Monday, October 27, 2014

இளையராஜா கிறிஸ்தவரா?

எழுபதுகளில் இளையராஜா பாட்டு 6 - தேவன் திருச்சபை மலர்களே.

படத்தில் இருப்பவர்கள் பாடகி இந்திரா @பூரணி

1976-ல் வெளிவந்த “அவர் எனக்கே சொந்தம்” படத்தில் வந்த அருமையான பாடல் இது.பாடலைக்கேளுங்கள்.

கிடார் ஸ்ட்ரம்மிங்கில் கார்டுகள் (D Major) மாற்றி மாற்றி ஒலிக்க "தேவன் திருச்சபை மலர்களே வேதம் ஒலிக்கின்ற மணிகளே" என்று பாடல் ஆரம்பிக்கிறது. அடுத்த வரி C Major கார்டில் இறங்க, குரல் பேசில் (Bass) இறங்கி மனதைத் தொடுகிறது. “வேதம் ஒலிக்கின்ற மணிகளே”, என்ற வரியில் ஆலய மணி ஒலிக்க ஒரு தேவாலயச் சூழ்நிலை பிறக்கிறது.
முதல் BGM-ல் வயலின்கள் ஒலிக்க பேங்கோஸ் சேர்ந்து கொள்கிறது. பின்னர் புல்லாங்குழல் இணைகிறது. முதல் சரணத்தில் தொடர்ந்து பேங்கோஸ் ஒலிக்க பாடல் வேகமெடுக்கிறது, "விண்மீனை உன் கண்களில் பார்க்கிறேன்”. சரணத்தின் முடிவில் மறுபடியும் பல்லவிக்கு முன்னால் வந்த Prelude, கிடார் ஸ்ட்ரம்மிங் வர "தேவன் திருச்சபை மலர்களே" பல்லவி மீண்டும் ஒலிக்கிறது.
இரண்டாவது BGM-ல் பிரைட்டாக அக்கார்டியன் இசை சேர்ந்து கொள்ள கொஞ்சமும் பிசிறில்லாத விசில் சத்தம் இனிமையாக வருகிறது. சுருதி சுத்தமாக விசிலடித்த மகானுபாவன் யாரென்று தெரியவில்லை.
இரண்டாவது சரணம் அதே ராகத்தில் "கண்ணே மணியே" என்று ஆரம்பிக்கிறது. கிடாரின் ஸ்ட்ரம்மிங்கோடு பல்லவி மீண்டும் வந்து முடிய, எழுச்சியுடன் எழுந்த வயலின்கள் 'தேவன் திருச்சபை மலர்களே' என்று வாத்ய இசையினை வாசிக்க, திரும்பவும் அதே இசை மூன்று முறை அடுத்தடுத்த உச்ச சுதியில் ஏறி மீண்டும் இறங்கி, அலையாய் பரவி, மெதுவாகி நிறைவு பெறுகிறது. ஒரு தடவை கேட்டுவிட்டால் அந்தநாள் முழுவதும் நினைவில் தங்கி முணுமுணுக்க வைக்கும் மெலடி.
பாடல் வரிகள்:-

தேவன் திருச்சபை மலர்களே...
லல்லாலல லலலல
வேதம் ஒலிக்கின்ற மணிகளே ....
லல்லாலல லலலல
போடுங்கள் ஓர்....புன்னகைக்கோலம்...
பாடுங்கள் ஓர்...மெல்லிசை  ராகம் ..!

விண்மீனை உன் கண்களில் பார்க்கிறேன்
பொன்மானை உன் நடையினில் காண்கிறேன்
எங்கள் அன்னை மேரியின்
பொங்கும் கருணை மழையிலே
என் செல்வமே என் தெய்வமே
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே


கண்ணே மணியே பொன்னெழில் மலர்களே
அன்பே அமுதே அருந்தவப் பயன்களே
கொஞ்சூம் மழலை மொழியிலே
உள்ளம் மயங்க மயங்கவே
பொன்வண்டு போல் சில்வண்டு போல்
கவிபாடுங்கள் உலகம் மகிழவே

பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். அற்புதமான வரிகள் என்று சொல்லமுடியாது. ஆனால் ஆங்காங்கே ஓரிரு வார்த்தைகளில் அவரின் முத்திரை இருக்கிறது. குறிப்பாக விண்மீனைப் போல் கண், அருந்தவப்பயன் என்ற வார்த்தைகளில்.
குரல்:-
பாடலைப்பாடியது இந்திரா மற்றும் பூரணி . சிறுகுழந்தையின் மழலை மொழியை பூரணியும் முக்கிய பாடலை இந்திராவும் பாடியிருக்கிறார்கள்.
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்.
என்ற வள்ளுவனின் வாக்குப்போல எந்தப் பாடலுக்கு யார் குரல் சரியாக இருக்கும் என்பது மாத்திரமல்ல, படத்தின் சூழ்நிலை, கதாபாத்திரத்துக்கும் நடிக நடிகையருக்கும் எந்தக்குரல் பொருத்தமாக இருக்கும் என்பதனையும் முடிவு செய்து பாட வைப்பதில் ராஜா, ராஜா தான். இந்தப் பாடலுக்குத் தேவையான ஒரு கிறிஸ்தவப் பெண்ணின் குரலாக இந்திராவின் குரல் அழகாக இழைகிறது. பாடலின் குதூகல மனநிலை குரலில் அற்புதமாக இருக்கிறது. வரிகளின் உச்சரிப்பும் மிகப்பிரமாதம்.
Ilayaraja with Poorani

இந்திரா ஏன் அதிகமாய் சோபிக்கவில்லை என்று தெரியவில்லை.  குழந்தையாய் பாடிய பூரணி பின்னர் கோரஸ் பாடகி ஆனதோடு, கங்கை அமரன் இசைக் குழுவில் பாடி உலகம் முழுவதும் சென்றார். பூரணி பாடிய இன்னொரு பாடல்இதோ இதோ என் நெஞ்சிலே”.  
இளையராஜா கிறிஸ்தவரா?
தேனிக்கு அருகில் உள்ள பண்ணைப்புரத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒரு குடும்பத்தில் பிறந்தவர்தான் இளையராஜா. “ஞான தேசிகன்” என்பது இயற்பெயர். “ராசையா”, என்று செல்லமாக அழைக்கப்பட்டார். சிறு வயதில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு  போயிருக்கலாம். ஆனால் வளர்ந்த போது அதிகமாக அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களுடன் சுற்றித்திரிந்தார். அவர் நாத்திகம் பேசும் கம்யூனிசவாதி. ஆனால் இளையராஜா தன்னை ஒரு தீவிர இந்துவாகவே அடையாளப் படுத்திக் கொண்டார். அவர் இசையமைத்துப் பாடிய 'ஜனனி ஜனனி' மற்றும் "எனக்கொரு அன்னை வளர்த்தவள் என்னை" என்ற பாடல்களில் பக்திரசம் சொட்டும்.
ஆனால் ஒரு கலைஞனை ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மத அமைப்பு என்னும்  குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிப் பார்க்கத் தேவையில்லை. கலைஞனை  கலைஞனாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பது என் அபிப்ராயம். எனவே இளையராஜா கிறிஸ்தவரா? இந்துவா? என்பது முக்கியமில்லை. எல்லாரும் போற்றும் அதி அற்புத பாடல்களை கொடுத்திருக்கிறார் என்பதே முக்கியம். அதுதான் நம் எல்லோருக்கும் தெரியுமே.

பாடலை மீண்டும் ஒருமுறை கேளுங்களேன்.


அடுத்த வாரம் “விழியிலே மலர்ந்தது உறவிலே கலந்தது”

18 comments:

  1. அருமை நண்பரே.. மீண்டும் என் அபிமான பாடல், உங்களின் அருமையான வரிகள்..
    நீங்கள் இளையராஜா பற்றி சொன்னது நன்று "கலைஞனை கலைஞனாக மட்டுமே பார்க்க வேண்டும்".

