Monday, June 23, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி-பகுதி 6: தப்பான நப்பாசையும் , வேஸ்ட் ஆன டேஸ்ட்டும்!!!!

Sisko Osman
மதிய உணவுக்குப்பின் டொப்கப்பி அரண்மனை போவதாக உர்ஸ் சொன்னான். அங்கிருந்து சிறிது தொலைவில்தான் இருந்தது. போகும் வழியில் ஒரு கார்ப்பெட் கடையில் நிறுத்தினான். அது பாரம்பரியமாக சுல்தான் காலத்திலிருந்து அங்கு குடியேறிய ஆர்மேனியன் மக்களால் வடிவமைக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. அதே குடும்ப வழியில் வந்த ஒருவரின் பலமாடிக்கடை அது.

சூட் அணிந்த குடும்ப மூத்த உறுப்பினர் எங்களை வரவேற்று,  மூன்றாவது மாடிக்கு அழைத்துச் சென்றார். முகமன் கூறி ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திக் கொண்டு நல்ல ஆங்கிலத்தில் கையால் செய்யப்படும் கார்ப்பெட்டுகளைக் குறித்து விளக்கினார். அந்த நீள் சதுர அறையில் ஓரம் முழுவதும் மெத்தையணிந்த பெஞ்சுகளில் நாங்கள் உட்கார்ந்திருக்க, சிறிது நேரத்தில் தேன் கலந்த ஆப்பிள் தேநீர் வழங்கப்பட்டது. லேசானப் புளிப்புடன் சேர்ந்த இனிப்புடன் மிக அருமையாக இருந்தது.  அதன்பிறகுதான் எனக்குத் தெரிந்தது ஆப்பிள் டீ ,அங்கு அனைவரும் விரும்பி அருந்தும் பானம் என்று. பதப்படுத்தி காய வைக்கப்பட்ட ஆப்பிள் துகள்களை சுடுநீரில் இட்டு சுவையூட்ட தேனூற்றி தருகிறார்கள்.

சூட் அணிந்தவர் விளக்க விளக்க, அந்த அறையில் இருந்த மற்ற நால்வர் பலவித கார்ப்பெட்டுகளை விரித்து விரித்துக் காண்பித்தனர். இயந்திரம் மூலம் செய்வதற்கும் கைமூலம் செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர் விளக்கியதோடு அதனை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதையும் சொல்லிக் கொடுத்தார். கையால் நெய்யப்பட்ட கார்ப்பெட் ஒரு குறுக்குவெட்டுப் பார்வையால் பார்க்கும்போது வேறு வண்ணமாய் தெரிகிறது. அவற்றுள் ஒரு கார்ப்பெட், தொடுவதற்கு மிக மென்மையாகவும், அதன் மேல் நடப்பது ஆகாயத்தில் மிதப்பது போலவும் இருந்தது. கார்ப்பெட்டுகளை வாங்கினால் இலவசமாகவே பார்சலில் அனுப்பி வைப்போம் என்றும் சொன்னதால் ஒரு நப்பாசையில், "எவ்வளவு?” என்று கேட்டேன். "40 ஆயிரம்", என்றார். “40 ஆயிரம் லிராவா?”, என்று வினவியபோது, இல்லை "40 ஆயிரம் டாலர்", என்றார். அப்போதுதான் புரிந்தது என்னுடைய நப்பாசை ஒரு தப்பாசை என்று. நம்மூர் பணத்தில் 24 லட்சம். அம்மாடியோ!!
$40 K Carpet

பிறகுதான் சொன்னார், சுல்தான்கள் ஆட்சியில், இது அவர்களின் பிரத்யேக பயன்பாட்டுக்கு மட்டுமே நெய்யப்பட்டது என்றும், இந்த டைப் கார்ப்பெட்டுகளை வெளியில் யாருக்கும் விற்பதற்கு தடையிருந்தது என்றும் சொன்னார். அதுதான் அவர்களிடம் இருப்பதிலேயே விலை உயர்ந்த கார்ப்பெட் என்றும் சொன்னார்.
See the difference in color in the same carper from different direction

