Monday, January 6, 2014

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 10: புளிப்புத்தோசையும் சலித்த சட்னியும் !!!!!!!!!!!!

My wife and Daughter at Ila Verde Beach

        உள்ளிருந்து இரு கையிலும் டாபர்மேனையும், வாயில் சுருட்டுடனும் யாராவது வருவார்கள் என்று பார்த்தால், அப்படியொன்றுமில்லை. லேசாகச் சாத்தியிருந்த கதவை நெம்பிக் கொண்டு வந்தது "உஜாலாவுக்கு மாறிய" ஒரு பொமரேனியன். என் மனைவி என்னை முறைக்க, நான் கீழே இருந்த மாங்காயை முறைக்க, நான் வேறு வாங்கித்தருகிறேன் என்று சமாதானப்படுத்தி அவளை அழைத்துச் சென்றேன். இந்த டிராமாவைப் பார்த்த என் மகள்கள் இருவரும் சொல்லிவைத்தாற்போல்  ஒரே சமயத்தில்   தங்கள் தலையில் அடித்துக் கொண்டனர். பின்னர் சிறிது நடந்து சென்றால் "ஐலா வெர்டே" (Ila verde) பீச். காலை இளம் தென்றல், எழுந்து வரும் சூரியனின் கோபத்தைத் தணிக்க சாமரம் வீசியது. வெண்மைநிற லேஸ் வைத்து தைக்கப்பட்ட, இளநீல பாவாடை அணிந்து, அன்னநடை நடக்கும் விடலைப்பெண் போல அலைகள் அசைந்து விளையாட, சூப்பராய் இருந்தது.

 பீச்சில் அதிகக் கூட்டமில்லை. அங்கேயே இருந்துவிட மனம் கெஞ்சியது. ம்ஹீம், இன்னும் பார்க்க வேண்டிய மூன்று முக்கிய இடங்கள் அழைத்ததால், என் மனைவி மக்களை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பத் தீர்மானித்தேன்.


 "இங்கேயே இருந்துவிடுங்கள்" என் மனைவி சொன்னாள். "உப்புத்தண்ணியாய் இருக்கிறது இல்லாவிட்டால் இருந்து விடுவேன்" என்று சொல்ல அவள் முறைத்தாள். ஆனாலும் எடுத்த முடிவின் படி கிளம்பினேன்.

காசா அல்கேடியா (Casa Alcadia)

        முதல் ஸ்டாப் 'காசா அல்கேடியா' என்று அழைக்கப்பட்ட 'சிட்டி ஹால்'. நகர அரசாங்கம் இங்கிருந்துதான் இயங்குகிறது. கி.பி.1602-ல் கட்டப்பட்ட இந்த கட்டடம் ஸ்பெயினின் தலைநகரம் மேட்ரிட்டில் உள்ள சிட்டி ஹால் போல தோற்றமளிக்கும் வகையில் கி.பி.1840-ல் மாற்றியமைக்கப்பட்டதாம். அச்சு அசலாக அதன் மாதிரியாக இது விளங்குகிறதாம். மேட்ரிட் (Madrid) போனால் பார்க்க வேண்டும்.

எல் கேப்பிடோலியோ டி போர்ட்டரிக்கோ (El Capitolio de Puerto rico)

        அதே வரிசையில் கடலோரத்தில் இருந்த மிகப்பெரிய கட்டடம் இது. மற்ற கட்டடங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இது சற்றுப்புதியது. கி.பி.1920-ல் கட்டப்பட்டது.


 இதுதான் போர்ட்டரிக்கோவின் செனட்டர்கள், பிரதிநிதிகள் கூடும் சட்டசபை. அவர்களின் அலுவலகங்களும் இங்கேதான்  இருக்கின்றன.


உயர்ரக மார்பிளில் கட்டப்பட்ட இம்மாளிகை, ஓவியங்கள் மற்றும் சிற்பங்களால் நிரம்பியிருந்தது. 

குறிப்பாக கோள வடிவ விதானத்தில் வண்ணமயமான ஓவியங்கள் போர்ட்டரிக்கோவின்  வரலாறை எடுத்துரைத்தன.

 கீழே நடுவில் போர்ட்டரிக்கோவின் அரசியல் அமைப்பு (Constitution) சட்டமிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

 போர்ட்டரிக்கோவின் பல முன்னாள் தலைவர்களின் மார்பளவு  சிற்பங்கள் அரங்கில் நிறைந்திருந்தன.

        பெர்கின் (Perkin) என்பவரால் உருவாக்கப்பட்ட டிசைனிலிருந்து பெரும்பாலும் கட்டப்பட்டாலும், முக்கிய நடுப்பகுதி, நியூயார்க் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் "லோ மெமோரியல் நூலகத்தின் (Low Memorial Library)  அமைப்பில் கட்டப்பட்டது. 

போர்ட்டரிக்கோவின் மிக முக்கிய கட்டடமாகிய இது 1977-ல் யு.எஸ். நேஷனல் ரிஜிஸ்டர் ஆஃப் ஹிஸ்டாரிக் பிளேசில், (U.S. National Register of Historic Places) சேர்க்கப்பட்டது.

