Monday, December 30, 2013

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 9: குண்டு மாங்கா தோப்புக்குள்ளே!!!!!!!!!



பரிசுத்த ஆவி வந்துவிட்டதோ, எனப் பயந்த போது, "அத்தான் இங்க பாருங்க", என்றாள். அட வேப்பமரம் அதைப் பார்த்துத்தான் ஓடியிருக்கிறாள். ஐயையோ இதுவேற ஆவியாக இருக்குமோ எனப்பயந்தேன். ஆனால் ஒன்றுமில்லை பல வருடங்களுக்கு பிறகு வேப்பமரத்தைப் பார்த்ததில் வந்த ஆவேசம்தான் அது. எட்டிப்பறிக்க குதித்து வேப்பங்கொழுந்தை கொண்டு வந்து என்னைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினாள். சுகருக்கு நல்லதாம். அவள் குதித்ததைப் பார்த்துச் சிரித்த என் நகைச்சுவை கசப்புச்சுவை ஆனது.
சேன் வான் கத்தீட்ரல்

        மதிய நேரத்தில் ஆளரவம்  இன்றி கத்தீட்ரல் பேரமைதியாய் குளிர்ச்சியாய் இருந்தது.
         கி. பி.1520-ல் புலம் பெயர்ந்த ஸ்பானிய கத்தோலிக்க மக்களின் ஆத்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல ஆலயங்கள் கட்டப்பட்டன. இந்த "சேன் வான் கத்தீட்ரல்", கி.பி.1522-ல் கட்டப்பட்டது.


 பின்னர் ஸ்பானிய கத்தோலிக்க மன்னரின் நிதியுதவியால், கட்டடமாக கட்டப்பட்டது. ஸ்பானிய காதிக் (Gothic) கட்டடக்கலைக்கு சான்றாக இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. 18 மற்றும் 19 ஆம்  நூற்றாண்டில் சான் வான் துறைமுகத்திற்கு வரும் எவரும் நேராக இந்தக் கத்தீட்ரல் வந்து வணங்கி சுகப்பயணம் வாய்த்தமைக்கு நன்றி சொல்லிவிட்டுச் செல்வது ஒரு பழக்கமாக இருந்தது.

 இங்குதான் போர்ட்டரிக்கோவின் முதல் கவர்னர் பான்சே டி லியான் அவர்களுடைய மார்பிள் கல்லறை இருக்கிறது.
கேப்பில்லா டெல் கிறிஸ்டோ (Capilla del Cristo)
        இறங்கும் வழியில் இந்தப்பழைய அழகிய சேப்பல் (Chapel - சிற்றாலயம்) இருந்தது. 

குன்றின் விளிம்பில் இருக்கும், இந்த சேப்பல் மிகவும் புராதனமானது. ஒரு ஸ்பானிய வீரன் தன் குதிரையில் வேகமாக ஏறி வரும்போது, வேகத்தை குறைக்க முடியாமல் இந்தக் குன்றிலிருந்து மறுபுறம் கீழே விழுந்து இறந்துபோனதாகச் சொல்கிறார்கள். இந்த சேப்பல் அவன் நினைவாக கட்டப்பட்டு இருக்கலாம் என்று சிலரும், மேலும் யாரும் இந்தக் குன்றின் மறுபுறம் விழுந்து விடக்கூடாது என்பதால் கட்டப்பட்டது என்று வேறு சிலரும் சொல்கிறார்கள்.
லா ரோகடிவ்வா (La Rogativa)

