Monday, March 30, 2015

உப்பும், உறைப்பும், கடுப்பும், வெறுப்பும் !!!!!!!!!!

ஆஸ்டின் ,டெக்சஸ் பயணம் -பகுதி-4
     பாஸ்டர் ஜான்சன் அவர்கள் பிறந்த போது அமெரிக்க அதிபராய் லிண்டன் ஜான்சன் இருந்ததனால், அவருடைய அப்பா அந்தப் பெயரை வைத்தாராம். ஆனால் அவர் ஜான்சன் அமெரிக்காவில் வந்து செட்டிலாகி, இங்கு ஜான்சன் மியூசியத்தைப் பார்வையிடுவார் என்று கனவு கூடக் கண்டிருக்க மாட்டார். அதனை நேரில்  பார்த்து மகிழவும் முடியாத வண்ணம் சிறுவயதிலேயே இறைவனடி சேர்ந்து விட்டார்.
நகருக்குள் நுழைவதற்கு முன் இதோ உங்களுக்காக
  1. Austin in the night
ஆஸ்டின் டெக்சஸ் ஒரு சில தகவல்கள்.
1.    ஆஸ்டின், டெக்சஸ் மாநிலத்தின் தலைநகரம் .
2.    கொலராடோ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இப்பெரு நகரம்.
3.    மொத்த அமெரிக்காவின் மக்கள் தொகையில் 12-ஆவது பெரிய நகரம், டெக்சஸின் 4-ஆவது பெரிய நகரம்.
Tonkawa Comanche
4.    1835 முதல் ஐரோப்பிய குடியேற்றம் நிகழ்ந்தது. ஆனால் அதற்கு முன்னால் Tonkawa Comanche, & Lipan Apache என்ற சிவப்பிந்தியக் குழுவினர் இங்கு வாழ்ந்து வந்தனர்.
5.    வழக்கம்போல் இவர்கள் இங்கிருந்த சிவப்பிந்தியக்குழுவினரை  துரத்தியடித்தனர் அல்லது கொன்று குவித்தனர்.
6.    1835-36ல் டெக்சஸ் மக்கள் மெக்சிகோவுடன் போரிட்டு சுதந்திரம் பெற்றனர். அதன் பின்னர்  தனிப்பட்ட குடியரசானது. இதற்கென்று தனியாக பிரசிடன்ட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
7.    1861ல் நடந்த உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் டெக்சஸ் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இணைந்து ஒரு மாநிலமானது.
8.    Fortune 500 என்று சொல்லக்கூடிய கம்பெனிகளின் தலைமை அலுவலகங்கள் அல்லது கிளை அலுவலகங்கள் இங்கே இருக்கின்றன. AMD, Apple Inc, Ebay, Google, IBM, Intel, Texas Instruments, 3M, Oracle, Dell ஆகியவை அவற்றுள் சில.


மதிய உணவு அருந்த ஒரு ஜெர்மன் ரெஸ்டாரண்டுக்கு அழைத்துப் போனார் டாக்டர் ஜெரால்ட். ஜெர்மன் குசின் ஓக்கேதானே என்றதற்கு "முகமதுவும் ஜான்சனும் தலையாட்ட, நான் தான் மறுபடியும் 'ஙே' என்று முழித்தேன். ம்ஹீம் மறுபடியும் பட்டினிதான் என்று நினைத்துக் கொண்டேன்.
ஹலால் சாப்பிடும் முகமதுவுக்கு மீன் விலக்கில்லை.அதனால் மீனுக்கு தாவிவிடுவார். ஜான்சனுக்கு எதுவும் விலக்கில்லை. நான்தான் பாவம். ஆனாலும் மெனுவில் இருந்த அரிசி சாதத்தைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து ஆர்டர் செய்துவிட்டு, கூட வெண்டைக்காய் (okra) பண்டம் ஒன்றையும் ஆர்டர் செய்தேன்.  
உப்போ உறைப்போ எதுவும் இல்லாத வெற்று சாதத்தை, கடுப்போ வெறுப்போ இல்லாமல் எப்படி சாப்பிடுவது?. ஆனால் வெண்டைக்காய் பஜ்ஜி நன்றாக இருந்தது. ஏதோ மாவில் தோய்த்து அப்படியே பொரித்திருந்தார்கள். கரகர மொருமொருவென்று சுவையாகவே இருந்தது.
உண்டு முடித்து கேபிடல் பில்டிங் பார்க்கப் போனோம்.
Texas Capital
Texas Capitol Building 
உள்ளே நுழைவதற்கு முன் அதனைக்குறித்த சிறு குறிப்பு:
1.    முதன்முதலாக 1853ல் கட்டி முடிக்கப்பட்ட 140 அடி உயர கேபிடல் கட்டிடம் 1881ல் தீக்கிரையானதால் இந்தப் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
2.    கிபி 1882ல் ஆரம்பிக்கப்பட்டு அஸ்திவாரம் அமைத்து முடித்து டெக்சஸ் சுதந்திர தினமான மார்ச் 2, 1885ல் 12010 பவுன்ட் எடையுள்ள மூலைக்கல் பதிக்கப்பட்டது. பாருங்கள் பேஸ்மெண்ட் எழுப்புவதற்கே மூன்று வருடங்கள் முழுதாய் ஆயிருக்கிறது.
3.    1886ல் இரண்டாவது மாடி முடிக்கப்பட்டு 1887ல் காப்பர்(Copper) தகடுகளால் கூரை அமைக்கப்பட்டது .
4.    1888ல் தாமிரத்தினால் (zinc) வடிவமைக்கபட்ட சுதந்திர தேவி சிலை கூரையின் மேல் நிறுவப்பட்டது.
5.    1888ல் மே மாதத்தில் திறக்கப்பட்ட இதன் மொத்த உயரம் 566 அடி, அகலம் 288 அடி மற்றும் கட்டி முடிக்க ஆன மொத்த செலவு $3.7 மில்லியன் டாலர், அப்பவே மில்லியன் என்றால் இன்றைய ரேட்டுக்கு எங்கேயோ போய்விடும்.
6.    முழுதும் சிவப்பு கிரானைட் கற்களால்  கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் தான் டெக்சஸ் மாநில சட்டசபை கூடுகிறது. அரசாங்கம் செயல்படுகிறது.
Johnson,Gerard,Mohamed and me 

