ஜூலை 4 - அமெரிக்க சுதந்திர தினம்.இம்முறை
வியாழக்கிழமை வந்தது. வெள்ளி லீவ் போட்டால் நான்கு நாட்கள் சுளையாகக்கிடைக்குமென்பதால்,
எங்கேயாவது டிரைவ் செய்யலாம் என்று முடிவு செய்தோம். பக்கத்து மாநிலங்கள் எல்லாவற்றையும்
பார்த்து முடித்துவிட்டதால், கொஞ்சம் தூரமான மாநிலங்கள் இன்னும் மூன்று பாக்கி இருந்தன.
அவை வெர்மான்ட், ஒகாயோ மற்றும் மெயின். மூன்றுமே சாலை வழியாக ஒரு ஐந்து முதல் ஆறு மணி நேரத்தில் செல்லலாம். 65- 70 மைல் வேகத்தில் (100, 120கி.மீ வேகம்) சென்றால், டிராபிக்கில்
மாட்டாமல் இருந்தால் இது சாத்தியம்தான். மற்றவை யெல்லாம் விமானப்பயணம் மூலம்தான் செல்லமுடியும்
வெர்மான்ட் கோடைக்காலத்தை விட இலையுதிர்
காலத்தில் நன்றாக இருக்கும் என்பதால், மெயின் போகலாம் (Maine) என்று முடிவு செய்தேன்.
நான் முடிவு செய்தவுடன், பெஞ்சியின் மனைவி திவ்யா, அவளும் வருவதாகச் சொன்னாள். என்
மாமனாரும், மாமியாரும் இந்தியாவிலிருந்து வந்திருந்தனர். கீழ்போர்ஷனில் குடியிருக்கும்
பின்னியும் கிஃப்டாவும் சேர்ந்து கொள்ள மொத்தம் 11 பேர் ஆனது. சரியென்று சொன்னதற்கு
தண்டனையாக என் வேனையே கேட்டனர். வோக்ஸ் வேகன் ரூட்டன் ( Volks Wagon Routan) - 8 பேர்
உட்காரலாம். அதோடு, என் மகளின் பிஎம்டபுள்யூ- X1 ஐ நான் எடுக்க திவ்யா, கிஃப்டா வயிற்றில்
உள்ளதைச்சேர்க்காமல் 11 பேர்.
வியாழன் அதிகாலையில் கிளம்பி, ஞாயிறு மாலை
திரும்புவதாக திட்டம் போட்டு, இம்முறை ஒரு மாற்றாக ஹோட்டல் புக்கிங், பார்க்குமிடங்கள்
ஆகியவற்றை திவ்யா, கிஃப்டா கையில் கொடுத்தேன்.
வியாழன் காலை நான் 5 மணிக்கெல்லாம் எழுந்து
கிளம்பி, மனைவி பிள்ளைகளை எழுப்பிக்கிளப்பி 6 மணிக்கெல்லாம் ரெடியாகி, காருக்கு வர,
மேலே ஒரு சத்தத்தையும் காணோம். கடுப்பாகி “நாம் சிறிது முன்னால் கிளம்பலாம்”, என்றேன்.
என் மனைவியின் அப்ஜெக்சனையும் ஓவர்ரூல் பண்ணி, ஜிபிஎஸ்-ல் அட்ரசை போட்டேன். 740 மைல் என்றும் இரவில் தான் போய்ச்சேருவோம் என்றும் போட்டிருந்தது.