        ஃபோர்ட்டலிஸா கோட்டையின் பக்கவாட்டில் வலதுபுறம் இருந்த பழைய ஸ்பானிய துறைமுகத்தையும் அதன் கரையில் இறகுபோல் வருடிய சளக்புளக் சிற்றலைகளையும் ரசித்துக்கொண்டே, கீழிறங்கினோம், வழியில் இடதுபுறம் நின்ற ஆஜானுபாகு ஆலமரத்திற்கு டாட்டா சொல்லி, இறங்கும்போது அந்த இரும்புச்சிற்ப சிலைகளை மீண்டும் பார்த்தேன். ஏதோ கிறிஸ்தவ பாதிரியார் போலத்தெரிந்தது. வழியில் பலபேரை விசாரித்து அறிந்து கொண்ட செய்தி என்னவென்றால், கி.பி.1797ல் சேன்வான் நகரத்தை, ஆங்கிலேய கப்பற்படை முற்றுகையிட்டிருந்த போது, கோட்டையின் உள்ளே அத்தியாவசிய பொருட்கள் ஒன்றையும் அனுமதிக்கவில்லை. உள்ளே அனைவரும் பட்டினி. பொறுத்து பொறுத்துப்பார்த்த கவர்னர், பிஷப்பைக் கூப்பிட்டு, "கடவுள் நிகழ்த்தும் ஒரு அற்புதம்தான் நம்மைக்காக்கமுடியும் எனவே ஜெபத்தை ஆரம்பியுங்கள்" என்று வேண்டினார். எனவே அதே தின மாலையில் பிஷப் தன்னோடு சில போதகர்களையும், கன்னியாஸ்திரிகளையும் அழைத்துக்கொண்டு கையில் தீப்பந்தங்களை எடுத்துக்கொண்டு இறைவனை இறைஞ்சுவதற்காக கோட்டையின் விளிம்பிற்கு சென்றாராம். ஏற்கனவே முற்றுகையில் சோர்ந்து, களைத்து சுகவீனப்பட்டு, பலவீனப்பட்டிருந்த ஆங்கிலேயக் கப்பற்படை, மறுபடியும் பெரிய படையொன்று இரவுத்தாக்குதல் நடத்த வருகிறது என்று பின்வாங்கி போயே போயிந்தே. அதன் நினைவாக எழுப்பப்பட்டதுதான் இந்த நினைவுச்சின்னம். நல்லவேளை இதையும் தெரிந்து கொண்டேன்.
        கீழிறங்கி பார்க்கிங்கில் விட்ட காரை எடுத்துக்கொண்டு ரூம் திரும்பினோம். முழுநாளும் பார்க்கிங் செய்ய  வெறும் மூன்று டாலர் என்பது ஆச்சரியமூட்டியது. நியூயார்க்கில் 1/2 மணி நேரத்திற்கு 10 முதல் 12 டாலர் வாங்கி விடுவார்கள். களைத்துப்போன என் மனைவி படுக்கையில் தஞ்சம் புக, என் பிள்ளைகள் உடை மாற்றிக் கொண்டு, உற்சாகமாக பீச்சுக்குச் சென்றனர். நானும் மறுபடியும் காரை எடுத்துக்கொண்டு சில நினைவுப் பொருட்கள் வாங்கி வந்தேன். ரூம் திரும்பும்போது, சுடச்சுட பொன்னி சாதமும் பூண்டுக்குழம்பும், தொட்டுக்கொள்ள முறுக்கும் இருந்தது. கையால் பிசைந்து கைமணக்க வாய்மணக்க உண்டு முடித்து TV யை ஆன் செய்தேன். ஒரு குண்டுப்பெண்ணை ஓடவைத்து, ஆடவைத்து, பட்டினிபோட்டு ஆறுமாதத்தில் 240 பவுண்டு குறைந்து தடி இடையை கொடி இடையாக்கிய சாதனையை காண்பித்தனர். என் மனைவியை உற்றுப்பார்த்தேன், அவள் புரிந்து கொண்டு முறைத்ததில், வேணாம் சாமி என் கொடி  இடை, ஒடி இடையாகிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து, இழுத்து மூடி திரும்பிப்படுத்தேன். 
ஆகஸ்ட் 7, 2013 புதன் கிழமை
        காலையில் புத்துணர்ச்சியோடு எழுந்து ரெடியாகி "சேன் கிறிஸ்டபல் கோட்டை மற்றும் கேபிடோலியா பார்ப்பதாக இன்றைய திட்டம்", என்றேன். "மறுபடியும் கோட்டையா ஆளைவிடு சாமி" என்று மூவரும் கிட்டத்தட்ட கோரஸாகச் சொல்ல, அவர்களை "லா வெர்டே" என்ற அழகிய கடற்கரைக்கு அழைத்துச் சென்றேன். 

