Wednesday, April 24, 2013

NYPD ( நியூயார்க் போலிஸ் டிபார்ட்மென்ட்)

    பாஸ்டனில் சமீபத்தில் நடந்த மராத்தான் ஓட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு  தீவிரவாதிகளில் ஒருவன்  கொல்லப்பட்டான் மற்ற ஒருவன் உயிரோடு வளைக்கப்பட்டான் .48 மணி நேரத்தில் இது சாதிக்கப்பட்டது .
Add caption
    கடந்த ஞாயிறன்று ( ஏப்ரல் 20, 2013) நியூயார்க்கில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றதால் , NYPD உஷாரானது .கேன்சல் செய்து விடுவார்கள் என்று பலரும் எதிர்பார்க்க ,ஓட்டம் எந்த பிரச்னையும் இன்றி நடந்து முடிந்தது .
        நாங்கள் நியூயார்க் வந்த புதிதில். குயின்சில் (Queens) உள்ள ஜமைக்காவில் முதல் மாடியில் குடியிருந்தோம். ஒரு நாள் மாலை, வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். எங்கள் தெரு முனையில் திரும்பும்  போது NYPD கார் ஒன்று எங்கள் வாசலில் நின்றதோடு, இரண்டு போலிஸ்காரர்கள் மேலேறிச் செல்வதைப்பார்த்தேன்.
      என் வீட்டுக்கா, இருக்காது என்று நினைத்தாலும், BP எகிற, ஓடி வந்து நானும் மூச்சுமுட்ட ஏறினேன். மேலே ஒரே இருட்டாக இருந்தது மேலும் திகிலூட்டியது. என் மனைவி கையை ஆட்டி ஆட்டி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். என்னைப்பார்த்ததும் அவள் “போன், போலிஸ்,  அபிஷா” என்று உளற, “முதலில் லைட்டைப்போடு” என்றேன். அங்கே என் சின்னப்பெண் அபிஷா (அப்போது நான்கு வயது) என் வீட்டு லேண்ட் லைனை கையில் பிடித்திருந்தாள்.



    எனக்கு எல்லாம் உடனே விளங்கிவிட்டது. நம் ஊரில் அவசர உதவி 100 போல இங்கே 911. எந்த எமர்ஜன்சி என்றாலும் 911 அடிக்க, பக்கத்தில் உள்ள போலிஸ் உடனே வர, ஆம்புலன்ஸ் அடுத்த நொடியில்  வந்து நிற்கும். லைட்டெல்லாம் அணைத்து விட்டு,  டிவி பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், என் பெண் அவள் சித்தப்பாவை மிஸ் செய்ததால், தானாக போனை எடுத்து, இந்தியாவிற்கு டயல் செய்ய, 91அடிப்பதற்கு பதில் 911அடித்து விட்டாள். போலீசாரின் வேகத்தை கவனித்தீர்களா? என் மகள் போனை கீழே வைப்பதற்கு முன், போலிஸ் வந்துவிட்டது. ஆச்சரியம், மிரட்டல் உருட்டல் எதுவுமில்லை, சிரித்துக்கொண்டே, இனிமேல் கவனமாக டயல் செய்யச்சொல்லிவிட்டு போயே போய் விட்டனர். 
       NYPD என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற நியூயார்க் போலிஸ் டிபார்ட்மென்ட், உலகத்திலேயே தலைசிறந்த போலிஸ் நிறுவனங்களில் ஒன்று. 
சுமார் 85 லட்சம் மக்கள் வாழும், உலகத்தின் மிகப்பெரிய நியூயார்க் பெருநகரத்தின், சட்ட ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு ஆகியவற்றை செயல்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பு NYPD யைச் சார்ந்தது.அதோடு தீவிரவாத கண்காணிப்பையும் FBI மற்றும் CIA யோடு இணைந்து செய்கிறது. 
இதன் கமிஷனரான ரேய் கெல்லி,புதிதாக பயன்படுத்தவிருக்கும் ஹைடெக் சாதனங்களைப்பற்றி, சமீபத்தில் சிட்டி கௌன்சிலில் உரையாற்றினார், அந்த புதிய முறைகளைப்பற்றி கீழே கொடுத்துள்ளேன். 
டேட்டா பேஸ் : NYPD புதிதாக ஒரு மிகப்பெரிய டேட்டா பேஸை உருவாக்கியிருக்கிறது. இதில், வாகனங்களின் லைசென்ஸ் பிளேட்கள், போலிஸ் கேமராக்கள், அரெஸ்ட் ரெகார்ட்ஸ் ஆகிய பல தகவல்கள் தொகுக்கப்பட்டு பராமரிக்கப்படும். முதலில் தனித்தனியாக இருந்தவை இப்பொழுது ஒரே தகவல் களஞ்சியமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான பொதுத்தகவல்கள், இனி ஒரே டேட்டா பேஸில் விரல் நுனியில் கிடைக்கும். இது  மைக்ரோசாஃப்ட்  நிறுவனத்தின் உதவியில்  செயல்படுத்தப்படுகிறது.இப்போதைக்கு கெளன்ட்டர் டெரரிசம் யூனிட்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த வசதி படிப்படியாக மற்ற யூனிட்டுகளுக்கும் விரிவு படுத்தப்படும். இந்த டேட்டா பேஸில் நான் இருக்கிறேனா இல்லையா? என்று தெரியவில்லையே. 


