அன்னைக்கு ஒரு
நாள் காலையிலிருந்து நாடி அரிச்சிட்டே இருந்தது. டிரிம் பண்ணி
சுத்தமா வைக்காட்டி தாடி அரிக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.
இது என்னாது நாடி அரிக்குதுன்னு ஒரே யோசனையா இருந்துச்சு. பாத்ரூம் போய் சோப்பு
போட்டு கரகரன்னு தேய்ச்சி நல்லா குளிர்ந்த தண்ணிய முகத்தில அடிச்சு கழுவினேன்.
திரும்பவும் அரிக்க ஆரம்பிச்சிருச்சு. இது என்னடா சோதனைன்னு மறுபடியும் பாத்ரூம்
போய் எல்லா லைட்டையும் போட்டு நாடியை உத்து உத்துப் பார்த்தேன். ம்ஹீம் அதே அசடு
வழியும் மூஞ்சியைத்தவிர வேறு ஒண்ணும்
தெரியல.
என்
சின்ன மகள் அபிஷா பக்கத்துல வந்து உட்கார்ந்து அவங்கம்மாகிட்ட ஏதோ கேட்டா. நான்
வரட்டு வரட்டுன்னு எம்பாட்டுக்கு சொறிஞ்சிட்டு இருந்தேன். சொரிய சொரிய அதுல ஒரு
சுகம் தெரிஞ்சிது. ஆகா நல்லாத்தானே இருக்குன்னு நெனைச்சிட்டு தொடர்ந்து சொரிஞ்சிட்டிருந்தேன். ஒரு சமயம் மகள் எரிச்சல் ஆகி, “என்ன டாடி என்ன பண்றிங்க”ண்ணு?
முறைச்சா.
என்ன இது கடவுளே? என் தாடியை இல்லை இல்லை நாடியை நான் சொரிஞ்சா, டாடின்னு கூப்பிட்டு என் மக மிரட்டுகிறாளே? போடின்னு வேலையை
பாத்துக்கிட்டுன்னு சொல்லிறலாமான்னு ஒரே ஆயாசமாக இருந்தது. ஆனாலும் சொரியறத நிறுத்தாம நான் அவள்ட்ட "என்னவோ தெரியல
காலைல இருந்து நாடில அரிக்குதுன்னு". சொன்னேன்.
அவ
உடனே ஐபோன்னுல இருந்த லைட்டை அடிச்சுப் பார்த்தா.
ஐபோன்ல டார்ச்சு லைட்டு இருக்குன்னு சத்தியமா அன்னிக்குத்தாங்க
தெரிஞ்சிக்கிட்டேன்.
என்
மக என்னை டாடின்னு கூப்பிடுறது கொஞ்சம் கஷ்டமா இருக்குது. அப்பா அம்மான்னு கூப்பிட வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் . சின்ன
வயலிருந்து டாடி மம்மின்னு கூப்பிட்டுப் பழகிட்டாங்க.. என்ன பன்றது நாட்டின்
அருமையும், மொழியும் பெருமையும் எட்டாயிரம் மைல் கடந்து வந்தபின்னாலதான தெரியுது.
"சொர்க்கமே என்றாலுமே அது நம்மூரு போல வருவா?” இந்த ஏக்கம் எனக்குத் தெரிஞ்சு
இங்க இருக்கிற பல பேருக்கு இருக்கு. அந்த ஏக்கம் சில சமயங்கள்ள அதிகமாயிருச்சுன்னா
வெளக்கென்னை குடிச்ச மந்தி மாறி முகம் ஆயிரும். “அப்ப ஏண்டா அங்க இருக்கிற, வந்திர
வேண்டியதுதானே?”ன்னு நீங்க கேக்கிறது காதுல விழுகிது. அத ஏன் கேக்கறீங்க இது புலி வாலைப்
பிடிச்ச கதை. வாலை விடுறது ரொம்பக் கஷ்டம். குறிப்பா நம்ம பிள்ளைக இங்க வளர்ந்துச்சுன்னா
"அதெல்லாம் மறந்துறுங்க" டயலாக்தான்.
ஆனா அப்பப்ப அவங்களை
அப்பா அம்மான்னு கூப்பிடச் சொல்வேன். 'செளன்ட்ஸ்
வியர்டு' என்று முணு முணுத்தாலும் சில சமயங்கள்ல கூப்பிடும் போது காதில் தேன் பாயுது.
என் தம்பி குடும்பம் அத விட மோசம். அவன் பையங்க கூப்பிடுறது 'பப்பா மம்மா'. அதுக்கு
டாடி மம்மியே தேவல. அந்தப் பசங்க அப்படிக் கூப்பிடும் போதெல்லாம் 'பப்பா மம்மா சச்சா'
ன்னு ஒரு பாட்டு வேற ஞாபகம் வந்து தொலைக்குது .ஆமா என் தம்பி குடும்பம் இங்கதான் இருக்கிறாங்க.
அதுமட்டுமல்ல என் மனைவியின் ரெண்டு தம்பிகளும் குடும்பத்தோடு இங்கதான் கும்மியடிக்கிறாங்க. இப்படி
என் கம்பெனி மூலமா வந்தவங்களையும் சேர்த்தா
மொத்தம எண்ணிக்கை ஐநூறைத்தாண்டும்கிறதால டிரம்ப் என்னைத் தேடுறாராம்.
சரி மறுபடியும்
டிராக் மாறிட்டேன். என் மகள் லைட் அடிச்சுப் பாத்துட்டு, "ஒண்ணுமில்லே ரேஸர் இச்
(Razor Itch or Razor Burns) வந்துருக்கு".
“அப்படின்னா”?
“ஷேவ் செய்ய ரேஸர்
யூஸ் பண்ணும் போது இந்த மாதிரி வரும். ஆமா உங்க ரேஸர் பிளேடை எத்தனை நாள் யூஸ் பண்றீங்க?”
“ஐயையோ தெரியலயே.
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ளயிருந்து”
“ என்ன சொல்றீங்க,
எப்பத்தான் மாத்துவீங்க?”
“எப்ப ரொம்ப எரியுமோ,
அப்பத்தான் மாத்துவேன்”.
“நோநோ வாரம் ஒண்ணு
மாத்தனும். மறக்காம மாத்தனும்"
“ஒரு ரேஸர் குறைஞ்சது 5 டாலர் இருக்குமே. பட்ஜெட்ல
கட் விழுமே”.
“அப்ப முகத்துல
கட் விழுந்தா பரவாயில்லையா?”
“நீங்களே பாருங்க”ன்னு
லைட்டைப் போட்டு அவளோட கைக் கண்ணடியில காண்பிச்சா. அப்பத்தான் தெரிஞ்சது. நாடிக்கு
கீழே கறுப்பு கறுப்பா திட்டுத்திட்டா இருந்தது.
“சரி இதுக்கு
என்ன செய்யறது?”
“ஆலுவேரா போடனும்,
இருங்க”ன்னு சொல்லி ஆலுவேரா ஜெல்லைக் கொண்டு வந்து அவளே போட்டுவிட்டா.
அப்புறம் “ரேஸரை
உடனே மாத்துங்க ஒரு 2 வாரம் ஷேவ் பண்ணாதீங்க”ன்னு சொன்னா. பரவாயில்லை நம்ம பசங்க நமக்கு
அறிவுரை சொல்ற அளவுக்கு முன்னேறிட்டாங்கன்னு நெனச்சு பெருமையாக இருந்துச்சு. சொறிவதை
தொடர, ஆஹா அருமையாகவும் இருந்துச்சு.
Ajith |
அடுத்த நாள் ஷேவ்
செய்யாம ஆஃபிஸ் போனேன். எல்லாரும் பாத்து "என்னா ஆல்ஃபி உடம்பு சரியில்லையான்னு"
கேட்டாங்க. ஏன்னா எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ளலிருந்து
நான் ஷேவிங் செய்யாம ஆஃபிஸ் போனதே இல்லை. வேற ஒண்ணுமில்ல வாழ்க்கையில சேவிங்
(Saving) பண்ண முடியாட்டியும் (shaving) ஷேவிங்காச்சும்
பண்ணலாமேன்னுதான். கண்ணாடியில பாத்தா எனக்கே அடையாளம் தெரியல. ஒரே நாளில் கொஞ்சம் முள்ளு
முள்ளா வந்துருச்சு. எனக்கே ஒரு ஆச்சரியம் என்னன்னா எல்லாமே வெள்ளையா இல்லை. ஒரு மாதிரி ரெண்டும் கலந்துகட்டி ஒரு சால்ட் பெப்பர் ஃபீலைக் கொடுத்துச்சு.
ஒரு அஞ்சு நாள்
கழிச்சு ஆபிசில கேட்டாங்க, “என்ன ஆல்ஃபி அஜீத்
ஸ்டைலா”ன்னு . அன்று வெள்ளிக்கிழமை டிரஸ் டெளன் டே, ஜீன்ஸ், கேசுவல் ஷர்ட்டு, தாடின்னு
எனக்கே கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு. கேட்க சந்தோஷமா இருந்தாலும் சீச்சீ ன்னு விட்டுட்டேன்.
அடுத்த நாள் சனிக்கிழமை
என் நண்பன் என்னைப் ஃபேஸ் டைமில் பாத்துட்டு “என்னடா கபாலி ஸ்டைலா?”ன்னு கேட்டான்
.பேசி முடிச்சிட்டு திரும்ப பாத்ரூம் போய் எல்லா லைட்டையும் போட்டுட்டு கொஞ்சம் உத்துப்பாத்தேன்.
ஒரு வேளை அப்படித்தான், இருக்கேனோன்னு, வெளியில கையை காலை உதறி ரஜினி ஸ்டைலில் நடந்து
பாத்ரூம விட்டு வெளிய வந்தேன். வெளியே வரும்போது கையை கொஞ்சம் வேகமா ஆட்டிட்டேன் போல
கை பட்டுனு கதவில் பட்டு உயிரே போயிருச்சு. அப்படியே கொஞ்ச நேரம் சோபாவில் உட்கார என்
மனைவி, “ஏன் ஒருமாதிரி இருக்க என்ன ஆச்சு”?ன்னு கேட்டா? என்னத்த சொல்றது என்னோட
ரஜினி ஸ்டைல் கையைப்பதம் பாத்துருச்சுன்னு சொல்லமுடியுமா?
OPS |
அடுத்த நாள் சர்ச்சுக்குப்
போனேன். என் தம்பி என்னைப் பார்த்துட்டு பதறிப்போய் ஓடி வந்து “என்னன்னே உடம்புக்கு
என்ன?”ன்னு கேட்டான். அதுக்குள்ள பாஸ்டர் ஜான்சன் வந்து "என்ன இது OPS ஸ்டைலான்னு
கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. அட இந்த ஆங்கில்ல நான் யோசிக்கவே இல்லையே. மனசு ஒரே கலவரமாயிருச்சு. வீட்டுக்கு போனவுடனே முதல் வேளையா
வலிக்குதோ அரிக்குதோ ஷேவிங் பண்ணனும்.
முற்றும்
இங்கேயும் அதே அதே...
ReplyDeleteஅப்படியா அதேதானா அச்சச்சோ .
Deleteஓபிஎஸ் தாடியோட பார்த்தாலே எனக்கு சிவாஜியின் கடைசி கால படங்கள்தான் ஞாபகம் வரும். என்னடா, நீங்க சொல்ற ஆட்கள்லாம் உங்களைவிட சின்னவுங்களான்னு பார்த்தா, சொல்ற ஆட்கள் எல்லாருக்குமே 60 தாண்டி பல வருஷமாயிருக்கும், அஜீத் தவிர.
ReplyDeleteரசிக்கும்படி எழுதியிருக்கீங்க.
நன்றி நெல்லைத்தமிழன் .ரெண்டு பேருக்கும் உள்ள வித்யாசம் என்னன்னா , சிவாஜி சினிமாவில் மட்டும்தாம் நடிப்பார் , ஓபிஎஸ் வாழ்க்கையில் நடிப்பார் .
Delete