Thursday, September 3, 2015

ஆஸ்திரேலிய கூந்தல் அழகி !!!!!!!!!!!!!!!!!!!!

blake_lively-dog

சப்வேயில் நான் வந்து இடம்பிடித்து உட்கார்ந்தவுடன் யாரோ என்னைப் பார்ப்பது போல் உள்ளுணர்வு உணர்த்தியது, (டேய் சேகரு எப்பவும் ஏண்டா யாரோ உன்னைப் பார்க்கிறாங்கன்னு நெனக்கிற ?) இருந்தாலும் என் Portal of Prayers எடுத்து அந்த நாளுக்குரிய பகுதியை வாசித்து முடித்தேன். இடையிடையே கவனம் சிதறிக்கொண்டே இருந்ததால் படித்து முடிக்க சிறிது நேரமானது. ஒரு வழியாகப் படித்து முடித்தவுடன் புத்தகத்தை உள்ளே வைத்துவிட்டு சடாரென் று நிமிர்ந்து பார்த்தேன்.
அந்தக்குறுகுறு கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆஹா என்ன அழகான கண்கள். சமீபத்தில் அவ்வளவு அம்சமான கண்களை நான் பார்த்ததில்லை. கான்கார்டு திராட்சைகள் பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் படத்தில் பார்க்கவும். நன்கு இயற்கை உரம் இட்டு செழிப்பாக வர்ந்து, உருண்டு திரண்ட இரண்டு ஆர்கானிக் கருப்புத் திராட்சைகள் நன்கு காய்ச்சிய திரட்டுப் பாலில் மிதப்பது போல் கண்கள் இருந்தன.அந்தப்பாலினூடே ஒன்றிரண்டு குங்குமப்பூத் துகள்கள் மிதப்பது போல ஓரிரு இடங்களில் வெவ்வரி ஓடியிருந்தது, அழகுக்கு அழகு சேர்த்தது. அந்தப் பாலின் மேல் ஒட்டாத நீர் போல கண்ணில் லேசாக கண்ணீர் இருந்தது. அது குழல் விளக்கு ஒளியில் பளபளத்தது.
அவ்வப்போது படபடவென அடிக்கும் அந்த இமைகள்.  மங்கிய அல்லது தொங்கிய இமைகளை மஸ்காரா விட்டு நிமிர்ந்தும் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இவளுக்கு இமைகள் வெகு இயற்கையாகவே மஸ்காரா போட்டதைப் போன்றே எடுப்பாக குத்திட்டு இருந்தன. ஆனால் எழுதப்படாத புருவம் இருந்த இடத்தில் புஸீபுஸீ யென்று முடிகள் இருந்ததும் அழகாகத்தான் இருந்தன.
அகலமான அவளுடைய ஏறு நெற்றி விசாலமாக இருந்தாலும் அவளுடைய முடிக்கற்றைகள் ஆங்காங்கே சுருண்டு விழுந்தது, பிறையை மறைக்கும் திரை போல் இருந்தது. சுருண்டு விழுந்திருந்த குழல்கள் செயற்கையா இயற்கையா என்று தெரியாத அளவுக்கு பொன்னிறத்தில் கற்றை கற்றையாக இருந்தன.
நாசிகள் இரண்டும் மிகவும் எடுப்பாகவும், கம்பீரமாகவும் இருந்தன. பெரும்பாலும் எள்ளுப்பூ நாசி என்று கவிஞர்கள் சொல்வார்கள். நான் எள்ளுப்பூவை பார்த்ததில்லை என்பதனால் அப்படிச் சொல்லவில்லை. நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா?  மேலும் இப்படிப்பட்ட கவிஞ்சர்கள் சொன்ன, ஆவாரம்பூ, செந்தாழம்பூ, செந்தூரப்பூ, தேன் மல்லிப்பூ, ஆம்பல்பூ என எதையும் நான் பார்த்ததில்லை. சரி அதை விடுங்க டிராக் மாறிப்போயிட்டிருக்கு.
அந்த நாசி மேல் சிறிது தூசி இருந்தது. அதைத் துடைக்க என் கை பரபரக்க, பொது இடமடா கொஞ்சம் யோசி என்றது என் உள்மனசு.
உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தன. லிப்ஸ்டிக் போடாமலேயே எப்படி இந்த வண்ணம் வந்தது? ஆரிய உதடுகள் என்பது இதுதானோ? அந்த சமயத்தில் வெளிவந்த அவளுடைய நீண்ட நாக்கினால் உதடுகளை நக்கிக் கொண்டாள். நாக்கு நீளமாக இருந்ததால் மூக்கு மேலேயும் பட்டது என்று நினைக்கிறேன். ஆனால் அந்த நாக்கு மிகச்சுத்தமாக கருஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது பிரமிக்க வைத்தது.
மிக இலேசான நறுமணம் அவளிடமிருந்து அடித்தது என்னைக் கிறங்கடித்தது.
ஆனால் இவ்வளவு சிறிய உருவத்தை நான் பார்த்ததில்லை. அப்போது இலேசாக முனகினாள். முனகலா அது ? ஏதோ ஒரு ராகத்தின் சாயலில் சங்கீதமாய் காதுகளில் பாய்ந்தது.
அவள் மீது வைத்த கண்களை எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது, அவள் விரல்கள் என்மீது பட்டன. விரல்கள் அவ்வளவு நீளமில்லை. ஆனால் சுத்தமாக மேனிக்கியூர் செய்யப்பட்ட நகங்கள், மதர் ஆஃப் பேர்ல் போல பளபளத்தது. அதன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெரியவள் , சாரி சொன்னாள் .நோ நோ பரவாயில்லை”, என்று சொன்னேன்
மேலும் என்னைப்பார்த்து 'வவ்' என்று உதடுகள் பிரித்து உச்சரிக் வார்த்தையில் நான் நெகிழ்ந்து போனேன்.
திடீரென்று அந்த பொன்னிறக்கற்றை முடிகளைத்தடவி விட எழுந்த என் ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல், நான் என் வலதுகையால் அப்படியே தடவிவிட்டேன்.  
அவளும் நெகிழ்ந்துவிட, நான் அப்படியே முடிக்கற்றைக்குள் கையை நுழைத்து ளைந்தேன். அவளும் கண்கள் லேசாக சொருக அதை நன்கு அனுபவித்து முனகினாள். அப்படியே என்மீது தலையைச் சாய்த்துக் கொண்டு என் முகத்தைப் பார்த்து சிறுகுரல் எழுப்பினாள். அதனைப் பார்த்த பெரியவள் ஒன்றும் சொல்லவில்லை ,மாறாக புன்னகை புரிந்தாள்
அதற்குள் 7வது அவென்யூ ந்துவிட, 'கம் ஹனி' என்று அதனைக் கவ்விக் கொண்டு அந்த பெரியவள் இறங்க ஆயத்தமானாள். எனக்கு ஏக்கமாய் ஆகிவிட்டது.
என்ன ஜாதி? என்று கேட்டேன் பெரியவளிடம்.   
இது “ஆஸ்டிரேலியன் சில்க்கி டெர்ரியர்”  என்று சொல்லிவிட்டு இறங்கிச் சென்றுவிட்டாள். 
அந்த அழகான குட்டி நாய்க்குட்டியும் என்னைப் பார்த்து முனகியவாறு அவளோடு சென்றுவிட்டது.

