Wednesday, April 10, 2013

மெக்சிகோ பயணம் -6 (நவம்பர் 30, 2012) கத்தாளைச்சோறும் , எரிமலைக்கல்லும்.


இக்னேஷியோ என் பின் ஏறி வந்து, இன்னும் பலரை பல ஹோட்டல்களில்  பிக்கப் செய்யவேண்டும், நீங்கள் தான் முதலில் என்றார். அதன்பின்தான் கொஞ்சம் நிம்மதியானது .

     மொத்தம் 22 பேரை வெவ்வேறு ஹோட்டல்களில் பொறுக்கிக் கொண்டு பஸ் சென்றது. ஒவ்வொரு ஹோட்டலும், பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்கள். (நல்லவேளை என்னை முதலில் பிக்கப் செய்தனர்). ஆனால் அனைத்து நபர்களும், தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர். சிலி, பெரு, கெளதமாலா, டொமினிக்கன் ரிபப்ளிக் என்று அனைவரும் ஸ்பானிஷ்  பேசுபவர்கள். ஆங்கிலம் தெரிந்தவர் நானும் இக்னேஷியோவும் மட்டுமே. ஒரே ஒற்றுமை , ரெண்டும் அரைகுறை.

     பஸ் நகரத்தைக்கடந்து வெளியே ஓடியது. போகிற வழியில்  அகழ்வாராய்ச்சியில் அகப்பட்ட, சிதைந்துபோன ஆஸ்டெக் இடத்தைக்கடந்து போனோம். பஸ் நிற்கவில்லை.
 
மொத்தம் 48 கிலோமீட்டர் (இங்கே US  போல் மைல்  இல்லை) தொலைவு என்று இக்கி ,அதான் இக்னேஷியோ சொன்னார். ஸ்பானிஷில் அரைமணி நேரம் ஏதோ விளக்கிச் சொல்லிவிட்டு, ஆங்கிலத்தில் ஒற்றைவரியில் நாம் முக்கால் மணிநேரத்தில் போய்ச்சேருவோம் என்றார். என்ன கொடுமைடா  இது ?

போகிற வழியில் குன்றுகள் நிறைய இருந்தன. அந்தக் குன்றுகள் முழுவதும் சிறுசிறு வீடுகள் காணப்பட்டன. எல்லாமே, அறைகுறையாக முழுமை பெறாமல் இருந்தன. வினவியபோது, கொஞ்சம் பொறு என்று சொல்லிவிட்டு மைக்கை எடுத்து ஸ்பானிஷில் சொல்ல ஆரம்பித்தார். (ஏய் இக்கி கேட்டது நான்).

     அதன்பின் என்னிடம் திரும்பி, 2000-ஆவது வருடத்தில் மெக்சிகோவின் பொருளாதாரம் மிகச்சிறப்பாக முன்னேறும்போது, சுற்றிவர இருந்த கிராமங்களிலிருந்து பலர் நகரத்திற்கு இடம்பெயர்ந்து, இந்தக் குன்றுகளை ஆக்ரமித்து, சிறு குடில்களை அமைத்தனர், நம்மூர் சேரிபோல். ஆனால் மின்சாரமோ குடிநீரோ இன்றி சிரமப்பட்டனர். மிகக் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கில் ஆட்கள் வந்து சேர்ந்ததால், அரசாங்கம் செய்வதறியாது விழித்தது. ஆரம்பத்தில் வந்தவர், அடிவாரங்களிலும், பின்னர் வந்தவர்கள் மேலே மேலேயும் குடியேறி உச்சி வரை குடியேறினர். சாலை வசதியோ மற்ற வசதிகளோ இல்லை.

     அரசாங்கம் பின்னர் முடிவு எடுத்து, இருக்கின்றவர்களுக்கு பட்டா வழங்கவும், மின்சார மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தவும் முன் வந்தது. வீடு கட்டிக் கொள்ள அனுமதி அளித்தது. கட்டி முடித்த சில வீடுகளுக்கு இலக்கம் வழங்கி, வரியும் போட்டது. உடனே சுதாரித்துக் கொண்ட மக்கள், பட்டாவையும் மற்ற வசதிகளையும் பெற்றுக் கொண்டு, வீடுகளை முழுமை பெறாமல் அறைகுறையாக கட்டிக் கொண்டனர். ஏனென்றால் முழுமை பெற்ற வீட்டுக்குத்தானே வரி கட்டவேண்டும். ரூம் போடாம , டென்ட்  போட்டு யோசித்தாய்ங்க போல இருக்கு .சுமார் 5 இலட்சம் பேர் இப்படி வாழ்கிறார்கள்.

     பஸ் தொடர்ந்து சென்று, சமன் செய்யப்பட்ட சிறு சிறு சதுரக்கற்களால் அமைந்த ஒரு உள் சாலையைக் கடந்து, ஒரு கலைக்கூடத்தில் நின்றது. உள்ளிருந்துவந்த ஒரு கைடு என்னை அழைத்துச் சென்று ஒவ்வொரு பகுதியாக விளக்கினார்.

