Monday, June 16, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி : பகுதி-5 சுல்தானின் மருமகன் !!!!!!!!!!!!!

Sultanahmet 

வேனில் ஏறி சுல்தானமெட்டில் ஒரு ரெஸ்டாரன்டுக்குச் சென்றோம். சிறுசிறு கற்கள் பாவப்பட்ட மிகவும் குறுகிய பழைய சாலைகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தன. நாங்கள் போன ரெஸ்டாரன்ட் ஒரு கிரேக்க குசின்.  அந்த நாளின் டூர் பேக்கேஜில் மதிய உணவும் உண்டு. வெள்ளை ப்ரன் அணிந்த  பெண்கள் கிட்டவர, நான் வழக்கம்போல் "மெனு ப்ளீஸ்", என்றேன். "நீங்கள் டூர் கம்பெனியில் வந்தவர் என்றால் நாங்கள் ஸ்டான்டர்ட் மெனு வைத்திருக்கிறோம். அது தவிர நீங்கள் எது ஆர்டர் பன்ணினாலும் அது எக்ஸ்ட்ரா", என்று சுமாரான ஆங்கிலத்தில் சொன்னாள். நான் மெனு கார்டை  கைவிட்டு, "என்ன தரப் போகிறீர்கள் ? ", என்று கேட்டேன். "உங்களுக்கு வெஜ்ஜா, நான் வெஜ்ஜா", என்று கேட்டதற்கு "நான்வெஜ்" என்று சொன்னேன்.

சிறிது நேரத்தில் ஒரு பெரிய பெளலில் சூப்பும் சைடாக சிறுசிறு பிரட் உருண்டைகளும் வந்தன. அந்த லென்டில் சூப் சுவையாக இருக்க, நல்ல பசியில் உருண்டை பிரட்களை சிறிது சூப்பில் நனைத்து மடமடவென்று சாப்பிட ஆரம்பித்தேன்.  சூப் பாதி மீதி இருக்க, பிரட் உருண்டைகள் 3 காலியாக, வயிறு நிரம்பி விட்டது. அப்பொழுதுதான் மெயின் கோர்ஸ் வந்தது. "இது என்ன", என்று கேட்டதற்கு "சிக்கன் சம்திங்", என்று சொன்னாள். பார்க்க சிக்கன் என்பதற்குரிய எந்த அறிகுறியும் இல்லை. சிக்கனை அறைத்து ஏதோ பண்டங்கள் சேர்த்து செய்திருந்தார்கள். ஒரு விள்ளலை போர்க்கில் எடுத்து வாயில் போட்டேன். ம்ஹீம் பிடிக்கவில்லை. பேசாமல் வெஜ் என்று சொல்லியிருக்கலாம். என்ன செய்வது இனி மாற்றமுடியாது.
"டேய் ஆஃல்பி இப்படியெல்லாம் பிகு செய்தால் உயிர் வாழ முடியாது, மறுபடியும் டிரை பண்ணுடா பரதேசி" என்று என் மனசாட்சி திட்ட, மறுபடியும்  ஒரு சிறு விள்ளலை வாயில்  வைத்தேன். சாப்பிட்ட சூப்பும் பிரட்டும் வெளியே வந்துவிடும்போல் இருந்தது.   ம்ஹீம் இது வேலைக்காவாது என்று விட்டுவிட்டு பேசாமல் அமர்ந்திருந்தேன். "முட்டாப்பய எங்க போனாலும் அஞ்சப்பர் மாதிரி நன்கு பொறித்த கோழி கிடைக்குமா?" என்று என் மனசாட்சி பொறும, நான் பேசாமலிரு என்று அதட்டினேன். அதன் பின்னர் ஒரு நல்ல க்ரீம் கேக் டெசர்ட்டாக கொடுத்தார்கள். ஆஹா அருமை அருமை.
உண்டு முடிக்க உர்ஸ் சொன்னான் அடுத்த ஸ்டாப் கிராண்ட் பஜார் என்று.
Grand Bazaar 
"கிராண்ட் பஜார், மெஹ்மது II சுல்தானின் காலத்தில் 1460 ஆம் வருடத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஷாப்பிங் சென்ட்டர்", என்றான் உர்ஸ். ஆஹா உலகத்தில் கட்டப்பட்ட முதல் மால் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே உள்ளே போனேன். மதுரை புதுமண்டபம் போல நெருக்கமாக சின்னசின்னதாக வரிசையாக கடைகள் இருந்தன. முழுவதும் ஒரு பெரிய மண்டபம் போலத்தான்  இருந்தது. கிட்டத்தட்ட 4000 கடைகள் இங்கு இருக்கின்றனவாம். உலகமெங்கும் உள்ள டூரிஸ்ட் மக்களின் கும்பல் உள்ளே நெருக்கியடித்தன. 

