Monday, October 20, 2014

இளையராஜா சென்டிமென்ட் !!!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா பாட்டு-5 சோளம் வெதைக்கயிலே

'பதினாறு வயதினிலே' என்ற தமிழ் சினிமாவை யதார்த்த உலகத்துக்கு இட்டுச் சென்ற படத்தில் எல்லாமே மிகவும் புதிது. கதைக்களம், சூழல், கேமரா ஆங்கில்கள் எல்லாவற்றுக்கும் மேலாக அதன் இசை. பாரதிராஜா, நிவாஸ், இளையராஜா என்ற மேஜிக் காம்பினேஷனில் கமல், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் என்ற அபூர்வ டீம் . இந்தப்படத்தில் மிகவும் பேசப்பட்ட இளையராஜாவை உச்சத்தில் தூக்கி நிறுத்திய பாடல் "செந்தூரப்பூவே" என்ற எவர்கிரீன் மெலடி. கங்கை அமரன் எழுதி, ஜானகி பாடிய இந்தப்பாடல் தேசிய விருது பெற்றது.
அந்தப்பாடலைப்பற்றி எல்லோருக்கும் தெரியும் என்பதால் நான் சத்தமில்லாமல் புரட்சி செய்த மற்றொரு பாடலான 'சோளம் வெதைக்கயிலே' என்ற பாடலை எடுத்துக் கொண்டிருக்கிறேன். பாடலை ஒரு தடவை கேட்டுவிடலாமே ?


பாடல் களம்:

கிராமத்தில் எல்லாவற்றுக்கும் பாடல் பாடுவது முற்கால வழக்கம். இப்போது எப்படி என்று தெரியவில்லை. நாற்று நடும்போது, களையெடுக்கும் போது, அறுவடை செய்யும் போது நெல்லைத் தூற்றும் போது என கிராமியப் பாடல்கள் பல உண்டு.
அப்படியாக இந்தப்பாடல் அறுவடை சமயத்தில் பாடுவது போல் அப்பட்டமான கிராமியத்தின் எளிய சூழ்நிலையை விவரிக்கிறது. இதிலே நன்செய் நிலங்களுக்கும் புன்செய் நிலங்களுக்கும் உள்ள சூழல் மிகவும் வித்தியாசமாய் இருக்கும். நன்செய் என்பது அதிக நீர் தேவைப்படும், நெல், கரும்பு, பருத்தி ஆகியவை விளையும் நிலங்கள். பெரும்பாலும் பெருந்தனக்காரர்கள் வைத்திருப்பார்கள். புன்செய் என்பது ஏறத்தாழ வானம் பார்த்த பூமி. அதில் சோளம், திணை, சாமை, கேழ்வரகு  ஆகியவை விளையும். சிறுவிவசாயிகள் இதனைப் பெரும்பாலும் சொந்த உபயோகத்திற்காக பயிரிடுவார்கள்.
அப்படி ஒரு சூழ்நிலையிலே நல்ல விளைச்சல் கண்ட நாயகன், நாயகியைப் பார்த்து பாடுவது போல் அமைந்த பாடல் இது. விதைவிதைக்கும் போது அறுவடையில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னாயே. நல்லா விளைஞ்சிருச்சு, திருமணம் செய்து கொள்ளலாமா என்று நாயகியைப் பார்த்து கேட்கிறான்.
இசைக்கோர்வை:
முற்றிலும் புதிதான ஆரம்ப இசையுடன், பேஸ்  கிடார் மென்மையாக  உறும, பறவைகளின் படபடக்கும் இறக்கைகளின் சத்தம் கேட்க, பாடல் ஆரம்பிக்கிறது. 'சோளம் வெதைக்கையிலே"
முதலாவது BGM-ல் அறுவடைப் பெண்களின் கோரஸும் குலவைச் சத்தமும் ஒலிக்க, உறுமி உரும, “தந்தனதானா தானேதன்னா தந்தனதானா”, என்று இருமுறை பாடி முடிக்க "மானே என் மல்லிகையே மதுரை மரிக்கொழுந்தே" என்று சரணம் ஆரம்பிக்க தவில் போன்ற இசைக் கருவிகள் சந்தோஷமாக இணைந்து கொள்கின்றன.
            2-ஆவது BGM- புல்லாங்குழல் இசையோடு வந்து முடிய இரண்டாவது சரணம் "மாரியம்மன் கோயிலிலே மாறாம கைப்பிடிக்க", என்று ஆரம்பித்து "கண்ணே கருங்குயிலே நல்ல காலம் பொறந்ததடி", என்று முடிந்து அப்படியே Fade -ஆகி நிறைவு பெறுகிறது.
உடனே "ஆத்தா நான் பாஸாய்ட்டேன்" என்று ஸ்ரீதேவியின் குரலோடு படம் ஆரம்பிக்கும். அந்த வரிகளில் பாரதிராஜாவின் குரலும் இணைந்து சொல்கிறது", ஆத்தா நான் பாஸாய்ட்டேன்" என்று. எத்தனை தடவை 'ஒலிச்சித்திரம்' கேட்டிருக்கிறோம்.
குரல்:
திரையிசையில் இளையராஜா பாடிய முதல்பாடல் இதுதான். முற்றிலும் வேறுபட்ட குரல். இதுவரை கேட்ட எந்தக்குரலின் இனிமையோ சாயலோ இல்லை. கிராமத்தில் நிஜமாகவே அறுவடை செய்யும் ஒரு சிறு விவசாயி பாடியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே ஒலிக்கிறது. அவ்வளவு பொருத்தம். பாவமோ ஏக்கமோ, தாபமோ குரலில் தெரியவில்லை. ஆனால் அவை வரிகளில் இருப்பதால் அது பெரிதாக தெரியவில்லை. ஒரு ரஸ்டிக் குரல் அப்படியே 'ரா'வாக ஒலிகிறது. குரலில் ஒரு உற்சாகத் துள்ளல் மட்டும் தெரிகிறது. அதன்பின் இளையராஜா பல பாடல்கள் பாடி அவருடைய குரலுக்கென தனி ரசிகர்கள் உருவானது நமக்கெல்லாம் தெரியும்.
அதுமட்டுமல்லாமல் சினிமாவில் புதிய ஒரு சென்ட்டிமென்டை உருவாக்கியது இந்தக்குரல். சினிமாவில் மூடத்தனமான பல சென்டிமென்ட்ஸ்  இருப்பது நமக்கு தெரியும். 'பதினாறு வயதினிலே'வின் வெற்றிக்குப் பிறகு டைட்டில் சாங் கண்டிப்பாக வைத்து, அதுவும் இளையராஜா பாடினால் கண்டிப்பாக படம் ஹிட் என்ற புதிய சென்ட்டிமென்ட்  துவங்கியது.

பாடல்வரிகள்:

சோளம் வெதைக்கியிலே
சொல்லிப்புட்டுப் போன புள்ளே
சோளம் விளைஞ்சு காத்துக்கிடக்கு
சோடிக்கிளி ங்கே இருக்கு?
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
தங்கமே கட்டழகி, எனக்கு
நல்லதொரு பதிலைச் சொல்லு
குங்குமப் பொட்டழகி.

மானே என் மல்லிகையே மதுரை மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே திருநாளு தேரழகே
உன்னை நெனைக்கையிலே என்னை மறந்தேனடி
பொன்னே பொன் மயிலே  
எண்ணம் தவிக்குதடி.  (சோளம் வெதைக்கியிலே)

மாரியம்மன் கோவிலிலே
மாறாம கைப்பிடிக்க
நாளும் ஒன்னு பார்த்து வந்தேன்
நல்ல நேரம் கேட்டுவந்தேன்
அம்மன் மனசுருந்தா
அருள் வந்து சேருமடி
கண்ணே கருங்குயிலே நல்ல காலம் பொறந்ததடி.

பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். வரிகளில் அப்படியே கிராமத்துச் சூழலை படம் பிடித்துக்காட்டுகிறார். இளையராஜாவின் பெரும்பாலான பாடல்கள் சந்தத்திற்கு எழுதியவை தான். MSV வேடிக்கையாகச் சொல்வார், “சந்தத்திற்கா இல்லை சொந்தத்திற்கா?”, என்று. மேலும் சொல்வாராம் “மேட்டருக்கு மீட்டரா, மீட்டருக்கு மேட்டரா ?”, என்று. இளையராஜாவின் சந்தத்திற்கு கவியரசரின் வரிகள் சொந்தமாகவே இழைகிறது இந்தப்பாடலில்.
பல்லவியில் நாயகன், பாடுகிறான் – “சோளம் விதைக்கும் போது, அறுவடையில் பார்க்கலாம் என்று  சொன்னாயே, சோளம் விளைஞ்சு காத்துக்கிடக்குது. நீ சொன்ன சொல்லை மறந்துவிடாதே தங்கமே கட்டழகி, சீக்கிரம் நல்ல பதிலைச் சொல்லு குங்குமப் பொட்டழகி”, என்று.
  1. kannadasan
முதல் சரணத்தில் நாயகன் நாயகியை வர்ணித்துப்பாடுகிறான். வர்ணிப்பதற்கு கவிஞர் பயன்படுத்தும் சொற்களில் மண்ணின் மணம் வீசுகிறது. “மல்லிகையே, மதுரை மரிக்கொழுந்தே, தினைக்கருதே, திருநாளில் ஓடும் தேரே”, என்று உருகும் சொற்கள்.
2-ஆம் சரணத்தில் ஒரு புதிய செய்தியை நாயகன் சொல்வது போல் எழுதியிருக்கிறார். “எளிமையான திருமணமாக மாரியம்மன் கோவிலில் உன் கைபிடிக்கிறேன். நாள் கூடப் பார்த்துவிட்டேன் நல்ல நேரமும் கேட்டுவிட்டேன். அம்மன் அருளால் நமக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது”, என்று சொல்வதோடு யதார்த்தமான உண்மையான கருமை நிறங்கொண்ட நாயகியை, “கண்ணே கருங்குயிலே”, என்று விழித்திருக்கிறார். மின்னும் கருப்பில் அழகைப் பார்த்திருக்கிறார் கவிஞர். அதுதானே இயற்கையான அழகு .
இந்தப் படத்தின் ஒரு தீம் செட்டிங்காக  முன்னோட்டமாக இந்தப்பாடலும், சூழலும் வரிகளும் இசையும் அமைந்திருக்கின்றன.

இன்னொருமுறை பாடலைக்கேட்டு விடுங்கள்.  

அடுத்த வாரம் "தேவன் திருச்சபை மலர்களே"  .



14 comments:

  1. அருமையான பதிவு.
    இந்த பாடல் ஒரு சகாப்தம் தான். ஒரு குறையும் சொல்ல இயலாத பாடல். இந்த பாடல் ஒரு புது ட்ரெண்டை உருவாக்கியது. படத்தின் ஆரம்பத்தில் நாயகி தன்னை பற்றியும் தனக்கு பிடித்த வற்றையும் பற்றி பாடுவது இந்த பாட்டில் ஆரம்பித்தது என்றே சொல்லலாம்.
    உதாரணதிற்கு, மணிரத்தினத்தின் ... சின்ன சின்ன ஆசை.
    பாலச்சந்தரின் " வான் மேகம்"...
    நீங்கள் குறிப்பிடும் "சோளம் விதைக்கையிலே" நல்ல பாடல் தான். இருந்தாலும் மற்ற பாடல்கள் மிகவும் "சூப்பர் ஹிட்" ஆனதால் இந்த பாடல் சற்று சோரம் இழந்து விட்டது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், ஓட்டுக்கும் நன்றி விசுAWESOME.