பார்க்கிங் செய்துவிட்டு இறங்குவதற்குள், என் மனைவி இறங்கி ஓடினாள். "ஐயையோ நீ கோட்டைக்கு வரவேண்டாம். அதற்காக, கடலில் குதித்துவிடாதே என்று கத்திக்கொண்டே" பின்னால் ஓடினேன்.
        ஆனால் அவள் ஓடியது ஒரு மாமரத்தை நோக்கி. இலைகளுக்கு நிகராக மாங்காய்கள் இளம்பச்சை நிறத்தில் ஏராளமாகத் தொங்கிக்கொண்டிருந்தன. இடம்பொருள் ஏவல் மறந்து, மகள்கள் கடிந்து கொண்டதையும் சட்டை செய்யாது, துள்ளிக்குதித்து இரண்டு மாங்காய்களை பறித்துவிட்டாள். அவ்வளவு துரித நடவடிக்கையிலும், இளம் பச்சையில் சிவப்போடிய பழுக்கத்துடிக்கும் காய்களை பறித்திருந்தாள். யார்வீட்டு மரமோ? என்ன நினைப்பார்களோ? என்று சிறிதும் கவலைப்படாமல், தன் படுதாவில் ஓரத்தில் துடைத்துவிட்டு ஒரு கடி கடித்தாள். எனக்கும் எச்சில் ஊற, கவனமாக அவள் கையில் இருந்த மற்றொரு காயை வாங்கிக்கடித்தேன். ஆஹா, திருட்டு மாங்காய் இத்தனை ருசியா, என்று நினைத்துக்கொண்டே இன்னொரு கடி கடிக்க காயை வாயில் கொண்டு செல்லும்போது அந்த வீட்டிலிருந்து  யாரோ வெளியில் வருவது போல் அரவம் கேட்க, சட்டென்று கையில் உள்ள காயை கீழெறிந்துவிட்டு, அவள் கையில் உள்ள காயையும் தட்டிவிட்டேன்.வீட்டின் கதவு மெதுவாய்  திறந்தது???????? 

பயணம் தொடரும்>>>>.

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதிய ஆண்டிலும் உங்கள் ஆதரவு தொடர வேண்டுகிறேன். 
இந்த புதிய ஆண்டான  2014-ல் கடவுள் உங்களை புதிய ஆசிர்வாதத்தால் நிரப்புவாராக.


11 comments:

  1. மாட்டாமல் தப்பித்தீர்கள். ஆனால், யார் வீட்டுப் பொருளையும்
    நாமே பறித்துண்ணலாகாது.
    தொடரும் பயணத்தை எதிர்நோக்கி...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதை முற்றிலும் ஒத்துக்கொள்கிறேன்.
      நன்றி அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

      Delete
  2. அவள் குதித்ததைப் பார்த்துச் சிரித்த என் நகைச்சுவை கசப்புச்சுவை ஆனது. -- செம நக்கல் !!

    ReplyDelete
  3. சுவாரஸ்யம்... குறும்பு போகவில்லை...? (!)

    படங்கள் அனைத்தும் சூப்பர்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமுதா கிருஷ்ணா.

      Delete
  5. அருமையான தொடர்......

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  6. நியூயார்க்கில் உள்ள சர்ஸ் உட் பிரகாரம் கூட
    இந்தப் பாணியில் உள்ளது
    போலத்தான் படுகிறது
    படங்களுடன் பதிவு அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete