Tuesday, September 1, 2015

இளையராஜாவின் வீணை மீட்டும் கைகள்!!!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் 25
வீணை மீட்டும் கைகளே 

1978ல் வெளிவந்த “வாழ நினைத்தால் வாழலாம்”, என்ற படத்திற்காக இளையராஜாவின் இசையில் வெளிவந்த எனக்குப் பிடித்த பாடல் இது. பாடலைக் கேட்போமா?

பாடலின் சூழல்:
“இல்லறமே நல்லறம்”, என்று காத்துக்கொண்டிருக்கும் பெண் தன் மண வாழ்க்கையின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தும் பாடல் இது. அந்தக்காலத்தில் பெண்களுக்கு எவ்வளவு எளிமையான எதிர்பார்ப்புகள் இருந்திருக்கின்றன பாருங்கள்.
பாடலின் இசை:  
'வீணை மீட்டும் கைகளே', என்று பாடல் ஆரம்பிப்பதால், பாடல் முழுவதும் வீணையின் நாதம் ஆக்ரமிக்கிறது. ஒரு கார்டில் (Chord) அதிக ப்ரீலூட் (Prelude) இல்லாமல் சட்டென பாடல் ஆரம்பிக்கிறது. குரலும் வீணையும் போட்டி போட்டுக் கொண்டு நாதத்தை கொட்டுகின்றன. இளையராஜாவின் மெலடி பாடல்களுக்கேற்ப தபேலா சேர்ந்து கொள்ள வழக்கமான வயலின் பின்னணிகள் பாடலுக்கு மெருகூட்டி, BGMகள் அமைந்த ஒரு நல்ல மெல்லிசைப்பாடல்.  குறிப்பாக 2-ஆவது BGM ஒரு Climax -க்கு உரிய வேகமெடுத்து, தீவிரமான இசையில் ஆரம்பித்து அப்புறம் வேகம் குறைந்தபின் -2ஆவது சரணம் ஆரம்பித்து முடிகிறது.
பாடலின் குரல்:

இளையராஜாவின் ஆஸ்தான பாடகி என்று சொல்லுமளவிற்கு அவருக்கு அதிக பாடல்கள் பாடிய ஜானகிதான் இதனையும் பாடியது. அவருடைய மெல்லிய குரல் வீணையோடு குழைந்தும் இழைந்தும் போட்டிபோடுகிறது. கேட்கும் நமக்கு ஜானகியின் குரல் இனிதா வீணையின் நாதம் இனிதா என்று அதிசயப்படும் அளவுக்கு இனிமையான பாடல். ஜானகியின் உயிருட்டமுள்ள குரலே வென்றது என்றும் சொல்லலாம். குறிப்பாக அவருடைய குரல் சரணங்களில் உச்சஸ்தாயி எடுத்துச் செல்லும்போது, வீணை தோற்றுவிடுகிறது. ஜானகியின் குரலுக்கு வீணை, இனிமைக்கு இனிமை சேர்க்கிறது என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.  
பாடலின் வரிகள்:
வீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா
மாலை சூட்டும் கைகளே, வீணை மீட்ட வா
வீணை மீட்டும் கைகளே,
உலகமே புகழ்ந்ததே, அது உண்மை அல்லவா
வீணை மீட்டும் கைகளே,

கண்ணனோடு ராதை என்றார்,
ராமனோடு சீதை என்றார்,
அருகு போல வேர்கள் கண்டோம்,
மூங்கில் போல சொந்தம் கொண்டோம்,
எனை உனக்கென ஈசன் வைத்தான்,
இலை மறைவினில் பாசம் வைத்தான்
நமது வீட்டு ராகம்,
உலகம் எங்கும் பாட்டு ( வீணை மீட்டும் கைகளே)

ஆறு ஒன்று ஓடும்போது
கங்கை போல ஓட வேண்டும்
நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால்
நம்மை போல வாழ வேண்டும்
இது இறைவனின் காதல் கட்டில்,
ரதி மன்மதன் ஆடும் தொட்டில்
தலைவனே உன் ஆணை,
தலைவி என்னும் வீணை

வீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா
மாலை சூட்டும் கைகளே, வீணை மீட்ட வா
வீணை மீட்டும் கைகளே,
திரை உலகுக்கு இளையராஜாவை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம்
பஞ்சு அருணாச்சலம்


பாடலின் வரிகளை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள். அவருடைய வரிகள் எப்போதுமே, இசைக்குள் அடங்கி, இசையினை மிஞ்சாமல் வருகின்ற எளிய வரிகள். இந்தப்பாடலிலும் அதே தன்மைதான் தெரிகிறது. 2-ஆவது சரணத்தில் “ஆறு ஒன்று ஓடும்போது கங்கை போல ஓட வேண்டும்” என்று பாடும்போது அது எவ்வளவு உண்மை. தண்ணீரில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாடு பாலைவனம் போல் ஆகிவரும்போது, நமது நாட்டில் ஒரு ஜீவ நதி கூட இல்லாததால் தண்ணீருக்கு அண்டை மாநிலங்களை அண்டிப்பிழைக்கும் அவலம் கண்முன்னால் வந்து கண்ணில் கங்கை வந்தது.
ஆறு ஒன்று ஓடும்போது கங்கை போல ஓட வேண்டும்
நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால் நம்மைப்போல வாழ வேண்டும்
-என்ற வரிகள் மிகவும் பிடித்தது.
எனை உனக்கென ஈசன் வைத்தான்
இலை மறைவினில் பாசம் வைத்தான்.
-காதலை வெளிப்படுத்தும் நம் சமூகத்தில் பாசத்தை மட்டும் சரியாக வெளிப்படுத்துவதில்லை (என்னையும் சேர்த்துத்தான்) என்பது ஏன் என்று தெரியவில்லை. அதனைத்தான் கவிஞர் 'இலை மறைவினில் பாசம் வைத்தான்' என்று சொல்லுகிறார் என்று நினைக்கிறேன்.
மறந்து போன இந்த வீணைப்பாடலை உங்களுக்கு ஞாபகப்படுத்தியதில் எனக்கு மொத்த மகிழ்ச்சி.
அடுத்த பாடலில் விரைவில் சந்திக்கிறேன்.

-தொடரும்.

5 comments:

  1. அருமை அருமை நண்பரே.. பாடலும் உங்கள் கருத்தும்..
    இந்த பாடல் என்னுடைய தொகுப்பிலும் இருக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நெடிய இடைவெளிக்குப்பின் வருகை தரும் நண்பாவுக்கு நன்றி.
      தவறே இல்லைஎன்று வரவில்லையா இல்லை தவறுகள் அதிகமாய் இருக்கின்றன என்று வரவில்லையா என்று தெரியவில்லை .அவ்வப்போது நீங்கள் வந்து சென்றால் மகிழ்ச்சியாய் இருக்கும்

      Delete

  2. //எனை உனக்கென ஈசன் வைத்தான்
    இலை மறைவினில் பாசம் வைத்தான்.
    //

    மேலே இருக்கும் சில வரிகள படிக்கும் போது
    "பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு "
    பாடல் நினைவில் வருகிறது.
    (திரைப்படம்: வளர்பிறை, கவிஞர் கண்ணதாசன்)

    அந்த வரிகள்
    ...
    கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
    வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
    ..

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் .நன்றி ஆரூர் பாஸ்கர் .

      Delete
  3. அருமையான பாடலை ஞாபகம் ஊட்டியதுக்கு நன்றிகள்.

    ReplyDelete