      Delete
  2. அருமையான பாடல் இது. மீண்டும் இங்கே கேட்கக் கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  3. Replies
    1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி தனிமரம்.

      Delete
  4. அருமையான அலசல் நண்பரே.. அதுவும் அந்த நன்செய், புன்செய் செய்திகள் நன்று..
    அந்த வெற்றி மனோபாவத்தின் ஆரம்ப புள்ளி இது தானா!!!
    ஒரு சிறு திருத்தம்!!! :)
    சோடிக்கிளி எங்கே இருக்கு? ---> சோடிக்கிளி இங்கே இருக்கு?
    திரும்பவுமா என நீங்கள் முறைப்பது தெரிகிறது.. :-)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் திருத்தத்திற்கும் நன்றி நண்பா.தயவு செய்து திருத்தம் சொல்வதற்கு எந்த தயக்கமும் வேண்டாம் .
      அது நான் இன்னும் கவனமாக இருக்க உதவும்.

      Delete
  5. இந்த பாடலை கேட்கும்போது, அம்மன் கோவில் கிழக்காலே பாடல் overlap ஆகிறது :)
    இரண்டு பாடலுக்கும் பல ஒற்றுமை இருக்கிறது என்று நினைகிறேன்.., இசை வடிவம் ஒரே மாதிரி இருப்பது போல் தெரிகிறது... ??

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் நண்பா .இந்த இரண்டு பாடல்களின் எந்த பல்லவியும் முடிந்தபின் அடுத்த பாடலின் சரணத்தை பாடிக்கொள்ளலாம் .

      Delete
  6. நண்பர் ஆல்பி,

    பதினாறு வயதினிலே என்றாலே எல்லோரும் செந்தூரப்பூவே என்று அந்த ஒரே பாடலையே ஆயிரெத்தெட்டாவது முறையாக சிலாகிப்பார்கள். சோளம் வெதைக்கயிலே பாடலை ஞாபகமாக குறிப்பிட்டது குறித்து மகிழ்ச்சி. நல்ல பாடல். இளையராஜாவின் குரலுக்கு ஏற்ற பாடல். அவர் ஒழுங்காக பாடிய சில பாடல்களில் இதுவும் ஒன்று.

    நண்பா என்பவர் இந்தப் பாடல் அம்மன் கோவில் கிழக்காலே (சகலகலாவல்லவன் படத்தின் டைட்டில் சாங்) பாடலைப் போலவே இருப்பதாக கூறியுள்ளது குறித்தே எழுத வந்தேன். சோளம் வெதைக்கயிலே பாடலின் மறு வடிவமே அம்மன் கோவில் கிழக்காலே. இரண்டும் ஒரே மெட்டில் அமைக்கப்பட்டவை. இதே போல ஒரே மெட்டில் பல பாடல்கள் இளையராஜா அமைத்திருக்கிறார்.

    தேவன் திருச்சபை மலர்களே பாடலைப்பற்றி அடுத்து எழுதுவதாக சொல்கிறீர்கள். மிகவும் அருமையான பாடல். இளையராஜாவின் இசையில் எனக்குப் பிடித்த டாப் டென் லிஸ்டில் இருக்கும் பாடல். வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. காரிகன் உங்கள் இசை ஞானம் அபாரம் .
      உண்மைதான் . அதற்கு பல பாடல்களை உதாரணமாய் சொல்லலாம்.
      .எங்கள் இசைக்குழுவில் அப்படி மாற்றி மாற்றி நாங்கள் பாடுவதுண்டு .

      Delete
  7. ஆல்பி சார்

    இளையராஜாவின் குரலில் முதல் பாடல். அற்புதமாக இருக்கும் . கண்ணை மூடிக் கேட்டால் ஒரு கிராமத்துப் பின்னணியை மனக்கண் முன் கொண்டு வரும் . குரலும் வித்தியாசமான குரல். உங்கள் வர்ணனைகளும் அருமை. வெளுத்துக் கட்டுகிறீர்கள் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சார்லஸ்.

      Delete