    ReplyDelete
  2. ஒரு சிறு திருத்தம்!!! :)
    பாடுங்கள் ஓர் இன்னிசை ராகம் ..----> பாடுங்கள் ஓர் மெல்லிசை ராகம்..

    ReplyDelete
    Replies
    1. திருத்தியாகிவிட்டது மிகவும் நன்றி நண்பா

      Delete
  3. என்றாலும் உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் ................

    ReplyDelete
  4. உங்கள் பதிவை படிக்க வேண்டும் என்பதற்காக இப்படி இளையராஜாவையும் , மதத்தையும் சேர்த்து ஒரு தலைப்பு அவசியம்தானா என்று கேட்க்க தோன்றுகிறது ...என்றாலும் உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் ................

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு கிறிஸ்தவப் பெண் பாடுவது போன்று அமைந்த பாடல்.
      ஒரு டிபிகல் கிறிஸ்தவ பாடலின் டியூன் போலவே ஒலிக்கின்றது , இளையராஜாவின் மனதின் அடியாழத்தில் அவர் இளமையில் தேவாலயத்தில் கேட்ட/ பாடிய பாட்டுகள் நிச்சயமாக இடம் பெற்று இருக்கும். பல பேர் இந்த கேள்வியை கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அதைத்தான் நானும் கேட்டு தெளிவு படுத்தியிருக்கிறேன். என்னுடைய பதிவை பலர் படிக்கவேண்டும் என்பதும் என் ஆசைதான். என்னுடைய மற்ற தலைப்புகளைப்போல் இதுவும் ஒரு உத்தியாகவும் அமைந்து விட்டது .

      Delete
  5. சிறப்பான அலசல்.தங்களின் வாதம் உண்மை .மதம் பிடித்த மதம் தேவையில்லை மனிதம் மட்டுமே இருந்தால் போதும்

    ReplyDelete
    Replies
    1. இளையராஜாவின் மனிதம் என்று ஒன்று இதுவரை வெளிப்பட்டதாக நியாபகம் இல்லை .அவரை வெறும் இசை மேதையாக மட்டுமே பார்க்கிறேன்.நீண்ட நாள் கழித்து வருகை தந்த கவிஞருக்கு நன்றி

      Delete
  6. நண்பர் ஆல்பி,

    சிறந்த பாடலொன்றை சிறப்பாக அலசியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தேவன் திருச்சபை மலர்களே பாடல் அப்படியே ஒரு கிருஸ்துவ தேவாலய உணர்வைக் கொடுக்கக்கூடிய பாடல். ஏன் உதய கீதம் படத்தின் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் பாடல் கூட இதேபோலத்தான். (என் பார்வையில்.)

    இளையராஜா கிருஸ்துவரா என்ற கேள்வி ரஹ்மான் இந்துவாக இருந்தவரா என்பதைப் போன்றது. டேனியல் ராசையா என்ற இயற்பெயர் கொண்டவர் இளையராஜா என்பது பொதுவாக பலருக்குத் தெரியாதது. அவர் கிருஸ்துவ தேவாலயங்களில் தன் முதல் இசை அனுபவத்தைப் பெற்றிருக்கலாம் என்று யூகிக்கலாம். மேலும் அவர் தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் மேற்கத்திய இசையை அறிந்துகொண்டார். இன்னொரு கருத்து கூட இருக்கிறது. உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. ஒரு கிறிஸ்துவராக தன்னை அடையாளப் படுத்திக்கொள்வதினால் வணிக ரீதியாக வெற்றி பெறுவதில் சிலதடைகள் வரலாம் என்பதால் அவர் தன் மதத்தைப்பற்றி பேசுவதில்லை என்று சிலர் சொல்வார்கள்.

    ஒரு கலைஞனுக்கு மதம், சாதி வெறும் சம்பிரதாய அடையாளங்கள் என்பதோடு நாம் நிறுத்திக் கொள்வது நலம்.

