Thursday, August 10, 2017

அமெரிக்க எலியும் பரதேசியின் கிலியும் !!!!!!!!!!!!!



ஒரு நாள் வெள்ளி மாலை ரிலாக்ஸ் செய்யும் தருணத்தில், நானும் என் மனைவியும் புதிதாக தரவிறக்கம் செய்யப்பட்ட “ஹீரோ டாக்கீஸ்” என்ற தளத்தின் மூலம் ஒரு தமிழ்த் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் அதனைப் பார்த்தேன்.
நான் நியூயார்க் வந்து வாழும் இந்த 17 வருடங்களில் பேச்சலராக (?)  தங்கியிருந்த முதல் வருடத்தை விட்டுவிட்டால், குடும்பம் வந்த பிறகு பேச்சிலர் (பேச்சு இலர்) ஆகி 2 வீட்டில் மட்டுமே வாடகைக்கு குடியிருந்து பின் 11 வருடமுன் நான் இப்போ குடியிருக்கும் வீட்டை வாங்கினேன்.
நான் இருந்த இரண்டாவது வீடு ஒரு மூன்று குடும்ப வீடு. அதில் முதல் தளத்தில் (இந்திய வழக்கின்படி கிரவுண்ட் ஃபிளோர்) எங்களுக்கு முன்னாலும் ஒரு தமிழ்க்குடும்பமே இருந்தது. எனவே எலிகளுக்கும் கரப்பான் பூச்சிகளுக்கும் பஞ்சமேயில்லை. மூணு நேரமும் ரொட்டியைத்தின்னு போரடிச்சுப்போய்  அவைகளுக்கு இந்திய அதுவும் தமிழ் உணவு ரொம்ப பிடிக்குமாம்.   ஹவுஸ் ஓனர் மிகவும் நல்லவர்தான். ஆனால் இந்தப் பிரச்சனையை அவரால் இறுதிவரை தீர்க்கமுடியவேயில்லை. வேற வழியில்லாமல் அவைகளையும் குடும்பத்தில் ஒருவராக சேர்த்துக்கொண்டேன்.
ஆனால் சொந்தமாக வீடு வாங்கியபின் இந்த எலி மற்றும் கரப்பான் பூச்சிகளை முற்றிலுமாக ஒழிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்.ஊரில் இருக்கும்போதுகூட என் வீட்டில் தங்கியிருந்த  வேலைக்காரப்பெண் எவ்வளவு சொன்னாலும் கரப்பாண்பூச்சியை அடிக்க மாட்டாள் . ஏன்னு  கேட்டா அது லட்சுமியாம் . அப்புறம் லட்சுமியை துரத்திட்டேன் .ஆமாங்க அவ பேரும் லட்சுமிதான் .
அதே போல இரண்டு குடும்ப வீடு ( Two Family house) வாங்கியவுடன். (கற்பனையை ஓட விடாதீங்க, ஒண்ணு வாடகைக்கு விட). முதல் வேலையாக முதல் தளம், இரண்டாவது தளம் மற்றும் பேஸ்மென்ட் ஆகியவற்றில் ஆயிரம் டாலருக்கு மேல் செலவு செய்து எலி மற்றும் கரப்பான் பூச்சிகளை ஒழித்துக் கட்டினேன். அன்று முதல் இந்த 11 வருட காலங்களில் எலியும் இல்லை கரப்பானும் இல்லை.
கோடை காலங்களில் மட்டும் சிறு வகை பட்டுப் பூச்சிகள், எட்டுக்கால் பூச்சிகள் ஆகியவை தென்படும். அவற்றை அவ்வப்போது அகற்றிவிட்டால் போதும்.
images (19)

அதைப்பார்த்தேன்னு சொன்னேன்ல .இருங்க கதைக்கு வரேன். நாங்கள் பார்த்த அந்தப்படத்தின் பெயர் "என்னோடு விளையாடு". அந்தப்படத்தில் ஒரு காட்சி. சென்னையில் வேலைகிடைக்கும் தன் அண்ணணை அங்கு இருக்கும் தன் தோழியின் அறையில் தற்காலிகமாக தங்கிக் கொள்ளலாம் என்று அனுப்பி வைக்கிறார் ஒரு தங்கை. (நம் சென்னை இவ்வளவு முன்னேறி விட்டதுன்னு யாரும் என்னிடம் சொல்லவேயில்லை) பெண்களின் சகவாசம் பிடிக்காத (?). அந்தப் பையன் வேறு வழியின்றி (?) அங்கு தங்க, அவர்களுக்குள் அடிக்கடி முட்டிக் கொள்ளுகிறது. ஒரு கட்டத்தில் அந்தப்பெண் அவனை வெளியே போகப் பணிக்க அவனுடைய பையிலிருந்து ஒரு சுண்டெலி வெளியே ஓட அந்தப்பெண் அந்த எலியைப் பிடித்தால் மட்டுமே நீ வெளியேற வேண்டும் என்று சொல்லிவிடுகிறாள். இரவு முழுதும் கண்விழித்து எலியைப் பிடிக்க முயன்றும் அவனுக்கு ஆட்டம் காண்பிக்கிறது எலி.

mouse trap lures mouse through toilet paper tube to capture in bucket below

அதைப் பார்த்துக் கொண்டிருந்த ,சரியாக அதே சமயத்தில் ஏதோ ஒரு சிறிய வஸ்து கதவு வெளியாக சட்டென வீட்டினுள்ளே பாய்ந்தது. திடுக்கிட்ட நான் என் மனைவியிடம் "ஒரு சுண்டெலி உள்ளே வந்தது".
“என்ன சுண்டெலியா?”
“ஆம் நான் கண்ணால் பார்த்தேன்”.
“பிறகு காதலா பார்ப்பாங்க. ஆனா சுண்டெலி வர சான்சே இல்லை”.
“இல்லை நான் உறுதியாகச் சொல்றேன். அது சுண்டெலிதான்”.
“நானும் தான் பாத்தேன். அவ்வப்போது வரும் பெரிய சைஸ் எட்டுக்கால் பூச்சிதான் அது”.
“இல்லை சுண்டெலிதான்  ரூத்”.
“அது வேற ஒண்ணும் இல்லை படத்தில் சுண்டெலி ஓடுவதை பார்த்துவிட்டு உனக்கு பார்ப்பதெல்லாம் சுண்டெலி மாதிரி தெரிகிறது. முன்னெல்லாம் கனவுலதான் உனக்கு வரும். இப்ப என்ன நினைவிலேயே வந்துருச்சு”.
“கனவுல வர்றது உனக்கு, அது சுண்டெலி அல்ல பாம்பு”.
உண்மைதான். தப்பித்தவறி படத்திலோ டிவியிலோ பாம்பைப் பார்த்துவிட்டால் அன்று இரவு அவள் கனவில் பாம்பு கண்டிப்பாய் வந்து தூங்க விடாமல் செய்துவிடும். அதனால் பாம்பு சீன் வந்தால் சட்டென கண்ணை மூடிக் கொள்வாள்.
எனக்கும் சந்தேகமாய் இருந்தது. ஒரு வேளை சினிமாவில் பார்த்ததனால், வந்தது எலியென்று நினைத்து விட்டேனோன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு.
அப்புறம் மறந்துபோய் தூங்கிட்டோம். அடுத்த நாள் நான் ஆபிஸ் போனவுடன் என்  மகள் அனிஷா ஒரு டெக்ஸ்ட் அனுப்பியிருந்தாள் . 'ஐ சா தி திங்கி”   என்று. அப்புறம் போனில் கூப்பிட்டால் இரவு ஒரு எலி அவளை அவனுடைய ரூமில் முறைத்துப் பார்த்ததாகச் சொல்லி இரவெல்லாம் தூங்கவில்லை என்று சொன்னாள்.
அவளும் கற்பனை செய்கிறாளோ? என்று எண்ணி என் மனைவிக்கு போன் பண்ணி “எலியைப் பார்த்த கதையை மகளிடம் சொன்னியா?”, என்றேன். “இல்லையே பயப்படப் போறாங்கன்னு ரெண்டு பேர்ட்டயும் சொல்லலை”, என்றாள். அப்போதும் என் மனைவி நம்பவில்லை.
அடுத்த நாள் மாலை வழக்கம்போல் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது அதே எலி என்னை கிண்டலாகவும் என் மனைவியை முறைப்பாகவும் பார்த்துவிட்டு ஹாலில் கிராஸ் செய்து டைனிங் டேபிளின் அடியில் போனது .(பாருங்க எலிக்குக்கூட என்னைப்பாத்தா கிண்டலா இருக்கு).
அப்பத்தான் என் மனைவியும் நம்புனா.
இத யார்ட்டயாவது சொன்னா நம்புவாங்களா. ஏதோ எலிப்படத்தைப் பார்த்தாங்களாம். எலி உடனே அங்கேயும் வந்துருச்சாம். இப்படித்தானே நினைக்கிறீங்க. அதனாலதான் நான் யார்ட்டயும் சொல்லல. நம்பமாட்டிங்கன்னு எனக்குத் தெரியும்.
அன்றைய நாள் இரவு என் சின்னப்பொண்ணை அவளோடு ரூமில் காணோம். எங்கே என்று தேடினால் அவள் அக்காவோட ரூமுக்குப்போய் ரெண்டு பேரும் கொட்டக் கொட்ட முளிச்சிட்டு இருந்திருக்காங்க ராத்திரி பூரா. என்னன்னு கேட்டா? ராத்திரி எலி அவ ரூமுக்கு போய் உருட்ட அவளும் பயந்து போயிட்டா. எப்படிச் சொல்றன்னு கேட்டா ரூமுக்கு வெளியில இருந்து உள்ளேயிருந்த தேங்காய் எண்ணெய் பாட்டிலைக் காண்பிச்சா. எலி அதன் வெளி லேபிளைக் கறும்பி சுரண்டி போட்டிருந்தது.
உடனே முடிவு செய்தோம். நாளைக்கு  எலிப்பொறி வாங்கிட்டு வந்துறேன் என்று. இரவு எலி குளு (Glue) பட்டைகளை வைத்து மொத்தம் எட்டு இடங்களில் வைத்தோம். என் மனைவி சொன்னாள் எலிக்கு கருவாடு புடிக்கும். அதுக்காகவே வரும்னு சொல்லி தஞ்சாவூர்ல இருந்து எங்க பாஸ்டர் கொண்டு வந்த கருவாட கொஞ்சம் வைத்தாள். வீடு முழுதும் ஒரே நாத்தமா இருந்துச்சு. எப்படியோ சமாளிச்சு மூக்கை மூடிட்டே படுத்துத் தூங்கிட்டோம்.
அடுத்த நாள் காலைல எப்படியும் அது மாட்டிரும்னு  நெனைச்சு காலையில கொஞ்சம் சீக்கிரமா எழுந்து பார்த்தா ம்ஹீம் மாட்டவேயில்லை. சாயந்திரம் வந்து பார்த்தாலும் அது மாட்டல. என் சின்னப்பொண்ணு சொன்னா “இது அமெரிக்கன் எலி கொஞ்சம் சீஸ் வைச்சுப் பாருங்கன்னு சொன்னா”. அன்று இரவு கொஞ்சம் சீஸை கருவாட்டுப் பக்கத்தில் வச்சா என் மனைவி.
நாளைக்குக் காலையில தான் தெரியும், அந்த அமெரிக்கன் சுண்டெலி மாட்டுமா இல்லையான்னு.

