவில் பத்திரமாய் வைத்திருந்த தன் பிரத்யேக, பளபள எவரடி எவர்சில்வர் டார்ச் லைட்டை எடுத்து வந்து மேலே அடித்தார்.
          அங்கே பார்த்தால் ஒரு மாடப்புறா உட்கார்ந்து கொண்டு மரக்கதவில் தன் அலகால் கொத்திக் கொத்தி சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. அலகை சுத்தம் செய்து கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். அதன் கூட்டிலிருந்துதான் வைக்கோல், குப்பையெல்லாம் விழுந்தது என்று பின்னர் தெரிந்து கொண்டேன். (ஓஹோ .இந்த பட்சி சொன்னதுன்னு சொன்னியே அது இந்தப்பட்சிதானா)
 
          "என்னை முறைத்துப் பார்த்த என் அப்பா, “சரிசரி எல்லாம் படுங்க”, என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். முறைத்துப்பார்த்தாரா இல்லை கேவலமாக பார்த்தாரா  என்று இருட்டில்  சரியாகத் தெரியவில்லை (ரொம்ப முக்கியம்)

        என்னுடைய வீரத்தைக்காட்ட முயன்று இப்படி விகாரமாகப் போச்சேன்னு மனம் குன்றிப்போச்சு. ராத்திரிபூரா தூங்காம, காலைல வெள்ளன எழுந்துரிச்சு, என் தம்பிகள்ட்ட, "யாருக்கும் சொல்லாதீங்க", என்று சொல்லிவைச்சேன். குளிச்சுட்டு தலைதுவட்டிக் கொண்டே வந்தபோது பேச்சுக்குரல் கேட்டது. தன் வீட்டில் காய்த்த முருங்கைக்காய்களை வாத்தியார் வீட்டுக்கு கொடுக்கும் நோக்கத்தில் வந்த மகேந்திரனிடம் என் அம்மா விலாவரியா நடந்ததை சொல்லிட்டிருந்தாங்க. நீங்களே சொல்லுங்க பின்ன எப்படி மகேந்திரன் என்னை மதிப்பான்?.

முற்றியது 

10 comments:

  1. //என்னுடைய வீரத்தைக்காட்ட முயன்று இப்படி விகாரமாகப் போச்சேன்னு மனம் குன்றிப்போச்சு//

    ஹா ஹா... சூப்பர் சார்....

    காமிக்ஸ் படிச்சே வளர்ந்திருக்கீங்கன்னு தெரியுது.... செம...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி ஸ்கூல் பையன்.

      Delete
  2. லாரன்ஸ் & ஜூடோ டேவிட் ,சங்கர்லால், முத்து காமிக்ஸ்
    இப்படி பல சிறு வயது ஹீரோக்களையும் , புத்தககளையும் நினைவு படுத்தியமைக்கு நன்றி . 2014 புத்தாண்டு ாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி Pon Pathar.நீங்கள் சொல்வது சரிதான்.

      Delete
  3. சுவாரஸ்யமான எழுத்து நடை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வணக்கம்
    இன்று வலைச்சர அறமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-3.html?showComment=1391564693744#c2417608614007617440

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  5. சுவாரசியமான பகிர்வு.....

    பல சமயங்களில் இப்படித்தான் செமையா பல்பு வாங்கிவிடுகிறோம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete