International என்று எழுதப்பட்டிருந்த உணவகத்திற்குப்
போய்ச் சேரும்போது மணி 2:30. அது வரை எப்படித்தாக்குப்பிடித்தேன் என்று தெரியவில்லை.
வாசலில் ஆஸ்டெக் ராஜகுமாரனும், ராஜகுமாரியும்
நின்று வரவேற்றார்கள். இருவரும் அத்தனை அழகு. உடைகள்தான் சற்று விரசமாக இருந்தது. உள்ளே
சென்றபோது, பலவித உணவுகள், சூப், சாலடுகள், பழவகைகள் என ஏராளமாக இருந்தது. Buffet
-150 பீசோ என்றார்கள். முதலில் சிறிது மக்காச்சோள ரசத்தை (Corn soup) அருந்தினேன்.
வயிற்றிரைச்சல் குறைந்தது. ராஜகுமாரி, ராஜகுமாரனுக்கு கொடுத்த முத்தத்தைப்பார்த்த வயிற்றெரிச்சல்
மட்டும் அப்படியே இருந்தது. இருவரும் காதலர்கள் போலும்.
பலவிதமான இறைச்சி வகைகளைத் தவிர்த்து (எதுக்கு ரிஸ்க்?)
அரிசிச்சாதம் (அதான பார்த்தேன்) எடுத்து, கொஞ்சம் மொச்சைக் குழம்பை (கிட்னி பீன்ஸ்)
வைத்து சாப்பிட்டேன். ருசியாகவே இருந்தது. நல்ல பசியில் , ஒரு பிடி பிடித்து விட்டேன் .வயிறும் மனதும் நிறைய,
மீண்டும் சென்று, சாலடு வகைகள் மற்றும் பழ வகைகளை எடுத்துக்கொண்டு, இல்லை இல்லை, குவித்துக்
கொண்டு வந்தேன். பாதி சாப்பிட்டவுடன் நெஞ்சும் நிறைந்தது. மீதியை குற்ற உணர்ச்சியுடன்
பார்த்தேன். வேஸ்ட் செய்ய விருப்பமில்லை, கட்டிச் செல்லவும் அனுமதியில்லை, வருத்தத்துடன்,
யாரும் பார்க்காத சமயத்தில் சட்டென்று கொட்டினேன். எதிர்பாராது அதனைப் பார்த்துவிட்ட, என் சக பயணியிடம் எனது டிரேட் மார்க் அசட்டுச்சிரிப்புடன்
மழுப்பிவிட்டு நகர்ந்தேன் .
திடீரென்று காதைப்பிளக்கும் டிரம் இசையுடன்,
இளவரசியும் இளவரசனும் குத்தாட்டம் போட்டனர். மிகவும் இயற்கையான உற்சாகமான ஆட்டம். போட்டோ எடுக்க நினைத்து தோற்றேன். அசைவுகள் மிக துரிதமாக
இருந்தன.
மீண்டு
வந்தபின் அங்கிருந்த கேக் மற்றும் டெசர்ட் வகைகளை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு வெளியே
வந்தேன். எதுக்கும் ஒரு அளவு வேணும்ல பாஸ், என்னோட ஸ்டிரக்செர் போயிரும்ல.
அருமையாக நடனம் ஆடிய அவர்களை பாராட்டிவிட்டு,
போட்டோ எடுத்துக்கொண்டேன். ஒரு 20 பீசோ கொடுத்தேன்.”கிராசியஸ்” என்று ராஜகுமாரி திருவாய்
மலர்ந்தார். எங்களுடைய அடுத்த இடமான குவாடலுப் சன்னதிக்கு பஸ் கிளம்பியது .
குவாடலுப் சன்னதி (Guadalupe Shrine- The
Basilica of our Lady Guadalupe ) என்பது ரோமன் கத்தோலிக்கர்களின் ஒரு புனித இடம்.
இது மெக்சிகோ நாட்டின் தேசிய சன்னதி (National Shrine) ஆகும். மெக்சிகோ நாட்டின் 85
சதவிகிதம் கத்தோலிக்கர்கள் ஆவார்கள் .இதனை
(La villa) லா வில்லா என்றும் அழைக்கின்றனர்.
எச்சரிக்கை:
வரலாறு படிக்கும்போது எரிச்சல் அடைபவர்கள் வருகின்ற பத்தியை கடந்து செல்லவும்.