முற்றும்

10 comments:

  1. அந்த எலியை கொன்னுடாதீங்க.......அந்த எலியை உங்களின் 25வது வருட திருமணபரிசாக விசு அவர்கள்தான் வாங்கி உங்கள் வீட்டில் விட்டு சென்ரு இருக்கிறார்...இதை அவர் என்னிடம் சொல்லி அதை உங்களிடம் சொல்லக் கூடாது என்று சொல்லி இருந்தார் ஆனால் உங்களை பார்த்தால் பாவமாக இருந்ததினால் இதை சொல்லுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. 25 ஆம் மணநாள் விழாவுக்கு வந்த சர்ப்ரைஸ் பரிசுகளில் இதுதான் பெஸ்ட் என்று நினைக்கிறன் .இருக்கட்டும் இது குட்டி போட்டு பெருகும் வரை காத்திருந்து ஒரு பத்து குட்டிகளை கலிஃபோர்னியாவுக்கு பார்சல் அனுப்புகிறேன் .

      Delete
  2. சீஸ் பார்த்து சீ என்று வெளியே போய்விட்டதோ! எங்களுக்கும் ஏராள எலி அனுபவங்கள் உண்டு. அதை எழுதப்போக, ஹுஸைனம்மா ஒருதரம் கேட்டிருந்தார், "ஸ்ரீராம், எலி உங்கள் வீட்டில் இருக்கிறதா? அல்லது எலி வீட்டில் நீங்கள் தங்கி இருக்கிறீர்களா?" என்று!!

    ReplyDelete
    Replies
    1. என் நிலைமையும் அப்படி ஆகிவிடுமோ என்று கிலியாக இருக்கிறது ஸ்ரீராம் .

      Delete
  3. பயங்கர போராட்டமா இருக்கு போல...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் புலிப்போராட்டம் முடிந்து போய் இது ஒரு எலிப்போராட்டம்.

      Delete
  4. There is a trap available at Home Depot that captures the mouse without harming it. Only thing is I had to take the mouse far away from the house and leave it in a field. I have no problems swatting a mosquito, couldn't bring myself to hurt a mouse. They only need a hole, the size of a dime to get into the house.

    ReplyDelete
  5. I meant to say nickel!

    ReplyDelete
    Replies
    1. ஜீவ காருண்ய சங்கத்தலைவரோ அல்லது எலிப்பாதுகாப்பு படையில் இருந்து வரும் குரலோ இது? யார் இது என்று தெரியவில்லையே ?

      Delete