Thursday, April 18, 2013

மெக்சிகோ பயணம் -7 (நவம்பர் 30, 2012) பொறுக்கியான பரதேசி

 




இக்கியும் என் உடன் பயணிகளும் 
எப்படி என்று ஆச்சரியத்துடன் பார்த்தபோது. சிறிதளவு எச்சிலை அதில் உமிழ்ந்து ஒன்று, இரண்டு என்று எண்ண ஆரம்பித்தார். ஐந்து எண்ணுவதற்குள் அது காய்ந்துவிட்டால் அது குறைந்தது 2000 வருட பழமையானது என்று சர்வ சாதாரணமாய் சொன்னார் இக்கி . மற்றவை அதைவிட குறைந்த வயதுள்ளவையாம். எச்சில் துப்பியவற்றை , கவனமாக தவிர்த்து விட்டு, மற்ற  சிலவற்றைப் பொறுக்கி பையில் போட்டுக் கொண்டேன். சிவப்பு, கறுப்பு, பிரெளன் என்று பலவித வண்ணங்களில் இருந்தது . நானும் கையில் ஒரு உடைந்த ஓடை எடுத்து அதன் மேல் துப்பினேன் .நமக்கு எப்ப குறி சரியாய் இருந்துருக்கு ? . ஓடு தவிர உள்ளங்கையின்  மற்ற எல்லா இடத்திலும் எச்சில் தெறிக்க, “உவ்வே” நெலமை ஆயிப்போச்சு .சுற்றிலும் பார்க்க ,நல்ல வேளை யாரும் பார்க்கல .

மணி மதியம் 12 இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக ஏறிய வெயில் இப்போது நன்கு உரைத்தது. மொட்டைக்காடாக இருந்ததால் வேர்த்துக்கொட்டியது. என்னுடைய லைட் ஜாக்கெட்டை கழற்றி கையில் பிடித்துக் கொண்டேன்.பஸ்ஸிலேயே விட்டுவிட்டு வந்திருக்க வேண்டும்.

     இக்னேஷியோ சொன்னார், மேலே ஏறுபவர்கள் ஏறிவிட்டு வாருங்கள் என்று, என்னால் முடியுமா? என்று சந்தேகம் வந்தது. உச்சிவெயில் வேறு மண்டையை பிளந்தது. தண்ணீர், தின்பண்டம், உணவு, சோடா எதுவும் கிடைக்காத அந்த இடத்தில் வெறும் கலைப்பொருட்கள் மட்டுமே கிடைத்தது கோபம் கோபமாய் வந்தது.  திடீரென்று ஒரு குருட்டுத்தைரியம், எப்படியாவது ஏறிவிடுவோமென்று இன்றைக்கெல்லாம் இருந்தால் எனக்கு எவ்வளவு வயதிருக்கும் என்று நினைக்கிறீர்கள்,


     செங்குத்தான படிக்கட்டுகள், ஒவ்வொரு படியும் மிக உயரம். பிடித்து ஏறுவதற்காக நடுவில் ஒரு பெரிய வடக்கயிறு. ஏறினேன் ஏறினேன், ஏறிக்கொண்டே, ஏ....றி ஏ....றி, ஒரு படியில் உட்கார்ந்து மூச்சு வாங்கினேன். மேலே பார்த்தால் இன்னும் ஏராளமான படிகள் இருந்தன. இந்த வெயில் வேறு மேலும் உக்கிரமடைந்தது. கலோரிகள் வேகமாக எரிந்ததால் பசி வேறு. கீழேபோய்விடலாம் என்று இருமுட்டிகளும் சொன்னது. மேலே போ என்று மனசு சொன்னது. முட்டி சொன்னதை தட்டிவிட்டு, மனதினை வழக்கம்போல் பின்பற்றினேன். ஏயப்பா ஏறியேவிட்டேன். இந்தியக்கொடி கொண்டு வந்திருந்தால் அங்கே ஊன்றியிருக்கலாம். குறைந்தபட்சம் இரண்டு  தடவை அசைத்திருக்கலாம். ஒரு இந்தியனைக்கூட  இதுவரை சந்திக்காதது அதிசயம்தான்.

     மேலே தட்டையான சமவெளியும், வெறும் பீடமும் இருந்தன. 2000 வருடங்களுக்கு முன்னால், அந்த இடம் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என எண்ணிப்பார்த்தேன் (பெரிய ஸ்பீல்பெர்க் நினைப்பு நிறுத்தப்பு  ).


     அங்கு வாழ்ந்த மக்கள் வலிமையானவர்களாக மட்டுமல்ல திறமையானவர்களாயும் இருந்திருக்க வேண்டும். எதிலும் ஒரு ஒழுங்கும் தெரிந்தது. இறங்குவதை நினைத்தால் இன்னும் மலைப்பாக இருந்தது. மிகவும் செங்குத்தாக இருந்தது. ஓரிரண்டு போட்டாக்கள் எடுத்துவிட்டு (ஒரு எவிடென்ஸ் வேனும்ல) இறங்க ஆயத்தமானேன்.

