Monday, November 17, 2014

இளையராஜாவின் முதலிரவுப்பாடல் !!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா - பாடல் எண் 9: காலைப் பனியில் ஆடும் மலர்கள்.

1977-ல் வெளிவந்த ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த “காயத்ரி” என்ற  படத்தில் வரும் பாடல் இது.முதலில் பாடலை கேட்போம் .

பாடலின் சூழல்:
புதிதாக திருமணம் முடிந்து, புகுந்த வீடு வரும் பெண், காலை எழுந்ததும் முந்தைய இரவில் நடந்தவற்றை நினைவு கூர்ந்து பாடும் பாடல் இது.
இசைக்கோர்வை:
கிடார் கார்டும் கீபோர்டு-கார்டும் ஒரே சமயத்தில் ஒலிக்க, வெளியில் கேட்க முடியாத மனதின் ஹம்மிங் வெளியே கேட்டால் எப்படியிருக்குமோ அப்படியாக 'ம்ம்ம்' என்ற ஹம்மிங் வருகிறது. எனவே சிறிது தூரத்தில் அல்லது கிணற்றுக்குள் இருந்து வருவது போல் ஒலிக்கிறது. அந்த ஹம்மிங்கை 'எக்கோ' சூழ்ந்திருக்கிறது. அது முடிந்தவுடன் “னனனன”, என்று பளிச்சென பெண் குரல் பாட ஆரம்பிக்க எல்லா இசைக்கருவிகளும் சேர்ந்து விறுவிறுப்பாய் துவங்குகிறது. ஸ்டிரிங்ஸ் இசையோடு அது முடிய "காலைப்பனியில்" என்று பெண்குரலில் பாடலின் பல்லவி ஆரம்பிக்க தபேலா இணைந்து கொள்கிறது. மூன்றாவது நான்காவது வரிகள் மறுபடியும் வரும்போது 'மாயம்' 'யோகம்' ஆகிய இரு வார்த்தைகள் மிகுந்த  அலங்காரத்துடன் வருகிறது.
பல்லவி, தபேலா தீர்மானத்துடன் முடிந்தவுடன், முதலாவது BGM மிகச் சுருக்கமாக வருகிறது. சில ஸ்டிரிங்ஸ் இசையோடு வயலின் இசை சுருக்கமாக வர, "பார்வையோடு பார்வை சேரும்", என்று சரணம் ஆரம்பிக்கிறது. தபேலா இணைந்து வித்தியாச நடையில் ஒலிக்கிறது. ஒவ்வொரு வரியின் முடிவிலும் வீணை / சிதார் வந்து அடுத்த வரிக்கு கட்டியம் கூறுகிறது. சரணத்தின் முடிவில் ஹம்மிங் “ம்ஹீம் ம்ஹீம் ஓஹோ ஓஹோ” என்று ஆஃப் பீட்டில் அருமையாக வந்து முடிய பல்லவி மீண்டும் வருகிறது. அதில் 'மாயம்' என்ற வரி வரும்போது, அற்புதமான பிர்ஹாவில் ஒலிக்கிறது. 
         முதல் BGM சுருக்கமாக வந்ததாலோ என்னவோ இரண்டாவது BGM விஸ்தாரமாக வருகிறது . வீணை, தபேலா வயலின், கிடார் என எக்கச்சக்க மெலடியில் ஒலித்து முடிய "காதலாகி கனியும் போது", என்று 2-ஆவது சரணம் ஆரம்பிக்கிறது. 2ஆவது வரியில் வயலின்களும் சேர்ந்து கொள்ள, பாடல் அப்படியே நிறைந்து பரவி ஹம்மிங் வந்து பின்னர் பல்லவி வருகிறது. 'மாயம்' அதே அலங்காரத்துடன் வந்து பின் பாடல் தபேலாவின் முத்தாய்ப்புத் தீர்மானத்தோடு முடிகிறது.
பாடலின் குரல்:
  1. Jesudaas with Little Sujatha at Melbourne Australia
இந்தப்பாடலை பாடியவர் மலையாளத்திலிருந்து வந்த “சுஜாதா” அவர்கள்.  தமிழ்த்திரையிசையில் இவருக்கு இதுதான் முதல் பாடல். அவரும் சித்ரா போலவே சிறுவயதிலிருந்து ஜேசுதாஸ் அவர்களின் மேடைக்கச்சேரிகளில் இணைந்து பாடிப்புகழ் பெற்று, ஜேசுதாஸ் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு முன்னுக்கு வந்தவர். இந்தப்பாடலைப் பாடும்போது அவரின் வயது 14தான். 1963ல் பிறந்தவர், இந்தப்படம் வெளிவந்த ஆண்டு 1977 என்றால் கணக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். அவரின் வயதுக்கு மிஞ்சிய திறமையுடன் அநாயசமாக பாடியிருக்கிறார். குரலும் மிகவும் இனிமை. குறிப்பாக பல்லவியில் வரும் அலங்கார 'மாயம்'',யோகம்' மற்றும் சரணத்தின் முடிவில் வரும் ஹம்மிங். இவை இரண்டும் எந்தப் பாடகருக்கும் கடினம்தான். முதல் சரணத்தில் 2-ஆவது வரியில் 'தாளம்' என்பதை 'தாலம்' என்று தவறாக உச்சரிப்பதைத்தவிர மற்ற இடங்களில் உச்சரிப்புப் பிழையும் இல்லை.
  1. Sujatha
எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல் திரைப்படமான முதற்படமான 'காயத்ரி'யில் பாடகி சுஜாதா அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு சர்ப்ரைஸ் கோ இன்சிடன்ஸ்.
பாடலின் வரிகள்:

காலைப்பனியில் ஆடும் மலர்கள்
காதல் நினைவில் வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்

பார்வையோடு பார்வை சேரும் பாவம் முதலில் திருனாளும் மனதில்
பாவை மேனி தோளில் ஆட ராகம் பிறக்கும் அதில் தாளம் இருக்கும்
கலைகள் ஆயிரம் அதில் வளரும் காவியம்
சுவை புரியும் நாடகம்
ம்..ஒகொ..ம்ம்

(காலை)

காதலாகி கனியும்போது மோகம் வளரும் என் தேகம் குளிரும்
காலை தூக்கம் கலையும்போது தேகம் கனியும் அதில் நாலும் புரியும்
உறவில் ஆடினேன் புது உலகை நாடினேன்
இன்பக் கடலில் ஆடினேன்
ம்..ஒகொ..ம்ம்


பாடலை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம், கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த இவர் பின்னர் கதையாசிரியராக தயாரிப்பாளராக, இயக்குநராக உயர்ந்தார். இளையராஜாவை முதன்முதலில் தம் படமான “அன்னக்கிளி”யில் அறிமுகப்படுத்தியதால், இளையராஜாவுக்கு இவர்மேல் மிகுந்த மரியாதை. எனவே அவரின் ஆரம்ப காலகட்டத்தில் பஞ்சு நிறைய பாடல்களை எழுதினார்.
எளிமையான வரிகள். ஆனால் உள்ளே கூர்ந்து கவனித்தால் தாம்பத்திய உறவைக் குறித்துச் சொல்லியிருப்பார். பெரும்பாலும் ஆண் வழியாகச் சொல்லப்பட்ட விஷயங்களை ஒரு பெண்ணின் அனுபவமாகச் சொல்லியிருப்பார். ஆனால் அதை விரசமாக சொல்லாமல் சரசமாக சொல்லுகிறார். காலையில் கண்ணாடி பார்க்கும் புதுமணப்பெண் தன் கன்னத்தில்/ இதழில் இருக்கும் காயத்தைப் பார்த்து "இது என்ன மாயம், ஆனால் அது என் யோகம்" என்று பல்லவியில் சொல்கிறாள். முதற் பல்லவியில், உறவை விவரிக்கிறார். பார்வையோடு பார்வை சேரும், அதிலும் ஒரு பாவம் இருக்கும். நாணம் மனதில் மட்டுமே இருக்கும். தலைவனோடு தலைவி சேர அதில் ராகமும் இருக்கும், தாளமும் இருக்கும். அந்த ஆயிரம் கலைகளில் வளரும் காவியம் ஒரு சுவை குவியும் நாடகம் என்று சொல்லுகிறார்.  
2-ஆவது சரணத்தில், எல்லாக் காதலும் காமத்தில் தான் முடியும் என்ற கசப்பான உண்மையை, அது இயற்கையான அடுத்த நிகழ்வுதான் என்பதை, "காதல் கனியும் போது மோகம் வளரும், காலைத்தூக்கம் கலையும் போது தேகமும் கனியும்", என்று சொல்லியிருப்பார்.
ராகம்:

இளையராஜா ஹமிர் கல்யாணி என்ற ராகத்தில் இதனை இசையமைத்திருப்பார். இளையராஜாவின் பலம் அவருடைய மெட்டில் மட்டுமல்ல ஆர்க்கெஸ்ட்ரேஷன் என்று சொல்லும் இசைக்கோர்வு அமைப்பதிலும் அவர் ராஜாதான்.


இப்போது மீண்டும் கேட்டுப்பாருங்கள்.

