With our Project Manager Shankar in Saravana Bhavan |
நியூயார்க்கில்
காலை வழக்கம்போல் விடிந்தது. இன்று தீபாவளி அல்லவா? வெளியே ஆழ்ந்த நிசப்தம் .வழக்கமாக பள்ளி
எழுச்சி பாடும் பறவைகளையும் காணோம் .இந்தியாவில் தீபாவளியின் அதிகாலை எவ்வளவு அமர்க்களமாக
இருக்கும். ஹூம்
தீபாவளிதான் எவ்வளவு மகிழ்ச்சியான பண்டிகை.
நான் சிறுவயதில் இருக்கும்போது கொண்டாடித் திளைத்த அனுபவங்கள் கண்முன் வந்து போயின.
அட அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இருங்க
இருங்க அவசரப்படாதீங்க. நான் கொண்டாடின விதத்தைச் சொல்றேன்.
அதிகாலையில்
பட்டாசு சத்தம் கேட்டு எழுந்து விடுவேன். அன்றைய நாள் மட்டும் அம்மா அல்லது ஆயா எழுப்பாமல்,
விடுமுறை தினம் என்றும் பார்க்காமல் நானே எழுந்து விடுவேன். ஆனாலும் எனக்கு முன்னே
எழுந்திருந்த என் அம்மா பாத்திரங்களை விளக்கி வைத்துக் கொண்டிருப்பார்கள். வேகவேகமாக
பல்விளக்கி, ஆயா தரும் சுடு தண்ணீரை விளாவி, தலைமுழுகிவிட்டு (கங்காஸ்நானம்?) அப்பா,
போஜ ராஜா கடையில் எடுத்து முத்து டெய்லரிடம் தைத்த பாலியெஸ்டர் துணிகளை அணிந்து வந்தால்,
அங்கே சூடாக இட்லி இருக்கும். தேங்காய் சட்னியில் தோய்த்து ஒரு மூன்று இட்லிகளைச் சாப்பிட்டுவிட்டு
(ஒவ்வொன்றும் மூன்று கடை இட்லிகளுக்குச் சமம்) அவரச அவசரமாகக் கிளம்புவேன். என் தம்பி மனோ அப்பதான்
எழுந்து பெட்ஷீட்டில் தன்னை முழுவதுமாக சுற்றி சமையலறையில் உட்கார்ந்துவிடுவான். அவன்
இரு காதிலும் அம்மா பஞ்சை வைத்துவிடுவார்கள். ஒரு ரெண்டு நாளைக்கு அதுதான் அவன் இருப்பிடம்.
முந்தின
நாள் மரக்கடை நாடார் கடையில், பொட்டு கேப்,
ரோல்
கேப் வெடி, சீனி வெடி, பிஜ்லி வெடி, கம்பி மத்தாப்பு, பூந்தொட்டி, தரைச்சக்கரம், சாட்டை,
கலர் மத்தாப்பு, பாம்பு மாத்திரை ஆகியவற்றில் வகைக்கு குறைந்தது 5 பெட்டி அப்பா வாங்கித்தருவார்.
பரணில்
இருக்கும் முந்தின வருஷம் வாங்கிய துப்பாக்கியை பத்து நாள் முன்பே வேலை செய்கிறதா?
என்று செக் செய்து விடுவேன்.சுருள் கேப் வெடியை துப்பாக்கியில் லாவகமாக செருகி இழுத்து, ரெண்டு தடவை டிரிக்கரை இழுத்து
சுருள் கேப் மருந்து துப்பாக்கியின் நாக்கின் கீழ் வரும்படி ரெடி செய்து கொள்வேன்.
அப்படி தயார் பண்ணும் போது ஓரிருமுறை வெடித்துவிடும். தம்பி மனோகர் அழ ஆரம்பிப்பான்.
"டேய்
சேகர் வெளியே போய் வெடி
தம்பி பயப்படுறான் , "அம்மா சொல்ல, அப்படியே வெளியே வருவேன்.
