Monday, March 16, 2015

பை ஆல் மீன்ஸ், சோ மீன் ,ஐ மீன் வாட் ஐ மீன் !!!!!!!!!!!!!

ஆஸ்டின்,டெக்சாஸ் பயணம் - பகுதி 2
Rathinasamy என்பது எப்படி Rat Hina samy  என்று அவஸ்தைப்பட்டது என்பதை படித்த ரசிகர்கள் , என் பெயர் எப்படியெல்லாம் மாறிப்போனது என்பதை படித்து ரசிக்க இங்கே  சுட்டவும்  http://paradesiatnewyork.blogspot.com/2013/05/blog-post_17.html
இனி நம் ஆஸ்டின் பயணத்தை தொடருவோம்

           நான் சொல்லச்சொல்ல கேட்காமல் கேட்டை மூட , படிக்கட்டுகள் நகர்த்தப்பட்டன
6.05க்கு கேட்டுக்கு வந்த ஜான்சன் ரத்தினசாமியை உள்ளே விட மறுத்துவிட்டார்கள். கதவை  மூடினாலும்,விமானத்தை டிஃபிரீஸிங்  (De freezing) செய்ய அரைமணி நேரம் ஆகியது. உறைபனி பெய்யும் பொழுதே, விமானம் எழும்பிப் பறந்தது. அடிக்கடி பல இடங்கள் பல நாடுகள் பயணம் செய்யும் ஜான்சன் முதல் முறையாக விமானத்தை   மிஸ் பண்ணியிருந்தார் .
முகமது  வேற, வந்துருவார்ல என்று கேட்டுகொண்டே இருந்தார். எப்படியும் வந்துவிடுவார்னு சொன்னேன். ஜான்சன் வருவாரா மாட்டாரா என்ற திகிலுடனே விமானப்பயணம் கழிந்தது.
இரவு பத்து மணிக்கு விமானம் சென்று சேர்ந்தது வெளியே வந்தவுடன், என் செல்போன் உயிர் பெற்று டெக்ஸ்ட் மெசேஜ் உள்ளதை சுட்டிக்காட்டியது. நான் எதிர்பார்த்தது போலவே, பாஸ்டர் ஜான்சன்தான் மெசேஜ் அனுப்பியிருந்தார். 9.30 மணிக்கு கிளம்பிய அடுத்த ஃபிளைட்டில் கிளம்பியிருந்தார். அப்போதுதான் நிம்மதியாய் இருந்தது.
விமான நிலையத்தில் வாடகைக்காரை எடுத்துக் கொண்டோம். “ஆஸ்டின்” அப்போது, டிசம்பர் மாத சென்னையின் இரவு போல இருந்தது. நியூயார்க்  குளிரிலும் , உறை பனியிலும் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த  எங்களுக்கு அது சொர்க்கம் போல் இருந்தது.ஆனால் ஊரே நிசப்தமாக அடங்கியிருந்தது. எல்லா உணவகங்களும் பூட்டியிருந்த சூழ்நிலையில் ஒரு 24 மணி நேர மெக்டானல்டில் இரவு உணவை முடித்துவிட்டு ஹோட்டலுக்குச் சென்றோம். (என்ன பெரிய இரவு உணவு, ஒரு மெக்சிக்கனும் ஒரு ஸ்மால் ஃபிரென்ச் ஃபிரையுந்தான்). காலையில் கேஃபடேரியாவில் கான்டிமென்டல் உணவு அருந்தும் போது, பாஸ்டர் ஜான்சன் வந்து சேர்ந்தார். இரவு 3 மணிக்குத்தான் வந்தாராம். ஆனால் உற்சாகமாகவே தெரிந்தார்.
Mohamed,Me,Martin Luther,Dr Gerald, Dr Johnson at Concordia
  
