Thursday, September 12, 2013

மாற்றம் வேண்டும் மனதில் (செப்டம்பர் 11,2001)

(செப்டம்பர் 11 நினைவாக அதற்கு அடுத்த வாரம்  நியூயார்க் கிறிஸ்தவ தமிழ் கோயிலில் அடியேன்  எழுதி வாசித்தது  )


ஓ என் பிரிய சகி !
இதுகாரும்
இன்பத்தை மட்டுமே
பகிர்ந்த உன்னோடு
துன்பத்தை பகிர
துணைக்கழைக்கிறேன்
துரிதமாய்க்கேள் !

இது என்
இதயம் கவர்ந்த
இரட்டையர் கதை 

உழைக்க வந்தோரை எல்லாம்
அழைத்து வந்து அகத்தினில் வைத்து
பிழைக்க வைத்த பேராளரை
குலைத்துப் போட்ட கதை இது !

மண்ணில் கால்களை விதைத்து
விண்ணில் முகங்களை புதைத்து
எண்ணில் அடங்காதோர் அழைத்து
தன்னில் தஞ்சமாய் அணைத்து
கண்ணில் அடங்கா காவலரே நீர்
கருகிப்போன காரணம் என்ன?


நிலவோடு உறவாடி
முகிலோடு விளையாடி
காற்றோடு கதை பேசி
கதிரவன் சதுராடி
உயிர்கள் ஆயிரமாய்
உயர்ந்து நின்றவரே - நீவீர்
உருகிப்போன மாயம் என்ன?

புயலுக்கு அசராது
மழையிலும் கரையாது பூமி
அதிர்ச்சிக்கும் அசையாது
சூறாவளிக்கும் சுழலாது
சுயம்புவாய் நின்றவரே, நீர்
நெருப்பில் கருகிய
நிலை வந்ததெப்படி?

நீவிர்
உயர்ந்து வளர்ந்த அதிசயத்தை
உலகம் உணரும் முன்னே
பெயர்ந்து போன பேரழிவு கண்டு
அயர்ந்து போனது அகிலமே!

தானும் வாழ்ந்து
பிறரை வாழவைத்த
தாராளர்  அறிவேன்

தன்னை அழித்து
பிறரை வளர்த்த
தகைமையாளர் அறிவேன்

தான்  வாழ
பிறரைக் கெடுக்கும்
தற்குறிகளையும் அறிவேன்.

ஆனால் ஈதென்ன கொடுமை
தன்னை அழித்து
பிறரையும் அழிக்கும் பகைமை
உலகம் எங்கே போகிறது?

ஆகையால்
உலகோரே ஒன்று சேர்வோம், இந்தக்
கொடுமை எதிர்த்துக்
குரல் கொடுப்போம்
தேவையென்றால் உயிரையும் கொடுப்போம்
உலக ஒற்றுமைக்காய் உயிரையும் கொடுப்போம்.

உயிர் துறந்தவர்கள் யாவரும்
உன்மத்தரும் அல்லர்
உயிரோடு இருக்கும் நாமெல்லாம்
உத்தமரும் அல்ல.

நமக்குத் தெரிந்த உண்மை...
நவிலட்டுமா?
நாம்
உயிரோடிருக்கும் அருமை
நம்
ஆண்டவரின் சுத்தக்கிருபை.

அதனால் உலகோரே
நம்மால்
நாட்டில் சமாதானத்தை 
நாட்டமுடியாது , ஆனால் நம்
வீட்டில் சண்டையில்லாமல்
காக்கலாம் அல்லவா?

ஆப்கானிஸ்தானில் அமைதியை
அளிக்கமுடியுமா, ஆனால் நம்
அலுவலகத்தில் அன்பை
அதிகரிக்கலாம்

தேசத்தில் சண்டையை
தடுக்க முடியாது ஆனால்
தேவாலயத்தில் ஒற்றுமை
காக்க முடியும்.

அமெரிக்காவில் தீவிரவாதத்தை
அழிக்கமுடியாது, ஆனால்
அனுதினம் அமைதிக்காய்
ஜெபிக்கலாம்

நம்மால்
இந்தியாவில் ஊழலை
அகற்ற முடியாது, ஆனால்
இதயத்தை பரிசுத்தம்
பண்ணலாம்


காஷ்மீர் பிரச்சனையை
களைய முடியாது ஆனால்
கண்முன் கஷ்டப்படுவோருக்கு
கண்டிப்பாய் உதவலாம்.

எனவே
நம்மால் முடியும்
நன்மைகள் செய்து
இம்மைக்குரிய சிந்தனையில்
இசைந்தே வாழ்வோம்.





6 comments:

  1. I like the way you ended the kavidhai... "Change Starts From Within"

    ReplyDelete
  2. // எனவே
    நம்மால் முடியும்
    நன்மைகள் செய்து
    இம்மைக்குரிய சிந்தனையில்
    இசைந்தே வாழ்வோம்.//

    சீரிய சிந்தனை நண்பரே.... நம்மால் முடிந்தவரை அடுத்தவருக்கு உதவுவோம். அனைவரோடும் நட்பு பாராட்டுவோம்.

    ReplyDelete
  3. Beautiful poem Alfy... Well thought and written... keep writing...

    ReplyDelete