Friday, April 5, 2013

மெக்சிகோ பயணம் -5 (நவம்பர் 30,2012),"அடியோஸ்"னா என்னாங்க அர்த்தம் ?" நேனே கிருஷ்ணதேவராயன்"  ஆகிப்போய், மெக்சிகோ நகரத்து பின்பனி கவரிவீச, பட்டுத்துகில் மஞ்சத்தில் ஆரோகணித்திருந்த எனக்கு மெல்லிய மணியோசையோடு பள்ளி எழுச்சி இசைக்கப்பட்டது. "நறுமண மூட்டப்பெற்ற பன்னீர் இளம் சூட்டில் காத்திருக்கிறது, பேரரசே" என்று பரிசாரகன் தலைகுனிந்து, வாய் புதைத்து சொல்ல, அலட்சியமாக நான் எழுந்தேன்.
     கண்களை விழித்துப்பார்த்த நான், நானே என்று உணர்ந்து, பள்ளி எழுச்சியின் மெல்லிய மணியோசை, என்னுடைய போன் சத்தம் என்று தெரிந்து, படக்கென்று எடுத்து “ஹலோ” என்றேன். “வேக் அப் கால், டைம் நவ் இஸ் சிக்ஸ் ஏஎம்”  என்றது குரல், ஸ்பானிஸ் அக்சென்ட்டில். பரவாயில்லையே என்று சிரித்துக் கொண்டே     எழுந்து ரெடியாகி (ஹோட்டல் பிரிம் சோப், ஹோட்டல் பிரிம் ஷாம்பூ) , மனைவிக்கு போன் செய்து அட்டென்டஸ் கொடுத்துவிட்டு உற்சாகமாய்
 கீழிறங்கினேன். 8.45 to  9 மணிக்குத்தான் மெக்சிடூர் ஆட்கள் வருவார்கள். இப்போது மணி ஏழரைதான் என்று வெளியே  நடக்கலாம் என்று ஹோட்டலை விட்டு வெளியே வந்தால், குளிர் முகத்தில் அறைந்தது. திரும்பவும் அறைக்குச்சென்று என்னுடைய லைட் ஜாக்கட்டையும் காதுக்குப்போடும் ear  warmer ஐயும் எடுத்துக்கொண்டு நடந்தேன். குறைந்தது 45 டிகிரி  F  இருக்கும். ஹோட்டலுக்கு  அடுத்த கட்டிடம் பெரிய Funeral Home  (Garzia  Lopez ). பழைய அரண்மனை போன்ற கட்டடம் பிரமாண்டமாக இருந்தது. ஒரு பெரிய்ய்ய கார், நின்றிருந்தது. அமரர் ஊர்தியாக இருக்கும். ஆஹா ,செத்தாலும் இப்படி ஒரு காரில் ஊர்வலம் வந்தால் நன்றாக  இருக்கும் என்று நினைத்தேன் .

 

   
     காலையில் funeral home  பார்த்தது என்னவோ போல் இருந்தாலும் இந்த குறுகிய வாழ்க்கையையும், இன்னும் செய்யவேண்டிய, பார்க்க வேண்டிய காரியங்களும் நிறைவேறாத கனவுகளும் ஏராளமாக இருந்தது ஞாபகம் வந்து(தத்துவம்?)  தொலைத்தது. ஒரு சிறு எச்சரிக்கையும் அந்த கட்டடத்தில் புதைந்து இருந்தது.
     ஒரு பெருமூச்சுடன் எதிர்திசையில் நடந்தேன்.  தெரு மூலையில் ஆவிபறக்க ஏதோ விற்பனையாகிக்
கொண்டு ( இட்லியாக இருக்குமோ? -  அடச்சீ கம்னுகிட) இருந்தது. கிட்டப்போய்ப் பார்த்தால், ஏதோ ஒரு ஸ்பானிஷ் வஸ்துவும், வேகவைத்த மக்காச்சோளமும் விற்றுக் கொண்டிருந்தனர் அந்த வஸ்து என்னவென்று விசாரித்துத் தோற்று நடையைக் கட்டினேன்.

     அடுத்த கிராசிங்கில் ஒரு browsing  center இருந்தது.  அத்தனை காலையில் திறந்து இருந்தது ஆச்சரியம். உள்ளே போய் அனுமதிபெற்று, கம்ப்யூட்டர் -ல் உட்கார்ந்தால் டெஸ்க்டாப் முழுவதும் ஸ்பானிஷ். அம்மொழிக்கு தனிப்பட்ட எழுத்துக்கள் இல்லை என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். ஆங்கில  எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள். எனவே எழுத்துக்கூட்டி வாசிக்கலாம். ஆனால் ஒன்றும் புரியாது.  சிலபல வார்த்தைகள் ஆங்கில உச்சரிப்பில் ஸ்பானிசில் வேறாக இருக்கும்.  மலேசிய மொழியும் அப்படித்தான் ஆங்கில எழுத்துக்கள்தான் அங்கேயும், ஆனால் அர்த்தம் புரியாது.