உள்ளே துருக்கி நினைவுப் பொருட்கள், துருக்கியின் இனிப்புக் கடைகள், தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பழைய ஆண்ட்டிக் கடைகள் என்று இருந்தன. உர்ஸ் கொடுத்த நேரத்தில் ஒன்றும் சரியாகப் பார்க்க முடியவில்லை. 

சும்மா கொஞ்ச தூரம் போய்விட்டு சில நினைவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பிவிட்டேன். உள்ளே உள்ளே கடைகள் போய்க் கொண்டே இருந்தன. நேரம் கிடைத்தால் மறுபடியும் திரும்ப வரலாம் என்று எண்ணிக் கொண்டே வேனுக்கு வந்து சேர்ந்தேன்.
Rustem Pasha 
அங்கிருந்து இன்னொரு மாஸ்குக்கு வந்து சேர்ந்தோம். அதன் பெயர் ருஸ்டம் பாஷா மாஸ்க் (Rustem Pasha). இஸ்தான்புல்லில் இருக்கும் மாஸ்க்குகளை எல்லாம் ஒரு வருடம் தங்கினால் கூட பார்க்க முடியாது. ஏனென்றால் மொத்தம் 3400 பள்ளி வாசல்கள் இங்கு இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரே மாதிரி கட்டடக்கலை என்றாலும் ஒவ்வொன்றும் உள்ளே உள்ள அலங்காரங்களில் வெவ்வேறு சிறப்புகள் உடையனவாம்.
Mihrimah Sultan.jpg
Mihrimah Sultan wife of Rustem Pasha 
ருஷ்தம்  பாஷா என்பவர் சுலைமான் சுல்தானுக்கு ​​​​ பிரதம மந்திரியாக ( Grand Vizier) இருந்தவர். சுல்தானுக்கு மிகவும் நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவர் என்பதால் தன் மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தாராம். அவர் பெயரில் இந்த மாஸ்க் கட்டப்பட்ட வருடம் 1561. 
Add caption

அவர் இறந்தபின் அவரின் நினைவாகக் கட்டப்பட்டது.
Rustem Pasha Mosque 
இன்றும் இது பயன்பாட்டில் இருக்கிறது. புளு மாஸ்க்  போலவே  இங்கும் நீல நிற டைல்கள் சுவர்களிலும் தூண்களிலும் பதிக்கப்பட்டு இருந்தன. கீழே அழகிய கார்ப்பெட்டுகள் பதிக்கப்பட்டு இருந்தன. அதனைப் பார்த்துவிட்டு, வெளியே வந்தோம். முன்னால் பாஸ்பரஸ் ஆற்றில் பெரிய பெரிய படகுகள் மிதந்து கொண்டு இருந்தன.  

அதனருகில் கொஞ்ச நேரம் நின்று இயற்கையும் செயற்கையும் எப்படி ஒன்றையொன்று ஒட்டியும் வெட்டியும், இணைந்தும் இணையாமலும் இருக்கின்றன என்ற ஆச்சரிய அதிசயத்தை எண்ணி வியந்த வண்ணம் இருக்க, உர்ஸ் தன் குடையினால் என் தோளைத் தொட்டு கூப்பிட்டான். நல்லவேளை குடையின் பிடியால் கழுத்தில் போட்டு இழுக்கவில்லை என்று நினைத்துக் கொண்டே அவனைப்பார்த்து கொஞ்சம் புன்னகைத்து விட்டு வேனுக்குத் திரும்பினேன்.
வந்திருந்த ஆஸ்திரேலிய மக்களோடு, பிரிட்டிஷ் மொனார்க்கி பற்றி கதைக்க ஆரம்பித்தேன். பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் ஆஸ்திரேலியாவும் ஒரு அங்கமல்லவா?
"அடுத்து எங்கே", என்று கேட்டேன்.  "டொப்கப்பி அரண்மனை” என்றான்.

-தொடரும்.  

6 comments:

  1. //முட்டாப்பய எங்க போனாலும் அஞ்சப்பர் மாதிரி நன்கு பொறித்த கோழி கிடைக்குமா?"// ஹா ஹா ஹா...

    ஷாப்பிங் காம்ப்ளெக்சில் இன்னும் சிறிது தூரம் சென்றிருக்கலாம், நேரம் குறைவோ? மாஸ்க்-களின் அலங்கார வேலைப்பாடு சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி ஸ்கூல் பையன்.

      Delete
  2. படங்கள் மூலம் அந்நாட்டின் அழகினைப் பார்க்க முடிந்தது..... தொடர்ந்து பயணிப்போம்....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  3. 1460லயே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்சா..? ஆச்சர்யம் தான்.. உண்மையிலே அதுதான் முதல் ஷாப்பிங் கால்ப்ளக்ஸ்சா ..?

    ReplyDelete
    Replies
    1. வேற யார் இவ்வளவு பெரிய காம்ப்ளெக்ஸ் கட்டியது ?
      அதுதான் முதல் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஆக இருக்கவேண்டும் தம்பி ஆனந்த் .

      Delete