ஆப்பரேஷன் சேஃப்டி கேப் (Operation Safety Cap)
            நம்மூரில் போல் எல்லா மருந்துகளையும், இங்கே மருந்தகங்களில் வாங்கிவிட முடியாது. சில மருந்துகளை மருத்துவரின் மருந்துச்சீட்டு (Prescription)இல்லாமல் தலை கீழாக நின்னாலும் வாங்கவிட முடியாது. சில போதை  வஸ்துகளும் மருந்து போல் செயல்படுவதால், அவைகளுக்கு டிமாண்ட் அதிகம். எனவே அடிக்கடி ஃ பார்மஸிகளில் கொள்ளை போய் விடுகிறது. இதற்கென்றே தனிப்பட்ட திருட்டுக்கும்பல் மற்றும் வாடிக்கையாளர் இருப்பதாக கேள்வி
    இந்த புதிய ஆப்பரேஷன்மூலம், சிட்டியில் உள்ள ஆறாயிரம் மருந்தகங்களும் கண்காணிப்பில் கொண்டுவரப்படும். அதோடு இவைகளுக்கு NYPD மூலம் சில பாட்டில்களும் கொடுக்கப்படும். இதிலே விசேஷம் என்னவென்றால்,இதிலே ஜிபிஎஸ் டிராக்டிங்  டிவைஸ் பொருத்தப்படும்.திருடன் இதனை திருடினால்,இதனை வைத்து பொருளையும்,இடத்தையும் அதன் மூலம் திருடியவனையும் கண்டுபிடித்து விட முடியும். இனிமேல் மருந்து வாங்கினால் பாட்டிலை மாற்றிவிட வேண்டும், எதுக்கு வம்பு.
CCTV கேமராக்கள் :
                  ஏற்கனவே பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், இப்போது அதி முக்கிய இடங்கள் மற்றும் டூரிஸ்ட் அதிகமாக வரும் இடங்களில் பொருத்துவதற்காக NYPD, 650 புதிய கேமராக்களை வாங்கியிருக்கிறது.இதன் விலை 9.4மில்லியன் டாலர்கள் (டாலர் வெள்ளை மாளிகையின்  தோட்டத்தில் விளைவது போல் தெரிகிறதே).இந்த அதி நவீன "டிஜிட்டல் கண்கள் ". ஐபி மெகா பிக்சல் டெக்னாலஜி கொண்டது. இது மிகத்துல்லியமான படங்களையும், வீடியோக்களையும் எடுப்பதோடு தேடும் லிஸ்டில் உள்ளவர்களையும்  போட்டுக்கொடுத்து விடும். இனி மேல் டைம்ஸ் கொயர் போகிறவர்கள், கொஞ்சம் மேக்கப் தாராளமாக போடவும்.
சோஷியல் நெட்வெர்க் மானிடர்:
    ஜூவனைல் ஜஸ்டிஸ் டிவிசன் (Juvenile Justice Division) என்ற NYPD​ -அமைப்பில் உள்ள துப்பறியும் நிபுணர்களுக்கு, இரவும் பகலும் ஒரே வேலை. ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரை கண்காணிக்க வேண்டும்.( ஆஹா ஜாலியான வேலை) நவீன கால கிரிமினல்களும், கேங்குகளும், இப்போது தாங்கள்  திட்டமிடுவது, பேசிக்கொள்வது இவற்றின்  மூலம் தான் என்று கண்டுபிடித்ததால் இந்த முடிவு. இவர்கள் பயன்படுத்தும், சங்கேத கோட் வார்த்தைகளைக்கண்டுபிடிக்க ஒரு புதிய டிக்ஸனரி உருவாக்கப்பட்டு,புதிய  வார்த்தைகள் அனுதினமும் சேகரிக்கப்படுகிறது. ஃபேஸ் புக்கிலேயோ   அல்லது வெறெந்த சமூக வலை தளங்களிலோ, இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அதன் நதிமூலம் ரிஷிமூலம் எங்கிருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டு, அந்தப்பகுதியில் உள்ள NYPD காப்போ அல்லது டிடெக்டிவ்வோ  உஷார் படுத்தப்பட்டு, ஆளை மடக்கி விடுவார்கள்.இதிலே விஷேசம் என்னன்னா, நிமிடங்களில் எல்லாம் நடந்து முடிந்து விடும். இரவும் பகலும் இன்டர்நெட்டில் வாழ்க்கையை சேட்டில் ஓட்டிக் கொண்டிருக்கும் நண்பர்களே, தோழிகளே உஷார்!  உஷார்!  உஷார்!.
கன் ரேடியேஷன் டிடெக்டர்:
          ஜனவரி 2013 முதல் நகரத்தின் சில பகுதியில் இந்த சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. "டெராஹெர்ட்ஸ் இமேஜிங் டிடெஷன் சிஸ்டம்" (Terahertz Imaging Detection System ) என்று அழைக்கப்படும் இந்த காமெராவின் 16அடிக்குள் யார் சென்றாலும், அவர் துப்பாக்கி வைத்திருந்தால், ஆடையை  ஊடுருவிச்சென்று படமெடுத்துவிடுவதோடு, உடனடியாக உஷார்ப்படுத்திவிடும். உடலின் எந்தப் பகுதியிலும் இனிமேல் துப்பாக்கியை மறைத்து விட முடியாது. ஒழுங்கா உள்ளாடைகளை உடுத்திச் செல்லுங்கப்பா இனிமேல்.

No comments:

Post a Comment