Thursday, January 23, 2014

வஞ்சனை செய்வாரடி, வாய்ச்சொல்லில் வீரரடி !!!!!!!!!!!!!


கண்ணதாசனின் 'வனவாசம்' 

        கண்ணதாசனின் வாழ்க்கை  திறந்த புத்தகம் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் எந்த அளவுக்கு திறந்த புத்தகம் என்பதை 'வனவாசத்தை' வாசிப்பதின் மூலம் அறிந்து கொள்ளலாம். மறுவாசிப்பிலும், மர்ம நாவலைப்போல் ருசித்தது. பலர், இன்னும் இருக்கும் இந்த அரசியல் தலைவர்களை போற்றியும் அடி பணிந்தும் வணங்கும் சமயத்தில் இவர்களை எல்லாம் தோலுரித்துக் காட்டுகிறார் கவிஞர். திராவிட இயக்க முகமூடியில் இருக்கும் இவர்கள் எல்லோரும் வேஷதாரிகள் என்பதைப் புட்டுப்புட்டு வைக்கிறார்.

"வனவாசத்திலிருந்து சில ஹைலைட்ஸ்"
1.  1965-ல் வெளியாகி அதன்பின் வானதி பதிப்பகத்தால் 37 முறை மறுபதிப்பு செய்யப்பட்டு, இப்போது கண்ணதாசன் பதிப்பகத்தால் மேலும் நான்குமுறை பதிக்கப்பட்டிருக்கிறது.
2.  எட்டாம் வகுப்பை மட்டுமே முடித்தவர் கண்ணதாசன் என்றால் நம்ப முடிகிறதா?.
3.  பத்திரிக்கைகளில் உதவி ஆசிரியராகவும், ஆசிரியராகவும், சம்பளம் சரியாக கிடைக்காமல் பல நாட்கள்  பட்டினியுமாயிருந்திருக்கிறார்.
4.  வயது வந்தபின் பெற்றோர்களினால் இன்னொரு குடும்பத்திற்கு தத்து கொடுக்கப்படுகிறார். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் குடும்பத்தில் இது வழக்கமான  ஒன்றாம்.
5.  விலைமாதர் கலைமாதர் என்று பணம் பறிக்கும் பல மாதர்களிடம் ஏமாந்தும் பெண்களை எப்படித்தான் புகழ்ந்து பாட்டுகள் இயற்றினாரோ.
6.  அதன்பின் புகைப்பழக்கமும், மதுப்பழக்கமும் சேர்ந்துகொண்டது.
7.  நடிகர் டி.வி. நாராயணசாமி அவர்கள் மூலம்தான் இவருக்கு முதன்முதலாக "சுயமரியாதை இயக்கம்" அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது திராவிடர் கழகம் ஒன்றாக இருந்த சமயம்.
8.  ஒரு ஆரிய திராவிடப்போராட்டமாக பார்ப்பனருக்கு எதிராகவே பேசி இயக்கம் வளர்ந்தது.
9.  அப்போது அண்ணாத்துரை அவர்களின் ஒரு சொற்பொழிவைக் கேட்டு மனதைப்பறிகொடுத்து இயக்கத்தில் இணைந்தவர் கவிஞர். குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் வெகுநேரம் கழித்து வருவதை ஒரு டெக்னிக்காகவே அண்ணா பின்பற்றியதை பின்னர் கண்ணதாசன் சாடுகிறார். அதோடு கொள்கைகள் நிறைவேறும் என்ற எந்த நம்பிக்கையுமில்லாமல், வெறுமனே தொண்டர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்காகவே பல மேடைப்பேச்சுகள் பேசப்பட்டு வந்தன. இதில் முக்கியமாக பின்னர் பதவிகள் வந்ததும் கைவிடப்பட்ட 'திராவிடநாடு' கோரிக்கை முக்கியமான ஒன்று.
10.              புரட்சி இயக்கம்போல் காட்டப்பட்டு, சுயநல இயக்கமாக மாறியதை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விளக்குகிறார் கவிஞர்.
11.              கொள்கைகளுக்காக அல்ல, வெறும் புகழுக்காகவும் செல்வாக்குக்காகவும் தானும் மாட்டிக்கொண்டு அவஸ்தைப் பட்டதைச் சொல்வதுதான் கண்ணதாசனின் இந்த 'வனவாசம்'.
12.              சேலம் மாடர்ன் தியேட்டரில் வேலையில் இருந்தபோதுதான் எம்.ஜி.யார், எம்.ஜி.சக்ரபாணி,  நெடுஞ்செழியன் ஆகியோர் தொடர்பு கவிஞருக்கு கிடைத்தது.