        அதற்குள் சாப்பாட்டு  நேரம் வர வயிறு கூப்பாடு போட்டது. தற்செயலாக வந்த ஓசி ஷட்டிலில்  ஏறி மீண்டும் குன்றுப்பகுதிக்கு வந்தேன். அங்கேதான் "தந்த்ரா" இருப்பது நினைவு வர அங்கு சென்றேன். ஏதோ தமிழன் நடத்தும் கடைக்கு நம்மால் செய்யும் உதவி. மறுபடியும் அங்கே ஒருவரையும் காணோம்.  தொண  தொண பெண்ணையும் அன்று காணோம் அடச்சே. சிறிது நேரம் சென்று ஒரு மொட்டை வந்தான். "வெளியே இருக்கும் ஹாட் வெதருக்கு ஏற்ப இதமான ஒரு மார்ட்டினி சாப்பிடுகிறீர்களா" என்று கேட்டான். “புதன்கிழமை நான் லிக்கர் சாப்பிடுவதில்லை”, என்று சொல்லி மெனுவை ஆராய்ந்தேன். எதை ஆர்டர் பண்ணாலும், சுடவைத்த பழையதுதான் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு, சேஃபாக  ஒரு தோசை கேட்டேன். மாவு பழசானாலும் தோசை புதுசாத்தானே ஊத்தனும். இப்ப என்ன செய்வீக? இப்ப என்ன செய்வீக? .அதோடு 5 டாலர்தான் போட்டிருந்தான். "தொட்டுக்கொள்ள என்ன வேண்டுமென" கேட்டான். இதெல்லாம் ஒரு கேள்வி என்று நினைத்துக்கொண்டு, “அதான் சாம்பார் சட்னி", என்று சொன்னேன்.. "மூன்றுவகை சட்னி இருக்கிறது எது வேண்டும்? என்றான். பார்ரா பரவாயில்லையே, “மூன்றையும் கொண்டுவா" என்றேன்.

        தோசை விரைவாகவே வந்தது. ஆனால் அது பார்ப்பதற்கு தோசைக்கும் ஊத்தாப்பத்துக்கும் நடுவில் இருந்தது. சுடவைத்த சாம்பாரும் வந்தது. மூன்று சட்னிகள் சற்று சில்லென்று இருந்தன. தக்காளி சட்னி, புதினா சட்னி மற்றும் தேங்காய் சட்னி. தேங்காய் சட்னியும் புதினா சட்னியும் ஒரே கலரில் இருந்ததல்லாமல் ஒரே சுவையுடனும் சற்றே சலித்துப்போய் இருந்தது. தோசையும் புளிப்பாய்.  எந்த  வருடத்து மாவு என்று தெரியவில்லை. சாம்பார் மட்டும் கூட்டு போல் கெட்டியாய் இருந்ததால் அதனை முழுவதுமாக சாப்பிட்டுவிட்டு, பில் கேட்டேன். பில்லைப்பார்த்தவுடன் திகைப்புடன் சேர்ந்த கோபம் வந்தது. தோசை என்னவோ ஐந்து டாலர் தான், ஆனால் சட்னி ஒவ்வொன்றும் 3.50 டாலர் மற்றும் சாம்பார் பத்து டாலர், ஆக மொத்தம் டயட் கோக்கோடு 18% கிராஜுட்டி அப்புறம் சேல்ஸ் டாக்ஸ்  சேர்த்து (25.50 +  4.75 = $ 30.25 கிட்டத்தட்ட 35 டாலர் ஆயிப்போச்சு. என்ன அநியாயம் தோசைக்கும் சட்னிக்கும் தனியாக நியூயார்க்  சரவணபவன் உட்பட எங்கேயுமே இதுவரை நான் காசு கொடுத்ததில்லை. ஒரு வரண்டு போன புளிப்புத்தோசைக்கு 35 டாலரா? மறுபடியும் சொ.செ.சூ. கொடுமைடா சாமி என்று டிப்சைத்தவிர்த்து அவசரமாக வெளியே வர எழுந்தேன்  .

        அப்போது மதுபானங்கள் பெட்டிபெட்டியாய் வந்து இறங்கின. ஆட்கள் யாரும் வருவது போல் இல்லை. மதுபானங்கள் இவ்வளவு தேவையா? என்று நினைத்துக் கொண்டு அந்த கோவாவைச் சேர்ந்த மொட்டையிடம் வினவினேன்.

அடுத்த வாரத்தில் முடியும் ( அப்பாடா !!!!!!!!!!)


        

11 comments:

 1. படங்கள் மிக அருமை... போர்டோரிக்கா போய் டிங்க்ஸ் அடிக்காம வந்த முதல் ஆள் நீங்களாகத்தான் இருக்கும்.. நல்ல ஆளுங்க நீங்க பீச்சுல மனைவி கூட உட்கார்ந்து கையில டீரிங்க்ஸ் வைச்சுகிட்டு போற வர்ற பொண்ணுங்களை பார்த்து லைஃப் என்சாய் பண்ணாம பில்டிங்க் பில்டிங்கா போய் பார்த்துகிட்டு ஹும்ம்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. நான்தான் ஏற்கனவே சொன்னேனே.
   நம்ம பில்டிங்க் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.
   நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 2. Nice one Alfi! Keep writing...
  Happy New Year to Akka and girls.

  ReplyDelete
  Replies
  1. Thanx NRI Girl.
   Have a blessed New Year 2014.

   Delete
 3. புளித்த தோசைக்கு 35 டாலர் கொஞ்சம் அதிகம் தான்!

  படங்கள் அழகு.... தொடர்கிறேன்.

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் அதிகமா ரொம்ம்ம்ம்ம்ப அதிகம் .
   நன்றி வெங்கட் நாகராஜ்.

   Delete
 4. படங்கள் மிக மிக மிக அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   Delete
 5. என்னாது? தோசை சுட்டின்னிக்கு 35 பொற்காசுகளா?நல்லவேளை வடகறி ஆர்டர் பண்ணல அண்ணே. வீடை எழுதி வாங்கி இருப்பாங்க போல இருக்கே...

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை தம்பி , வடகறி அங்கு இல்லை தப்பிச்சேன்.


   Delete
 6. தோசையின் புளிப்பை
  இத்தனை அற்புதமாக யாரும் சொல்ல முடியாது
  படிக்கவே புளித்தது
  அருமை
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete