Monday, March 23, 2015

ஆறாம் தெரு அதிசயங்களும் அதிபர் ஜான்சனும் !!!!!!!!!

ஆஸ்டின் ,டெக்சஸ் பயணம் -பகுதி-3
6th Street
அப்படியே அதிர்ந்துவிட்டேன். இந்தப்புறம் செத்துக்கிடந்த தெரு, மறுபுறம் உயிரோடு இருந்தது மட்டுமல்லாமல், உற்சாகமாய் இருந்தது. தெரு முழுவதும் விதவிதமான பப்கள் இருந்தன. ஒரே பாட்டும், ஆட்டமும் கும்மாளமுமாய் இருந்தன. கிட்டத்தட்ட எல்லாப் பப்புகளிலும் லைவ் மியூசிக். தெருவெங்கும் இளம் ஜோடிகள் வண்ணத்துப் பூச்சிகளாய் அலைந்து கொண்டிருந்தனர். பக்கத்தில் தான் பிரபலமான மிகவும் பெரிய டெக்சஸ் யுனிவர்சட்டி இருக்கிறதென்று சொன்னார்கள். பெரும்பாலும் அந்த மாணவர்கள் தான் ஜோடி ஜோடியாய் இரவுப் பாடம் படிக்க வந்தனர் போலும்.
அதைப் பார்த்தவுடன் தான் தெரிந்தது. நான் சிக்ஸ்த் ஸ்டீரீட் போக வேண்டும் என்று சொன்னவுடன் ஏன் பாஸ்டர் ஜான்சன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார் என்று.
 ஒவ்வொரு பப்பின் முன்னாலும் நின்று கொண்டிருந்த பார்டெண்டர் பெண்கள் தெருவில் போவோரை ஷாட் 3 டாலர், 2 டாலர் 1டாலர் என்று கூவிக்கூவி அழைத்துக் கொண்டிருந்தனர்.
Mohamed

திடீரென்று எங்கள் முன்னால், தலையில் இறகுகளை செருகியிருந்த கோமணாண்டி டங்காமாரி கறுப்புக் கண்ணாடியணிந்து சென்று கொண்டிருந்தான். உடம்பு முழுதும் பச்சை குத்தியிருந்தான். மொட்டையடித்த பெண்கள், முடி வளர்ந்த ஆண்கள் என்று எல்லோரும் ஒரு தினுசாகவே இருந்தனர். ஒரே ஒரு பப்பில் நுழைந்து பார்க்கலாம் என்று போனோம். அரையிருட்டில் சிறு மேடையில் லைவ் ராக் இசை அதிர்ந்து கொண்டிருக்க, கையில் கிளாஸ்களை ஏந்தி ஆணும் பெண்ணும் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
Live Music

நமக்கு எந்த சம்பந்தமுமில்லாத இடம் என்று தோன்றியபின், ரூமுக்குத் திரும்பினோம். அடுத்த நாள் காலை, ஆஸ்டினின் சில பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதாக திட்டமிட்டபடி ,டாக்டர் ஜெரால்ட் 9 மணிக்கு வந்தார் . அவருடன் சென்று நாங்கள் போன முதல் இடம் LBJ ( President Lyndon B. Johnson)மியூசியம். 
  1. Lyndon Johnson and Lady Bird
அமெரிக்காவில் ஒரு பழக்கம் இருக்கிறது. பதவி முடித்த ஒவ்வொரு ஜனாதிபதிக்கும் அவர்களின் சொந்த ஊரில் ஒரு மியூசியம் அமைத்து, அவர்களின் முழு வரலாற்று ஆவணங்கள்வீடியோக்கள், சாதனைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்தி வைப்பார்கள். அடுத்த தலைமுறை அவரைப்பற்றி அறிந்துகொள்ள அது ஏதுவாயிருக்கும். அப்படி அமெரிக்காவின் 36வது அதிபர் லின்டன் B. ஜான்சன் அவர்களுக்கு சிறப்பாக அமைக்கப்பட்ட மியூசியம் தான் இது.
With Lyndon Johnson

பிரம்மாண்டமான கட்டிடத்தின் முன், லின்டன் ஜான்சனின் முழு உருவச்சிலை இருந்தது. படம் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம். கட்டணம் செலுத்தியவுடன் கட்டிட வரைபடம், உள்ளே உள்ள காட்சிப் பொருட்களின் விவரங்கள் அடங்கிய கைப்பிரதிகள் வழங்கப்பட்டன.
Limousin of LBJ