     இறங்குவது ஏறுவதைவிட கடினமாக இருந்தது (அட நம்புங்க). நீண்ட படிக்கட்டுகள் சற்றே குதித்துத்தான் இறங்க வேண்டும். ஆனால்  தவறினால் அகழ்வாராய்ச்சி, ஆவியாராய்சியாகிவிட வாய்ப்புகள் அதிகம் என்பதால் அதிக நேரம் எடுத்து மெதுவாக இறங்கினேன்.  முட்டிகள் இரண்டும், அவை சொன்னவற்றை கேட்காததினால் கோபித்துக்கொண்டது அப்பட்டமாக தெரிந்தது.

     நடுவெளியில் கையசைத்துக்கொண்டு நின்றிருந்த இக்னேஷியோவை அடைந்தேன். ஏற்கனவே எச்சரித்ததுபோல், இந்த சிறு வியாபாரிகள் தொல்லை தாங்கமுடியவில்லை. ஒருவர் அருகில் வந்து மிக வித்தியாசமாக செய்யப்பட்ட இரு நீளமான மண்பொம்மைகளைக் காண்பித்தார். வாங்கலாமா? என்றுயோசித்த போது, அதனை வாயில் வைத்து ஊதினார். அட இது பொம்மைப்புல்லாங்குழல். சிறுசிறு துளைகள் இருந்ததை அப்போதுதான் பார்த்தேன். பல வண்ணங்கள் அடித்து மிகவும் அழகாக இருந்தது. பேரம்பேசி வாங்கியேவிட்டேன் .இரண்டையும் 300 பீசோ சொல்லி 150பீசோவுக்கு வாங்கினேன் - எப்படி இந்த தமிழனின் திறமை.   அந்த ஆள்  ஒரு ஜந்துவைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்துவிட்டு நகர்ந்தான்.விலை தகையவில்லை  என்றால் ஏன்  விற்க வேண்டும்?

இக்னேஷியா ஒரு சேதமடைந்த சுவர் ஓவியத்தைக் காண்பித்தார். மிகவும் உதிர்ந்து போயிருந்த அந்த ஓவியத்தில் வரைந்தவனின் எண்ணமும், குழைத்திருந்த வண்ணமும் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தது.

     நடுவெளியில் இருந்த ஒரு சிறு வியாபாரியிடம் இக்கி அழைத்துச் சென்றார். மற்றொரு விற்பனை முகாந்தரமோ என்றெண்ணி தயங்குகையில், புராதன வண்ணங்களை எப்படி படைத்தனர் என்பதை அவர் விளக்கினார்.

சில பூச்சிகளை வைத்திருந்தார், அதிலிருந்து ஒன்றை பிடித்து நசுக்கிப் பின்னர் இன்னொரு தாவரத்தை நசுக்கி இணைக்க ஒரு அழகான கருநீல  ஊதா நிறம் பிறந்தது. இன்னும் சில நிறங்களை உருவாக்கிக் காண்பித்தார். அவை நிரந்தரமாக இருக்குமாம். ஒரு உறையின் மூலையில் ஒரு சூரியனை வரைந்து அதனுள்ளே சில போஸ்ட் கார்டுகளை வைத்து 10 பீசோ என்றார் .அந்த வண்ணங்களின் சூட்சுமத்திற்காக அதனை வாங்கினேன்.

     சில அடிகள் நகர்ந்ததும் மிகவும் பெரிய சந்திரக்கடவுளின் பிரமிடு வந்தது. சூரியக் கடவுளின் பிரமிடைவிட உயரத்தில் பெரியது. ஐயையோ என்றது முட்டி. இந்தப் பைத்தியக்காரன் மறுபடி ஏறிவிடுவானோ என நினைத்து நடுங்கியது. இந்த முறை மனதின் ஆசையைத்தவிர்த்தேன். வயிறு வேறு கடமுடா என்றது. ஓ ஒரு மணியாகிவிட்டது, நடுவில் ஒன்றும் சாப்பிடவில்லை. திடீரென தாகமும் பசியும் சேர்ந்து வாட்டியது.

பல வியாபாரங்கள் அங்கு நடந்தும் சாப்பிவோ குடிக்கவோ ஒன்றுமே இல்லை. ஓரிரு புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு, இக்கியைத் தேடிப்பிடித்து சாப்பாடு எப்போது? என்றேன். இங்கிருந்து நேராக அங்கேதான் என்று வயிற்றில் நம்பிக்கைப்பாலை ஊற்றினார்.  

No comments:

Post a Comment