Monday, November 3, 2014

இளையராஜாவின் “விழியிலே மலர்ந்தது” !!!!!!!!!!!!!


எழுபதுகளில் இளையராஜா பாட்டு 7 - விழியிலே மலர்ந்தது.
1977-ல் வெளிவந்த "புவனா ஒரு கேள்விக்குறி" என்ற படத்தில் வந்தது இந்தப்பாடல். பாடலை முதலில்   கேட்டுவிடலாமா?

பாடலின் மூட்:
எக்ஸ்டசி என்று சொல்லப்படும் பரவச நிலையில் இருக்கும் காதலன் தன் காதலியை வியந்து அவளுடைய அழகில் மயங்கி வர்ணிக்கும் பாடல் இது.பாடலின் இசை மற்றும் ராகம்,பாடல் காதலனின் கொண்டாட்ட மனநிலையை வெளிப்படுத்தும் வேக நடையில் அமைந்துள்ளது.  
இசைக்கோர்வை:
துள்ளலான நடையில் கிடார் ஸ்டிரம்மிங் வர ஜாக்கிங் போன்ற ஓடும் இசை நடை தீவிரமடைய, "விழியிலே மலர்ந்தது" என்று பாடல் ஆரம்பிக்கிறது. 'உயிரிலே கலந்தது' என்று 2-ஆவது வரியின் முடிவில் புல்லாங்குழல் குயிலைப்போல கூவ, "பெண்ணென்னும் பொன்னழகே", என அடுத்த வரி ஒலிக்கிறது. ஒவ்வொரு தடவையும் அது ரிபீட் ஆகிறது. முழு பல்லவியும் முடிந்தபிறகு, அதே பீட் தொடர, "உன் நினைவே போதுமடி", என்ற தொகையறா வருகிறது. வேகப்பாடலின் இடையே பீட் மாறாமல் இசை தொடரும்போது வரும் இந்த தொகையறா ஒரு ஆச்சரியமான செருகல். அது முடிந்தபின் மீண்டும் வேகம் பிடிக்கும் பாடலில் பல்லவி மீண்டும் வருகிறது.   
முதலாவது BGM புல்லாங்குழலுடன் ஆரம்பிக்க எங்கிருந்தோ இணையும் வயலின்கள் சரசரசரவென இணைந்து  இசைக்க, கிடார் ஸ்ரம்மிங்கில் முடிய, சரணம் ஆரம்பிக்கிறது, "ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல்" .அதோடு இணைந்து தபேலா ஓடும் நடையில் வழக்கமான தபேலா நடை போலல்லாது வித்தியாசமாக வருகிறது. "காவியத்தின் நாயகி", என்ற இடத்தில்தான் வழக்கமான தபேலா நடைக்குத்திரும்பி "காதலுக்கு வளர்ந்த பூங்கொடி" என்ற வரியில் முத்தாய்ப்புடன் முடிய, ஓடும் பீட் மறுபடியும் ஆரம்பிக்க, பல்லவி ஆரம்பிக்கிறது. இம்முறை பல்லவியின் ஒவ்வொரு வரியின் முடிவிலும் வயலின் குழுமம் அந்த வரிகளுக்கு பதில் அளிப்பது போல் இசைக்கப்படுகிறது.
2-ஆவது BGM வயலின் இசையுடன் ஆரம்பித்து, பின்னர் கிடார் இசை இணைந்து அதன்பின் புல்லாங்குழலின் இசைமேல் வயலின் இசை பிரவாகிக்க, மகுடியிசை போல் வந்து முடிய, 2-ஆவது சரணம் "கையளவு பழுத்த மாதுளை", என்று ஆரம்பிக்கிறது. அதே தபேலா நடை இணைந்து கொள்ள முத்தாய்ப்புடன் 2-ஆவது சரணம் முடிய, பல்லவி ஆரம்பிக்கிறது "விழியிலே".- இப்பொழுது வயலின் பதில்கள் இன்னும் வேகமெடுத்து சத்தமாக ஒலிப்பதுபோல் கேட்கிறது. முடிவிலே அதே டியூன் ஹம்மிங்குடன் வந்து பாடல்  முடிகிறது. பாடலின் வேகமும் இசையும் நம் ஹார்ட் பீட்டையும் அதிகரிக்கிறது. ஆனால் பதட்டமாக அல்ல பரவசமாக.
பாடலின் குரல்:

என்ன காரணமோ தெரியவில்லை, தமிழ்த்திரைப்படங்களில் ஒலித்த ஒலிக்கின்ற பின்னனிப் பாடகர்கள் பெரும்பாலும் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். ஜேசுதாஸ், S.P. பாலசுப்பிரமணியம், பி.சுசிலா, ஜானகி, மனோ, சித்ரா, ஜெயச்சந்திரன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும் தமிழை நன்கு கற்று பாடல்களை அருமையான உச்சரிப்பில் கொடுத்த ஆண் குரல்களில் S.P.பாலசுப்ரமணியத்திற்கு ஈடு இணையில்லை. ல,ள,ழ மட்டுமின்றி ன,ண வையும், ர, ற வை தெளிவாக உச்சரிப்பவர். இந்தப்பாட்டின் ட்யூனுக்கும் வரிகளுக்கும் அழகுக்கு அழகு சேர்க்கும் அதிசயக்குரல்.  இந்தப்பாடல் SPB பாடிய பாடல்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று என்று கூட சொல்லலாம். காதல் ததும்பும் குரலில் அப்படியே கொஞ்சி வர்ணித்து உருகுகிறார். ஏதோ தானே காதலில் விழுந்து, தன் காதலியைப் பார்த்து பாடுவது போல் பாடுகிறார். குறிப்பாக பல்லவிக்குப்பின் வரும் தொகையறாவில் "உன் நினைவே போதுமடி" - என்ற வரிகளைக் குறிப்பாக கேட்டுப்பாருங்கள். "மனம் மயங்கும் மெய் மறக்கும்" என்ற வரிகளில் தானே மனம் மயங்கி, மெய் மறந்து பாடியிருக்கிறார். உண்மையிலேயே யாரைத்தான் நினைத்துப் பாடினாரோ பாலுவுக்கே வெளிச்சம்.