 Yahoo சென்று அடித்துப் பார்த்தால் எல்லாம் ஸ்பானிஷ். ஆங்கிலத்திற்கு மாற்றும்படி கேட்டேன். பண்ணிப்பார்த்தார் முடியவில்லை. விகடன்.com அடித்தேன் தமிழ்வந்தது. ஆஹா என்று தலைப்புச் செய்திகளைப் படித்துவிட்டு 8.15க்கு கிளம்பி ஹோட்டலுக்குச் சென்றேன். ஒரே சாலை என்பதால் சுலபமாகத்திரும்பி, ரெஸ்டாரண்ட்க்குச் சென்றேன்.

காலை உணவு இலவசம் .ஏற்கனவே டோக்கன் கொடுத்திருந்தார்கள். அதனைப்போய்க் கொடுத்து குட்மார்னிங்  என்றேன். “ஆடியஸ்” (Adios) என்றார் வெயிட்டர். இதற்கு அர்த்தம் Good bye அல்லவா குழப்பமாக இருந்தது. யாரிடமாவது கேட்க வேண்டும்.  Cup ஐ  வைத்து கொடகொடவென்று கறுப்பாக ஒன்றைக் கொட்டினார். ஆவியிருந்தது, குணம், மணம், நிறம் ஒன்றுமில்லை. சைகையில் என்னவென்று கேட்க, காஃ பி என்றார். “வேண்டாம், கிரீன் டீ இருக்கிறதா ?” என்றேன்.(புதுப்பழக்கம், நல்லது, ஜீரோ  கலோரி என்று சொன்னார்கள்). அவருக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரம் நின்றுவிட்டு சென்றுவிட்டார். மொழி தெரியாதது, இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைக்கவில்லை.
   
      ஒரு பத்து நிமிடம் சும்மா உட்கார்ந்திருந்தேன், ஒருவேளை வரவேமாட்டாரோ. சுறுசுறுப்பாக கடந்து சென்று, சில மேஜையில் நிரம்பியிருந்தவர்களிடம் மகிழ்ச்சியோடு அளவளாவிய அவர், என்னைக் கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை.   சற்றே எரிச்சலுடன், ஹலோ என்றேன். கிட்ட வந்தவுடன், “ஜூஸ் ஆர் ஃபுரூட்” என்று கேட்டார். ஃபுரூட் என்றேன் மகிழ்ச்சியோடு. அழகாக வெட்டப்பட்ட பப்பாளித் துண்டங்களும்,  டீபாட்டில், டீப்பையை போட்டும் கொண்டுவந்தார். “கிராசியஸ்” (Gratios) என்றேன். நன்றாகவே மகிழ்ச்சியுடன் சிரித்தார். ஆனால் டீ வெறும் கறுப்பு டீ, கிரீன் டீ அல்ல. வாழ்க்கையில் முதன்முறையாக, அதனை எடுத்து உறிஞ்ச நுனிநாக்கு சுட்டு மரத்துப்போயிற்று. (தேவையா?).

 
வெறும் பழம் மட்டும் பத்தாதே என்று நினைத்து கேட்கலாமா, வேண்டாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, நன்கு ரோஸ்ட் செய்யப்பட்ட, நான்கு பிரட் துண்டுகளையும், பட்டர் மற்றும் ஸ்ட்ராபெர்ரிஸ்  ஸ்பிரட் களையும் கொண்டு வந்து வைத்தார். இது போதும், ஒரு மூன்று மணி நேரம் தாங்கும். பட்டரை தவிர்த்து,  மிக மெலிதாக ஸ்ட்ராபெர்ரி ஸ்பிரட்டை தடவி உற்சாகமாக சாப்பிட்டேன்.( Sugar வேற டெஸ்ட் செய்யவில்லை). மொறு மொறுவென்று நன்றாகவே இருந்தது.
     உண்டு முடித்து, சாவியை வரவேற்பறையில் கொடுத்துவிட்டு, லௌஞ்சில் உட்கார்ந்தேன். ஒரு நிமிடத்தில், நல்ல உயரமான ஒருவர் வந்து Alfredo Alfredo  என்றார். (எப்படி இங்கிலாந்தில் Alfred  என்பது பிரபலமோ அதுபோல Alfredo என்பது மெக்சிகோவில்) சிரித்துக் கொண்டே, Its me என்று கைநீட்டினேன். என்னைப் பார்த்தவுடன் மெக்சிகோ அல்ல என்று புரிந்து, தன் கையிலிருந்த லிஸ்ட்டை சரிபார்த்து, Sorry  Alfred  என்று சொல்லி ஐயாம் இக்நேசியோ, How are you  doing today? என்று சொன்னார் (அப்பாடா நல்லவேளை Guide ஆங்கிலம் பேசுகிறார். Isango சொன்ன சொல்லை காப்பாற்றி விட்டார்கள்).
     உற்சாகமாக அவருடன் நடந்து ஏராளமாக இருந்த பஸ்ஸில் ஏறி, பள்ளத்தில் இருந்த டிரைவரிடம் புன்னகைத்து, மீண்டும் ஏறி உள்ளே இருந்த சொகுசு இருக்கையுள் புதைந்தேன். திரும்பிப் பார்த்தால் நான் ஒருவன் மட்டுமே.
அய்யோ , இவர்கள் டூர் ஆப்பரேட்டரா இல்லை வேற யாருமா? என்ற சந்தேகம் வந்தது .

No comments:

Post a Comment