வாசல்
சுத்தமாக பெருக்கப்பட்டு சாணித் தண்ணீர் தெளித்து அம்மாவுக்குத் தெரிந்த ஒரே கோலமான
நாலு புள்ளி நாலு வரிசை மின்னும். எப்ப எழுந்து
போட்டாங்களோ தெரியாது. அதன் பின்னர் நான் என்
தோழிகளிடம் கற்றுக் கொண்டு பண்டிகை நாட்களில் மட்டும் அஞ்சு புள்ளி அஞ்சு வரிசை கோலம்
போடுவேன்.
அப்போதுதான்
விடியத்துவங்கும்.கையில் துப்பாக்கியோடு தெருவில் நடக்கும்போது அந்தக் கால ஜேம்ஸ்பாண்ட்
ஜெய் சங்கர் போல என்னை நினைத்துக்கொண்டு, புன்சிரிப்புடன் வெடிக்கத் துவங்குவேன். பட்
பட் பட்டென்று தொடர்ந்து வெடிக்க உற்சாகமாக தெருவில் நடை போடுவேன்.
முஸ்லீம்கள்
அதிகம் வசிக்கும் அந்தத் தெருவில், 'யாரு அது வெடிச் சத்தம் காலங்காத்தால' என்று யாரோ
கேட்க, "நம்ம வாத்தியார் மகன் சேகர்தான்", என்று யாரோ பதில் கூறுவார்கள்.
ரோல் கேப்பில் ஒன்றொன்று வெடிக்காவிட்டாலும், தொடர்ந்து வெடிக்கும். இப்படியே தெருமுழுதும்
ரெண்டு மூணு ரவுண்ட் அடித்து முடிவதற்குள் நன்றாக விடிந்துவிட தெருவில் நடமாட்டம் ஆரம்பிக்கும்.
அப்போது மீண்டும் தெருவில் இறங்கி நடக்க, பெரியவர் அல்லது பெண்கள் சிறுவர், சிறுமியர்
பக்கத்தில் வரும் போது திடீரென்று சுடுவேன். அவர்கள் பயப்படுவதைப் பார்க்க ஆனந்தமாய்
இருக்கும் (என்ன ஒரு அல்பத்தனம்?). இப்படியே ஒரு ரெண்டு ரவுண்ட் முடித்துவிட்டு வீட்டுக்குள்
வந்தால், வரிசையாக பிற வீடுகளிலிருந்து பலகாரங்கள் வர ஆரம்பிக்கும். பலகாரங்களை விட கொண்டு
வரும் பக்கத்துக்கு வீட்டுப்பெண்கள் அதிக
ஆர்வத்தை தூண்டுவார்கள் .பட்டுப்பாவாடையில் நகைகள் அணிந்து
சும்மா தகதகன்னு ஜொலிப்பார்கள்.
முறுக்கு,
அதிரசம், தேன்குழல், சீடை, நெய்யுருண்டை, ரவாலட்டு, சோமாஸ் என்று பல ஐட்டங்கள் வர,
எங்கம்மா ஒரு பெரிய தூக்கில் போட்டு எறும்பு வராமல் இருக்க மேலே கம்பியில் தொங்கவிடுவார்கள். அந்த பலகாரங்கள்
ஒரு ரெண்டு மூணு வாரத்துக்கு வரும். பின்னர்தான் தெரிந்தது, அது எங்களுக்கு எட்டாத
வண்ணம் இருக்க மேலே தொங்கவிடுவார்கள் என்று.
அப்போது
“சேகர் சேகர்”, என்று சில நண்பர்கள் தேடிவர, திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, விளக்கு
மாற்றுக் குச்சியில் பிஜ்லி அல்லது ஓலை வெடியைக் கோர்த்து, மெழுகு வர்த்தியில் காட்டிக்காட்டி
வெடிப்போம். அதேபோல் சீனி வெடியையும் வெடிப்போம்.
சரஸ்வதி வெடி, லட்சுமி வெடி, அணுகுண்டு ஆகியவை பக்கம் போவதில்லை. அதெல்லாம் எனக்கு பயம். மதியம் நன்கு பசி எடுக்க, ஆயா செய்து வச்சிருக்கும் முருங்கை காய்
போட்ட மட்டன் குழம்பை ஊத்தி ஒரு கட்டு கட்டிவிட்டு திண்ணைக்கு மீண்டும் வருவேன்.
வெடிக்காத
சில வெடிகளின் மருந்தைப் பிரித்துப் போட்டு ஒரு தாளில் வைத்து புஸ் வாணம் விடுவோம். ஒரு
தடவை கையில் பற்றி, கை சாம்பல் கலராகி ஒரு
வாரம் ஆயிற்று ஆறுவதற்கு. மாலை வந்ததும், என் வீட்டு வாசலில் கூட்டம் கூடிவிடும்.
கம்பி
மத்தாப்பு, தரைச்சக்கரம், பூந்தொட்டி, சாட்டை ஆகியவற்றை மாற்றி மாற்றி கொளுத்தி, உற்சாகத்தில்
எழும் கூக்குரலை மிகவும் ரசிப்பேன் . பெருமையாகவும் இருக்கும். குறைஞ்சது ஒரு மணி நேரம் கொளுத்துவோம். மூன்று நான்கு நாட்கள்
தொடர்ந்து மாலையில் கொளுத்துவேன்.'டேய் கொஞ்சம் கிறிஸ்மஸீக்கு எடுத்து வைடா" என்று
அம்மா சொன்னாலும் கேட்க மாட்டேன்.
இப்படியெல்லாம்
கொண்டாடிய தீபாவளி ஞாபகம் வர,
இங்கே
ஒன்னுமேயில்லையே என்று நினைத்துக் கொண்டே படுத்திருந்தேன்.
"ஏங்க
ஆபிசுக்குப் போகலயா, இன்னிக்கு லீவா ?," என்றாள் மனைவி. ஆபிஸில் ஏற்கனவே ஃபிக்ஸ்
பண்ண ரெண்டு மீட்டிங் ஞாபகம் வர, நொந்து கொண்டே சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தால் ஒரே
மழை. ஆஹா இதுவாவது நம்மூர் தீபாவளி டைமில் வருவது போல் வந்திருக்குது என்று நினைத்தவண்ணம்
சப்வே எடுத்து ஆபிஸ் வந்தேன்.
என்னுடைய ஆபிஸ் இருக்கும் ஏழாவது மாடியில் தரையில் அட்டைகளை
வைத்து ஒட்டியிருந்தனர். ஈரமாகிவிடும் என்று போட்டிருக்கிறார்களோ என்று யோசித்துவிட்டு
உள்ளே அமர்ந்து தீபாவளி மெசேஜ்களை பார்த்துக்
கொண்டிருந்தேன். பக்கத்தில் வெடிச்சத்தம் ஆரம்பித்தது.
ஆஹா தீபாவளி ஆரம்பித்துவிட்டதே என்று யோசிக்கையில், "முட்டாளே நீயிருப்பது நியூயார்க்கில்",
என்று என் மூளை ஞாபகப்படுத்தியது. ஆஹா இங்க வெடிச்சத்தம் என்றால் வேறு விவகாரமல்லவா
என்று பயந்து வெளியே ஓடி வந்தேன். என் ஃபிளோரில் காலியாக இருந்த ஒரு சூட்டில் (
Suite) புதிதாக யாரோ வருவிருக்கிறார்கள் போலிருக்கிறது. உள்ளே கன்ஸ்ட்ரக்ஷன் சத்தம்தான்
வெடிபோல் கேட்டது. மற்ற நேர மென்றால் தலைவலி வந்திருக்கும். ஆனால் இன்று தீபாவளியல்லவா,
OK OK என்று நினைத்துவிட்டு உள்ளே வந்து உட்கார்ந்தால், வெளியே பயங்கர வெடிச்சத்தம். ஜன்னல் வழி பார்த்தேன். அது வெடியல்ல
இடி. இடியுடன் கூடிய நல்ல மழை
பெய்து
கொண்டிருந்தது. Blind-ஐ மூடிவிட்டு வந்து உட்கார்ந்தால், என் பக்கத்து கேபினில் ஒரே
வெடிச்சத்தம். 'என்னடா நீல் என்னாச்சு ? ' என்று ஓடிப்போய் பார்த்தேன். கனடா பார்லிமென்ட்டில்
டெரரிஸ்ட் அட்டாக்காம்.