taylor-momsen
Add caption
மகேந்திரன் : அட நாய் சேகர், ஒரு நாய்க்குட்டியைத்தான் இவ்வளவு வர்ணிச்சயா.
பரதேசி : டேய் நீ பாட்டுக்கு   எதையாவது நினைச்சா நான் என்ன பண்றது ? மறுபடியும் ஒரு தடவை படிச்சுப் பாரு உனக்கே புரியும்
மகேந்திரன் : அட ஆமடா,அதான பார்த்தேன்,  இவ்வளவு கிளுகிளுப்பு உன் உடம்புக்கு ஆகாதே . அது சரி அது பெண்குட்டின்னு உனக்கு எப்புடிரா தெரியும்?
பரதேசி : டேய் அப்படியே ஓடிப்போயிரு,இதெல்லாம் ஒரு கேள்வின்னு கேக்க வந்துட்டான்.

முற்றும்

4 comments:

  1. முதலில் படத்தை போட்டுவிட்டு வர்ணிக்கும் போதே தெரிந்துவிட்டது எதைப்பற்றி சொல்ல வருகிறீர்கள் என்று... அது சரி அந்த நாய் குட்டியின் ஒனரை வர்ணிக்க நினைத்து யாருக்கோ பயந்து சமார்த்தியமாக நாய் குட்டியை வர்ணித்ததில் உங்கள் சாமர்த்தியம் புரிகிறது,,,,,

    ReplyDelete
    Replies
    1. யார்ட்ட மறைத்தாலும் , மதுரைக்காரனிடம் மறைக்க முடியுமா ?

      Delete