நண்பர் முத்துராமலிங்கன் இயக்கிய "சிநேகாவின்
காதலர்கள்" என்ற திரைப்படத்திற்காக
நண்பர் பிரபாகர் எழுதி இசையமைத்த பாடல் இது. இந்தப்படத்தைப்பற்றியும் நண்பர் முத்துராமலிங்கனைப்
பற்றியும், படத்தைப் பார்த்துவிட்டு தனியாக எழுதுகிறேன். இப்போது பாடலைக்
கேளுங்கள்.
பாடலின் பின்னணி:
படத்தை பார்ப்பதற்கு எனக்கு இன்னும் சந்தர்ப்பம் வரவில்லை.
படத்திற்கு இது ஒரு டைட்டில் பாடலாக வருகிறது என்று நினைக்கிறேன். மதுரையின் அருமை
பெருமைகளை மட்டுமல்ல அட்டூழியங்களையும் அழகாகப் படம் பிடிக்கிறது பாடல். ஒரு
பாடலுக்குள் ஒரு மாநகரை அடக்க முடியுமா? என்று கேட்டால், முடிந்திருக்கிறது என்று இந்தப்பாடலைக் கேட்டால்
சொல்லமுடியும்.
பாடலின் இசையமைப்பு:
மதுரையைப் பற்றிய துடிப்பான பாட்டு என்றாலும் இதற்கு
கிராமிய இசைக்கருவிகளைப் பயன்படுத்தாது, மாடர்ன் கருவிகளையே
பயன்படுத்தியிருக்கிறார் பிரபாகர். துள்ளல் இசைக்கு பேட் டிரம்ஸை அதிகமாக
பயன்படுத்திவிட்டு பிரீலூட், இண்டர்லூட் BGM ஆகியவற்றுக்கு Keyboard -ன் விதவித ஓசைகள் பயன்பட்டிருக்கின்றன. பேஸ் கிட்டாரும் ரிதம்
கிட்டாரும் பாடல் முழுதும் இசைக்கின்றன. அதோடு பாடலுக்கு முன்னாலும் இசையிலும்
பிரபாகரின் குரலில் தொகையறு வருகிறதும் மிக அழகாக இருக்கிறது.
பாடலின் குரல்:
இதனைப் பாடியவர் ஆலாப் ராஜீ. தொழில் முறை பாடகர்கள் தவிர,
MSV, இளையராஜா,
AR.ரகுமான் போன்ற நிறைய
இசையமைப்பாளர்கள் நிறையப் பாடல்களை பாடியுள்ளார்கள் என்று நமக்குத் தெரியும்.
கமல்ஹாசன் தொடங்கி ஒரு சில நடிகர்களும் கூட அவ்வப்போது
படுகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து ஒரு இசைக்கருவி வாசிப்பவர் ஒரு பாடகராக
பரிணமிப்பது ரொம்பப்புதுசு. திரையிசை ரெக்கார்டிங்களுக்கு பேஸ் கிட்டார்
வாசிக்கும் ஆலாப் ராஜீ பாடகரானது ஒரு அதிசய நிகழ்வுதான். ஆனால் அவர் குரல் மிகவும்
புதிதாகவும் இனிமையாகவும் ஒலிகிறது. அது மட்டுமல்ல தற்காலப் பாடகர்கள் வரிசையில்
இவருடைய தமிழ் உச்சரிப்பு சுத்தமாக இருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. இவர் பாடிய என்னோமோ
ஏதோ ( கோ) ,அகிலா அகிலா ( OKOK) எங்கேயும்
காதல் போன்ற பல பாடல்கள் சூப்பர்ஹிட். வேல்முருகன், மாணிக்க
விநாயகம் போன்ற
கிராமியப் பாடல்கள் பாடுபவர்களை விட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ
என்று நினைத்து பிரபாகரிடம் கேட்டபோது, வேண்டுமென்றேதான் குரலும் இசையும் அப்படி அமைத்ததாகக்
கூறினார். எனவேதான் இது மிகவும் Fresh ஆக ஒலிக்கிறது. மிக அருமையாகப் பாடியிருக்கிறார்.
பாடலை எழுதியவர்:
Prabahar |
இப்பாடலை எழுதியவர், இசையமைத்த பிரபாகர்தான். பன்முகத்திறமை கொண்ட இவரின் பல திறமைகள்
வெளிப்பட இன்னும் சரியான களம் அமையவில்லை என்பது என் கருத்து. பிரபாகர் அமெரிக்கன்
கல்லூரியில் எனக்கு ஒரு வருட சீனியர். நான் இளங்கலை ஆங்கில இலக்கியம்
படிக்கும்போது அவர் பொருளாதாரம் படித்தார். பொருளாதாரத்தில் எந்த ஆதாரத்தையும்
உணராத அவர், தன கனவைத் துரத்தும் முயற்சியில், முதுகலை
தமிழ் இலக்கியத்தில் சேர்ந்ததில் எனக்கு எந்தவித ஆச்சரியமில்லை. அதன்பின் M.Phil
-ஐயும் முடித்து அமெரிக்கன்
கல்லூரி தமிழ்த்துறையின் பேராசிரியராய் சேர்ந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த
மகிழ்ச்சியை அளித்தது. தற்போது விசுவல் கம்யூனிகேஷன் துறையையும் சேர்த்துப்
பார்ப்பதோடு சமீபத்தில் இசையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும்
பெற்றுவிட்டார்.
அவர் கல்லூரியில் படிக்கும்போது,
தன் ஓவியத்திறமை, ரங்கோலி, கவிதை, பாடுவது என்ற பல நுண்கலைகளில் திறமை பெற்றிருந்ததோடு மட்டுமல்லாமல்
பல கல்லூரி பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடக்கும் போட்டிகளிலும் முதல் பரிசை
தட்டியிருக்கிறார். அவர் +2 படிக்கும்போதே ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில்
முதற் பரிசை வென்றவர்.
Myself with , Praba and Vanaraj at American College. |
எங்கள் கல்லூரியின் இசைக்குழுவில் பாடியதோடு முழு இசை
நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவது இவர்தான். அதுதவிர இடைவேளையில் பலகுரல்களில்
மிமிக்கிரை செய்தும் அசத்துவார். இத்தனை திறமைகளையும் உள்ளடக்கியது ஒருவர்தான்
என்றால் நம்ப முடியாது. சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட இவர் இருக்கும் இடத்தில்
சிரிப்பும் களிப்புமாக இருக்கும்.
எனக்குத் தெரிந்து ஒருவேளை அமெரிக்கன் கல்லூரி வேலை
கிடைக்காமலிருந்தால்,
சென்னைக்கு வந்து பெரிய இசையமைப்பாளராய் வந்திருக்க
முடியும். கல்லூரி வேலை அவரை மதுரையிலேயே கட்டிப்போட்டுவிட்டது. இப்போ பிரபல
பேச்சாளர் நண்பர் பாரதிகிருஷ்ண குமார் இயக்கிய திரைப்படமான “என்று
தணியும்” படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
பாடல் வரிகள்
கண்ணகியின் கால் நகையை
கழட்டிவிட்ட ஊர் இதுங்க
புன்னகையில் பூமியை (புன்னகையில் பொங்கல் வெச்சு பூவைச் சுத்தும் ஊரிதுங்க )
புரட்டிவிட்ட மண்ணு இதுங்க
வீரம் விளைஞ்ச மண்ணு
ஈரம் நிறைஞ்ச மண்ணு
காலம் நிறைஞ்ச மண்ணு கதையை நீ கேளு நின்னு
பாண்டியர் ஆண்டதிந்த மண்ணுங்க
பண்பாடு நிறைஞ்சதிந்த மண்ணுங்க
ஒத்துமையாய் இருந்துக்கிட்டா ஊரு கூடி தேரிழுத்து
பொங்கலுமே நாங்க வைப்போமே
ரெண்டுபட்டா தலையை சீவி குடலெடுத்து மாலை போட்டு
ரத்தத்தில பொட்டு வைப்போமே
மானம்தான் எங்களுக்கு உசுரு, அட
மத்ததெல்லாம் எங்களுக்கு கொசுறு
வேலைவெட்டி ஏதுமில்லை நிக்கக்கூட நேரமில்லை
ஜம்பத்துல நம்பர் ஒன்னு மருத
கோயில்கடை, விளக்குத்தூணு மீனாட்சி திருக்கோவிலு
நாயக்கர் மஹாலைச் சுத்தலாம்
அழகர்கோவில் தீர்த்தமாடி ஆனைமலை ஏறி வந்து
தெப்பக்குளம் நீந்திப்போகலாம்
பாண்டிமுனி காவல்காக்கும் ஊரு, அட
பக்கத்துல ஐயனாரு பாரு
குலசாமி பல இருக்கு ஆனாலும் பல வழக்கு
சண்டியர்கள் சலம்புகிற மருத
கோனார்மெஸ் கொத்துக்கறி அம்மாமெஸ் அயிரை மீனு
அத்தனையும் தின்னு பார்க்கலாம்
ரோட்டோரம் கம்மங்கஞ்சி ஜில்லு தான் ஜிகர்தண்டா
பருத்திப்பாலை ருசியும் பார்க்கலாம்
தூங்காம முழிச்சிருக்கும் மருத, அது
யாருக்குமே அடங்காத குருத
புழுதிக்காத்து வீசினாலும் கோடைவெயில் கொளுத்தினாலும்
மல்லிகையின் மணம் கமழும் மருத
பாடல் வரிகளில் தான் வளர்ந்து, இருந்து, வாழ்ந்து கொண்டு
அனுபவிக்கும், மதுரையின் ஒவ்வொரு சிறப்பையும் அருமையாக கொண்டு வந்து திருக்கிறார். பல
கிராமத்து மக்கள் மதுரையை இன்னும் "மருத" என்றே உச்சரிக்கிறார்கள்.
அதனால்தான் இந்தப் பாடலிலும் மதுர என்பதை மருத என்றே வருகிறது. அது பகடியாகவும்
ஒலிக்கவில்லை என்பது என் கருத்து.
பாடலை அறிமுகப்படுத்தும் முதல் வரிகளிலேயே "கண்ணகியின்
கால் நகையை கழட்டிவிட்ட ஊர் இது" என்று ஆரம்பிக்கும்போதே கேட்கும் நமக்கு ஒரு
புன்சிரிப்பை வரவழைப்பதோடு மேலும் உன்னிப்பாக கேட்கத்தூண்டும் உற்சாகம் பற்றிக் கொள்கிறது. அடுத்த வரிகளில் “புன்னகையில்
பூமியையே புரட்டிவிட்ட மண்ணு இது" என்ற முதலிலும் மறுபடியும் சரணம் முடிந்து
வரும்போது, "புன்னகையில் பொங்கல் வெச்சு, பூவைச்சுத்தும் ஊரிதுங்க" என்று சொல்லும்போது, “ஏய் நாங்க
மதுரைக்காரங்கப்பூ, ஜாக்கிரதை”, என்று எச்சரிக்கைவிடுவது போல் வருகிறது.
ஆனால் அதற்கடுத்த வரிகளில், மதுரையில் வீரம் மட்டுமல்ல
ஈரமும் உண்டு, பாண்டியன் ஆண்ட பண்பாடு நிறைஞ்ச மண்ணுங்க
என்று சொல்லும்போது கேட்கும் மதுரைக்காரர்களுக்கு நிச்சயம் பெருமையாக
இருக்கும். எனக்கும் அப்படியே. அதோடு சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியில் மதுரைக்கு அருகில் தொன்மையான நாகரிகம்
கண்டுபிடிக்கப் பட்டதிலிருந்து எங்களுக்கொல்லம் அளவிட முடியாத பெருமைதான்.
முதல் சரணத்தில், “ஒற்றுமையாயும் இருப்போம்,
கோவம் வந்தால் தலையை சீவி, குடலை உருவி மாலை போட்டு ரத்தப் பொட்டு வைப்போம்”, என்று
மதுரையின் கேரக்டரை உணர்த்தியிருக்கிறார். அதான் உங்களுக்கும் தெரியுமே.
"மானம் தான் எங்களுக்கு உசுரு அட மத்ததெல்லாம் எங்களுக்கு" என்று
சொல்லிவிட்டு ஒரு சிறு இடைவெளி வரும்போது ஐயையோ 'ம' வில் ஆரம்பிக்கும் ஒரு சரளமாக பயன்படுத்தும் மதுரைச் சொல்
வரப்போகிறது என்றென்னும் போது 'கொசுறு' என்று அதை மாற்றி விட்டிருக்கிறார் பிரபா,
அதைக் கேட்கும்போது வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். “வேலை வெட்டி ஏதுமில்லாவிட்டாலும் மிகவும் பிஸியாக இருப்பார்கள்,
ஜம்பத்தில் இவர்களை யாரும் அடிக்க முடியாது”,
என்று அடுத்த வரிகளில் சொல்லுகிறார்.
2-ஆவது சரணத்தில் மதுரையின் அடையாளங்களான, மீனாட்சியம்மன்
கோவில்,
திருமலை நாயக்கர் மஹால், விளக்குத்தூண், அழகர் கோவில், ஆனைமலை, தெப்பக்குளம்”, ஆகியவற்றை சொல்லுவதோடு,
மதுரையின் உக்கிரமான காவல் தெய்வமான பாண்டி முனியையும் சொல்கிறார். ஆஹா,
ஒவ்வொரு இடத்திலும் எனக்கு நடந்த பழைய சம்பவங்கள்
வெள்ளமாகப்புரப்பட்டு வந்தன.
3-ஆவது சரணத்தில், பல ஆண்டுகளாக மதுரையின் சுவைமிகுந்த உணவுக்கு கட்டியம்
கூறும்,
கோனார் மெஸ், அம்மா மெஸ், அயிரை மீன் குழம்பு, கம்பங்கஞ்சி, ஜிகர்தண்டா, பருத்திப்பால் ஆகியவற்றைச் சொல்லும்போது,
நாக்கில் மிகுந்த ஜலம் ஊறி உடனே மதுரைக்குச் செல்ல வேண்டும்
என்று தோன்றியது, அடடா எத்தனை முறை உண்டாலும் சலிக்காத சுவை மிகுந்த மதுரை
உணவுக்கு நிகர் அவை மட்டும்தான்.
“எங்கள் தூங்கா நகரில் புழுதிக்காத்து வீசும்,
கோடை வெயில் கொளுத்தும் ஆனாலும் ஒருபுறம்
மல்லிகையின் மணம் கமழும்”, என்று பெருமையுடன் சொல்லி முடித்திருக்கிறார்.
மதுரையைப்பற்றி இப்படி ஒரு பாடல் இதுவரை வந்ததுமில்லை. நாணமும் வீரமும் சரி விகிதத்தில் கலந்துள்ள மதுரைப்
பெண்களைப்பற்றி தவிர கிட்டத்தட்ட எல்லாவற்றையும்
இந்தப்பாடலில் கொண்டுவந்துவிட்டார். பாடல் வரிகளும் நாள் முழுவதும் முணுமுணுக்க
வைக்கும் இலகுவான மெட்டும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டு மனதில் இடம் பிடிக்கின்றன.
இசையமைப்பாளரே பாடல் வரிகளையும் எழுதுவதால் வரும் அனுகூலம் இது.
இசையில்
மட்டுமல்லாது திரைக்கதை இயக்கத்திலும் திறமை வாய்ந்தவர். மதுரையில் ஒரு திரைப்படக்
கல்லூரியை ஆரம்பிக்க வேண்டும் எனும் அவர் கனவு விரைவில் நிறைவேற என் வாழ்த்துக்கள்.
நண்பர் பிரபா இன்னும் இசைவானில் பல பாடல்கள் தந்து நட்சத்திரமாய்
ஜொலிக்க பரதேசியின் வாழ்த்துக்கள்.
-முற்றும்.
DITTO ..............
ReplyDeleteதருமி கருமி இல்லை என்று எனக்கு தெரியும் .என்ன ஒரு
Deleteரெண்டு வார்த்தை எழுதியிருக்கலாம்.
.//.ரெண்டு வார்த்தை எழுதியிருக்கலாம்//
ReplyDeleteசரியா சொல்லியிருக்கீங்க (ரெண்டு வார்த்தை எழுதிட்டோம்ல....)
////மிமிக்கிரை செய்தும் அசத்துவார். // ...இந்தப் பக்கம் எனக்குத் தெரியாதே!
ReplyDelete//அமெரிக்கன் கல்லூரி வேலை கிடைக்காமலிருந்தால், சென்னைக்கு வந்து பெரிய இசையமைப்பாளராய் வந்திருக்க முடியும். // அரசுப் பணியாளனாக, வார்டனாக ஆகும்போது இதே வார்த்தைகளை அவனிடம் சொல்லியிருக்கிறேன்!
//நண்பர் பிரபா இன்னும் இசைவானில் பல பாடல்கள் தந்து நட்சத்திரமாய் ஜொலிக்க பரதேசியின் வாழ்த்துக்கள். //
என் வாழ்த்துகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள் .........
நன்றி நன்றி நன்றி தருமி.
Delete