இரவு நேரத்தில் பலர் வருவார்களாம். ஆனால் முக்கிய
பிஸினெஸ் அக்டோபர் முதல் ஜனவரி வரை இருக்குமாம். அப்போது குருஸ் கப்பல்கள் பல வருமாம்.
ஒவ்வொரு கப்பலிலுமிருந்து ஏராளமானவர் கரைக்கு வரும்போது வியாபாரம் களைகட்டுமாம். ஆமாம்,
ஆனால் இப்போது எதற்கு இவ்வளவு மது என்று கேட்டபோது "ஓ உங்களுக்குத் தெரியாதா,
நாளையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை கலிநரி திருவிழா (culinary festival) இங்கே நடக்கவிருக்கிறது.
இங்குள்ள எல்லா ரெஸ்டாரண்டுகளும் வெளியே டேபிள்சேர் போட்டு, எங்களுடைய பெஸ்ட் உணவு
வகைகளைப் பரிமாறுவோம்," என்றான். "இந்த நான்கு நாட்களில் சுமார் ஒரு மில்லியன்
மக்கள் இங்கு வருவார்கள். நீங்களும் கண்டிப்பாய் வாருங்கள்" என்றான். “எது உங்கள்
பெஸ்ட்” என்று கேட்டபோது, “சிக்கன் வகைகள் மற்றும் தோசை வகைகள்”, என்று சொன்னான். “என்னது
தோசையா ஐயா ஆளை விடு என்று நினைத்துக்கொண்டு,
இல்லையப்பா நாளைக்கு காலை எங்களுக்கு ஃபிளைட்”. என்றேன். "என்ன ரமேஷ் பிள்ளையைக்
காணோம்" என்று கேட்டேன். “அதோ மதுபானங்களை தூக்கிக்கொண்டு போறாரே அவர்தான், பேச வேண்டுமா?”, என்றான். “இல்லையப்பா
வேண்டாம்”, என்று பில்லுக்கு பணம் கட்டிவிட்டு வெளியே வந்தேன். அவரிடம் பாராட்டி சொல்வதற்கு
என்ன இருக்கு. அங்குள்ள சதுக்கத்தில் கிடைத்த பழ சாலட்டைச் சாப்பிட்டு வயிறை நிரப்பிக்கொண்டு,
கோட்டைக்கு பொடி நடையாய் கிளம்பினேன்.
கேஸ்டில்லோ டி சான் கிறிஸ்டபல்
(Castillo de San Cristobel)
கடல்வழிப் பாதுகாப்புக்காக "டெல் மோரோ"
கோட்டை இருந்தாலும், டச்சுப்படைகள் தரைவழித்தாக்குதல் நடத்தியதால், ஸ்பானிய அரசு கி.பி.
1783-ல் கட்டி முடிக்கப்பட்ட கோட்டைதான் இது. 27 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்தக்
கோட்டைதான், ஸ்பெயின் அரசால் “புது உலகத்தில்"
கட்டப்பட்ட மிகப்பெரிய கோட்டையாகும்.
சேன் வான் நகரின் வழியை இந்தக் கோட்டையின் இருபெறும்
வாயில்கள் காத்து நின்றன. பின்னர் 1897-ல் தான் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோட்டையின்
ஒருபகுதி தகர்க்கப்பட்டது. இது "செரோ டி சான் கிறிஸ்டபல்" என்று அழைக்கப்படும்
குன்றின் மேலுள்ள கோட்டை.
ஆங்கில மற்றும் டச்சுப்படைகளை எதிர்த்து வென்றபின் ஸ்பெயின்
அரசு இந்தக் குன்றின் பெயரை இப்படியாக மாற்றியதாம். கி.பி.1797-ல், பிரிட்டிஷ் கப்பல் படையில் சர் ரால்ஃப் ஆபர்காம்பி தலைமையில்
வந்த 13 ஆயிரம் போர் வீரர்கள் நடத்திய தரைவழித் தாக்குதலை கிட்ட நெருங்கவிடாமல் ஒரு
மைல் தொலைவிலேயே முறியடித்தது இந்தக் கோட்டைதான்.
கி.பி.1824-ல் ",மரியா டி வாஸ் மெர்சிடிஸ்
பர்புடோ (Maria de las Mercedes Barbudo) என்ற
உண்மையான புரட்சித்தலைவி போர்ட்டரிக்கோவின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடத்தினாராம்.