லாபியில் LBJ  அவர்கள் பதவி  முடிந்து டெக்சாஸில் தங்கியிருக்கும் போது பயன்படுத்திய லிமோசின் கம்பீரமாக நின்றிருந்தது. அங்கிருந்து உள்ளே நுழையும் வழியில் பலவித முக்கிய சட்டங்களுக்கு கையெழுத்துப் போட்ட பல பேனாக்களும், ந்தப் பேனாவில் எந்த சட்டம் உருவானது என்ற விவரங்களும் வரிசையாக இருந்தன. அதன் அருகிலேயே இருந்த 360 டிகிரி திரையரங்கில் அவருடைய சுருக்கமான வரலாறு ஒரு 10 நிமிடத்தில் காட்டப்பட்டது. அதனைப் பார்த்துவிட்டு வெளியே வந்தால், ஜான்சன் அவர்களின் பல மணிநேர (643 மணி நேரம்) டெலிபோன் பேச்சுகள் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
அங்கிருந்து  மேலே சென்றால் 'கிரேட் ஹால்' என்ற மிகப்பெரிய ஹால் வந்தது. ஒருபுறம் ஜான்சன் அவர்கள் பதவியில் இருந்தபோது நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் ஆவணப்படுத்தப் பட்டிருந்தன. மறுபுறத்தில் ஜார்ஜ் வாஷிங்டன் துவங்கி, இருந்த 42 அமெரிக்க அதிபர்களின் படங்களும், First Lady என்று அழைக்கப்படுகிற அவர்களின் மனைவியரின் படங்களும் வரிசையாக இருந்தன. அதற்கு மேல் நான்கு மாடி அடுக்குகளில் 45 மில்லியன் பக்கங்களை கொண்ட ஜான்சன் அவர்களின் "ஆர்க்கைவ் லைப்ரரி" இருந்தது.
  1. Oval Office Replica
அங்கிருந்து நகர்ந்து சென்றால் அடுத்தபகுதியில் வெள்ளை மாளிகையின் "ஓவல் ஆஃபிஸ்" (The Oval Office) என்றழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் அலுவலகத்தை  அப்படியே அமைந்திருந்தார்கள். அது தவிர வெள்ளை மாளிகையின் வாழ்வு முறை, வாழ்ந்த முதற்பெண்களின் விவரங்கள் இருந்தன. அதுதவிர அங்கு வாழ்ந்த முதற் குடும்பத்தைப் பற்றியும் தகவல்கள் இருந்தன.
Linden Johnson

அதனருகில் ஜான்சன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் காட்சிப் படுத்தியிருந்தனர். அவற்றுள் பல நாட்டுத் தலைவர்கள் கொடுத்தவையும் அடங்கும்.
லின்டன் ஜான்சன் அவர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு:
1.    மிகவும் பிரபலமான ஜான் F கென்னடி 1960ல் அதிபர் ஆனபோது, லின்டன் B.ஜான்சன் அவரோடு நின்று துணை அதிபர் ஆனவர் (Running mate).
2.    1963 நவம்பரில் கென்னடி கொல்லப்பட்டபோது, இவர் அமெரிக்காவின் 36வது அதிபராய் ஆனார். அப்போது நிலவிய கடுமையான சூழலை சமாளித்தார்.
3.    எனவே மீண்டும் நடந்த தேர்தலில்  இரண்டாம் முறை அதிபரானார்.
4.    கென்னடியின் கனவான சிவில் ரைட்ஸ் சட்டங்களைக் கொண்டு வந்தார்.
5.    எதிர்பாராத காரணங்களுக்காக வியட்நாம் மீது போர் தொடுத்ததின் மூலமாக மிகவும் விமர்சிக்கப்பட்டார்.
6.    1908 ஆகஸ்ட்- ல் பிறந்து ஜனவரி 1973ல் தனது 65 ஆவது வயதில் மாரடைப்பால் மாண்டார்.   
7.    அவர் 1965ல் கொண்டு வந்த மெடிக்கேர் (Medicare) திட்டம் இன்றுவரை சீனியர் சிட்டிசன்கள் கொண்டாடும் திட்டமாகும்.
- அமெரிக்க வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த லின்டன் ஜான்சன் அவர்களின் மியூசியத்தைப் பார்வையிட்டது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
பாஸ்டர் ஜான்சனிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன், “உங்களுக்கும் அமெரிக்க அதிபர் ஜான்சனுக்கும் என்ன தொடர்பு?”, என்று.
தஞ்சாவூரில் பிறந்த பாஸ்டர் ஜான்சனுக்கும், அமெரிக்க அதிபர் ஜான்சனுக்கும் என்ன தொடர்பு இருக்கப்போகிறது ?. என்ன ஒரு முட்டாள் கேள்வி கேட்டுவிட்டோம் என நினைத்த போது, "தொடர்பு இருக்கிறது" என்றார் பாஸ்டர் ஜான்சன்.


தொடரும்

4 comments:

  1. Replies
    1. வரும் திங்கள் வரை பொறுத்திருங்கள் திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. அருமையான தகவலுக்கு நன்றி..

    ReplyDelete