பக்கத்தில் உள்ள எரிமலைப் பகுதிகளில்  பலவகையான நிறமுள்ள  கற்கள் கிடைக்கின்றன (Volcano Stones). பெரும்பாலும் இரு நிறமுள்ளவை. வெளிச்சத்தில் சிறிது திருப்பிப் பார்த்தால், வேறு நிறங்கள் தெரிகின்றன. குறிப்பாக கறுப்பு நிறக்கல்லில் பொன்னிறம் தெரிவது அழகு. அந்தக்கற்களை பாலிஷ்  செய்து, விதவிதமான உருவங்களை அங்கே செய்கின்றனர்.

மட்டுமல்லாது, பலவித கைவினைப் பொருட்கள், ஆபரணங்கள், சிறு போர்வைகள், ஆஸ்டெக் நாட்காட்டியின் பலவித வர்ணம் நிறைந்த பிரதிகள் ஆகியவை அங்கே செய்யப்பட்டன. விலை, யானை விலை குதிரை விலையாக இருந்தது.


     லாவா கறுப்புக் கல்லில் செதுக்கப்பட்ட, சூரிய சந்திர கடவுளர்களின் சிறிய உருவச்சிலைகளை வாங்கினேன் ஒரு ஞாபகத்திற்கு,விலை 350 பீசோ.


     அந்தக் கூடத்தின் வெளியே மையப்பகுதியில் கத்தாழைகள் இருந்தன அது  இரண்டு  ஆள்  மட்ட உயரம் இருந்தது.
 
 
இவ்வளவு உயரமான  ராட்சத  கத்தாழைகளை   நான் எங்கும்  பார்த்ததில்லை. கைடு  வந்து கத்தாழைகளை அவர்கள் எப்படி பாரம்பரியமாக உபயோகப்படுத்திவந்தனர் என்பதனை விளக்கினார்.
 
 
கத்தாழையின் குருத்து நுனி கூராக இருந்ததால், அதனோடு ஒரு இழைக்கூற்றை  உரித்து, ஊசி நூல் போல் பயன்படுத்தினர்.  பாளைகளின் உள்ளே இருந்த சோறு உணவாகியது. பாளையின் உள்  மெல்லிய இழை காகிதம் போல் பயன்படுத்தப்பட்டது. ஆதி மெக்சிகோ குடியினர் இப்படி கத்தாழையை பல காரியங்களுக்கு பயன்படுத்தினர்.

     அந்த இடத்தில் பஸ் நிறுத்தப்பட்டது, ஒரு வியாபார நோக்கில் இருந்தாலும், பல புதிய விஷயங்களை அறிய வாய்ப்பாக இருந்தது.

     அடுத்த இலக்கு டியோட்டி ஹூவாகன் பிரமிடுகள். (Teotihuacan). அது ஒரு பெரிய மொட்டைக்காடாக இருந்தது. மெக்சிகோ நாட்டு புதைபொருள் ஆராய்ச்சியினரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைப்பற்றிய சிறு குறிப்பு.

       இடம்: மெக்சிகோ நகரின் வடகிழக்குப் பகுதியில் 48 கி.மீ தூரத்தில்.

       காலம்: கொலம்பியனுக்கு முந்தின காலம் - கி.மு 100 -    கி.பி 250.
     அழிந்தது: கி.பி 7 - 8 ஆம் நூற்றாண்டு.

மக்கள் தொகை: 1,25,000 (உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று)

பின்வந்த நாகரிகங்கள்: வெரகிரஸ், மாயன், ஆஸ்டெக்

மக்கள்: நகுவா, ஆடோமி, டோடநாக்

மொத்தப்பகுதி: 83 சதுர கிலோமீட்டர்.

மெக்சிகோவில் பிரமிடுகள் என்றவுடன் முதலில் ஆச்சரியமாக இருந்தது. அதுவரைக்கும் பிரமிடுகள் எகிப்தில் மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தேன்.

     இடத்தை நெருங்க நெருங்க சிறு வியாபாரிகளின் தொல்லை அதிகமாகியது. அவர்களைத்தவிர்த்து பக்கத்தில் வந்து பார்த்தால் ,பிரமாண்டமோ பிரமாண்டம். கிட்டத்தட்ட 2200 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படித்தான் கட்டினார்களோ. அதுவும் இது அஸ்டெக் மற்றும் மாயன் நாகரிகங்களுக்கு முற்பட்டது என அறியும் போது மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தியது .

     இரு பகுதிகளிலும் மிகப்பெரிய பிரமிடுகள் இருந்தன. ஒன்று சூரியக்கடவுளுக்கும் இன்னொன்று சந்திரக்கடவுளுக்கும் இருந்த பலிபீடங்கள். எகிப்து பிரமிடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. போகிற வழியில் உடைந்த ஒட்டுச்சில்லுகள் எங்கும் பரவிக்கிடந்தன. இக்கி  அவற்றில் சிலவற்றைக் கையிலெடுத்து, அவை உடைந்து போன மண்பாண்டங்கள் என்று சொன்னார்.அவற்றின் வயதினை கண்டுபிடிக்க முடியும் என்றார். எப்படி என்று பார்க்க , கிட்ட  வந்து நெருங்கி நின்றேன் .

No comments:

Post a Comment