Monday, September 23, 2013

மெய்ன் பயணம் Part 2 : என் வழி!!!!!!!!!! தனி வழி !!!!!!!!

          
       உள்ளே ரிசப்ஷனில் உக்கிரமாய் சண்டை நடந்து கொண்டிருந்தது. நான் உள்ளே சென்று சண்டை போடுவதில்  பயனில்லை என்று விளக்கி , ஐபாடை எடுத்து தட்டினேன். பிறகு போனில் திரும்ப ப்ரைஸ் லைனை பிடித்து ஒரு மணிநேரம் போராடியபின், அதிர்ஷ்டவசமாக பக்கத்திலேயே இருந்த "கம்ஃபர்ட் இன்"னில் இடம் கிடைத்தது. மூன்று ரூமில் இரண்டு ரூம் இன்டர் கனெக்டட்.ரூம்கள் சுத்தமாகவும் அருமையாகவும் இருந்தது, ஒரு திருப்தியைத்தந்தது. இரண்டு குயின் சைஸ் பெட் இருந்ததால் நான்கு பேர் தாராளமாகப்படுக்கலாம்.
     வந்ததும் வராததுமாக ,எல்லோரும் ஸ்விம்  சூட்டும், ஷார்ட்ஸும் மாட்டிக்கொண்டு நாலு  வயசு ஜெருஷா முதற்கொண்டு ,இண்டோர் நீச்சல் குளத்திற்கு சென்று இறங்கினர். என் மனைவி என்னையும் கூப்பிட்டாள். "வெள்ளிக்கிழமையெல்லாம் நான் நீந்துவதில்லை" என்றேன். " நீங்கள் அந்த குழந்தைகள் பகுதியில் இறங்கலாமே? என்று மனைவி சொன்னதும் கற்றுக்கொடுக்காத என் அம்மா அப்பா மேல் கோவம் கோவமாய் வந்தது.
      கொஞ்சம் ஆசுவாசப்படுத்திவிட்டு, ஜூலை 4 வாணவேடிக்கையைப்பார்க்க கிளம்பினோம். சுதந்திர தினமான, அன்று எல்லா பெரிய நகரங்களிலும் இருட்டியபின் வாணவேடிக்கை நடக்கும்.  இன்னும் நேரம் இருந்தது. அந்த நேரம் பார்த்து சோவென்று சத்தத்துடன் "தண்டர் ஸ்டார்ம்" ஆரம்பித்தது. கோடையில் இது சகஜம்தான். ஆனாலும் ரம்மியமான மாலை நேரத்தையும், வாணவேடிக்கையையும் கெடுத்து  விடுமோ என்று அஞ்சினோம். ஒரு அரைமணி நேரம் மழை கொட்டோ கொட்டென  கொட்டி ஒய்ந்தது. அதுவும் ஒருவகைக்கு நல்லதுதான். நாள் முழுவதும் கொளுத்திய 90 டிகிரி வெயிலை சாந்தப்படுத்தி, நல்ல ஒரு குளிர்ந்த சூழ்நிலை வந்தது.
            வாணவேடிக்கை நடக்குமுன், பல நிகழ்ச்சிகள் இருந்தன. எல்லோரும் கிளம்பி அந்த இடத்திற்கு சென்றோம். பார்க்கிங் அருகில் ஒரு சிறிய கோட்டை இருந்ததைப் பார்த்தவுடன் துள்ளிக்குதித்தேன். ஆஹா அஜென்டாவில் இதைப்பற்றி சொல்லவே இல்லையே என்று நினைத்த வண்ணம், “இங்கு போகவேண்டுமென” சொன்னேன்,. "ஐயா ஆளைவிடு, எங்களை இறக்கிவிட்டுவிட்டு எங்கே வேணாலும் போ" என்றால் என் மனைவி. அவளுக்குத்தான் "ஹிஸ்டரி அலர்ஜி" ஆச்சே. ஆனாலும் 11 பேரில் ஒருவர் கூட என் கூட வரவில்லையாதலால் நான் தனியாகவே சென்றேன். என்ன செய்வது என்னுடைய இண்டரஸ்ட் வேற யாருக்கும் இல்லை. என் வழி!!!!!!! தனி வழி!!!!!!!! என்று சொல்லிவிட்டு கோட்டைக்குப்போனேன்.
            என் மனைவி போலவே ஹிஸ்டரி அலர்ஜி உள்ளவர்கள் ஒரு பத்தி மட்டும் தள்ளிப்படிக்கவும்.
            ஓல்ட் ஃபோர்ட் வெஸ்டர்ன் (Old Fort Western) என்று அழைக்கப்படும் இது ஒரு தேசிய நினைவுச்சின்னம். கென்னபெக் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இது கிபி 1754-ல் கட்டப்பட்டது. வெறும் மரத்தால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, இதுமாதிரி கட்டப்பட்டவைகளுள் மிகவும் பழமையானது. நியூ இங்லான்டின் காலனிக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்தக்கோட்டையில் நேரடியாக எந்தச் சண்டையும் நடந்ததில்லை. ஆனால் அமெரிக்க சிவில் வார் நடக்கும்போது, பெனடிக்ட் அர்னால்டு என்பவர், கியூபெக் பகுதியைத்தாக்குவதற்கு இதனைத்தான் பாசறையாக பயன்படுத்தினாராம்.
         கோட்டையைப் பார்த்து முடித்து, வண்டியை ஆற்றங்கரையில் உள்ள தெருவில் பார்க் செய்யலாம் என்று செல்லும்போது, பெரிய குதிரை வண்டி (Horse Carriage) அந்தப்பக்கம் வந்தது. வண்டியில் இருந்தவர்கள் தெரிந்த மூஞ்சிகளாய் இருந்தது. உற்றுப்பார்த்தால் அட நம்ம ஆட்கள்தான். குதூகலமாய் கைகளை ஆட்டிக்கொண்டு சென்றனர். அந்த 20 பேர் உட்காரக்கூடிய பெரிய வண்டியை இரண்டு குதிரைகள் அநாயசமாக இழுத்துச் சென்றன. குதிரைகளா அவை ஒவ்வொன்றும் குட்டியானை சைசில் இருந்தன. என்னத்தைப் போட்டு வளர்ப்பாய்ங்க்களோ? போகிறபோக்கில் தும்பிக்கை போன்ற வாலைத்தூக்கி போட்டது பாருங்க சாணியை அம்மம்மா எவ்வளவு சாப்பிட்டிருந்தால் இவ்வளவு????.

         பார்க் செய்த இடத்திற்கு முன்னால் ஒரு ஆன்டிக் கடை (Antique) இருந்தது. நல்லவேளை வண்டியில் என் மனைவி போய்விட்டாள். ஏற்கனவே வீட்டில் இடங்கொள்ளாமட்டும் கலைப்பொருட்கள் நிறைந்து இருந்தன. வைப்பதற்கு இடமேயில்லை. சுவர்களிலும் ஒரு இடம் விடாது மாட்டி வைத்தாயிற்று. ஆனாலும் என் கலை ஆசை விடாததால், உள்ளே நுழைந்தேன். ராஜ மரியாதை கொடுத்து, கணவன் மனைவி என்னை வரவேற்றதால் உச்சி குளிர்ந்து, பலவற்றை வாங்கிவிட்டேன். நல்ல பொருட்கள் தாம், விலையும்  பரவாயில்லை. நன்கு பேக் செய்து, ஒரு பிளாஸ்டிக் பின்னில்  போட்டுக் கொடுத்தார்கள். தூக்கிக்கொண்டு வந்து காரிலும் வைத்தார்கள். மகிழ்ச்சியோடு ஆற்றங்கரைப்பக்கம் நடையைக் கட்டினேன். 
Kennebec River
நம் ஆட்கள் கரையில் பெட்ஷீட்டை விரித்து உட்கார்ந்து செட்டில் ஆகி, பிட்சாவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மணி எட்டரை ஆகியும் சூரியன் அஸ்தமனம் ஆகாமல் நல்ல வெளிச்சம் இருந்தது. இருட்டிய பின்னர்தான் ஃபயர் வொர்க்ஸ் போடுவார்கள். என்னைப் பார்த்தவுடன் "என்ன வாங்கினாய்?", என்று மனைவி கேட்டது" என்ன வாங்கி  நாய்", என்று ஒலித்தது. "ஒன்னுமில்லையே", என்று நான்  அப்பாவியாய் சொன்னதும், "ஏய் கதைவிடாதே, நீதான் அந்தக்கடையில் நுழைஞ்சதைப் பார்த்தேனே " என்றாள். 

4 comments:

  1. சுவாரஸ்யம்... பயணத்தை தொடகிறேன்...

    ReplyDelete
  2. தங்கள் அன்புக்கு நன்றி தனபாலன்.

    ReplyDelete
  3. மரக் கோட்டை மிக அழகாய் இருக்கிறது.....

    வாங்கினாய்? :)

    ReplyDelete
  4. அன்புக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete