Tuesday, April 30, 2013

மெக்சிகோ பயணம்-9 : பூர்வ குடிகளும் , ஸ்பானிய ஆதிக்கமும்

     நடமாட்டமில்லாத, இருள் தெருக்களில் அங்குமிங்கும் பயத்துடன் அலைந்ததுதான் மிச்சம். சம்மந்தமில்லாமல், மெக்ஸிகோ  மாஃபியாக்களைப்பற்றி படித்தது ஞாபகம் வந்து தொலைத்து நடுக்கத்தைக் கூட்டியது .எதிர்ப்பட்ட ஓரிருவரிடம் கேட்டாலும் ஒன்றும் பிரயோஜனமில்லை. கையில் போனும் கிடையாது. சுமார் ஒரு மணி நேரம் சுற்றியலைந்து அந்தப்பக்கமாக வந்த போலிஸ் வண்டியை நிறுத்தி, அவர்களுக்கு விளக்கி, வந்து சேருவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது.

எச்சரிக்கை: வெளியே செல்லும்போது ஹோட்டலின் முகவரி,மேப்  மற்றும் போன் நம்பர்களை எப்போதும் எடுத்துச் செல்லவும்.

ரூமுக்கு  திரும்பி, ரெண்டு துண்டு கரும்பையும், பழங்கள் சிலவற்றையும் சாப்பிட்டு, வயிறு நிரம்பி, இரவு உணவைத் தவிர்த்து, படுக்கையில் சாய்ந்தபோது, சுற்றிய சுற்றுக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றியது.


டிசம்பர் 1, 2012 சனிக்கிழமை


நேற்று சீக்கிரம் தூங்கிவிட்டதால், அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன். (அதாங்க 6 மணி)

     சுறுசுறுப்போடு எழுந்து, இதமான சூட்டில் குளித்து ரெடியாகி, லைட் ஜாக்கெட்டை மறக்காமல் போட்டுக் கொண்டு, இன்டர்நெட் மையத்திற்குச் சென்றேன். காவிரிப் பிரச்சனையும், கரண்ட் பிரச்சனையும் இன்னும் தீரவில்லை. மற்றொரு தீராத பிரச்சனை, கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறிமாறி வெளியிடும் அறிக்கைகள், ஆண்டவா இதுக்கு ஒரு முடிவேயில்லையா?.

    தெருக்களில் ஒரு இனம் தெரியாத பரபரப்பு இருந்தது. Federal Policio  என்று பொறித்த வாகனங்கள் அங்குமிங்கும் போய்க்கொண்டிருந்தன. என்னவென்று விசாரிக்க வேண்டும் என்று நினைத்த வண்ணம் ஹோட்டலுக்கு திரும்பினேன். அங்கே ரிஷப்சனில் ஒருவர் என் பெயரை விளித்து, எனக்கு ஒரு பெண் போன் செய்ததாக சொன்னார். யாராக இருக்கும், ஒருவேளை “எரிக்கா” ஆக இருக்குமோ என்று நினைத்த வண்ணம் உணவுக்கூடத்திற்குச் சென்றேன். யார் போன் செய்தார்கள் எனக்கேட்டு குறித்து வைத்துக்கொள்ளும் ஒரு சிறிய அறிவு அல்லது முயற்சி கூட இல்லையே என நொந்து கொண்டு, வழக்கமான காலை உணவை முடித்து வெளியே வந்து பெஞ்சில் அமர்ந்தேன்.

இன்றும் இக்கி வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிக் கொண்டிருந்தபோது, ஒரு ஸ்மார்ட் ஆன இளைஞன், நேரடியாக என்னிடம் வந்து ஹலோ என்று கைகுலுக்கி எப்பூடி ? என்று ஆச்சரியப்படுத்தினான். “எப்படிரா நேரா என்ட வந்தேன்னு” கேட்டபோது ,அதான் நெத்தியிலே எழுதி இருக்கேன்னு சொல்லி சிரித்தான் .நல்ல ஆங்கிலத்தில்  தன்னை டானியல் என்று அறிமுகப்படுத்தியது மேலும் ஆச்சரியப்படுத்தியது. இக்கியை விட இவனது ஆங்கிலம் நன்றாகவே இருந்தது. விசாரித்ததில் ஆங்கில இலக்கியம் படித்து, சில ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து இப்போது டூரிஸ்ட் கைடாக ஆனதை விளக்கினான். அட நானுந்தேன் ஆங்கில இலக்கியம் படிச்சேன், அதையேன் கேட்குறீங்க,அந்தக் கொடுமையை இன்னொரு நாளைக்கு  சொல்றேன்.

வெளியே வந்து பெரிய பஸ்ஸை எதிர்பார்த்து தேடியபோது, ஒரு சிறிய, மிகச்சிறிய காருக்கு அழைத்துச் சென்றான். என்னாச்சு என்று வினவியபோது, இன்று உன்னையும் சேர்த்து மொத்தம் 3 பேர்தான் என்றான். அந்த  இருவரையும் பிக்கப் செய்தவுடன் நகரை நோக்கி விரைந்தது அந்த குட்டிக்கார் .அப்பாடி அவர்களும் நல்ல ஆங்கிலம் பேசிய ஸ்பானிஷ் தம்பதியர். நான் முன்னே, டேனியல் அருகில் அமர்ந்து கொள்ள , தம்பதியினர் பின்னால் அமர்ந்து கொண்டனர். திருமணம் ஆகி கொஞ்ச காலம்  ஆகியிருக்கனும்னு நினைக்கிறேன் . கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்திருந்தனர் .

அன்று இரண்டு டூர் புக் செய்திருந்தேன். காலையில் மெக்சிகோ சிட்டி டூர், மதியம் ஷோஷிமில்கோ ரிவர் குருஸ்.

மெக்சிகோ நகரில் நுழைபவதற்கு முன் அதன் வரலாற்றுச் சிறு குறிப்பு.

மீண்டும் எச்சரிக்கை, என்  மனைவி போல்  வரலாற்று அலர்ஜி உள்ளவர்கள், இந்தப் பத்தியினைத் தவிர்த்து முன்னேறிச் செல்லவும். இப்ப தெரியுதா, ஏன் நான் தனியா  போனேன்னு , இத்தனைக்கும் அவள் ஹிஸ்ஸ்டோரி மேஜர். ஒரு வேளை  அதனால்தானோ ?. அந்த ஹெர்ஸ்டோரி என்னன்னு தெரியலையே?.(ஆழம் இது ஆழம் இல்லை , அது சேரும் கடலும் ஆழம் இல்லை, ஆழம்  அ து அ ய்யா , இந்த பொம்பளை மனசுதான்யா )

     டோல்டெக் சாம்ராஜ்யம் (Toltec Empire) அழிந்தபோது, “நகுவால்” (Nahuatl) மொழி பேசிய “மெக்சிகா” இன மக்கள் (நன்றாக படிக்கவும் அது “மெக்சிகா” தான்) கி.பி.1325 ஆம்  ஆண்டு, மேற்குப்பகுதியில் இருந்த “டெக்ஸ்காகோ” ஏரியில் இருந்த ஒரு சிறிய தீவில் குடியேறினார்கள். அங்கு ஏற்கனவே வாழ்ந்த மூத்த பழங்குடி மக்களை எதிர்த்தும், தோற்கடித்தும் அழித்தும் குடியேறிய இந்த மக்களே "ஆஸ்டெக்" பழங்குடியினர்  (Aztec).
Aztec Soldier
 தங்களுடைய முதன்மைக் கடவுளான “ஹியூட்ஜிலோபோக்டிலி” (Huitzilopochtli -கவனம் , வாசிக்கும்போது, தாடை ஒடைஞ்சிரப்போறது). தம்மை இங்கு அழைத்து வந்ததாக அவர்கள் நம்பினர்.
 அந்தக்கடவுள்தான் ( God of War and Sacrifice) அவர்களுக்கு, ஒரு அடையாளமாக, ராட்சத கத்தாழையில் கால் பதித்த, பாம்பினைக்கவ்விக் கொண்டிருந்த ஒரு கழுகைக் காண்பித்தாராம்.இதுவே இன்றைய மெக்சிகோ அடையாளம்.


     இந்தச் சிவிப்பிந்திய மக்கள் கலாச்சாரம் மிகுந்தவர். கி.பி.1325லிருந்து 1521 வரை மிகப் பலுகிப்பெருகி, மெக்சிகோ பள்ளத்தாக்கு முழுவதுமாக பரவினர். ஆஸ்டெக் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்து, மீசோஅமெரிக்கா முழுவதிலும் பரவி மெக்சிகோ வளைகுடா மற்றும் பசிபிக் பெருங்கடலைத் தொட்டது.

     அப்படி சீறும் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கையில் கி.பி.1519ல் ஸ்பெயின் ராணுவம், மூக்கு வேர்த்து மோப்பம் பிடித்து, ஹெர்னன்  கோர்டஸ் (Hernan  cortes) என்பவரின் தலைமையில் வந்திறங்கியது.
Hernan's Spanish Army attacks Aztec
 அங்கே ஏற்கனவே இருந்த பொறாமை, பூசல்கள், தலைமைக்கான போட்டி(அட அங்கேயுமா ?)ஆகியவற்றை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஹெர்னன், கொஞ்சம் கொஞ்சமாய்ப் ஆக்ரமித்து “டெனோசிட்லான்” முழுவதுமாய் பிடித்துவிட்டான். இன்னொரு முட்டாள் தனமும் நிகழ்ந்தது. அப்போது ஆஸ்டெக் சாம்ராஜ்யத்தை ஆண்ட மோக்டெஜீமா (Moctezuma) என்ற மன்னனும், மக்களும்,
Moctezuma
அவர்களுடைய கடவுளான குவெட்ஜல்கோட்டில் (Quetzalcoatl) வரப்போவதாய் நம்பிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஹெர்னன் வரவும், அந்த முட்டாள் மன்னன், அவன்தான் அந்தக்கடவுள் என்று நினைத்துவிட்டான் . இப்படியாக கிட்டத்தட்ட 250 வருடங்கள் கோலோச்சிய ஆஸ்டெக் சாம்ராஜ்யம் முற்றிலுமாக அழிந்தது.

Aztec surrendering to Hernan

     ஸ்பானிஸ்காரர்கள் அழிந்துபோன “டெனோக்டிட்லன்” நகரத்தை மீண்டும் கட்டி எழுப்பி, மெக்சிகோ சிட்டி என்று பெயரிட்டனர். நாம் மெக்ஸிகோ என்று அழைக்க , அங்கேயுள்ள லோக்கல் ஆட்கள் மெஹிகோ  என்று சொல்லுகின்றனர்.கத்தோலிக்க ஆலயங்கள் எங்கும் எழுப்பப்பட்டு, ரோமன் கத்தோலிக்க மதம், பிரதான மதமாகவும், ஸ்பானிஸ் பிரதான மொழியாகவும் ஆகிப்போனது.

     கி.பி.1629ல் ஏற்பட்ட மாபெரும் வெள்ளப்பெருக்குக்குப்பின்னர், நகரைச் சுற்றிலும் இருந்த ஏரி, கொஞ்சம் கொஞ்சமாக வடிகட்டப்பட்டு, முழுவதுமாக ஸ்பெயின் நாட்டுக் காலனியாதிக்கம் நிலைநாட்டப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் மன்னரின் பிரதிநிதியாக, வைஸ்ராய் நியமிக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது. மெக்சிகோ சிட்டியில், பல பிரபுக்களின்  குடும்பங்கள் சமூக மதிப்போடு வாழ்ந்தன. அவர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் இல்லாவிட்டாலும், கவுன்ட் (Count) டியூக்(Duke)  என்ற பட்டங்கள் தரப்பட்டன. அவர்கள் தங்களுக்கென்று பல அரண்மனைகளைக் கட்டிக்கொண்டதால், இந்த நகரம் "அரண்மனைகளின் நகரம்" என்றும்  அழைக்கப்படுகிறது (City of Palaces). ஸ்பெயின், மற்ற ஸ்பெயின் காலனிகள், பிலிப்பைன்ஸ் மற்றும் ஆசிய நாடுகளோடு, வர்த்தகத்தில் ஈடுபட்ட மெக்சிகோ நகரத்தில் செல்வம் கொட்டியது. தங்கள் செல்வத்தை அடுத்தவர்கள் சாப்பிடுவதையும் , தங்கள் நிலைமை  அப்படியே மோசமான நிலைமையில் இருந்ததையும் கொஞ்சம்  லேட்டாக  உணர்ந்த  , பூர்வ குடி மக்கள் கொதித்தெழுந்தனர் .

No comments:

Post a Comment