ஆனால் மெயின் 360 மைல்தான். ஏற்கனவே கடுப்பில் இருந்த நான், யோசிக்காமல், டக்கென்று
வண்டியை எடுத்தேன். வண்டி டிரைபோரோ பிரிட்ஜ் தாண்டி I-80- ல் ஆல்பெனி நோக்கிச் சென்றது.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் டிரைவ் செய்தபின்
என் மனைவிக்கு ஒரு சந்தேகம் வந்தது. "ஏங்க
சரியான வழியில்தான் போகிறோமா?" என்றாள். “பேசாம இரு உனக்குத் தெரியாது”,என்று
அதட்டினாலும், எனக்கும் சந்தேகம் வந்தது. பிள்ளைகளிடத்தில் சொல்லி, ஐபோனில் செக் செய்யலாம்
என்றால், அவர்களிருவரும் விட்ட தூக்கத்தை கண்டினியூ
பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
அப்போழுது திவ்யா போன் வந்தது. “எங்கேயிருக்கிறீர்கள்”
என்று கேட்டபோது “கனெக்டிக்கட்” தாண்டுகிறோம் என்றார்கள். என்ன கனெக்டிக்கட்டா, நாங்கள்
ஆல்பெனி வழியில்ல போய்க் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தவுடன் பகீரென்றது. வேனை ஓரங்கட்டி,
ஆராய்ந்ததில், இந்த முட்டாள் BMW GPS எங்களை தப்பாக வழிகாட்டியிருக்கிறது. 2 மணி நேரம்
தவறான வழியில் போனதால், எங்களுக்குப் பின்னர் கிளம்பியவர்கள் இப்போது எங்களுக்கு ஒரு
மணி நேரம் முன்னால் போய்க் கொண்டிருக்கிறார்கள். முன்னால் கிளம்பிய எனக்கு அவமானமாய்
இருக்க என் மனைவி நல்லவேளை ஏளனமாய் சிரிக்கவில்லை. அந்தக்காரில் உள்ளவர்கள் நிச்சயமாய்
சிரித்திருப்பார்கள். என் பெண்ணை எழுப்பி ஐபோனில் டைரக்ஷன் போட்டோம். மறுபடியும் திரும்பி,
கனெக்டிக்கட் மாநிலம் வந்து, மசாசுசெட்ஸ் மாநிலம் தாண்டி,
நியூஹாம்ஷையரில் மதிய உணவுக்காக நிறுத்தினோம். அப்படியே கேசும் (பெட்ரோல்) போட்டுவிடலாம்
என ஒரு எக்சிட்டில் வெளியே வந்தோம். இங்கே பெரும்பாலான கேஸ் ஸ்டேஷனில், டெலி
(Deli) என்று சொல்லப்படுகிற கன்வீனியன்ட் ஸ்டோரும் இருக்கும். அதில் பேகல், பிரட்ஜெல் மற்றும் சான்விட்ச்சுகளும் கிடைக்குமென்பதால் அங்கே
நிறுத்தினோம். BMW என்பதால் பிரிமியம் கேஸ்தான் போட வேண்டும். அது கேலனுக்கு ரெகுலர்
கேஸை விட குறைந்தது ஒரு 50 Cents அதிகம். இங்கே பெட்ரோலில் நான்கு வகைகள் உண்டு.
டெலியினுள் நுழைந்து, சேஃபாக ஒரு வெஜ்ஜி
சான்ட்விச்சை ஆர்டர் செய்தேன். என் மனைவி பிள்ளைகள் வேண்டாம் என்று சொல்லி விட நான்
மட்டும் சாப்பிட வேண்டியதிருந்தது. டோஸ்ட் செய்த ஹீரோவில் (ஒரு வகை ரொட்டி) ஒரு அமெரிக்கன்
சீஸ், லேட்டூஸ், தக்காளி, ஆலிவ், கேப்சிகம் மற்றும் உப்புத்தண்ணீரில் ஊற வைத்த வெள்ளரி
ஆகியவை போட்டு நன்றாகவே இருந்தது. மேயனீஸ் வேண்டாமென்று சொல்லிவிட்டேன்.
டெலியினுள் இருந்த ஆள் சிவப்பாகஉயரமாக
வாட்ட சாட்டமாக இருந்தான் பாகிஸ்தானி அல்லது பஞ்சாபியாக இருக்கவேண்டும் என நினைத்து
கேட்கலாமா வேண்டாமா? என்று யோசித்தேன். சரி கேட்டுவிடுவோம் என்று நினைத்து, பாகிஸ்தானா?
என்று கேட்டேன். “இல்லை ஹைதராபாத்”, என்றான். ஆச்சரியமாக இருந்தது. எங்கோ ஒரு மூலையில்
இருக்கும் Gas station, பெரிய கன்வீனியன்ஸ் ஸ்டோர், மற்றும் அந்த உணவகத்தையும் சேர்த்து
ஒரே ஆள் பார்த்துக் கொண்டிருந்தான். ஆட்கள்
பற்றாக்குறையால் இங்கே எல்லா இடத்திலும் இப்படித்தான். மல்டை டாஸ்கிங் (Multitasking).
என் மனைவி, பெஞ்சிக்கு போன் செய்தபோது
அவர்களும் பக்கத்தில்தான் இருந்தனர் என்று தெரிந்தது. ஒரு அரை மணி நேரத்தில் அவர்களை
'வெண்டி' (Wendy) உணவகத்தில் பிடித்தோம். என் கார் உள்ளே நுழையும் போது, பார்க்கிங்கில்
அவர்கள் எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். "ஏன் ரெஸ்டாரண்ட் உள்ளே உட்கார்ந்து சாப்பிட வேண்டியதானே ?", என்று
என் மனைவியிடம் சொல்லிக்கொண்டே காரை பக்கத்தில் நிறுத்தினால், இவர்கள் வெண்டி பார்க்கிங்கில்
நிறுத்திவிட்டு தயிர்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்த தென் இந்தியர்கள் குறிப்பாக
தமிழர்கள் இந்தக் கட்டுச்சோறு பழக்கத்தை அமெரிக்கா வந்தாலும் விடுவதில்லை என நினைத்து
தலையில் அடித்துக்கொண்டேன்.
சாண்ட்விச்சுக்கு விரதம் இருந்த என் மனைவி, தயிர்சாதம் என்றதும் ஆவலாக
ஒரு பிளேட் வாங்கி பசியாறினாள். என் பிள்ளைகள்"வேண்டாம், வி ஆர் குட்" என்று
சொல்லிவிட்டனர்.
மீண்டும் அங்கிருந்து ஒன்றாகவேகிளம்பி
“அகஸ்டா” என்ற சிறிய நகரத்தில் நான்கு மணியளவில்
நுழைந்தோம். அங்கிருந்த "பெஸ்ட் வெஸ்டர்ன்"
ஹோட்டலில் மூன்று ரூம்கள் புக் செய்திருந்தாள் திவ்யா.
பெட்டிகளை இறக்கி வைத்துவிட்டுநான் காரில்
இருக்க, உள்ளே சென்ற திவ்யா கலவரமாக வெளியே
வந்தாள். என்னவென்றால் பிரைஸ்லைன் மூலமாக புக் செய்த எதுவும் இங்கு வந்து சேரவில்லை.
ரூம் எதுவும் காலியாக ,இல்லை என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள்.ஜூலை 4 வீக்கெண்ட்,
கோடைகாலத்தின் முதல் விடுமுறை. எனவே அநேகமாக எல்லோருமே வெளியே போய்விடுவார்கள். அதனால்
முன்னால் புக்கிங் செய்யாவிட்டால் ரூம்கள் கிடைப்பது அரிது.
ஐயையோ இப்ப என்ன செய்வது,
எங்கு தங்குவது என நினைத்து கலக்கமாக இருந்தது.
தொடரும்
அடடா.... ஆரம்பம் முதலே பதற்றம் தானா.... ரூம் கிடைத்ததா... மேலும் பயணத்தில் பார்த்ததையும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்....
ReplyDeleteநன்றி வெங்கட் .
Deleteபதற்றம் நமக்கு பாயாசம் மாதிரி .
கார்லேயே தூங்கியாச்சா?? இல்லை மொட்டை மாடியா? அரசியல்ல இதெல்லாம் சகஜம்....
ReplyDeleteஅமுதா பொறுமை காக்க. திங்களன்று தெரிந்துவிடும்
Delete