பாடல் வரிகள்:  

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே
  
ஓவியனும் வரைந்ததில்லையே
 உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே
 உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி


 கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே


பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம். எப்பொழுதும் சாதாரண வரிகளில் எழுதி பாடலை உயிரூட்டுவதில் சிறந்தவர். காதல் எனும் மலர், விழியிலேதான் முதல் முதல் மலர்கிறது. பின்னர் உயிரிலே கலக்கிறது என்று முதல் வரியிலேயே சொல்லுகிறார். "விழியில் விழுந்து, இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே" என்று பின்னர் “அலைகள் ஓய்வதில்லை", படத்தில் வைரமுத்து எழுதியிருப்பார். அந்தப்பாடலின் முன்னோடி இதுதான் என்று கூடச் சொல்லலாம். முதல் சரணத்தில் "ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல்", என்ற தன் அதீத கற்பனையை அவிழ்க்கிறார். 2-ஆவது சரணத்தில், "கையளவு பழுத்த மாதுளை, பாலில், நெய்யளவு பரந்த புன்னகை" என்கிறார். பாலில் நெய் எப்படி தெரிந்தும் தெரியாமல், இருந்தும் இல்லாமல் இருக்குமோ அப்படி இருக்கிறது உன் புன்னகை என்பது ஒரு புதுமையான யாருக்கும் தோனாத கற்பனை.

பாடல், இசை, ராகம், வரிகள் மற்றும் குரல் என்பவை சரியான அளவிலும் விகிதத்திலும் இணையும்போது பாடல் பெரும் வெற்றி பெறும் என்பதற்கு உதாரணம் இப்பாடல்.  

குறுகிய  காலத்தில்  ஒரு லட்சம் ஹிட்கள் கொடுத்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் . 

7 comments:

  1. ஆல்பி சார்

    பிரமாதமான பாடல் ஒன்றை உங்களுக்கே உரித்தான பாணியில் அழகாக கொடுத்துள்ளீர்கள் . இது போல இன்னும் பல மயக்கும் பாடல்களை நான் சந்திக்கப் போகிறேன் என நினைக்கிறேன் . வாழ்த்துகள் சார் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்லஸ்.

      Delete
  2. நண்பர் ஆல்பி,

    பழைய பின் பதில்களைக் காணவில்லையே என்னாயிற்று? கூகிள் பிளஸ் பிடிக்காமல் மீண்டும் ப்ளாக்கர் வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    அடுத்து அந்தப் புரத்தில் ஒரு மகாராணி பாடலைப் பற்றி எழுதப் போவதாக சொல்லியிருந்தீர்கள். பட்டாக்கத்தி பைரவன் என்ற படத்தில் எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் என்று ஒரு அசாதரணப் பாடல் இருக்கிறது. உங்கள் எழுத்தில் விரைவில் அது வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், கூகிள் பிளஸ் பிடிக்காமல் மீண்டும் ப்ளாக்கர் வந்துவிட்டேன் .நிறைய பழைய பின்னூட்டங்கள் காணாமல் போனதால் இந்த முடிவு. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
      எழுபதுகளில் இளையராஜா இசையமைத்த படங்களின் ஆண்டுகளின் வரிசைக்கிரமமாக எனக்குப்பிடித்த பாடல்களில் ஒவ்வொன்றாக கொடுத்து வருகிறேன். அதில் "பட்டாக்கத்தி பைரவன்" பின்னால் வருகிறது .தங்களின் தொடரும் ஆதரவுக்கு நன்றி காரிகன்.

      Delete
    2. நண்பர் ஆல்பி,

      சரியான முடிவு. எனக்கு இந்த கூகிள் ப்ளஸ் வடிவமைப்பே அயர்ச்சியை கொடுக்கும். எளிமையான ப்ளாக்கர் அமைப்பே சிறந்தது என்பது என் எண்ணம். அதை மீண்டும் மாற்றாதீர்கள்.

      எழுபதுகளில் இளையராஜா பாடல்கள் ஒரு ஆனந்த காற்று. அவரை நான் கடுமையாக விமர்சனம் செய்தாலும் எழுபதுகளில் அவர் அளித்த அற்புதமான பாடல்களை எப்படி மறக்க முடியும்? நான் எனது தளத்தில் அடுத்து இளையராஜாவின் எழுபதுகள் பற்றி எழுத எண்ணியுள்ளேன். ஒருவேளை நீங்கள் எங்கெங்கோ செல்லும் பற்றி எழுதும் முன் நான் அதை செய்துவிடுவேன் என்று தோன்றுகிறது. என்ன ஒரு போட்டி!

      Delete
    3. நன்றி காரிகன் , அய்யய்யோ , போட்டிக்கெல்லாம்
      நான் வரவில்லை ,உங்ககிட்டே என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் .உங்ககிட்ட போட்டி போட்டு ஜெயிக்க முடியுமா ?
      உங்களிடம் பேச விரும்புகிறேன், என்னுடைய ஈமெயில் alfred_rajsek@yahoo.com

      Delete
  3. அருமையான பாடல். பாலா ரொம்பவும் அனுபவித்துப் பாடியிருப்பார்....

    மீண்டுமொரு முறை இங்கே கேட்டு மகிழ்ந்தேன்...

    ReplyDelete