கான்கார்டியா பல்கலைக்கழகத்தின் வளாகம் சிறப்பாக இருந்தது. காலை முதல் மாலை வரை தொடர்ந்து மீட்டிங்குகள் இருந்தன.
Concordia University
 மீட்டிங்குகளை ஏற்பாடு செய்திருந்த டாக்டர் ஜெரால்ட் கோஸ்னிக்  எங்களை ஒரு Seafood ரெஸ்டாரண்ட்டுக்கு அழைத்துச் சென்றார். 
  1. Freda's Sea Food Restaurant
தஞ்சாவூர் ஜான்சன் ஒரு மீன் பிரியர், கீழக்கரை முகமது மீனிலேயே வாழ்பவர். ரெண்டு பேரும் பலமாகத் தலையாட்ட நான் "ஙே" என்று முழித்தேன். எனக்கு மீன் என்றால் ஒத்துவராது. 'So mean' என்று நினைத்துக் கொண்டே உள்ளே போனேன். அது ஒரு ஹை என்ட் ரெஸ்டாரண்ட். ஒரு டிஷ்சே 20 முதல் 30 டாலர் இருந்தது. மெனு கார்டில் உள்ள ஒன்றும் எனக்கு புரியாத, தெரியாத, அறியாத ஐட்டங்கள். ஜான்சன், முகமது ஜெரால்ட் மூன்று பேரும் ஆர்டர் செய்து முடித்து விட, என்னைப்பார்த்த வெயிட்டரிடம் "ஏதாவது வெஜிட்டேரியன் டிஷ் இருக்கிறதா ?" என்றேன். அவன் திடுக்கிட இவர்கள் மூவரும் என்னை ஒரு ஜந்து போலப் பார்த்தார்கள். அதற்குள் மெனுவில் ஒன்றைக் கண்டுபிடித்து, "எனக்கு ஆஸ்பரகாஸ் ஃபிரை" (Asparagus) என்றேன். அது ஒரு வகை காய். "அது சைட்டிஷ்"  என்றான் வெயிட்டர். "பரவாயில்லை கொண்டு வா", என்றேன். அது மட்டும் போதும் என்றவுடன் மீண்டும் ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுப் போய்விட்டான்.
  1. Asparagus Fry
பாஸ்டர் ஜான்சனுக்கு ஒரு முழு நீள சால்மன் வந்தது, கண்ணை முழித்துக் கொண்டு என்னையே முறைப்பது போல் தெரிந்தது. முகமதுவுக்கு கிளாம் ஷெல் மீன் வந்தது. ஜான்சன் மீனை வெட்டிச் சாப்பிட, முகமது ஷெல்லை உடைத்து அதனுள் இருந்த ஒரு குழகுழ வஸ்துவை அப்படியே லபக்கினார்.
எனக்கு வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. என்னுடைய ஆர்டரும் வந்து சேர்ந்தது. சிறு சிறு ஆஸ்பரகாஸ் குச்சிகள் ஒரு பத்து இருந்தன. மொத்தமும் ஒரு வாயில் அடங்கிவிடும். சரி விடு இன்னிக்கு மீண்டும் பட்டினிதான் என்று நினைத்தேன். அதில் முகமது வேறு "இது எப்படி இருக்கிறது ?" என்று கேட்டு ஒரு இரண்டை எடுத்து மொறுக்கினார்.
என்னை நானே நொந்து கொண்டே, டெசர்ட்டுக்கு வந்த கேக்கை சாப்பிட்டு வயிறை நிரப்புவோம் என்றால், அதிலும் மீன் வாசனை வந்தது. ஒரே குழப்பமாக இருந்தது. அந்த வாசனை பக்கத்தில் இருந்து வருதா? இல்லை கேக்கில் இருந்து வருதான்னு தெரியல. எதுக்கு வம்புன்னு கேக்கையும் தள்ளி வைத்துவிட்டு, வயிறு முட்ட தண்ணீர் குடித்தேன். பை ஆல் மீன்ஸ், சோ மீன் ,ஐ  மீன்  வாட் ஐ மீன்.
ஜெராஸ்ட் கோஸ்னிக் விடைபெற்றுச் சென்றார். அதன்பின் ஒரு டிரைவ் போகலாம் என்று முடிவு செய்தோம். எங்கே போகலாம்? என்று கேட்டபோது, "சிக்ஸ்த் ஸ்டீரீட்"  என்றேன். பாஸ்டர் ஜான்சன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். முகமதுவும், "சரி போகலாம் என்னுடைய நண்பர்களும் அதைப் பற்றி சொன்னார்கள்", என்றார். பாஸ்டர் ஜான்சன் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கும் அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. ரூமில் இருந்த Site seeing அட்டவணையில் “ஹிஸ்டாரிக் சிக்ஸ்த் ஸ்டீரீட்” என்று போட்டிருந்தது. எனக்குதான் ஹிஸ்டரி என்றால் தோள்கள் தினவெடுக்குமே. அதனால்தான் சொன்னேன்.
பின்னர் கிளம்பி சிக்ஸ்த் ஸ்டீரீட் போனோம். இடது புறம் திரும்பி டிரைவ் செய்தால் கெட்டோஸ் (Ghettos) போல ஒரு ஏரியா வந்தது. சிறிது தூரம் டிரைவ் செய்துவிட்டு ஒரு காஃபி ஷாப் போனோம். பாஸ்டர் ஜான்சன் காஃபிப்பிரியர்.  உள்ளே சென்றால் அது புதிய கான்செப்டில் உருவான பொடீக் வகை சென்ட்டர். அதில் விசேஷம் என்னவென்றால், இருந்த விதவிதமான கொட்டைகளில் , உங்களுக்குத் தேவையான காப்பிக் கொட்டையை நீங்களே தேர்ந்தெடுத்தால், அதை சுடச் சுட அரைத்து அங்கேயே காப்பியை தயார் செய்து, எழும் நுரையில் படம் வரைந்து ஆவி பறக்கத்தருகிறார்கள். எனக்கு காப்பி குடிக்கும் பழக்கம் இல்லாததால் வேண்டாமென்று சொல்ல, இருவரும் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்ததில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. சரிவிடுங்க அந்தக் கேவலத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டாம். 
"என்ன ஹிஸ்டாரிக் சிக்ஸ்த் ஸ்டிரீட் இதுதானா ?" என்று  கேட்ட போது,  ", பாலத்தின் மறுபுறம் போகவேண்டும்", என்று சொன்னாள் அந்தக் கடையிலிருந்து பச்சை நிற முடிக்காரி.
முகமதுக்கு கூர்கில் ஒரு 1500 ஏக்கர் காப்பி எஸ்டேட் இருந்ததால், அங்கேயே பிஸினஸ் பேசி, அந்த செயின் காப்பி ஷாப்புக்கு டைரக்டாய் சப்ளை செய்வதற்கு  ஆலோசனை கொடுத்து, தன விசிட்டிங் கார்டை கொடுத்து, அதன் ஓனரிடம் கொடுக்கச் சொன்னார். எங்கே போனாலும் அதன் மூலம் என்ன லாபம் கிடைக்கும் எனச் செயல்படுவதால் தான் அவர் பில்லியனர், நான் சல்லியனர்.
பிறகு காரை எடுத்துக்கொண்டு பாலத்தின் மறுபுறம் இருந்த ஆறாம் தெருவுக்கு போனோம். அதனைப்பார்த்துவிட்டு அப்படியே உறைந்துபோனேன்.