    விழியிலே மலர்ந்தது, உறவுகள் தொடர்கதை, செந்தாழம் பூவில், நினைவோ ஒரு பறவை என வரிசையாக இளையராஜாவின் சிறப்பான பாடல்களை உங்கள் தளத்தில் காணலாம் என்று நினைக்கிறேன். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் அதிக தகவல்கள் கொடுத்த நண்பர் காரிகன் அவர்களுக்கு நன்றி.
      நாம் இருவரும் எப்போதும் ஒன்றாகவே சிந்திக்கிறோம் என்பதிலும் மகிழ்ச்சி .
      முத்து காமிக்ஸில் எனக்கும் மிகவும் பிடித்தவர்களில் ஒருவர் பிலிப் காரிகன்.

      Delete
  7. அண்ணே,

    நல்ல பதிவு. நீங்கள் தொடர்ந்து குருப்பிடும் இந்த பாடல்கள் மிகவும் பிரபலமானவைகள் அல்ல. ஆனாலும் நன்றா இருகின்றது. ஏன் பிரபலமாகவில்லை. ஆண்டவனுக்கே வெளிச்சம்.
    எங்கேயோ கேட்ட குரல் படத்தில் வரும் " தாயும் நானே தங்க இளமானே" என்னும் பாடல், இன்றும் கிறஸ்தவர்கள் தங்கள் ஆலயத்தில் பாடும் " தேவனே நான் உமதண்டையில்" என்ற பாடல் தானே. இந்த பாடல் இளையராஜாவை எதோ ஒரு வகையில் பாதித்து இருகின்றது. இதை காப்பி என்று கூட சொல்ல முடியாது. ராகத்தை கொஞ்சமும் மாற்றாமல் வார்த்தைகளை மட்டும் மாற்றி வந்த பாட்டு. தனக்கு பிடித்த ஒரு பாடலை நம்மக்கு எல்லாருக்கும் தந்து இருகின்றார் போல்.

    ReplyDelete
    Replies
    1. அதே போலவே "ஆனந்தமே ஜெயா ஜெயா" என்ற கிறிஸ்தவ பாடலின் ராகத்தில் "மாமன் வீடு மச்சு வீடு" என்ற இளையராஜாவின் பாடல் வரும்.

      Delete
    2. "ஆனந்தமே ஜெயா ஜெயா" - " தேவனே நான் உமதண்டையில்" இந்த இரண்டு பாடலுமே தம் " கொள்ளு தாத்தா " எழுதியது என்பதை யாம் அறிவோம் நண்பரே. கவிஞ்சர் பரம்பரை தானே தாம். தம்மை அறிந்தது எம் பாக்கியம்.

      Delete
    3. கவிஞர் பரம்பரை என்பதெல்லாம் கொஞ்சம் ஓவராய் இருந்தாலும் , நீர் சொன்ன பாடல்களை எழுதி மெட்டமைத்தவர்கள் என்னுடைய கொள்ளுத்தாத்தாக்கள் என்பது உண்மைதான். நன்றி விசு .

      Delete
    4. அப்படியா நண்பர் alfy.?
      தகவலுக்கு நன்றி விசு அவர்களே...!!!

      Delete
    5. அருமையாக எழுதி உள்ளீர்கள். மாமன் வீடு மச்சு வீடு என்ற பாடல் பிலஹரி ராகம். 'ராக வேணு' என்ற கீர்த்தனை கேட்டால் அப்படியே இருக்கும். "ஆனந்தமே ஜெயா ஜெயா"வும் பிளஹரியாக இருக்கும். தாயும் நானே பாடல் "துஜாவந்தி" ராகத்தில் மெட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்ப கால கிருத்துவப்க பட்டல்கள்வ பல நல்ல கர்நாடக சங்கீதத்தின் ராகங்களில்/ கீர்த்தனைகளில் அமைக்கப்பட்டவை. இதற்கும் இளையராஜா மதத்திற்கும் என்ன சம்பந்தம்?

      Delete
    6. கர்நாடக இசையில் வந்த பாடல்கள் என்பதால் ஒரே மாதிரி ஒலிக்கின்றன என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம்தான் , வருகைக்கு நன்றி.

      Delete