கடந்த
வாரம் ஒரு வேலையாக லாங் ஐலண்ட், நியூ ஹைட்
பார்க் சென்றிருக்கும் போது, அருகில் (மலையாள) 'மகாராஜா' (பலசரக்குக்கடை) இருப்பதும்
அதன் ஆமை வடையும் (பருப்பு வடையைத்தான் மதுரைப் பசங்க ஆமை வடைன்னு சொல்லுவோம். அது
காரணப்பெயர்) ஞாபகம் வர அங்கு சென்றேன். அதன் பக்கத்தில் நம்மூர் "ஹாட்பிரட்"
இருக்க, முதலில் அதில் நுழைந்து 'பானிபூரி' சாப்பிட்டுவிட்டு பிறகு மகாராஜா சென்றேன்.
அங்கு போய் முதலில் கப்பக்கிழங்கு சிப்ஸ் பின்னர்
ஆமை வடை (3 வடை ஒரு டாலர்) வாங்கிக் கொண்டு
விளம்பரப்பகுதியில் இருந்த ஏராளமான அறிவிப்புகளை மேய்ந்தேன். வாழை இலையில் சாப்பாடு
போட்டு ஏதோ மலையாளத்தில் எழுதியிருந்தது. மேலே அதில் இருந்த உணவு வகைகளைப் பார்த்தவுடன்
எச்சில் ஊறியது. "டேஸ்ட் ஆஃப் கொச்சின்" என்று ரெஸ்டாரண்ட் பெயர் மட்டும்
ஆங்கிலத்தில் இருந்தது. உடனே என்னிடம் ஓடி
வந்த ஒருவர் மலையாளத்தில் சம்சாரித்ததை நான் விளங்கிக் கொண்டது
என்னன்னா , டேஸ்ட் ஆப் கொச்சின் என்ற அவர்கள் நடத்தும், ரெஸ்டாரண்ட்டில்,
ஓணம் ஸ்பெஷலாக, வெள்ளி, சனி ஞாயிறு சிறப்பு சாப்பாடு இருக்கிறதாம். அவசியம் வாருங்கள்
என்று அழைப்பு விடுத்தார்.
என்
மனைவியிடம் சொன்னவுடன்,” ஓ போகலாமே”, என்றாள். ஒரு நாள் ஒரு நேரம் சமைப்பதிலிருந்து
விடுதலை கிடைத்தால் மகிழ்ச்சிதானே. செப்டம்பர் 14, 2013, சனிக்கிழமை காலை என் மனைவியின்
போடியாட்ரிஸ்ட் (Podiatrist) அப்பாய்ண்ட்மெண்ட் முடித்து வீட்டுக்கு வந்து பிள்ளைகளை
பிக்கப் செய்தோம். திவ்யாவும் ஜெருஷாவும் கடைசி நிமிட பிளானாக சேர்ந்துகொள்ள, கிளம்பினோம்.
தூக்கத்தில் இருந்து விடுபட்ட சின்னவள் அபிஷா கேட்டாள், "எங்கே போகிறோம்?"
என்று. நான் சொன்னேன், "நமது மன்த்லி லஞ்ச் அவுட்டிங்குக்காக டேஸ்ட் ஆஃப் கொச்சின்
போகிறோம்", என்று. “ஐயையோ அங்கு வேண்டாம், பிரியாணியில் நிறைய முந்திரிப்பருப்பையும்
ரெய்சினை (கிஸ்மிஸ் பழம்)யும் போட்டு ஒரே இனிப்பாக இருக்கும்" என்றாள்.
போனமுறை
மதுரை வனராஜ் வந்திருந்த சமயம், என்னுடைய திருமண நாளைக் கொண்டாட இங்கு சென்றிருந்தோம்.
அதைச் சொல்கிறாள். "சரி சரி நீ பிரியாணி சாப்பிடாதே" என்றேன்.