Canadian parliament attacked
நியூஸை சத்தமாக வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தான். எனக்கு
கெட்ட கோபம் வந்தது. "ஹெட்போனை மாட்டிக்கொள்" என்று சொல்ல கிட்டப்போனால், "ஆல்ஃபி இன்றைக்கு தீபாவளி லஞ்சுக்கு சரவணபவன் போகிறோம்" என்றான். கோபம் மாறிவிட 'ஹேப்பி தீபாவளி' என்று சொல்லிவிட்டு வந்தேன்.
கெட்ட கோபம் வந்தது. "ஹெட்போனை மாட்டிக்கொள்" என்று சொல்ல கிட்டப்போனால், "ஆல்ஃபி இன்றைக்கு தீபாவளி லஞ்சுக்கு சரவணபவன் போகிறோம்" என்றான். கோபம் மாறிவிட 'ஹேப்பி தீபாவளி' என்று சொல்லிவிட்டு வந்தேன்.
லெக்சிங்டனில்
உள்ள சரவணபவனுக்கு சென்றோம் .வழக்கம் போல் இருக்கும் கூட்டம் இல்லை. ஒரு
சவுத் இந்தியன் தாலி ஆர்டர் பண்ணிவிட்டு காத்திருக்கும்போது
தீபாவளி சிறப்பு ஸ்வீட்டாக, வந்த எல்லோருக்கும் கல்கண்டு சாதம் கொஞ்சம் கொடுத்தார்கள்
.அமிர்தமாக இருந்தது .உண்டு முடித்து ஆபீஸ் வந்தோம்.
ஆச்சரியமாக
பிரதமர் மோடியிடமிருந்தும், HRD மினிஸ்டர் ஸ்மிர்த்தி ராணியிடமிருந்தும் தீபாவளி வாழ்த்து
ஈமெயில் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது .
மாலையில்
சீக்கிரம் வீட்டுக்கு வந்தால்,என் மனைவியின் தம்பி வீட்டிலிருந்து மட்டன் பிரியாணி
வந்திருந்தது. பரவாயில்லை நியூயார்க்கில் தீபாவளி நாள் நல்லபடியாகவே கழிந்தது .தீபாவளி
கொண்டாடிய ஒரு திருப்தியும் இருந்தது.
முற்றும்
அண்ணே, நல்ல பதிவு அண்ணே..
ReplyDeleteமுஸ்லிம் தெருவில் துப்பாக்கியோட போனீங்களா? அது அந்த காலம், இப்ப மட்டும் போனீங்க... மவனே, என்கௌண்டெர்ன்னு சொல்லி உங்களை அனுப்பி வச்சி இருப்பாங்க.
பரவாயில்லை அண்ணே, Yale Unvirsity , Degree Holders எல்லாம் உங்களுக்கு தீபாவை வாழ்த்துக்கள் அனுப்பி இருக்காங்களே, ரொம்ப சந்தோசம். ஒரு சின்ன ஹெல்ப், அந்த மெயிலில் ரிப்ளை பட்டன் தட்டி, அந்த அம்மாவிடம், "ஒரு வாரத்தில் டிகிரி வாங்குவது எப்படின்னு ஒரு புத்தகம் போடசொல்லுங்க.
அது சரி, நடுவில என்னிடம் பேசும் பொது இந்த சரவணா பவன் விஷயத்தை மறைசின்களா இல்ல மறந்துவிடீர்களா?
நல்ல பதிவிற்கு நன்றி.
நேரம் இருந்தால் என் தளத்திற்கு வந்து என் "நான் சிரிச்சா தீபாவளி" என்ற பதிவை படித்து கருத்து கூறவும்.
நன்றி விசு .
Delete// "ஒரு வாரத்தில் டிகிரி வாங்குவது எப்படின்னு ஒரு புத்தகம் போடசொல்லுங்க.//
ReplyDeleteஅக்ஸ்போர்ட் கக்கூஸ் கழுவின ஆயா தான் அங்க டிகிரி வாங்கினதா கதை விடும் போது இது ஒன்னும் பெரிசா தெரியல. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான் .
இனிய தீபாவளி நினைவுகள்.....
ReplyDeleteஇங்கே நமது தீபாவளி அன்று அலுவலகம் உண்டு! அடுத்த நாள் தான் [23-10-2014] தான் தீபாவளி.
நன்றி வெங்கட் நாகராஜ்.
Delete