வாருங்கள் உள்ளே போவோம், கிரவுண்ட் ஃப்ளோரில்  படிக்கட்டுகளில் ஏறி உள்ளே நுழைந்தவுடன், ரோட்டன்டா என்று சொல்லப்படுகிற ஹாலுக்கு முன்னால் காவல் தூதுவர்கள் போல ஸ்டீபன் F ஆஸ்டின் (Stephen F Austin) மற்றும் சாம் ஹீயூஸ்டன் (Sam Houston) அவர்களின் முழு அளவு சிலைகள் இருபுறமும் நின்றன. எலிசபெத் நேய் (Elisabet Ney) என்ற சிற்பியினால் வடிவமைக்கப்பட்டு 1903ல் நிறுவப்பட்டவை இவை. இவர்கள் இருவர் பெயரில் தான் டெக்சஸின் இருபெரு நகரங்களான ஆஸ்டின் மற்றும் ஹீயூஸ்டன் நகரங்கள் பெயரிடப்பட்டன. இதே சிலைகளின் மாதிரிகள் வாஷிங்டன் டிசியிலும் இருக்கின்றனவாம்.
Stephen F. Austin Statue, State Capitol Building, Austin, Texas by Elizabet Ney
Stephen Austin
அதன் இருபுறத்திலும் இரு மிகப்பெரிய சித்திரங்கள் இருந்தன. (Oil Painting On Canvas). டெக்சஸில் நடந்த இருபெரும் போர்களைச்சித்தரித்த அந்தப் படங்கள் டெக்சஸின் மிகச் சிறந்த ஓவியரான வில்லியம் ஹென்ரி ஹடில் (William Henry Huddle 1847-1892)அவர்களால் வரையப்பட்டது.

அதனைத் தாண்டி ஹாலில் நுழைந்தால் அது பல மாடங்களைக் கொண்டு வட்டவடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரே கூட்டமாக இருந்தது. என்னவென்று எட்டிப்பார்த்தால், அங்கே அழகான சீருடை அணிந்த இளம் சிறுவர்களும் சிறுமிகளும் நின்று கிறிஸ்மஸ் கேரல் பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர். 


முழுவதும் வெள்ளைப் பிள்ளைகள் இருந்த இடத்தை உற்று நோக்கினால் ஓரிரு கறுப்புப் பிள்ளைகள் இருந்தன. அட மேலும் பார்த்தால் நம் இந்தியப் பிள்ளைகளும் அதில் இருந்தனர் அவர்களை நோக்கி கையை அசைத்தேன். கண்கொள்ளாக் காட்சியா அது காதுகளையும் இனிய இசையால் நிறைத்தது. சிறிது நேரம் அங்கிருந்து அப்பாடல்களைக் கேட்டோம். அந்த ஹாலின் மார்பிள் தரையில் பெரிய சீலும் (The Great Seal) அதனைச் சுற்றி டெக்சஸ் மாநிலத்தின் ஆறு சீல்களும் வரையப்பட்டிருந்தன.    


வலதுபுறம் திரும்பி கார்டனில் நடந்தால் அங்குதான் செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் (Secretary of State) அவர்களின் அலுவலகம் இருப்பதாகக் கூறினார்கள். அன்றைய நாளில் அவர்கள் இல்லை. ஆனால் கிட்டப் போய்ப் பார்த்தால் என்ன ஆச்சரியம். அவர் ஒரு பெண், அதுவும் இந்தியர்.
தொடரும் (அடுத்த பதிவில்   முடியும்)




6 comments:

  1. விளக்கமான தகவல்களுடன் எங்களையும் கூடவே சுற்றிப் பார்க்க வைத்தமைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் ஓட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்

      Delete
  2. அருமையான தகவல்கள், கூடவே படங்கள்.. மிக நன்றி நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பா.

      Delete
  3. படித்தவுடன் எங்களுக்கே சுற்றி பார்த்த உணர்வு ! ....சுவாரஸ்ய தகவல் ... - chudachuda.com

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி நிர்மலா .

      Delete