Thursday, September 5, 2013

யாரடி நீ மோகினி ? Part 2 :தென்னை மரத்து ஒயின்
நாங்க ஏற்கனவே திட்டம்போட்டபடி மூனு பேரும் குட்டைத்தோப்புக்குள்ளே போனோம். நிலா இன்னும் வரல, நல்ல இருட்டு. பகல்ல பார்த்து ஏற்கனவே தேர்ந்தெடுத்த அஞ்சு மரத்திலே, மரத்திற்கு ரெண்டு வீதம் பத்து எளனி வெட்டினோம். அப்பதான் வெட்டினது தெரியாதுன்னு நாந்தேன் இந்த யோசனையைச் சொன்னேன். ஆறுமுகம் ஏறி திருகி திருகி போட, ஜோசப் கேட்ச் பிடிச்சு கைலியில் வைத்துக்கட்டினான். நான் ரெண்டு தடவை கேட்ச் பிடிக்க டிரைபண்ணி, ரெண்டு தடவையும் கீழே போட்டதால , ஆறுமுகம் கெட்ட வார்த்தையில் திட்டிட்டான். எனக்குக் கோவம் கோவமாய் வந்தாலும், மாட்டிக்கிட்டா என்னாகும்னு நெனைச்சு கம்முனு இருந்தேன்.
பத்து எளனியையும் கடத்திக்கிட்டு ஓடைக்கரைக்குப் போனோம். அப்பதான் கொஞ்சம் நிலா எட்டிப்பாத்துச்சு. சமையலறையில் களவாண்டு வச்சிருந்த அறுவாளை புதைச்சு வச்ச இடத்தில, நட்டுவச்ச குச்சியைக்காணாததால  கண்டுபிடிக்க கொஞ்சம் நேரமாயிருச்சு.

