Wednesday, September 11, 2013

வேர்ல்ட் டிரேட் சென்டர் - ட்வின் டவர்: Part 2

       செப்டம்பர் 11, 2001

      12 வருடங்களுக்கு முன்னால் இதே நாளில், புதிதாக வந்த என் மகள்களை பள்ளியில் சேர்ப்பதற்காக பிரையர்வுட்டில் (Briarwood) (B-க்கும் P-க்கும் தமிழில் 'பி' தானா?) இருக்கும் ஆரம்பப்பள்ளிக்குச் சென்றேன். ஒரு கஷ்டமுமில்லை, சிறிய நேர்முகம் முடிந்து, ஆங்கில அறிவைச் சோதனை செய்துவிட்டு, அட்மிஷனை உறுதி செய்தார்கள். பிரின்ஸ்பாலை பார்த்து நன்றி சொல்லப் போனபோது, அங்கே எல்லோரும் கூடிக்கூடி குசுகுசுத்தனர்.என்னவென்று விசாரித்தபோது, ஒரு பெரிய ஆக்சிடன்ட், "வேர்ல்ட் டிரேட் சென்டரில் ஒரு விமானம் மோதிவிட்டது" என்றனர். ஐயோ பாவமே எத்தனை பேர் பலியானார்களோ? என்று நினைத்த வண்ணம், வீடு திரும்பி டிவியை ஆன் செய்தேன். சற்று நேரத்தில், என் கண்ணுக்கு நேரே மற்றொரு விமானம், அதன் இன்னொரு டவரை ஊடுருவி உள்ளே செல்ல, அப்படியே திகைத்துவிட்டேன். இது ஆக்சிடெண்ட் மாதிரி தெரியலையே, என நினைத்துக் கொண்டு அதிர்ந்து உட்கார்ந்துவிட்டேன். ட்வின் டவர் இரண்டும் பற்றியெரியத் தொடங்க, என் மனமும் பதைபதைத்து பற்றி எரிந்தது. சில நிமிடங்களில் 110 மாடி ட்வின் டவர் அப்படியே சீட்டுக்கட்டு போல உருகி, மண்ணோடு மண்ணாகியது.

 மாபெரும் புகைமூட்டம் எழுந்து, டெளன் டவுன் முழுவதும் படர்ந்தது. உள்ளே மாட்டிக்கொண்டு செத்தவர்கள் தவிர, தீயணைப்பு வீரர்கள், போலிஸ்காரர்கள், தூசியில் மூச்சுத்திணறி இறந்த, வெளியேயிருந்த பொதுமக்கள் என கிட்டத்தட்ட 4000 பேர் இறந்தனர்.

 சப்வே அனைத்தும் நிறுத்தப்பட, வேலைக்கு அன்று மன்ஹட்டனுக்கு சென்றவர்கள் நடந்தே திரும்பினர்.

இறந்தவர்கள் பட்டியலில் நம் இந்திய மென்பொருள் பொறியாளர்களும் அடங்குவர்.நியூயார்க்கின் ஸ்கைலைன் நிரந்த-ரமாக மாறிப்போனது. 

Skyline with Twin towers

              அந்தச்  சம்பவத்தை இப்போதுநினைத்தாலும் உள்ளமும் உடலும் நடுங்குகிறது. அப்பாவிகளைக்கொன்ற இந்த மனதில் ஈரமில்லாத பிற்போக்குவாதிகளை அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்,ஜெஹோவா,கடவுள், இறைவன் மற்றும் கர்த்தர் என்று அழைக்கப்படுகிற பரம்பொருள் மன்னிப்பாராக.
Skyline without Twin towers