அவர்களை
இறக்கிவிட்டு விட்டு, காரை பார்க்கிங் செய்துவிட்டு உள்ளே போனால், அந்த ரெஸ்ட்டாரண்ட்டை
முற்றிலும் மாற்றி, திருமணப்பந்தி போல் வரிசை வரிசையாய் போட்டிருந்தார்கள். இலை போடப்பட்டு,
வரிசையாக வந்து பரிமாறிக் கொண்டிருந்தனர். சமீபத்தில் வேறு நண்பர் கலிபோர்னியா விசு தான் இலையில் சாப்பிடுவதை ஃபேஸ் புக்கில் போட்டதைப்
பார்த்து வயிற்றெரிச்சலில் இருந்தேன் .
எனவே ஆஹா ஆஹா என்று சொல்லிக் கொண்டே, ஆசையுடன் கிட்ட வந்து, என் சீட்டில் உட்கார்ந்த போதுதான்
தெரிந்தது. அது இலை இல்லை, இலை போல் வெட்டப்பட்ட
பச்சைக்கலர் காகிதம். அதான பார்த்தேன். நியூயார்க்கில்
இலைக்கு எங்க போறது. சரி பரவாயில்லை விடு.நம்மூர்
கல்யாணப் பந்தியை மிஞ்சும் வகையில் மலையாள சகோதரர்கள் வெள்ளை வேட்டி சட்டையில் அசத்தி
ஓடி ஓடிக் கவனித்தனர். மொத்தம் 22 வகை என்று சொன்னபோது அபிஷா 24 என்றாள்.
மலையாளத்தில்
ஓணம் என்பது அனைத்து மதத்தாராலும் உற்சாகமாய் கொண்டாடப்படும் புத்தாண்டு. அவர்கள் எங்கு
வாழ்ந்தாலும் ஓணத்தை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
நாமளும்தான்
இருக்கிறோமே. நமது தமிழ்ப்புத்தாண்டு எதுன்னே நமக்குத்தெரியல. சித்திரையா தையான்னு
கருணாநிதி ஜெயலலிதாவின் தையா தக்கா விளையாட்டில் அதுவும் மறந்து போச்சு.
அறுசுவை
உணவு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அன்றுதான் அறுசுவையையும் ஒரே நேரத்தில் உண்டேன்.
அதுதான் வழக்கமாம். "ஓணம் சத்யா" (Sadya) என்று அழைக்கப்படும் அந்த உணவில்
1) இனிப்பு 2) புளிப்பு 3) துவர்ப்பு) 4) உவர்ப்பு 5) கசப்பு 6) உரைப்பு என்று அறுசுவைக்கும்
தனித்தனி உணவு வகைகள் வந்தன. அப்பளம், பொரியல், அவியல், கூட்டு, சட்னி வகைகள், பச்சடி
வகைகள், ஊறுகாய் வகைகள், சிப்ஸ் வகைகள் பரிமாறப்பட்டு, பின்னர் குண்டு சாதம், பருப்பு,
நெய், சாம்பார், ரசம், தயிர் மோர், வாழைப்பழம் என்று பரிமாறப்பட்டு, அதன் பின்னர் இருவகைப்
பாயாசங்கள் (சக்கப்பிரதமன்) தரப்பட்டன. திவ்யா சாதத்தில் வாழைப்பழத்தைப் போட்டு அதில்
சிறிது மோர் விட்டு அதின் மேல் அப்பளத்தைப் போட்டு சாப்பிட்டாள். அப்போதுதான் ஞாபகம்
வந்தது, அவள் 50% மலையாளியாச்சே. பாயாசம் சாப்பிட இடமில்லாமல், “ரெண்டு பாயாசம் பார்சல்”,
என்றேன். “உஷ் சும்மா இருங்க”, என்றாள் மனைவி. ஒவ்வொன்றிலும் சிறிது சிறிதே சாப்பிட்ட
எனக்கு வயிறு நிரம்பிவிட, நன்றாக சாப்பிடும் திடகாத்ர மலையாளிகளைப் பார்த்து பொறாமை
கலந்த அழுவாச்சி வந்தது. அதுக்கெல்லாம்
ஒரு கொடுப்பினை வேணும் பாஸ் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். இவர்கள் வேறு திரும்பத் திரும்ப
என்ன வேணும் என்ன வேணும் என்று கேட்டார்கள்.
நான்வெஜ்
இல்லையானு
$15.95
ஒரு சாப்பாடு என்றாலும் பரம திருப்தி. இலையில் சாப்பிட்ட மாதிரி திருப்தியும் இருந்தது.
உப்பிய வயிறோடும், நிறைந்த மனதோடும் வெளியே வந்தேன். என் மனைவி கேட்டாள், இது
"ஓணம் சத்யா" வா
இல்லை
ஓணம் சதியா ? என்று. ஒரு வேளை நான்வெஜ் இல்லாததை சொல்கிறாள் என்று பார்த்தால், அப்போது
தான் அவள் முன்தினம்தான் டயட்டில் இருக்கப்போவதாக சொன்னது ஞாபகம் வந்தது. பின்னால்
திரும்பிப்பார்த்தால் நடக்கமுடியாமல் வந்து கொண்டிருந்தாள். பின்ன ஒரு ஆயிரம் கலோரியை
அசால்ட்டா அள்ளிட்டாள்ல.
டயட் அப்புறம்... ஹா... ஹா... அவ்வளவு சுவை...!
ReplyDeleteநன்றி தனபாலன்.
Deleteஅறுசுவைக்கு முன்னால் டயட்டாவது மண்ணாவது
தல செமத்தியா வெட்டி இருக்கீங்க போல. ஓணம் பண்டிகையை அனைத்து மலையாளிகளும் மதங்கள் கடந்து கொண்டாடுவதே அதன் சிறப்பு. ஓணம் சங்க காலத்தில் தமிழ்நாட்டிலும் கொண்டாட பட்ட ஒன்றே, மாயோன் என்ற முல்லை நிலக் கடவுளுக்காய் கொண்டாடப்பட்டதாம். மாயோன் தான் மாவேலி ஆகி மகாபலி ஆனாரோ என்னவோ?! ஓணம் சதயச் சாப்பாடு பத்து வகை, பதினெட்டு வகை என வைப்பர். நன்றாக இருக்கும் பிரதமன், பாயாசம் தான் டாப்பு. ஒரு சிறிய திருத்தம் சேர்ந்திருந்நால் என்பதே சரி ! தமிழில் ந்த் வரும் இடங்களில் மலையாளத்தில் ந்ந் வரும். :-)
ReplyDeleteநன்றி விவரணன் .
Deleteதங்கள் விவரணை மிகவும் சிறப்பு.
மாயோன் என்றால் மாயோன் மருகா, முருகனைத்தானே குறிக்கும்?
தவறினை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
உடனே திருத்திவிட்டேன்
பரவாயில்லையே மலையாள உணவுகள் கிடைக்கிறதா அங்கும்..அதுவும் மட்டை அரிசி...செம டேஸ்டாக இருக்குமே...பாயாசம் எப்பவும் அருமையாக இருக்கும் கேரளாவில்..நல்லா ஓணம் திருவிழாவினை கொண்டாடி இருக்கிறீர்கள்.,..
ReplyDeleteநன்றி கோவை நேரம்.
Deleteஉலகின் எல்லா உணவு வகைகளும் நியூயார்க்கில் கிடைக்கும்.
நண்பா! ஏதோ ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை போல் நான் இருக்கிறேன். அதற்கும் ஒரு எரிச்சலா? அருமையான கட்டுரை அய்யா .. அருமை...
ReplyDeleteஅய்யா விசு , நீர் சொல்வதில் கருத்துப்பிழை இருக்கிறது .
Deleteநீர் ஏழையும் இல்லை ,நீர் சாப்பிடுவது எள் உருண்டையும் இல்லை.