வெளியே தோட்டப்பகுதிக்கு வந்தோம். எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய நீருற்றுகள், இரும்புச்சிற்பங்கள், கான்கிரீட் மற்றும்
டெரக்கோட்டா சிற்பங்கள் என ஒவ்வொன்றும் உலகின் பெரிய கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டு,
அழகாக இருந்தன.
ரோமன் கார்டன், ஜப்பானிய கார்டன் என்று அமைக்கப்பட்ட அனைத்தும் நன்கு
பராமரிக்கப்பட்டு இருந்தன. வீடு இருக்கும் இடம் ஒரு குன்றின் மேல் இருப்பதால், தோட்டங்கள்
அடுக்கடுக்காக அமைக்கப்பட்டிருந்தது.
ஒரு ரோஜாத்தோட்டத்தின் சரிவில் அழகான ஒரு நீச்சல்
குளம் இருந்தது.
பழைய ஸ்டைலில் கற்களால் வடிவமைக்கப்பட்டு, சுற்றிலும் சிற்பங்களால்
சூழப்பட்டிருந்தது. இங்குதான் ராக்கஃபெல்லரின் பிள்ளைகள் நீச்சல் கற்றுக் கொண்டனராம்.
வீட்டின் கிழக்குப்பகுதியில் ஒழுங்காக
வடிவமைக்கப்பட்ட கால்ஃப் மைதானம் இருந்தது. பறந்து விரிந்த அந்த மைதானத்தை இன்றும்
அவர்கள் குடும்பம், ஆண்டிற்கு ஒரு மில்லியன் டாலர் செலவில் பராமரித்து வருகிறார்கள்.
குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒரு பத்து பேர் ஆண்டுக்கொரு முறை, கோடைகாலத்தில் ஒரு பத்து
நாள் இங்கு தங்கியிருந்து விளையாடுவார்களாம். பணம் பத்தும் செய்யும் என்பது இதுதானோ?
வேறு பொதுமக்கள் இங்கு வந்து விளையாட அனுமதியில்லை.
அடுத்து, வீட்டிற்குப்பின்புறம் ஒரு
சுரங்கப்பாதை இருந்தது. வீட்டிற்கு பலபொருட்களை சப்ளை செய்யும் வேன்களும், லாரிகளும்
வந்து வந்து போவதும், அவைகள் ஏற்படுத்தும் சத்தமும் ,ராக்கஃபெல்லருக்கு எரிச்சலை மூட்டியதால்
சத்தம் வராமல் அவைகள் வந்து செல்ல மலையில் சுரங்கம் ஏற்படுத்தப்பட்டதாம். வாகனங்கள்
சுரங்க வழியில் அன்டர் கிரவுண்ட் வழியாக நேராக வீட்டின் பேஸ்மண்ட்டில் பொருள்களை இறக்கிவிட்டு
திரும்பிவிடுமாம். ம் பெருமூச்சுதான் வந்தது. நம் வீட்டில் என்ன சத்தம்? என்றால் சத்தம் உடனே அதிகம் ஆகிவிடுகிறது. பேசாமல்
காதில் பஞ்சை வைத்துக் கொள்வதுதான் உத்தமம்.
இதுபோல ரான் சொன்ன இன்னொரு சம்பவமும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.முதன்முதலாக வீடு கட்டும்போது,
அவர்களுடைய பகுதிகளின் குறுக்கே ஒரு ரயில் பாதை இருந்ததாம். அடிக்கடி அந்த வழியாக ரயில்கள்
போவதின் சத்தம் தலைவருக்கு இடைஞ்சலாக இருக்க, மிகுந்த பொருட்செலவில் அந்த ரயில் பாதையை
அவருடைய எஸ்டேட்டைவிட்டு தள்ளி அமைக்க ஏற்பாடு செய்தாராம். இப்படி நடக்க முடியாத பல
காரியங்களை செய்தார் ராக்கஃபெல்லர்.அவருடைய செல்வாக்கையும், பணபலத்தையும் நினைத்தால்,
அம்மாடியோய்.