புனித யுவான் டியாகோ என்பவர் ஆஸ்டெக் மதத்திலிருந்து, ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு கி.பி 1531ல் மாறினார். இந்த
இடத்தில் மாதா அவருக்கு காட்சி கொடுத்து, தனக்கு ஒரு கோயிலை அங்கு கட்டப் பணித்ததாகவும்,
அங்கிருந்த பிஷப் நம்ப மறுத்து அடையாளம் கேட்டபோது, யுவான் கொடுத்த மலர்கள் பிஷப்பின்
கவுனில் விழுத்து அடையாளம் ஏற்படுத்தியதாம். அந்தத்துணி இன்னமும் இருக்கிறது. இது நடந்தது
டிசம்பர் 12,1531. எனவே அதே தேதியில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடுகிறார்கள்.
பழைய பேராலயம் கட்ட
ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு : கி.பி. 1531.
கட்டி முடிக்கப்பட்ட
ஆண்டு :கி.பி 1709.
முக்கிய கட்டிடப்பொறியாளர்
(Architect) :Pedro de Arrieta
ஆலயத்திற்கு பேராலய
அந்தஸ்து கொடுத்த வருடம் : 1904.
கொடுத்தவர்
- போப் பயஸ்.
புதிய பேராலயம் கட்டிய
வருடம் : 1974
- 76.
ஆர்க்கிடெக்ட்
: Pedro Ramirez Vazquez
(ஆஸ்டெக்
ஸ்டேடியம் மற்றும் ஆந்த்ரபாலஜி மியூசியம் கட்டியவர்)
இருக்கை வசதி
- ஒரே நேரத்தில் 10,000 நபர்கள்.
பழைய
பேராலயம், நான் இதுவரை பார்த்திராத கட்டிடக்கலையாக இருந்தது. உள்ளே போனால், கலை நுணுக்கங்களுடனும்,
வேலைப்பாடுகளோடும் மனதை அள்ளியது. மேலும் கற்பனை செய்ய முடியாத அளவு, பெரிய ஓவியங்கள்
இருந்தன. ஒவ்வொன்றும் கேன்வாஸ் துணியில் வரையப்பட்ட எண்ணெய் ஓவியங்கள். (Oil
Paintings). சிறிது நேரத்தில் என் தலை சுற்றுவது போலவும், கீழேவிழுந்துவிடுவதைப் போலவும்
உணர்ந்தேன். ஐயையோ இந்த சர்க்கரை தன் வேலையைக் காட்டுகிறது, மதியம் கொஞ்சம் ஓவரா
சாப்பிட்டு விட்டேனோ ? என்று நினைத்த போது இக்கி வந்து என்னைப்பிடித்தார். பின்னர்,
அவர் விளக்கியபோதுதான், இது சர்க்கரை அல்ல என்று புரிந்தது.
முழு
மெக்சிகோ நகரமும் அக்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஏரியை ஆக்ரமித்துக் கட்டப்பட்டது.
எனவே அதன் அடிப்பூமி மிகவும் மிருதுவான மண்ணைக்கொண்டது.
எனவே
பல இடங்களில் பழைய கட்டடங்கள் பூமியின் நெகிழ்ச்சியில் உள்ளே அமிழ் கின்றன. இந்த ஆலயமும்
அவ்வாறே ஒரு இடத்தில் உள்ளே இறங்கிப்போய் ஏற்ற இறக்கமாய் இருந்தது. ஓவியங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டே
நகர்ந்ததால் ,இறக்கத்தில் தடுமாறி மயக்கம் என்று நினைத்துவிட்டேன் (அப்பாடா நல்லவேளை ஏசுவே )
அந்த
ஆலயத்தை அப்படியே தூக்கி நிமிர்த்திவிட முயன்று, அது லேசாக விரிசல்விடத்துவங்கியதால்,
அப்படியே விட்டுவிட்டு, புதிய பேராலயம் அமைக்கப்பட்டது. பல வருடங்கள் பூட்டப்பட்ட பழைய
ஆலயம் சமீபத்தில் தான் திறக்கப்பட்டதாம் . (ஆகா எனக்காகத்தான்)
புதிய
பேராலயம் தூண்கள் இல்லாமல் மிகவும் திறமையான மாடர்ன் ஸ்டைலில் கட்டப்பட்டிருந்தது.
