தி ஃபிசிசியன் (The Physician)
நெட்ஃபிலிக்சில் புதிதாக
சேர்க்கப்பட்ட இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு போன வாரம் கிடைத்தது.
பென் கிங்ஸ்லி நடித்தது என்று தெரிந்ததும் ஆர்வம்
அதிகமானது. Ben
Kingsley ஞாபகமிருக்கிறதா? காந்தி படத்தில் காந்தியாக நடித்தவர்.
இதே பெயரில் 'நோவா கோர்டன்' (Noah Gordon) என்பவர் எழுதிய நாவலைத் தழுவி உருவான திரைப்படம் இது.
கதைக்கரு:
இப்படத்தின் கதை 11-ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் ஆரம்பிக்கிறது.
ராபர்ட் கோல் என்ற
சிறுவனின் அம்மா அப்பெண்டிசிடிஸ்-
ஆல் இறந்து
போக,
அவனின் தங்கை பாதிரியாரால் வேறொரு குடும்பத்துக்கு
அனுப்பப்படுகிறாள். சிறுவனான இவனை எவரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவனுடைய ஊருக்கு வந்து, அவனுடைய அம்மாவைக் காப்பாற்ற
முயலும் நாடோடி நாவிதனிடம் (Barber) அடைக்கலம் புகுகிறான். அக்காலத்தில் பார்பர்கள்தான்
வைத்தியமும் பார்ப்பார்கள். ராபர்ட் கோல் அந்த பார்பரிடமிருந்து சில அடிப்படை
வைத்தியத்தை கற்றுக் கொள்கிறான். சில வருடங்கள் இப்படியே கழிகின்றது.
இதற்கிடையில் நாவிதனுக்கு
கேட்டராக்ட் வந்துவிட ராபர்ட் ,மற்றொரு ஊரிலுள்ள யூத மருத்துவரிடம்
அழைத்துச் சென்று சுகப்படுத்துகிறான். அப்போதுதான் பெர்சியாவிலுள்ள இபின் சினா
(பென் கிங்ஸ்லி) வைப்பற்றியும் அவருடைய மருத்துவப் பல்கலைக்
கழகத்தையும் பற்றி கேள்விப்படுகிறான்.
அங்கு யூதர்களும்
முஸ்லிம்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
என்பதால் ராபர்ட் தனக்குத்தானே சுன்னத் செய்து கொண்டு யூத வேடத்தில் உலகத்தின்
மறுகோடியில் உள்ள 'ஷா'
மன்னன் அரசாளும் பெர்சியாவுக்குச் செல்கிறான்.
யூதரை ஆதரிக்கும் இபின்
சினாவுக்கு பெர்ஷியாவில் உள்ளூர் முஸ்லீம்களிடம் பெரும் எதிர்ப்பு இருந்தது. எனவே
நாடோடித்துருக்கிய மன்னனிடம் அந்த முஸ்லீம் இமாம், பெர்ஷியாவைக் கைப்பற்றச் சொல்கிறான்.
ராபர்ட் கோல் இபின் சினாவிடம் சென்றானா, மருத்துவம் படித்தானா? அவன் யூதனல்ல கிறித்தவன் என்பது வெளிப்பட்டதா? பெர்ஷியாவின் ஷாவுக்கும் செல்ஜிய துருக்கிய
நாடோடி மன்னனுக்கும் நடந்த போர் என்னவாயிற்று? இபின் சினா என்னவானார்? என்பதையெல்லாம் முழுப்படத்தையும்
பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இயக்கம்:
இது ஜெர்மன் தயாரிப்பில்
வந்த ஆங்கிலப்படம். ஜெர்மன் மொழியில் டப்பிங் செய்யப்பட்டதா அல்லது சப்டைடில்
போடப்பட்டதா அல்லது இருமொழித் தயாரிப்பா என்று தெரியவில்லை. படத்தை இயக்கியவர்
ஃபிலிப் ஸ்டோல் (Philip
Stolzl) மிகத்திறமையாக இயக்கிய பிரமாண்டப்படம். தயாரித்தவர்கள்
உல்ஃப் பார் (Wolf
Baur) மற்றும் நிகோ ஹோஃப்மன் (Nico Hofmann). யுனிவர்சல் பிக்சர்ஸ் விநியோகம் செய்த இந்தப்படம் 2013 டிசம்பர் 25, கிறிஸ்மஸ் தினத்தில் வெளியிடப்பட்டது.
150 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் 32 மில்லியன் யு.எஸ் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு சுமார் 58 மில்லியன் ஈட்டியது.
நடிப்பு:
Tom Payne |
ராபர்ட் கோலாக நடித்தவர்
டாம் பய்ன் (Tom
Payne), இபின் சினாவாக நடித்தவர் பென் கிங்ஸ்லி, ஷாவாக நடித்தவர் ஒலிவியர் மார்ட்டினஸ் (Olivier
Martinaz). இவர்கள் நடிப்பு சிறப்பாக அமைவதற்குக் காரணம் இவர்கள்
யாரும் நடிப்பதில்லை என்பதால்தான், குறிப்பாக பென்
கிங்ஸ்லியைப் பார்க்கும்போது, பென் கிங்ஸ்லியும்
தெரியவில்லை காந்தியும் தெரியவில்லை, இபின் சினாதான் தெரிந்தார்.
Olivier Martinaz |
நமது தமிழ்ப் படங்களில் நமக்கு எப்போதும் இப்படித்
தெரிவதில்லை. எவ்வளவு மேக்கப் போட்டு மாற்றினாலும் கேரக்டர் தெரிவதில்லை.
ரஜினியும், கமலும்,
விஜயும், அஜித்தும் தான் தெரிகின்றனர். அது அவர்களின் தவறா அல்லது ரசிகர்களின் பார்வையில் தவறா என்றும் தெரியவில்லை.
விருதுகள்:
ஜெர்மன் தியேட்டர்களில்
வெளியிட்டவுடன் உடனடியாக பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாகி, தயாரிப்பாளர்களுக்கு போகி (Bogey Award) விருது கிடைத்தது. அதாவது வெளியிட்ட முதல் வாரத்தில் எல்லாத் தியேட்டர்களிளும்
1000 பேருக்கும் மேல் பார்த்தனர். 10 நாட்களுக்குள் 1மில்லியன் மக்கள் பார்த்தனர். ஜெர்மனின் TV-யிலும் இரண்டு பகுதிகள் கொண்ட மினி சீரிஸ்-ஆக இது வெளியிடப்பட்டது.
வரலாற்று ஆர்வலர்கள், பீரியட் படங்கள் விரும்புவர்கள் மற்றும் பென் கிங்ஸ்லி ரசிகர்கள் இப்படத்தை பார்த்து மகிழலாம்.
No comments:
Post a Comment