பஸ் எங்களை ஏற்றிச்சென்று அடுத்த பகுதியில்
இறக்கிச் சென்றது. அது அவர்களின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிளே ஹவுஸ்.
மிகப்பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட அந்த உள் அரங்கில், சிறியவர் முதல் பெரியவர் வரை
விளையாடக்கூடிய அனைத்து விளையாட்டுகளுக்கும் தனித்தனியே இடம் அமைக்கப்பட்டிருந்தது.
உறை பனிக்காலத்திலும் குளிர்காலத்திலும் விளையாடக்கூடிய முறையில் அது இருந்தது. செஸ்
போன்ற, சிறிய விளையாட்டு துவங்கி, டென்னிஸ், ஷட்டில் காக் போன்ற பல விளையாட்டு அரங்கங்கள்
உள்ளே இருந்தன. வெளியாட்களுக்கு அனுமதி இல்லை.
அடுத்த ஸ்டாப் "கிரீன் ஹவுஸ்". பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடி மாளிகையில், உலகின் பல வித தாவரங்கள், கொடி வகைகள், பூச்செடிகள், மூலிகைகள் ஒட்டுச் செடிகள்,
போன்சேக்கள் ஆகியவை வளர்த்து பராமரிக்கப்பட்டன.
with my Daughter Anisha at the Coach house |
கடைசி ஸ்டாப் "கோச் ஹவுஸ்".மூன்றடுக்கில்
உயரமான ஒரு கோட்டை போன்ற கல் கட்டடம். நுழைந்தால் ஒரு பகுதி முழுவதும், குடும்பத்தினர்
பயன்படுத்திய சிறிய, பெரிய கோச் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதனை யார் யார்
பயன்படுத்தினார்கள் என்பதின் சான்றாக, ஒவ்வொரு வண்டியின் முன்னால், அவர்கள் அதே கோச்
வண்டியில் உட்கார்ந்து சவாரி செய்யும் புகைப்படங்கள் இருந்தன. வண்டிகள் பளபளவென்று
இன்றும், அழகாக மெயின்டெயின் செய்யப்பட்டு
இருந்தன. அதன் அடுத்த பகுதியில் பிரமாண்டமான ஓபன் லிஃப்ட் இருந்தது. ஒரு வேளை கோச்கள்
ரிப்பேர் ஆனால், அந்த ஓபன் லிஃப்ட் மூலம் அப்படியே மூன்றாவது தளத்தில் உள்ள பணிமனைக்கு
எடுத்துச் செல்லப்பட்டு ரிப்பேர் செய்யப்படுமாம். அந்தப்பகுதியின் இறுதிப்பகுதியில்,
குதிரை லாடங்கள் இருந்தன. பல குதிரைகள் நின்று ஓய்வெடுக்க தனித்தனியாக தடுக்கப்பட்டு
பல அறைகள் இருந்ததன. அதன் பக்கத்தில் அவற்றுக்கான மருத்துவமனையும் இருந்தது. ஆனால்
இன்று ஒரு குதிரை கூட இல்லை. அவை தேவையுமில்லை.
கட்டடத்தின் மறுபகுதியில் ராக்கஃபெல்லர்
குடும்பத்தினர் பயன்படுத்திய வித விதமான மோட்டார் வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மாடலிலிருந்து கார்கள் இருந்தன.
இருப்பதிலேயே பழைய
கார், (Ford) சிறிய டிராக்டர் போல ஓபனாக இருந்தது வேடிக்கையாக இருந்தது. நெல்சன், நியூயார்க்கின்
கவர்னராக இருந்தபோது பயன்படுத்திய 'NY-1' என்ற பிளேட் பொருத்திய, இரு படகுக்கார்களும்
இருந்தன.
