Aya Sofia |
புளி மாஸ்க்,
சாரி புளு மாஸ்க்கைவிட்டு வெளியே வந்தால் அங்கே ரோமப் பேரரசின்
மிச்சங்கள் இருந்தன.
1500 வருட பழைய ஸ்தூபி ஒன்று
அங்கிருந்தது. ரோமப்பேரரசின் சமயத்தில் அந்த இடம் ஒரு பந்தய மைதானமாகத்
திகழ்ந்ததாம்.
போகும் வழியில் ஒரு மார்பிள்
மண்டபம் அழகிய விதானத்துடன் இருந்தது. ஆட்டமன் சுல்தானுக்கு ஜெர்மன் பேரரசர்
பரிசாக வழங்கியதாம். சிறுசிறு பகுதிகளாக மிகப்பத்திரமாக கப்பலில் எடுத்துவரப்பட்டு,
இங்கே கொண்டுவந்து பொருத்தப்பட்டதாம்.
புளு மாஸ்க்குக்குப் பின்புறம்
அதனைக்கட்டிய சுல்தான் அகமதின் நினைவிடம் இருந்தது. அது பராமரிப்புக்காக
மூடப்பட்டிருந்ததால் உள்ளே செல்லமுடியவில்லை.
இன்னும் கொஞ்சம் தள்ளிச்சென்றால் 1400 களில் கட்டப்பட்ட சுல்தான் மனைவிகள் குளிக்கும் "டர்க்கிஷ் பாத்" வந்தது. அங்கே அவர்கள் சும்மா உட்கார்ந்திருக்க பணிப்பெண்கள்
'பபிள் பாத்" என்னும் முறைப்படி செத்துப்போன செல்களை
தேய்த்து எடுத்துவிட்டு பளபளப்பைக் கூட்டுவார்களாம்.
இன்று ஒரு தனியாரின்
பராமரிப்பில் 'பப்ளிக் பாத் ஹவுஸ்', ஆக இருக்கிறது. உள்ளே போய் விசாரித்தேன். இஸ்தான்புல் இளசுகள்
அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருந்தன. ஆனால் ஆண்களுக்கு ஆண்கள்தான்
குளிப்பாட்டுவார்களாம். ஒரு மணி நேரத்திற்கு 150 டாலர்கள்
ஆகும் என்றார்கள். இது பொதுவாக ஹமாம் என்று அழைக்கப்படுகிறது நம்மூர் ஹமாம் சோப்பு பெயர் இதிலிருந்து வந்திருக்குமோ?
அதற்குள் 'உர்ஸ்' என்னைத்தேடி வந்துவிட்டான். குழுவினர்
கூடவே இருக்கும்படி வேண்டினான். எனவே 'டர்க்கிஷ் பாத்'
ஆசையைக் கைவிட்டு அவன் பின்னால் சென்றேன்.
அடுத்தபடியாக இன்னொரு மாபெரும்
கட்டிடத்தின் அருகில் வர, அட இதென்ன
இன்னொரு பள்ளிவாசலா? என்று நினைத்தேன். புளு மாஸ்க்கைவிட
உயரமாகவும் அகலமாகவும் பழமையாகவும் இருந்தது. "இது தான் ஆயா சோஃபியா",
என்றான். என்னது சுல்தானின் ஆயாவுக்கு
இவ்வளவு பெரிய இடமா? ஆனால் முஸ்லிமில்
"சோஃபியா" என்றா பெயர் வைப்பார்கள் ? என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால் அவன் விளக்கிச் சொல்லும்
போதுதான் தெரிந்தது. 'அயா சோஃபியா'
என்றால் துருக்கியில் 'புனித ஞானம்'
என்பது, அதாவது ஆங்கிலத்தில் 'ஹோலி விஸ்டம்' என்பது. அதற்கப்புறம் அவன்
சொன்ன செய்தி என்னை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே அழைத்துச்சென்றது. அது மாஸ்க்
இல்லையாம், ரோமப் பேரரசர் கட்டிய தேவாலயமாம்.