13.                எம்.ஜி.சக்ரபாணிதான் கருணாநிதியை அறிமுகப்படுத்துகிறார். அவருடைய எழுத்துத் திறமையிலும் பேச்சுத்திறமையிலும் வியந்த கண்ணதாசன் அதன்பின் அவருக்கு மிகவும் நெருங்கிய தோழனானார்.
14.              ஆனால் கொஞ்ச காலத்திலேயே கருணாநிதியின் சுயநலம் வெளிப்பட இருவரும் வெவ்வேறு அணியில் இருக்கிறார்கள்.


15.              இதற்கிடையில் EVK சம்பத்தின் (நம்ம ஏடாகூட இளங்கோவனின் அப்பா) தொடர்பு கிடைக்க, அவருடைய எளிமையும் நேர்மையும் கண்ணதாசனை கவர சம்பத்தின் தலைமையை ஏற்கிறார். மதியழகன், க.ராஜாராம் ஆகியோரும் இந்த அணியில் இருக்க, திமுக இரண்டு அணியாக பிரிகிறது. அண்ணாத்துரை, கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் அடுத்த அணி. இதிலே அதிக எண்ணிக்கையில் பலம் வாய்ந்த அணி சம்பத்தின் அணி.
16.              அடுத்து கல்லக்குடி போராட்டம். போராட்டக்காரர்கள் மூன்று குழுவாக முறையே கருணாநிதி, இராம சுப்பையா மற்றும் கண்ணதாசன் தலைமையில் பிரிக்கப்பட்டு, அணி அணியாக ரயில் நிலையம் சென்று 'டால்மியாபுரம்' என்ற பெயரின் மேல் கல்லக்குடி என்ற போஸ்டரை ஒட்டவேண்டும். கருணாநிதி தலைமையில் இருந்த முதல் அணியில் யாரும் கைது செய்யப்படவில்லையாதலால், எந்தவித முன்திட்டமும்  இல்லாமல், கருணாநிதி ஒரு நான்கு பேரை கூப்பிட்டுக்கொண்டு தண்டவாளத்தில் படுக்க, உடனடியாக கைது செய்யப்படுகிறார். சிறிது இடைவெளிவிட்டு வந்த இரண்டாவது குழுவும் ரயிலின் முன் படுக்க, உடனே அவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். இது நடந்தது காலை 9.45 மணிக்கும்  11 மணிக்கும். கண்ணதாசன் தலைமையில் அடுத்த குழு 1.30 மணிக்கு அடுத்த ரயிலை மறிக்க வர, அங்கே ஏராளமானோர் கூடி பதட்டம் அதிகரிக்க, போலிசார் கலெக்டர் ஆகியோர் கடுங்கோபத்தில் இருக்கின்றனர். கூடியிருந்த அனைத்து தொண்டர்கள், ரயிலில் வந்தவர்கள் என 500 பேருக்கு மேல் தண்டவாளத்தில் உட்கார, தடியடி மற்றும் துப்பாக்கிசூடு நடந்து கண்ணதாசன் மற்றும் குழுவினர் கைது செய்யப்பட்டனர். கருணாநிதி உள்ளிட்ட மற்றோர் விரைவில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் கண்ணதாசன் குழுவினர் சுமார் 2 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டியிருந்தது. ஆனாலும் கல்லக்குடி போராட்டத்தின் புகழ் முழுவதும் கருணாநிதிக்கே சென்றது. திமுக மீட்டிங்குகளில் ஒலிக்கும் , " கல்லக்குடி கொண்ட கருணாநிதி   வாழ்கவே”,ஞாபகம் இருக்கிறதா?
17.              சென்னை மாநகராட்சி தேர்தலில் உயிரைக்கொடுத்து வேலை செய்த கண்ணதாசன் உள்ளிட்டோர் ஒதுக்கப்பட, கடற்கரையில் நடந்த வெற்றிவிழாவில், அண்ணாத்துரை, கருணாநிதியை பாராட்டி கணையாழி கொடுக்க கண்ணதாசன் நொந்து போகிறார். கூட்டம் முடிந்தபின் அண்ணாத்துரையிடம் “ஒரு சொல் பாராட்டுக்கூட இல்லையே”, என்று கேட்டதற்கு அண்ணா சொன்னாராம் " நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு, அடுத்த மீட்டிங்கில் உனக்கும் போட்டுவிடுகிறேன்," என்றாராம். இதுதான் கணையாழியின் ரகசியம்.

