Thursday, August 31, 2017

ஜெயலலிதாவின் சோக முடிவு !!!!!!!!!!!

Image result for மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
படித்ததில் பிடித்தது
மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
மு.நியாஸ் அகமது - விகடன் பிரசுரம்.

ஜெயலலிதா என்ற மாபெரும் ஆளுமை மறைந்தபின் அ.தி.மு.க பல அணிகளாக உடைந்து பிரிந்து, சரிந்து காணப்படுகிறது. இப்படி இருப்பதற்கும் அவரே காரணம்.
எம்ஜியார் என்ற ஒற்றை ஆளுமை, கருணாநிதி என்ற பெரும் சக்தியை எதிர்த்து வெளியே வந்து அதிமுக கட்சியை கட்டமைத்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக இருந்தது எம்ஜியாரின் ரசிகர்கள் என்ற பெரும் தொண்டர் பலத்தால்தான். நெடுஞ்செழியன், ஆர் எம் வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் இருந்தாலும் கட்சியின் வாரிசு என்று ஒருவரை சுட்டிக் காட்டாமலேயே எம்ஜியார் மறைந்தார். அதே தவறைத்தான் ஜெயலலிதாவும் செய்திருக்கிறார். எம்ஜியாருக்குப்பின் கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல ஜெயலலிதா இருந்தார். ஆனால் அதிமுகவில் ஜெயலலிதா பொறுப்பேற்ற பின் முதலில் செய்தது எம்.ஜியார் காலத்து இரண்டாம் கட்டத் தலைவர்களை ஒழித்துக் கட்டியதுதான். அதே சமயத்தில் அடுத்த தலைவராக ஜெயலலிதா கைகாட்டும்  அளவுக்கு அதிமுகவில் யாரும் இல்லை என்பதும் உண்மை. இரண்டாம் கட்டம் மட்டுமில்லாமல் மூன்றாம் நான்காம் நிலைத்தலைவர்களும் இல்லை.
Image result for மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
Jaya with his brother with their mother Sandhya
பெரியார், அண்ணாவின் திராவிட சமத்துவ கொள்கைகள் எம்ஜியார் இருக்கும்போது பெருமளவிற்கு பின்பற்றப்பட்டது கூட ஜெயலலிதா காலத்தில் முற்றிலுமாக கைவிடப்பட்டது. கொள்கைப்பிடிப்பு எதுவுமில்லாத சுயநலமிக்க ஒரு பெருங் கூட்டமாகவே அதிமுகவின் கூடாரம் காணப்பட்டது. தன் தனிப்பட்ட ஆளுமையின் மூலம் எம்ஜியாரின் தொண்டர்களையும்,  ஒரு பெண் என்பதால் தாய்மார்களையும் கவர்ந்த ஜெயலலிதா ஒரு தனிப்பெரும் சர்வாதிகாரியாக இருந்தார். ஆனால் மக்கள் அவர் மீது வைத்திருந்த பாசத்திற்கும் நேசத்திற்கும் ஜெயலலிதா மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர் நினைத்திருந்தால் தமிழ்நாட்டை தன்னிகரற்ற நாடாக ஆகியிருக்க முடியும். எதுவும் செய்யாமல் பெரும்பாலும் வீட்டில் முடங்கி, சசிகலாவின் கூடாரத்திற்கு நாட்டையும் கட்சியினையும் தாரை வார்த்துக் கொடுத்து மாபெரும் அழிவைத் தேடிக்கொண்டார்.
Image result for மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
Jaya in her young age
இருந்தாலும் அவர் இறந்தது கட்சி வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. தமிழ்நாடே கலங்கிப் போய் இலட்சக் கணக்கான மக்கள் தலை நகரில் குவிந்து தங்கள் இறுதி மரியாதையினைச் செலுத்தினர். அதன் பின்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர்.
இந்தத் தொடர் விகடனில் வெளிவந்த போது படிக்க ஆரம்பித்தேன். தொடர் முடிவதற்குள் அவரே மடிந்து போனது ஒரு அசம்பாவிதம். அவர் இறப்பைச் சுற்றி உள்ள மர்மம் இன்னும்விடுபடாத சூழ்நிலையிலும், அவருடைய கட்சியினர் பல துண்டுகளாய்ப் பிரிந்து ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தப் புத்தகம் ஜெயலலிதாவின் ஆரம்பத்தையும், வளர்ச்சியினையும், முடிவையும் தெரிவிக்கும் ஆவணமாக இருக்கிறது. தமிழக அரசியலில் நீண்ட காலம் கொடியுயர்த்தி இந்த ஆளுமை ஆரம்பத்தில் இருந்த நிலைமைக்கு முற்றிலும் மாறாக எப்படி எல்லாம் மாறிப்போனார்  என்பதை படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
Image result for மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
Jaya with MGR
1.   ஜெயாவின் பூர்வீகம் ஸ்ரீரங்கப்பட்டினத்திலிருந்து இடம்  பெயர்ந்து மைசூருக்கும், அவரின் தந்தை ஜெயராமன் இறந்த போது பெங்களூருக்கும் அதன் பின் சென்னைக்கும் வந்து குடியேறியது. இவர்களின் தாய்மொழி தமிழ் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
2.   ஜெயாவின் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் ஆலோசகராய் இருந்தவர்.
3.   ஜெயாவின் அம்மா சந்தியா, அவருடைய அப்பா ஜெயராமுக்கு இரண்டாம் மனைவி.
4.   ஜெயா சர்ச் பார்க்கில் தன் வகுப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தார். அதோடு நடனப் பயிற்சியும் பெற்றார்.
5.   அம்மா சந்தியா இரவும் பகலும் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் அம்மாவின் பாசத்திற்கும் அரவணைப்பிற்கும் அதிகமாக ஏங்கினார்.
6.   அம்மா நடிகை என்பதால் பள்ளியில் பல கிண்டல்களுக்கும் பழிச்சொற்களுக்கும் ஆளாகினார். எனவே எப்பொழுதும் தனிமையையே நாடினார். நண்பர்கள் யாருமில்லை. கிடைத்த ஒரே தோழியிடம் துரோகம்தான் கிடைத்தது என்பதால் கசப்புணர்ச்சியுடனே வளர்ந்தார்.  ( தோழிஎன்றாலே  இவருக்கு துரோகம்தான் போலும் பாவம்)
7.   ஜெயாவின் நடன அரங்கேற்றத்திற்கும் தலைமை தங்கவந்த சிவாஜி கணேசன் பெரிய நடிகையாவாள் என்று ஆருடம் கூறியிருக்கிறார்.
8.   ஒருமுறை படப்பிடிப்பில் தாயோடு போயிருக்கும் போது எம்ஜியார் பார்த்து சிலாகித்தார்.
9.   ஜெயாவின் ஆசை ஒரு மருத்துவர் அல்லது டாக்டர் ஆக வேண்டும் என்பது. நடிகையாக இருக்கும் போது அளித்த ஒரு பேட்டியில் நடிகையாக ஆகியிருக்கவிட்டால் அரசியலுக்கு வந்திருப்பேன் என்கிறார், அதுபோலவே ஆனது.
10.                Y.G. பார்த்தசாரதி இயக்கிய ஒரு ஆங்கில நாடகத்தில் பிரெஞ்சு நாட்டுப் பெண்ணாக நடித்ததுதான் ஜெயாவின் முதல் நடிப்பு அனுபவம் இந்த நாடகத்தில் வில்லனாக நடித்தவர் சோ.அப்போதிருந்தே அவர்களுக்குள் நெருக்கம் ஆரம்பித்தது.