சுல்தான்களின் டேஸ்ட்டும் என்னுடைய டேஸ்ட்டும் ஒரே மாதிரி இருந்தது மகிழ்ச்சியளித்தாலும், நிறைவேறமுடியாத அந்த டேஸ்ட் வேஸ்ட்தான் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன்.
கார்ப்பெட்டுகள் தயாரிக்கப்பட்ட விதம், அந்தக்காலத்தில் எப்படி வண்ண மூட்டப்பட்டது போன்ற சில ஆச்சரிய செய்திகளை சொன்னார். பின்னர் கடையை சுற்றிப்பார்த்த போது ஒரு அழகிய இயற்கை சீனரி இருந்த சிறிய டேப்பஸ்ட்ரி இருந்தது. இதையாவது வாங்கலாம் என்று விலைகேட்டேன். 1600 USD என்றார்கள். ம்ஹீம் இது நம் கடையில்லை என்று நினைத்து மெதுவாக நழுவி வெளியே வந்தேன். வெளியே உர்ஸ் தம்மடித்துக் கொண்டு நிற்க, நான் ஒரு கம்மெடுத்து வாயில் போட்டுக்கொண்டு கம்மென்று போய் வோனில் உட்கார்ந்து கொண்டேன்.
டொப்கப்பி அரண்மனை முன் வண்டி நின்றது. அரண்மனைக்குள் உள்ளே செல்லுமுன் ஆட்டமன் சுல்தான்களைப்  பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமே.
ஆட்டமன்  பேரரசு :
Osman Bey
எப்படி நாடோடிகளாய் பாபர் தலைமையில் வந்த படை டெல்லியை வெற்றி கொண்டு இந்தியாவில் மொகலாயப் பேரரசை நிறுவியதோ, அதே போல கி.பி.1299ல் ஆகுஸ் துருக்கியர் (Oghuz Turks), ஒஸ்மான் பே (Osman Bey)யின் தலைமையில் அனடோலியாவின் வடமேற்குப் பகுதியை பிடித்து அங்கேயே ஒரு அரசை நிறுவினர். 
Mehmed , The Conquerer
அதன் பின்னர் கி.பி.1453ல் அதே வம்சத்தில் வந்த மெஹ்மது II வந்து கான்ஸ்டான்டி நோபிளைக் கைப்பற்றினார்.  அதன் மூலம் சிறிய அரசாக இருந்த ஆட்டமன் பகுதி பேரரசாக உருவெடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக அண்டை நாடுகளைப் பிடித்து தன்னுடைய எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே போனது.

Suleiman the Magnificent
16ஆம் மற்றும் 17ஆம் நூற்றாண்டில் பேரரசர் சுலைமான் தி மேக்னிஃபிசன்ட் (Suleiman the Magnificent) அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல நாடுகளை தன்னடக்கி பலமொழிகள் பேசும் மிகப்பெரிய சக்திவாய்ந்த பேரரசாக உருவெடுத்தது. அதில் தென் கிழக்கு ஐரோப்பா, ஆசியாவின் மேற்குப்பகுதி, வட ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் இணைத்து 32 பெரிய நாடுகளையும், பல கப்பம் கட்டும் நாடுகளையும் உடையதாய் இருந்தது. கான்ஸ்டான்டி நோபிலை தலைநகராகக் கொண்டு செயல்பட்ட இந்தப் பேரரசு கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகளுக்கு மேல் சக்தி வாய்ந்த பேரரசாகத் திகழ்ந்தது.
அதிலிருந்த சில குறிப்பிட்ட நாடுகளைச் சொல்லுகிறேன். நீங்களே பாருங்கள் ஹங்கேரி, செர்பியா, போஸ்நியா, ரோமானியா, கிரீஸ், உக்ரைன், இராக், சிரியா, இஸ்ரேல், எகிப்து, வடக்கு ஆப்பிரிக்கா, அல்ஜீரியா, ஜோர்டன், செளதி அரேபியா, குவைத், இன்னும் பல அரேபிய நாடுகள்.
இந்தப்பேரரசை நிறுவிய ஒஸ்மான் அல்லது ஆஸ்மான், அரபிய மொழியில் உத்மான் என்று அழைக்கப்படுகிறார். இந்த உத்மான்தான் மருவி ஆட்டமன் என்ற பெயரில் பிற்காலத்தில் அழைக்கப்பட்டது.
உர்ஸ் இன்னொரு தகவல் சொன்னான். இந்த துருக்கியர் படையெடுப்புக்குப் பயந்துதான் சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்டதாம்.
இந்த துருக்கர்கள்தான் மொகலாயப் பேரரசுக்கு முன்பே வந்து தென்னிந்தியாவைப் பிடித்து ஆண்டவர்கள். கோல்கொண்டா சுல்தான், பீஜப்பர் சுல்தான் இவர்களெல்லாம் துருக்கிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
நம்மூரில் முஸ்லீம்களை துலுக்கர் என்று சொல்வார்கள் ஞாபகம் இருக்கிறதா? துருக்கர் என்பதுதான் துலுக்கர் என்று மறுவியது.முதலாவது உலகப்போருக்குப் பின்னர்தான் சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதனை பின்னர் சொல்கிறேன்.
அதற்குமுன்னால் நீண்ட நேரம் காத்திருக்கும் உங்களை அரண்மனைக்குள் அழைத்துச் செல்லப்போகிறேன். நீங்க ரெடிதானே –
 தொடரும்.


1 comment:

  1. 24 லட்சத்தில் கார்பெட்... ரொம்ப நல்லா இருக்கு! :)

    நானும் அரண்மணைக்குள் செல்ல ரெடி!

    ReplyDelete