            சிறிது நேரத்தில் எனக்கு நான் அப்போது வேலைபார்த்த கம்பெனியின் பிரசிடன்டிருந்து ஃபோன் வந்தது. "ஆல்ஃபி எங்கே இருக்கிறாய்? வேர்ல்ட் டிரேட் சென்டர் பற்றி கேள்விப்பட்டிருப்பாய். சப்வே ஒன்றும் ஓடவில்லை. நீ வீட்டிலேயே இரு. ஆஃபிஸ் எப்போது வருவது குறித்து இரண்டு நாட்களில் சொல்கிறேன்" என்று.
Skyline now with Freedom Tower

            அந்த முதல் காலுக்குப்பின்னர், எனக்கு பல போன்கள்,  உலகின் பல இடங்களிலிருந்து வந்து கொண்டே இருந்தது. நான் சேஃபாக இருக்கிறேனா? என்று அறிய.ஏனென்றால், ட்வின் டவரிலிருந்து வந்து மிட்டவுனில் வேறு வேலை எடுத்துவிட்டேன் என்று பலருக்குத் தெரியாது. 
        H4 விசா உறுதியாகி, மனைவி பிள்ளைகள் செப்டம்பர் 6, 2001 வியாழன் மதியம் ஜான் F. கென்னடி விமான நிலையத்தில் வந்திறங்கினர். 14 மாத பிரிவுக்குப்பின் குடும்பம் ஒன்றிணைந்தது. வெள்ளியன்று ஆபிஸ் போய்விட்டு, சனிக்கிழமை செப்டம்பர் 8, 2001 அன்று மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றேன். WTC-யும், சுதந்திர தேவி சிலையையும், எல்லிஸ் தீவையும் பார்க்க திட்டம்.
            E-டிரைனில் கடைசி ஸ்டாப்பில் இறங்கி மேலே வர, வானளாவி நின்ற இரட்டைக் கோபுரங்கள் லேசாக மிக லேசாக அசைந்து வரவேற்றன. வாருங்கள் மேலே போகலாம் என்று அழைக்க, மனைவி சொன்னாள், "இது வானத்தை முட்டிக்கொண்டிருக்கிறது, பயமா இருக்கு இன்னொரு நாளைக்குப் போகலாம்". அன்று நிஜமாகவே, சிகரம் அப்படித்தான்  மேகங்களிலே மூடப்பட்டு இருந்தது. என் மனைவி அதுவரை சென்னை LIC  கட்டடம் தவிர வேறு உயரமான கட்டிடம் பார்த்ததில்லை. ஏற்கனவே ஜெட் லாகினால்  கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவளை வற்புறுத்தாமல் விட்டுவிட்டேன்.
            அதன்பின் கடைசிவரைக்கும் மேலே போய்ப் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவேயில்லை.
            அன்றைய நாளில் சுதந்திர தேவிசிலையில் நாங்கள் எடுத்த பல போட்டாக்களிலும், கம்பீரமாய் இரட்டைக் கோபுரங்கள் நின்றிருந்தன.
            இரண்டே நாட்களில் "டாப் ஆஃப் தி வேர்ல்ட்", "கிரவுண்ட் ஜீரோ" ஆனது. என் மனைவி கண்பட்டதால் இப்படி ஆயிருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதால் இன்றுவரை அவளை "எம்பயர் ஸ்டேட் பில்டிங்குக்கு கூப்பிட்டுப் போகவேயில்லை. “ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர்” அழைத்துப்போகும்உத்தேசமும் இல்லை.


முற்றியது.

3 comments:

  1. இப்போது நினைத்தாலும் உள்ளமும் உடலும் நடுங்குகிறது...

    ReplyDelete
  2. ஆஹா கண்ணு போட்டுடாங்கன்னு மனைவியை சொல்றீங்களா..சரியான ஆள் தான் நீங்க..அது பின்லேடன் கண் சார்...

    சே என்ன ஒரு மோசமான தாக்குதல்...

    ReplyDelete
    Replies
    1. அதான, என்னடாது தாய்க்குலம் ஒண்ணும் சப்போர்ட்டுக்கு
      வரலியேன்னு பார்த்தேன்

      Delete