11.                ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரியின் மகன், சங்கர் கிரி எடுத்த ஒரு ஆங்கில ஆவணப்படத்தில் நடித்ததுதான் முதல் திரை அனுபவம்.
12.                "இந்த உலகத்தின் கடினமான வேலை எனக்குப் பணிக்கப்பட்டாலும் நான் அதற்கு என்னைத் தயார் செய்து கொள்வேன்" என்பது ஜெயா ஒரு பேட்டியில் சொன்னது.
13.                கர்ணன் வெற்றிவிழாவில் ஜெயாவைப் பார்த்த BR பந்துலு "சின்னப கோம்பே" என்ற படத்தில் அவரை நடிக்க வைத்தார். மிகுந்த தயக்கத்திற்குப்பின் இப்படத்தில் நடித்தார். ஆனால் அதற்கு முன்னால் “நன்ன கர்த்தவ்யா” வெளிவந்தது.
14.                டைரக்டர் ஸ்ரீதர் வெண்ணிற ஆடையில் கொடுத்த வாய்ப்பின் மூலம் ஜெ திரையுலகில் ஒரு இடம் பிடித்தார். பிறகு ஸ்ரீதருக்கும் அவருக்கும் பிரச்சனை வந்தது.
15.                பள்ளிப்படிப்பு முடிந்து ஸ்டெல்லா மாரீஸில் சேர்ந்த போது ஆசிரியை "பொம்மை மாதிரி உடை உடுத்தினால் போதுமா?" என்று கேட்டதால் நடிப்பையும் படிப்பையும் ஒன்று சேர செய்யமுடியாதென்று எண்ணி படிப்பைக் கை கழுவினார்.
16.                23 வயதில் சந்தியா இறந்தபின் எம்ஜியாரின் கண்காணிப்பும் பாதுகாப்பும் கிடைத்தது.
17.                எம்ஜியாரின் தீவிர ரசிகையாக இருந்த ஜெயா, அவருக்கே நாயகியானதோடு அவருடைய கட்சியிலும் அடுத்த தலைமையைப் பிடித்தது ஆச்சரியம்தான். ஆனால் அவருடன் அவர் ஒத்துப்போக முடியவில்லை. அவருக்கு எதிராகக் திரைமறைவில் களமிறங்கினார்.
18.                நடிகையாக இருக்கும்போது ஊடகங்களோடு மிகுந்த நட்பில் இருந்தவர் பதவிக்கு வந்ததும் அவர்களைப் பகைத்து 2000 கேஸ்களைப் போட்டார்.
19.                மிகவும் தாராள மனப்பான்மை உள்ள அவர் பிற்காலத்தில் வெற்று  மரியாதை, காலில் விழுவதை ரசிப்பது என பிற்போக்காக நடக்க ஆரம்பித்தார்.
20.                அவருடைய மொழி ஆளுமை, தமிழ் தவிர, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் என வியக்க வைக்கும் ஒன்று.
21.                இந்திரா காந்தி அவருக்கு மிகவும் பிடித்த தலைவர்.
22.                இறுதியில் நட்புக்காக மானம் மரியாதை இழந்து சிறை சென்று அழிந்து போனது பெருந்துயரம்.

முற்றும்

4 comments:

  1. ஆளுமை மிக்க ஜெயா, கடைசியில் ஒரு பெண் மற்றும் அவரது குடும்பத்துக்கே அடிமைப்பட்டது பெரிய மர்மமான சோகம் மட்டுமல்ல பாடமும்

    ReplyDelete
    Replies
    1. புண்ணாய்ப்போன மனதுடன், மண்ணாய்ப்போன ஜெயாவைப்பற்றி நான் எழுதின பதிவுக்கு ஒரு பெண்ணால் வந்த வினை என்று பொன்னாய் வந்த பின்னூட்டம் தந்த ஐயாவுக்கு நன்றி.

      Delete
  2. இப்போது பொது வாழ்வில் இருப்பவர்களுக்கும், இனி வர நினைப்பவர்களுக்கும் ஜெ.யின் வாழ்க்கை ஒரு படிப்பினை. உங்களின் பகிர்வுக்கு நன்றி!!

    ReplyDelete
  3. நிச்சயமாய் படிப்பினைதான் கவிஞரே .

    ReplyDelete