பழைய ஜெர்மானிய, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கார்களும் அங்கிருந்தன. அதன்
மேற்பகுதியில் வேலைக்காரர், பணியாளர்களின் தங்குமிடங்கள் இருந்தன. நூற்றுக்கணக்கானோர்
இருந்திருப்பார்கள்.
டூர் முடித்து பஸ் இறக்கத்தில் செல்லும்போது
நானும் என் மனைவியும் சோர்ந்து இருந்தோம். அவள் ஏறி, இறங்கி சுற்றியதாலும், எனக்கு
நான் பார்த்த படோடப வாழ்க்கை கொடுத்த மலைப்பினாலும்.
கைக்கும் வாய்க்கும் (Hand to Mouth) இருக்கும்
என் வாழ்க்கையை நினைத்தபோது "பிறந்தால் பணக்காரனாய் பிறக்க வேண்டும், இல்லையெனில்
அட்லீஸ்ட் பணக்கார பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்" என்றேன். என்ன? என்று கேட்டுத்திரும்பினாள் என் மனைவி. அய்யையோ கொஞ்சம் சத்தமாய்ச்சொல்லிவிட்டேன்
போலிருக்கு. இருக்கும் வாழ்க்கையின் சமாதானத்தை கெடுக்க இஷ்டமில்லாத நான் அவளைப் பார்த்து
சற்று வழிந்து பரிதாபமாய் சிரிக்க முயன்றேன்.
"உனக்கும் கீழே
உள்ளவர் கோடி,
நினைத்துப் பார்த்து
நிம்மதி நாடு"
என்று நான் பலமுறை
அவளுக்குப் பாடிய,கண்ணதாசனின் வரிகளை அவள் மெலிதாக பாடினாள். கொஞ்சம் சுதி தப்பினாலும்,
அது எவ்வளவு பெரிய உண்மை.
முற்றியது.
அடுத்த வாரம் முதல் " மெயின் பயணம்"
பயணக் கட்டுரை எழுதுறதுல நீ இன்னொரு மணியன்....கடைசியில அந்த பாட்டை ரூத் பாடிய போது நீ பட்ட பாட்டை நினைச்சா சிரிப்பு வருது.......அதென்ன "சுதி தப்பினாலும் ......." என்ன சூப்பர் சிங்கர் ஜட்ஜுன்னு நெனப்பா??? ...... அன்புடன் சையத் அ
ReplyDeleteநன்றி சையது.
Deleteசூப்பர் சிங்கர் ஜட்ஜ் இல்லாட்டியும் நான் அந்தக்காலத்து "ப்ளேபாய்ஸ்" ஆர்கெஸ்ட்ரா
இல்லையா? அதான் .
This comment has been removed by the author.
Deleteஹலோ ஆல்பி, உன்னுடைய இசை குறித்த ஜட்ஜ்மெண்ட் திறமையை யாரால் குறை கூற முடியும்? பி ஏ முதலாம் ஆண்டில் நான் கிறுக்கிய ஒரு குப்பை பாட்டுக்கே சுதி சுத்தமாய் பல சங்கதிகளோடு இன்னிசை அமைத்தவன் நீ .........ஆனாலும் ஒரு சந்தேகம் ....ரூத்தின் பாட்டில் தவறியது "கொஞ்சம் சுதி"யா அல்லது கொஞ்சும் சுதியா?...... இருக்கட்டும் போன வாரம் தொலைபேசியில் நாம் பேசியது போல் அக்டோபர் 19, 20 களில் பி ஏ நண்பர்கள் இரண்டு நாள் சுற்றுலா போகிறோம் மேகமலைக்கு......உனக்கு வர இயலுமா? அன்புடன் சையத் அ
Deleteஇது எப்ப நடந்துச்சு ?
Delete..ரூத்தின் பாட்டில் தவறியது "கொஞ்சம் சுதியோ அல்லது கொஞ்சும் சுதியோ இல்லை அது கெஞ்சும் சுதி .