Maria de las Mercedes Barbudo |
மரியா, அப்போது வெனிசூலா அரசின் தலைவராக இருந்த சைமன் பொலிவார் (Simon Bolivar) உதவியுடன்
நடத்திய தாக்குதலையும் இந்தக் கோட்டை முறியடித்தது. பின்னர் மரியா இங்கேயே சிறிது நாட்கள்
சிறைவைக்கப்பட்டு, அதன் பின் கியூபாவுக்கு நாடுகடத்தப்பட்டாராம். அந்த டஞ்சனையும் பார்த்தேன்.
அதன் பின்னர் ஏற்கனவே நான் எழுதியபடி கி.பி.1898-
முதல் இது அமெரிக்க வசம் வந்தது. 1942-ல் நடந்த இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்தளமாக
இது விளங்கியபோது, பாதாள அறைகள் அமைக்கப்பட்டன. 1961 வரை அமெரிக்க ராணுவத்தின் ஒரு
பிரிவு இங்கு தங்கியிருந்தது. அதன் பின் அமெரிக்க தேசிய பூங்கா அமைப்பிடம் (US
National Park Service) ஒப்படைக்கப்பட்டு, இப்போது அவர்கள் பராமரிப்பில் மியூசியமாக
விளங்குகிறது. கி.பி.1983-ல் இது "உலகப்பாரம்பரிய இடம்" (Word Heritage
Site) ஆக அங்கீகரிக்கப்பட்டது.
உள்ளே ஒவ்வொரு பகுதியும் நன்கு பராமரிக்கப்பட்டு
இருந்தது. வழக்கம் போல் ஆவணப்படம் பெரிய திரையரங்கில் காணப்பட்டது.
டெல் மோராவில் பார்த்த
அதே படம் தான். ஆனால் பெரிய திரையில். எனவே அதனைத்தவிர்த்து வெளியே வந்தேன். மாடியில்
திறந்த வெளியின் சுவரில் "இக்வானா" ஒன்று என்னை உற்று உற்றுப்பார்த்தது.
பயந்துபோன நான் பார்வையைத் தவிர்த்து உள்ளே
சென்றேன். குறுகலாக இருந்த சுரங்கப்பாதையில் உள்ளே சென்றால், அங்கே போர்வீரர்கள்
தங்குமிடங்கள், பயிற்சி செய்யும் இடம், தளவாடங்கள் வைக்குமிடம், வெடி மருந்துக்கூடம்,
அதிகாரிகள் தங்குமிடம் என ஒவ்வொன்றும் பெரிய அளவில் விசாலமாக இருந்தன. சிறிய குகைபோன்ற
வாயிலில் உள்ளே சென்றால், ஜன்னல்கள் எதுவும் இல்லாத டஞ்சன் (Dungeon) என்று அழைக்கப்படும்
சிறைக்கூடம் வந்தது. யாரெல்லாம் அங்கு இருந்தார்களோ, ஆனால் சுவரில் சில இடங்களில் சிறுசிறு
கப்பல்கள் வரையப்பட்டிருந்தன.
விடுதலை நினைவோடு
மீண்டும் தாய் நாட்டுக்கு எப்போது திரும்புவோம் என்று கனவு கண்ட கைதிகள் வரைந்திருப்பார்கள்
என நினைத்தபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
திரும்பவும் வெளியே திறந்தவெளிக்கு வந்தபோது
சிலபேர் ஏதோ ஒன்றை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். என்னவாக இருக்கும் என்று எட்டிப்பார்த்தால்
அந்தப் பெரிய இக்வானா சுவரின் பொந்திலிருந்து கீழிறங்கி வந்து அங்கே சட்டமாக உட்கார்ந்து
அங்குமிங்கும் பார்த்த வண்ணம் இருந்தது.
ஐயையோ என்னைத்தேடித்தான் வந்திருக்குமோ என
கலவரப்பட்ட நான் வாயிலை நோக்கி ஓடினேன். மிகப்பெரிய சைசில் இருந்த அது எவ்வளவு காலம்
அங்கு வாழ்கிறதோ தெரியவில்லை.
ரூமுக்கு திரும்பிய என்னை, "என்ன ஒன்றுவிடாமல்
பார்த்தாச்சா?" என்று கேட்டு புன்னகைத்தாள் என் பாரியாள். சூடான தக்காளி சாதம்,
சிப்சுடன் ரெடியாக இருந்தது. காலையில் ஃபிளைட் என்பதால் சீக்கிரமாய் தூங்கிவிட்டோம்.