19 comments:

  1. அற்புதமான பாடல் & இனிமையான குரல்.. இந்த பாடல் ஒரு haunting Song..
    மிகவும் நன்றி..

    ReplyDelete
  2. நண்பரே! உங்கள் அறிமுகப் படலமே அசத்தலாக இருக்கின்றது! ரொம்ம்ம்ம்ம்பவே ரசித்தோம்! நீங்கள் "பரதேசி" அல்ல என்பதையும் தெரிந்து கொண்டோம்! ஆமா, பின்ன இவ்வளவு விஷய ஞானங்களைத் தலமைச் செயலகத்துக்குள்ள புதைச்சு வைச்சுக்கிட்டு ரொம்ம்ம்ம்ம்ப தன்னடக்கத்தோட பேசினா....ஹஹஹ்...சரி நாங்கள் யாரென்று ரொம்ப உங்கள் தலைமைச் செயலகத்தைப் புரட்டி அதை வேஸ்ட் பண்ணாதீங்க. வேறு பல உபயோகங்கள் உங்களுக்கு உண்டு.

    நண்பர் விசு அவர்களின் (மேற்குக் கடற்கரைத் தமிழர்...அக்மார்க் நகைச்சுவையாளர்!) மூலம் உங்களைத் தெரிந்து கொண்டோம். அவரது வலைத்தளத்தில் தெரிந்து கொண்டாலும், நேற்று அவர் உங்களைப் பற்றிச் சொன்னதும் இதோ வந்து விட்டோம். அப்படி வந்ததில் கிடைத்த இந்த இடுகை...ஆஹா போட வைத்தது! இத்தனை நாள் தவற விட்டு விட்டோமே என்றும்! நன்றி விசு! மிக நல்ல நண்பர்கள் குழாமைப் பெற்றுள்ளோம் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

    தொடர்கோன்றோம் தங்களை. எங்கள் வலைத்தளத்தில் உங்களைச்சேர்த்துவிட்டோம். ஆனால் பாருங்கள் உங்கள் வலைத்தளத்தில் "friend" என்று கை கொடுத்து உங்கள் நண்பர் குழுவில் இணைய விழைந்தால், கூகுள் ப்ளாகருக்கு எங்கள் மேல் என்ன கோபமோ....we are sorry, .....unable to.........try again later....என்று சொல்லுகின்றது! கொஞ்சம் ரெக்கமென்ட் பண்ணுங்கள்! ஹஹஹஹஹ்ஹ்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பர் துளசிதரன் அவர்களே .பிழைப்புத்தேடி வெளி நாடுகளுக்கு வரும் எல்லோரும் பரதேசிகள்தானே.என்னுடைய தலைமைச்செயலகம் நன்கு செயல்படவேண்டும் என்றுதான் ஆசை .ஆனால் அறிவு, புத்திக்கூர்மை, செயல்திறன் என்னும் எல்லா எதிர்கட்சிகளும் அடிக்கடி வெளி நடப்பு செய்து விடுகிறார்கள் என்ன செய்வது .

      Delete
  3. நண்பரே! அருமையான பாடல்! அதற்கு தங்கள் ரசனையான விளக்கம் அதைவிட அருமை! அதை வாசித்தப் பிறகு கேட்டால் அதன் சுவை இன்னும் கூடுகின்றது. அரியாத தகவல்களையும் தந்துள்ளீர்கள். சுஜாதா என்பது தெரியும் ஆனால் 14 வ்யதில் இந்தப் பாடலை அதன் அர்த்தம் புரிந்து பாடியது போல மிகவும் அழகான பாவத்துடன் பாடியிருப்பது வியக்க வைக்கின்றது! துளசி, கீதா. (எங்கள் தளத்தில் நாங்கள் இருவர் எழுதுகின்றோம். நாங்கள் மிகவும் நல்ல நண்பர்கள். )

    ஹமீர் கல்யாணி?!! ம்ம்ம் இது கர்நாடிக் ஹமீர் கல்யாணி போல இல்லையே நண்பரே! ஹிந்துஸ்தானி?

    கர்நாடிக் ஹமீர்கல்யாணியில் அமைந்தவை என் சிற்றறிவிற்கு எட்டியவை இதோ.

    என்னுயிர்த் தோழி...படம்- கர்ணன்

    மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய் - கல்யாண அகதிகள்??

    சமீபத்தில் வந்த திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் மிகவும் அருமையான ஒரு பாடல்...."கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்"....அதில் தொடங்குவது முகாரி...நான் முதலில் பைரவியாக இருக்குமோ என்று நினைத்துவிட்டேன் பின்னர் அதைனன்றாகக் கேட்டதும் முகாரி...அதன் சரணம் "சிறு சிட்டிகப் பாசம்....ஹமீர்கல்யாணி ப்யூர் னீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்...

    ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா.....

    இவை அப்படியே அமைந்த பாடல்கள். இதில் ஏரியிலெ கூட கொஞ்சம் ...ஏனென்றால் ஹமீர்கல்யாணி ம்1, ம2 (சுத்த மத்தியமம், ப்ரதி மத்தியமம்/தீவ்ர மத்யமம்) இரண்டும் கலந்து வருவது அதனால் அதைக் கையாளும் விதத்தைப் பொருத்து...
    ----கீதா

    தொடர்கின்றோம் நண்பரே! மிக அருமையாக எழுதுகின்றீர்கள்....ரசிக்கின்றோம்!


    ReplyDelete
    Replies
    1. கீதா ,அடேயப்பா ராகங்களை புட்டுப்புட்டு வைத்து பின்னிப்பெடலேடுக்கும் உங்கள் அறிவு சிற்றறிவு என்றால் , என் அறிவை என்னெவென்று சொல்வது ? .உங்கள் அளவுக்கு எனக்கு ஞானம் கிடையாது .என்னது வெறும் கேள்வி ஞானம்தான். ஏதாவது தவறு ஒருந்தால் மன்னிக்கவும் .

      Delete
  4. Replies
    1. திண்டுக்கல்லை மறைக்கமுடியாது , தனபலனை மறக்கமுடியாது .
      நீர் செய்த உதவிகளை மறுக்கவும் முடியாது நன்றி

      Delete
  5. நண்பர் ஆல்பி,

    இதுவும் நல்ல பாடலே. நான் ரசிக்கும் இளையராஜாவின் இசை. நீங்கள் எண்பதுக்கு வரும் போதுதான் நாம் முட்டிக்கொள்வோம் போல.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி காரிகன் . நான்தான் எண்பதுக்கு வரமாட்டேனே.எனவே நமக்குள் முட்டல் சாத்தியமில்லை

      Delete
  6. நண்பரே தங்களை எங்கள் வலைத்தளத்தில் சில கேள்வி பதில்களுக்குக் கோர்த்து விட்டிருக்கின்றோம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்கள் வலைத்தளத்திற்கு வந்து அதற்கான விடைகளைத் தங்கள் வலைத்தளத்தில் பதியலாம். இது பதிவரும் நண்பருமான கில்லர்ஜி என்பவரால் தொடங்கப்பட்ட ஒன்று. தொந்தரவாக இருந்தால் எங்களை மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாய் வருகிறேன் அழைப்பிற்கு நன்றி .

      Delete
  7. >>>இந்தப்பாடலை பாடியவர் மலையாளத்திலிருந்து வந்த “சுஜாதா” அவர்கள். தமிழ்த்திரையிசையில் இவருக்கு இதுதான் முதல் பாடல் >>>>

    Kadhal Oviyam kanden from Kavikuyil is her 1st tamil song. Kavikuyil precedes Gayathri by a few months.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் .ஆனால் முதலில் வெளிவந்தது "காலைப்பனியில் ஆடும் மலர்கள் என்ற பாடல்தான்."காதல் ஓவியம் கண்டேன்" பாடல் அடுத்து வருகிறது.

      Delete
    2. Great. Looking forward to your write up on that. You may also want to consider Ilayaraja's first duet 'Thennamarathula thendral adikkudhu' from Latchumi.

      Delete
  8. அருமையான பாடல் இளையராஜாவின் மெட்டுக்கு பஞ்சு அருணாச்சலம் எப்போதும் தனித்துவம் தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ,இளையராஜாவின் ஆரம்ப கட்டத்தில் நிறைய பாடல்களை பஞ்சு எழுதியிருக்கிறார் .தங்கள் வருகைக்கு நன்றி தனிமரம்.

      Delete
  9. ஆல்பி சார்

    சூப்பர் . நல்ல ஒரு பாடலை எடுத்து அதன் சுவையை பாங்குற படைத்திருக்கிறீர்கள் . நானும் என் பதிவில் இதைக் குறிப்பிட்டிருக்கிறேன் . பாடலுக்கான இசை விளக்கம் , பாடல் பிறந்த சூழலின் விளக்கம் எல்லாமே நன்று. இளையராஜாவின் பாடல்களை கேட்பதில் உள்ள அதே இன்பம் இதை வாசிக்கும்போதும் இருக்கிறது .

    ReplyDelete
    Replies
    1. பாடல்களை மட்டுமல்ல எழுத்தையும் நன்கு ரசிப்பவர் தாங்கள் என்று தெரிகிறது .
      உங்களின் ஊக்கம் எனக்கு நல்ல டானிக். நன்றி.

      Delete