எளம் பச்சை நிறத்தில ஒவ்வொரு எளனியும் குண்டு  குண்டா  அழகா இருந்துச்சு. வெட்ட வெட்ட எனக்கு தாகமெடுத்து, “டேய் ஒரு எளனி எனக்குக்கொடு”ன்னு கேட்டேன். ஜோசப்புக்கு கோபம் வந்துருச்சு. “டேய் சும்மார்ரு கள்ளுக்கே பத்தாது” என்றான். ஆறுமுகம் வெட்ட ஆரம்பிக்கவும், ஜோசப் புதரில் ஒளிச்சி வச்சிருந்த பாட்டிலை எடுத்து வந்து அதில எளநீரைப்பிடித்து வைத்தான். அப்ப தெரியாம   நைட்ஷோ போயிட்டு வந்த நாகப்பட்டினம் ஸ்ரீதர் எங்களைப் பார்த்துட்டு கலவரம் ஆக, அவனைப்பார்த்துட்டு நாங்க கலவரம் ஆக, ஒருவழியா அவனையும் கூட்டுக்களவாணியா சேத்துக்க வேண்டிய கட்டாயம் ஆயிருச்சு. மோகினியை மட்டும் விட்டுட்டு மத்ததை எல்லாம் சொன்னோம். அஞ்சு இளனியிலே ரெண்டு  பாட்டில் நிரம்பிருச்சு இன்னும்  ரெண்டு  பாட்டில் இருந்திருந்தா  நல்லாயிருந்திருக்கும். மிச்ச இளனியை நாங்களே குடிச்சுட்டு, பாட்டிலைப்புதைச்சு வைச்சோம். மூணு  வாரம் கழிச்சுதான் எடுக்கனும்னு முடிவு செஞ்சுட்டு போய்ப்படுத்தோம்.
ஒரு வாரம் கழிச்சு, ஸ்ரீதர் புதுயோசனையோடு வந்தான். கொஞ்சம் கறுப்புத்திராட்சையை பாட்டில்ல போட்டா பக்கா ஒயின் மாதிரியே ஆயிறும்னு சொன்னான். எனக்கென்னவோ அந்த யோசனை பிடிக்கல. ஆனாலும் கூட்டணி தர்மத்துக்காக ஒத்துக்கிட்டேன். அன்னிக்கு ராத்திரிபோய் தோண்டி எடுத்து திராட்சையை ரெண்டு பாட்டில்லயும் போட்டோம்.
இன்னும் ஒருவாரம் கழிச்சு, ஆறுமுகத்துக்கும் ஸ்ரீதருக்கும் பெரிய வாக்குவாதம் ஆயிப்போச்சு. என்னன்னு கேட்டா, இந்த ஸ்ரீதர் “புதைக்க வேண்டிய அவசியமில்லை. ரெண்டு  வாரம் புதைச்சதே போதும். பெட்டிக்குள்ள கொண்டு வந்து ஒளிச்சு வைச்சிட்டு, இன்னொரு வாரத்துல எடுத்துப்பாப்போம்னு" சொன்னான். இது எனக்கு சரியா வரும்னு தோணல. ஆறுமுகம் என்கட்சிதான், ஆனா ஜோசப், " சரிடா அவன் சொல்றபடி செய்வோம்" என்றான். ஸ்ரீதர் பாட்டிலை எடுத்து, துணியில் சுத்தி அவன் பெட்டிக்குள்ள ஓரமா  வைச்சிருந்தான்.
முன் குறித்த நாளும் வந்தது. அன்னிக்கு வெள்ளிக்கிழமை ஹாஸ்டல் பசங்க எல்லாம் சாயந்திரம் பொது வழிபாட்டுக்காக காந்திகிராமம் போயிருந்தாய்ங்க. நானும் ஆறுமுகமும் உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டோம். ஸ்ரீதரும் ஜோசப்பும் ஃபுட்பால் பிராக்டிஸ்னு சொல்லிட்டாய்ங்க.
எல்லோரும் போனபின், கதவை மூடிட்டு, ஸ்ரீதர் மெதுவாக பாட்டிலை எடுத்து, கொஞ்சம் கஷ்டப்பட்டு கார்க்கை இழுத்தான். கொஞ்சம் சிந்தியிருச்சு. பார்த்தா, நாத்தம் குடலைப் புடுங்கியிருச்சு. நான் மூக்கைப்பொத்திட்டு ஒரே ஓட்டமா ஓடிட்டேன். ஆறுமுகம் நாத்தம் தாங்காம  அங்கேயே வாந்தி எடுத்திட்டான்.  பாட்டில் பூரா ஒரே புழு. ஸ்ரீதர்தான் திராட்சையைப்போட்டு கெடுத்துட்டான்னு ஒரே சண்டை வேற. எவ்வளவு துடைச்சும் அந்த நாத்தமும், கூட வாந்தி நாத்தமும் ரொம்ப நாளைக்கு போவல.

முற்றியது 

8 comments:

 1. நாத்தம் இங்கு வரைக்கும்...!!!!

  ReplyDelete
  Replies
  1. காந்திகிராமம் திண்டுக்கலுக்கு பக்கத்தில்தானே இருக்கு .
   நாத்தம் வரத்தான் செய்யும்

   Delete
 2. நண்பா.. ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருந்திச்சி. பினிஷிங் தான் செரியில்ல.

  ReplyDelete
 3. பாட்டிலை திறந்தவுடன் வாந்தியா??? நல்ல வேலை நீங்கள் அந்த பழக்கத்தை அன்றோடு விட்டீர்கள்..... இல்லையென்றால் இந்த பாரே நாறியிருக்கும்.....சையத் அ

  ReplyDelete
  Replies
  1. இப்போது தெரிகிறதா , நான் ஏன் குடிப்பதில்லை என்று ?

   Delete
 4. நல்ல முடிவெடுத்தது உன் மனம்
  அதனால் நாட்டில் நறு மணம்

  ReplyDelete
  Replies
  1. உன் பெருமனம்
   யாருக்கு வரும்?
   ஆமாம்
   எப்போது உன் கைமணம்
   ஆனது கவிதைமணம்?

   Delete