எழுந்து, பேக் செய்து, வாடகைக்காரை திரும்பக்கொடுத்துவிட்டு,
அவர்களின் பிரத்யேக வேனில் பயணம் செய்து ஏர்போர்ட்டுக்குப் போனோம்.
நான் எவ்வளவு சொல்லியும் கேளாமல் கொண்டுவந்திருந்த
மாம்பழங்கள் கஸ்டம்சில் பறிபோயின. கஸ்டம்டா
சாமி. “நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்” என்று அந்தப்பெண்மணியிடம் என் மனைவி சொன்னாள்
பெருந்தன்மையுடன்.
ஜெட்புளு டைரக்ட் ஃபிளைட் நியூயார்க், ஜான்
கென்னடி விமானநிலையத்திற்கு மதியம் 3 மணிக்கு வந்து சேர, டாக்சி பிடித்து வீட்டிற்கு
நாலுமணிக்கெல்லாம் வந்து சேர்ந்தோம்.
அன்றிரவு கோதுமைத்தோசை சாப்பிடும்போது, ஒரு
மாம்பழக்கீற்றை கொடுத்தாள் மனைவி. அது ஒரு துளி அமுதமாய் நாவில் சுரக்க, என் மனைவியை
ஆச்சர்யத்துடன் பார்த்தேன். கண்ணடித்துச் சிரித்தாள். இவ்வளவு கெடுபிடிக்கிடையில் எப்படியோ
ஒன்றிரண்டு மாம்பழங்களை கடத்தியிருக்கிறாள்.
முற்றியது.
நண்பர்கள் அனைவருக்கும்
என் நெஞ்சார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்........!!!!!!!
முக்கிய
அறிவிப்பு
“ஓம்பாட்டுக்கு
நாங்க பாக்க முடியாத ஊரைப்பத்தியே எழுதுறியே.இங்க
எங்கனாச்சும் தமிழ்நாட்டுல எதனா எழுதினா போய் பாப்பம்ல” என்ற
நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க , அடுத்த திங்கள் முதல் வருகிறது " காரைக்குடி
பயணம்”. ஆச்சிகளே ரெடியா?
///ஆச்சிகளே ரெடியா?///
ReplyDeleteஅப்ப ஆச்சிகள்மட்டுதான் வரனுமா நாங்க வரக் கூடாதா என்ன?
ஆச்சிகள் வந்தால் , மற்ற அனைவரும் வந்து விடுவார்கள் என்ற நப்பாசைதான் .
Deleteஆனால் தப்பாசை அல்ல
உங்களின் இந்த பயணத் தொடரை வார இதழ்களுக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் வெளியிட்டாலும் வெளியிடலாம்.... தரமான பயணத்தொடர்/
ReplyDeleteநன்றி மதுரைத்தமிழன்
Deleteஏதாவது பத்திரிகை தெரிந்தால் சொல்லுங்களேன்.
கோட்டையின் படங்கள் + தகவல்கள் அசர வைக்கிறது... காரைக்குடி பயண பகிர்வுகள் சிறப்பாக அமையட்டும்...
ReplyDeleteதங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
நன்றி திண்டுக்கல் தனபாலன்.
Deleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
பயணக் கட்டுரையை சுவையான வாசிப்பனுபவமாக வழங்கினீர்கள்.
ReplyDeleteஅழகான ஏகப்பட்ட படங்களையும் பொருத்தமாய் இணைத்தவிதம் இரசிக்கத்தக்கவண்ணமிருந்தது.
நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்
Deleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
நல்ல அனுபவமா இருந்துச்சு அண்ணா.. !
ReplyDeleteசெலவே இல்லாம சுத்தி பாத்தோம்..!
நன்றி...நன்றி
நன்றி Anand.
ReplyDeleteசிறப்பான பயணக் கட்டுரை.... தொடர்ந்து உங்களுடன் பயணித்ததில் மகிழ்ச்சி....
ReplyDeleteஅற்புதமான பய்ணக் கட்டுரை
ReplyDeleteஜாலியாக எழுதிப்போவது போன்ற
பாவனை எழுத்தில் இருந்தாலும்
முழு சரித்திர விவரங்களைக் கொடுக்க
எவ்வளவு முயற்சி இருந்திருக்க வேண்டும்
என்பது புரிந்து கொள்ள முடிகிறது
வாழ்த்துக்களுடன்