அப்போதுதான் ஞாபகம் வந்தது,
இஸ்தான்புல்லின் பழைய பெயர் கான்ஸ்டான்டிநோபில் என்பது. இதனை
தலைமையிடமாகக் கொண்டு அரசாண்ட ரோமப்பேரரசரைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு உள்ளே
சென்றால் நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பைஜான்டின்
பேரரசு (Byzantine Empire)
பைஜான்டின் அல்லது “கிழக்கு
ரோமப்பேரரசு” பலநூறு வருடங்கள் இங்கு செழுமையான ஆட்சியைக் கொடுத்திருக்கிறது. இந்த
இடத்தின் பழைய பெயர் பைஜான்டின் என்பதால் இங்கு ஆட்சி செய்த பேரரசை 'பைஜான்டின் பேரரசு' என்று வரலாற்று
ஆசிரியர்கள் அழைக்கிறார்கள்.
கி.பி.285ல் ரோமப்பேரரசர் டியோக்லெடியன் (Emperor
Diocletian Reign 284-305), நிர்வாகக் காரணங்களுக்காக
ரோமப்பேரரசை மேற்குப்பகுதி மற்றும் கிழக்குப்பகுதி என்று இரண்டு பிரிவாகப் பிரித்தார். அதன் பின்னர்
கி.பி. 324 லிருந்து 330-க்குள்
பேரரசர் முதலாம் கான்ஸ்டான்டைன் (Emperor Constantine R 306-337) அவருடைய தலைநகரத்தை ரோமிலிருந்து பைஜான்டியத்திற்கு மாற்றினார்.
Constantine |
எனவே
அதன்பின் அது "கான்ஸ்டான்டிநோபிள்" என்று வழங்கப்பட்டது. அதாவது
கான்ஸ்டான்டைனின் நகரம் என்று பொருள். நோவ ரோமா (New Rome) என்றும் அழைக்கப்பட்டது. இந்த கான்ஸ்டான்டைன் தான் முதன்முதலில்
கிறிஸ்துவத்தைத் தழுவியதால், கிறிஸ்தவம் பேரரசின்
அதிகாரபூர்வ மதமாயிற்று. கிறிஸ்துவத்திற்கு ஒரு பெரிய அடையாளத்தையும் உருவையும்
அது கொடுத்தது. டிரினிட்டி (Trinity) என்று சொல்லக்கூடிய
மூவொரு கடவுளின் தத்துவம், நிசேயா விசுவாசப்பிரமாணம் (Nicene
Creed),ஆலய வழிபாட்டை சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை கொண்டுவந்தது என பல மாற்றங்கள்
செய்யப்பட்டது இவரது ஆட்சியில் தான்.
அவரையடுத்து ஆண்ட பேரரசர்
ஹெராகிலியஸ் (Emperor Heraclius R 610-641) அவர்களின்
ஆட்சியில் அதிகாரப்பூர்வ மொழியாக லத்தீனிலிருந்து மாறி கிரேக்க மொழி ஆயிற்று.
அதற்கப்புறம் வந்த பேரரசர் ஜஸ்டினியன் (Emperor Justinian R 527-565) ஆட்சியில் பரந்துவிரிந்து மிகப்பெரிய பேரரசாக விளங்கியது. அதிலிருந்து
பதினைந்தாவது நூற்றாண்டு வரை ஆட்சி தொடர்ந்தது. 12ஆவது
நூற்றாண்டுக்குப் பின்னர் சிறிது சிறிதாக அழியத் தொடங்கிய பேரரசு, 1453-ல் ஆட்டமன் துருக்கியர்களுடன் தோற்றவுடன் முற்றிலுமாக அழிந்தது. அதன்
பின்புதான் கான்ஸ்டான்டி நோபில், இஸ்தான்புல் என்று
மாற்றப்பட்டது.
ஹாகியா
சோஃபியா
கிரேக்க மொழியில் Hagia
Sophia அல்லது துருக்கி மொழியில் Ayasofya என்று அழைக்கப்படும் இந்த
மாபெரும் கட்டடம், ரோமப்பேரரசர் ஜஸ்டினியன் அவர்கள் ஆட்சியில் கி.பி.532 - கி.பி. 537ல் கட்டப்பட்ட, கிரீக் ஆர்தொடாக்ஸ் பேராலயம் (Greek
Orthodox Basilica) ஆகும். பேரரசர் மற்றும் அவருடைய
குடும்பத்தினர் இந்த பேராலயத்தில்தான்
வழிபட்டுவந்தனர். அவர்கள் உட்கார்ந்து பங்குகொள்ள தனித்தனியிடங்கள்
இருந்தன. அது மட்டுமல்ல, முடிசூட்டிக்கொள்ளுதல் (Coronation)
போன்ற முக்கிய நிகழ்வுகளும் இங்குதான் நடத்தப்பட்டன.
ஆனால் 1453-ல் ஆட்டமன் துருக்கியரால், கான்ஸ்டான்டிநோபிள்
வீழ்ந்தபின், சுல்தான் மெஹ்மது II-ன் உத்தரவின் படி இது ஒரு மாஸ்க்காக மாற்றப்பட்டது. கிறிஸ்தவ
மதச்சின்னங்கள் திருவுருவங்கள் எல்லாம், சாந்து பூசி
மறைக்கப்பட்டன. 1931ல் துருக்கி குடியரசு நாடாக ஆனபின்,
இது மூடப்பட்டு பின் 1935ல்
மியூசியமாக்கப்பட்டு பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
269 அடி உயரமும் 240 அடி அகலமும் கொண்ட இந்தக் கட்டடத்தை எப்படி 1500 வருடங்களுக்கு முன்னால் கட்டினார்கள் என்பது ஆச்சரியமூட்டியது.
மூன்று நிலைகளாகக் கட்டப்பட்ட
இந்தப் பேராலயம் இன்றும் தலைநிமிர்ந்து நிற்கிறது. உள்ளே கட்டட வேலைப்பாடுகள்,
காரைகளை பெயர்த்தெடுத்தபின் வெளிப்பட்ட ஓவியங்கள் என அதிசயமாக
இருக்கும் இந்தப் பேராலயத்தின் மாடலில் தான் மற்ற அனைத்து
இஸ்லாமிய தொழுகையிடங்களும் கட்டப்பட்டன.
அதில் ஒரு இடத்தில் இதுதான் மையப்பகுதி என்று காண்பித்தான் உர்ஸ் . அந்த இடத்தில் செல் போன் காமெராவை வைத்து படம் எடுத்தால் முழு விதானமும் வந்தது.
இப்படி பல அதிசயங்களை உள்ளடக்கிய இந்த ஆயா சோபியா பார்க்கவேண்டிய ஒரு இடம்
.
வாருங்கள் மதிய உணவுக்குச்
செல்லலாம் என்றான் உர்ஸ்.
-தொடரும்.
1500 வருடங்களுக்கு முன்னாலேயே கட்டடக் கலை எப்படி வளர்ந்திருக்கிறது. சிறப்பான படங்களுடன் எங்களையும் இஸ்தான்புல் அழைத்துச் செல்லும் உங்களுக்கு நன்றி.
ReplyDeleteதொடர்ந்து பயணிப்போம்.
என்னுடன் எப்போதும் பயணம் செய்யும் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி .
Deleteபோட்டோல எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கீங்க.... இந்தப் படத்தையே profile photo-வா மாத்திக்கோங்க... நல்லாருக்கும்...
ReplyDeleteபோங்க எனக்கு வெக்கமா இருக்கு .
Deleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஸ்கூல் பையன்.
படங்களுடன் கூடிய வரலாற்று தகவல்கள் அருமை..
ReplyDeleteஅதுவும் விளக்குகளுடன் கூடிய விதானம் கொள்ளை அழகு
அப்பறம் இந்த உர்ஸ் தூக்குன குடையை கடைசி வரைக்கும் இறக்கவே இல்லை போலருக்கு ஹா ஹா
அண்ணே , இந்த இஸ்தான்புல் ரஜகுமாரிகள் பத்தி நாலு வரி எழுதுங்கண்ணே ..!
யோவ் தம்பி ஆனந்த் , முஸ்லிம் ராஜகுமாரிகளைப்பற்றி எழுதினால் எதை வெட்டுவான்னு சொல்லமுடியாது ?
Deleteanna ,
Deleteedha vettuvanga nu solla ve illa...!!!!
கையைத்தான் தம்பி கலீல்
ReplyDelete