உள்ளே ஏராளமான மக்கள் வீற்றிருக்க, திருப்பலிகள் ஸ்பானிஷில் தொடர்ந்து நடைபெற்றன. இப்புதிய
கட்டடம் அமிழாதபடி, புதுடெக்னாலஜியில் கட்டப்பட்டிருந்தது. அதன் பைப் ஆர்கன் மிகப்பெரியது
. சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு வெளியே வந்தேன்.
வெளியில்
இருந்த மிகப்பரந்த திறந்த வெளியில் போப் ஜான் பாலின் பிரமாண்ட சிலை இருந்தது. அங்கிருந்த
ஆலயக்கடையில் ஓரிரண்டு நினைவுப்பொருட்கள் வாங்கி விட்டு வெளியே வந்தேன். நமது குரூப்
அங்கே ரெடியாக இருந்தது. கூட வந்த சக பயணிகள் இப்போது கொஞ்சம் அறிமுகமடைந்து புன்சிரித்தனர்,பேசத்தான்
முடியவில்லை.
இந்த தடவை முதலில் என்னைத்தான் இறக்கிவிட்டனர்.
அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, இக்கியின் கையில் ஒரு 50 பீசோவை (அதிகமா? குறைவா?)
திணித்துவிட்டு இறங்கினேன். மணி 7 தான் ஆகியது.
ரூமுக்கு
சென்று முகம் கழுவி வெளியே வந்தேன். கொஞ்சம் பழங்கள் வாங்கலாம் Tropical பகுதி என்பதால்
சல்லிசாக கிடைக்கும் என நினைத்து, பக்கத்தில் உள்ள மார்க்கெட்டின் முகவரியைப் பெற்றுவிட்டு
வந்தேன். (எச்சரிக்கை: தெரு விளக்குகள் அவ்வளவு அதிக ஒளி தருவதில்லை.).
ஒரு
வழியாக கண்டுபிடித்து உள்ளே நுழைந்தேன். சிப்ஸ் எங்கே இருக்கும் என்று கேட்டேன். மறுபடியும்
அதே பிராப்ளம் , நான் என்ன சொல்கிறேன் என்று யாருக்கும் விளங்கவில்லை. சடுதியாக காய்கறிப்பகுதியில்
சென்று ஒரு உருளைக்கிழங்கு எடுத்து சைகையில் வெட்டி , வாணலியில் இட்டு வறுத்துக்காட்டி எங்கே
சிப்ஸ்?
என்று கேட்டேன் . ஊஹீம் ஒன்ணும்
பேரல. ஆனால் என்னைப்பார்த்து சிறு கலவரத்துடன் நகர்ந்தனர் . ஒரு வேலை பைத்தியம்னு நெனைச்சிட்டாய்ங்க
போல. முழு கடையையும் 40 நிமிடங்கள் சுற்றி சிப்சை
கண்டுபிடித்தேன் . பாக்கெட்டில் ஆங்கில வார்த்தைகள் ஏதுமில்லை . பின்னர் மறுபடியும்
காய்கறி பகுதிக்குச் சென்றேன்.
ஆஹா,
கொய்யாப்பழம்,சல்லிசான விலையில். நியூயார்க்கில் கொய்யாப்பழம் ஒரு பவுண்டு -(சுமார்
1/2 கிலோ) 4 அல்லது 5 டாலர் இருக்கும். பெரிசு பெரிசா இருக்கும். சாப்பிட்டால் சள்ளென்று
ஒரு சுவையும் இருக்காது . ஊர் திரும்பும் போது
வாங்கிக்கொண்டு போக வேண்டும் என்று நினைத்தபடி,
ஒரு மூன்று கிலோ கொய்யா வாங்கினேன் . உள்ளே சிவப்பான, சிந்தாமணி சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருந்தது. அதில் கொஞ்சம்
வாங்கிக்கொண்டு, சிறிய ரஸ்தாளியும்,அத்திப்பழமும் வாங்கினேன். திரும்பினால் ,நன்கு
விளைந்த கரும்பு வெட்டி வைத்திருந்தார்கள் . ஒரு நான்கை வாங்கிக்கொண்டு ஹோட்டல் திரும்ப
தெருவில் நடந்தால், ஹோட்டலைக் காணவில்லை
.
No comments:
Post a Comment