18.              இருமுறை நடந்த பொதுக்குழுவில், அண்ணாத்துரை, சம்பத்தின் கையைப்பிடித்து அழுது கெஞ்சி மீண்டும் பொதுச்செயலாளர் ஆனாராம். பின்னர் வேலூரில் நடந்த பொதுக் குழுவில் அண்ணாத்துரை, சம்பத்தை ஓரங்கட்ட சதி செய்கிறார். கருணாநிதியும் அப்போது இருந்த நடிகர்களும் கலாட்டா செய்ய திட்டமிடுகின்றனர். அண்ணாவுக்கு ஆபத்து என்று கதை கட்டப்பட்டதால் ஒரே பரபரப்பு நிலவியது. "உனக்காவது சொத்து சுகம் இருக்கிறது, எங்களுக்கு அரசியலைவிட்டால் வேறு தொழில் என்ன இருக்கிறது”, என்று அன்பழகன் சம்பத்தைக் கேட்டாராம். அன்று பொதுக்குழுவில் ஐம்பதுக்கும் மேல் ஆதரவாளர் துணையிருந்தும் சம்பத் விட்டுக் கொடுத்ததால், ஓரங்கட்டப்பட்டு அரசியலில் காணாமல் போனார். கண்ணதாசனும் அதிலிருந்து அரசியலைவிட்டு முற்றிலும் ஒதுங்கினார்.
       
        இத்தகைய பொய்த்தலைவர்கள்தான் இன்னும் நம் தமிழினத்தலைவர்கள் என்றால் நம் தலையெழுத்தை என்னவென்று சொல்வது. பாரதியின் பாடல்தான் ஞாபகம் வருகிறது.

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனுமன்றி
வஞ்சனை செய்வாரடி, வாய்ச்சொல்லில் வீரரடி.


18 comments:

  1. எளிமை அழகு நேர்த்தி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜோதிஜி திருப்பூர்.

      Delete
  2. மறுபடியும் வாசித்தேன்... பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி...திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  3. நான் சிறுவயதில் படித்து இப்போது மறந்து இருந்த எனக்கு அதை ஞாபகப்படுத்தும் வண்ணம் அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி...மதுரைத்தமிழன்.

      Delete
  4. சிறப்பான சுருக்கம். சில வருடங்களுக்கு முன் படித்தது. மீண்டும் படிக்க ஆசை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி.வெங்கட் நாகராஜ்.

      Delete
  5. திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் அறிமுகம் மூலமாக தங்களின் தளத்திற்கு வருகை தந்தேன்.
    நண்பரே நம் தொடர்பு இனி நீடிக்கட்டும்
    நேரமிருக்கும் பொழுது எனது வலைப் பூவிற்குத் தங்களை அன்போடு வரவேற்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி .நிச்சயமாக தங்கள் வலைத்தளத்திற்கு
      வருவேன்

      Delete
  6. உங்கள் கவிதை இன்று எனது பக்கத்தில்.....

    http://venkatnagaraj.blogspot.com/2014/01/17.html

    உங்கள் தகவலுக்காக...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete
  7. ஒவ்வொரு பெரிய மனிதனுக்கும் ஒரு மறுபக்கம் இருக்கிறது ..!

    ஆனாலும் இவ்வளவு திறந்த புத்தகமா இருக்க கூடாது..

    ரொம்ப அதிர்ச்சியா இருக்கு அண்ணா ..!

    ReplyDelete
    Replies
    1. யோசித்துப்பாருங்கள்
      நம்மால் இப்படி இருக்க முடியுமா ? தம்பி ஆனந்த் ?

      Delete

  8. வணக்கம்!

    மனவாச நுாலும் வனவாச நுாலும்
    இனவாசம் காட்டும் இசைத்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. சுகவாசம் வீசும், உங்கள் கவிவாசம் புவிவாசம் அடைந்து புகழுற வாழ்த்துக்கள்.
      வருகைக்கு நன்றி.

      Delete
  9. கண்ணதாசனின் வனவாசம் சில ஆண்டுகளுக்கு முன் படித்தது மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி. மேலும் ஒரு தகவல். கண்ணதாசன் அவர்கள் நியூ யார்க் வந்தபோது நியூ யார்க் தமிழ் சங்கத்துக்கு வந்து அந்த சங்கத்தின் மீது ஒரு பாடல் எழுதிக் கொடுத்து அதை சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கிறார். அதை நியூ யார்க் தமிழ் சங்கம் பாதுகாத்து வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. இந்த அறிய தகவலை நினைப்பூட்டியதற்கு நன்றி ரங்கா.
      இந்த பாடல் என்னிடம் உள்ளது ..விரைவில் பதிவு செய்கிறேன் .

      Delete