தொடரும்

9 comments:

  1. அவ்வளவு பெரிய மீன்கடையில் போய் காய் கறி சாப்பிட்டு வந்து இருக்கேளே .. இது நீங்க வளர்ந்து வந்த காசிமேட்டுக்கு வெட்க்க கேடு ... இப்ப தான் தெரியுது .என் பதிவில் நான் சொன்ன மாதிரி நீங்க ஏன் எனக்கு மீன் குழம்பு பரிமாறவில்லை என்று ...

    ReplyDelete
    Replies
    1. மதுரையில் கரிமேடு,நரிமேடுதான் இருக்கு , இந்தக்காசிமேடு எங்கெ இருக்குன்னு
      தெரியலையே தம்பி விசு .

      Delete

    2. //அவ்வளவு பெரிய மீன்கடையில் போய் காய் கறி சாப்பிட்டு வந்து இருக்கேளே .// இவரு பன மரத்துக்கு அடியில் நின்று பால் குடிக்கும் ஆளாக இருப்பாரு... நல்லவேளை போனவங்க எல்லாம் நல்லவங்களா இருக்கிறார்கள். இவரை மாதிரி ஆட்களை எங்கூட Bar க்கு கூட்டி போனா அங்க வந்து சூடா ஒரு காப்பி கொடுங்க என்று கேட்பாரு போல இருக்குதே

      Delete
    3. காபியா ?அந்த இழவையும் தான் இவர் குடிப்பது இல்லையே !

      Delete
    4. நான் எப்போதும் விரும்பி அருந்தும் பானம் Diet Water மட்டும்தான் .

      Delete
    5. அதையும் அருந்தாம இருக்கலாமே ;)

      Delete
    6. நான் என்னத்தை சொல்வேன் நண்பா , அடிக்க்ஷன் ஆயிப்போச்சு.

      Delete
  2. Replies
    1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete